நெஞ்சினில் நேச ராகமாய் 29 – 1

அத்தியாயம் 29

“எப்படா விசா கிடைக்குமெண்டு நான் பாத்துக் கொண்டிருக்க, நீங்க என்னம்மா இப்பிடிச் சொல்லுறீங்க?” மகளின் ஆதங்கத்தில், மங்கையின் இதழை வறண்ட முறுவல் தழுவிக்கொண்டது.
“நாங்க செய்ய வேண்டியதுகளச் செய்திட்டமேம்மா. எம்பசில அவே கேட்ட பேப்பர்ஸ் எல்லாம் முறையாக் குடுத்திருக்கிறமே. எண்டாலும் விசா உடனே கிடைக்காது எண்டதும் உனக்குத் தெரியும். என்ன நினைச்சுக் கவலைப்படாத பிள்ள. தம்பியோட சந்தோசமா இருக்கிற வழியப் பார். எனக்கென்ன, தனியவா இருக்கிறன்? இல்லையே! ” மகளுக்குச் சமாதானம் சொன்னார், மங்கை.
“ப்ச்.. போங்கம்மா, மாமா வீட்டில இருந்தாலும் என்னோட இருக்கிறது போல வருமா?” மகிழின் குரல் தழுதழுத்தது.
“ஏன், நான் அவரோட சந்தோசமா இல்லை எண்டு ஏதாவது உங்களிட்டச் சொன்னவரா?” தொடர்ந்து, அவள் கேட்ட தொனியில் அரண்டு போனார்,மங்கை.
“ஐயோ இல்லையம்மா இல்ல! அப்பிடிக் கேட்டு அந்தப் பிள்ளையக் கரைச்சல் படுத்திறேல்ல மகிழ்.” என்ற மங்கை, “அதுசரி, இப்ப கார் நல்லா ஒட்டுறியாம். தனக்கு வேலையில நிறைய உதவிகள் செய்து தாறியாம். கோல் எடுத்தா, உன்னப் பற்றிக் கதைச்சு வாய் ஓயாது அவருக்கு! எங்கம்மா, தம்பி இல்லையா?”குரலில் மகிழ்வு துள்ளக்கேட்டார்.
அவ்வளவு பெரிய குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு, மகள் நல்ல பெயர் வாங்குவதைக் கேட்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தாயாய் அவர் மனம் பெருமையில் விம்மி விடும்.
“இண்டைக்குக் கொஞ்சம் லேட்டாத்தான் சாப்பிட வருவன் எண்டவர்மா. பின்னேரம் வீட்டிலதான் நிப்பார்!” என்றவள், “கார் ஓட்டுவன்மா. என்னதான் எண்டாலும் இஞ்ச அவரவர் அவரவர் வேலைகளப் பாக்கக் கூடியதா இருக்கோணும். அதுக்கு, முதல் தேவை கார். அதும் நாங்க இருக்கிற ஏரியா இப்பதான் வளர்ந்து வருது. எல்லாத்துக்கும் கொஞ்சம் தூரமாப் போகோணும். அதால கார் கட்டாயம் தேவை!” என்றவள், “ஒரு வருசத்தால தான் ரோட் எக்ஸாம் எடுக்கேலும். அதுவரை ஆராவது லைசன்ஸ் உள்ளவே பக்கத்தில இருக்க ஓடலாம். அதுக்குக் கூட ஆயிரம் சட்டதிட்டம்!” அலுத்துக்கொண்டாள்.
“பாட்டி எப்பிடி இருக்கிறார்மா? அண்டைக்கு நான் கதைக்கேக்க சரியாக் கதைக்கேல்ல. மாமிட்டக் குடுத்திட்டா. நயாகரா போற அவசரத்தில பேசாமல் போயிட்டன். இப்பவும் உங்களோட முண்டிக் கொண்டுதான் இருக்கிறாவோ ?”
“இருக்கிறாரம்மா! இப்ப எல்லாம் ஆரோடயும் கனக்கக் கதைக்கிறதில்ல. பாவம், கொஞ்சம் உடம்புக்கும் ஏலாமல் இருக்கு. உன்னப் பற்றி அடிக்கடி அண்ணா அண்ணிட்ட விசாரிக்கிறவர். இடைக்கிடை அவரோடயும் கதையம்மா.”
“ம்ம்..அங்க இருக்கிற வரைக்கும் என்ன ஏசுறத முழுநேர வேலையாச் செய்தவர். இப்பப் பாசத்தில கரைகிறார்!”
“அத விடு, அங்க பர்வதம் பாட்டி உன்னோட எப்பிடி?”
“என்ர விசயத்தில ரெண்டு பாட்டிகளும் ஒரே கேஸ்தானம்மா! பர்வதம் பாட்டி இப்ப எல்லாம் பரவாயில்ல. இன்னும் பத்து நாட்களில அவரும் இலண்டன் போக இருக்கிறார்.”
“நம்மட உஷா ஷீலா எப்பிடி இருக்கினம்மா? நான் கதைக்கேக்க எல்லாம் உங்களிட்ட வரவேணும் எண்டுறவை. வீட்டுப்பக்கம் வந்து போறவையா ?”
“ம்ம்ம்.. நீ போன பிறகு ஒண்டு ரெண்டு தரம் வந்தவே. கடைக்குப் போகேக்க அங்க இங்க எண்டு காணுறனான். மேல படிக்கப் போறம் எண்டவே.” என்றவர், “அதோட, ரெண்டு பேருக்குமே கலியாணம் பாத்துக்கொண்டிருக்கினம்.” என்றார் தொடர்ந்து.
“அதைத்தானம்மா நானும் உங்களிட்டக் கேக்க நினைச்சன். இன்னும் இவரிட்டயும் சொல்லேல்ல.” என்று ஆரம்பித்த மகிழ், “என்ர மனத்தில ஒரு ஆசையம்மா…” என்று சொல்லி நிறுத்தினாள்.
“என்னம்மா? அங்க பொருத்தமா மாப்பிள்ளைகள் ஆராவது இருக்கினமா? சினேகிதப் பிள்ளைகள் வந்தா, உனக்கும் துணையா இருக்கும் என்ன”
“ம்ம்…நான் சொல்லுவனே குணா அண்ணா!”
“ஓம்! அந்தத் தம்பிக்குக் கலியாணம் பேசுகினமா என்ன?”
“ஓம் அம்மா! எங்கட உஷாவ அவருக்குப் பேசினா என்ன எண்டு நினைச்சன். அவர் சரியான நல்லவர். இந்த ஆறு மாதமா அவேயோட பழகினதில சொல்லுறன். மொத்தக் குடும்பமுமே சரியான நல்லவே.”
“ஓ! அப்பிடி எண்டா உஷாட அப்பா அம்மாவோட கதைச்சுப் பாக்கலாம். நான் வேணும் எண்டாக் கதைக்கவா? அல்லது நீயே கதைக்கிறியா?”
“முதல், குணா அண்ணாவோட ஃபோட்டோவ உங்களுக்கு மெயில் பண்ணுறன் பாருங்க. பிறகு அவேயோட கதைப்பம்.”
“நயாகரா ஃபோட்டோக்கள் கழுவக் குடுத்திருக்கிறன்மா, இன்னும் எடுக்கேல்ல. மெயிலில அனுப்பலாம் எண்டா இவர் வேணாம் எண்டுவார். கழுவி அனுப்பினா உங்களுக்குப் பாக்க வசதியா இருக்கும் எண்டவர். அவர் தான் ரிசப்ஷன் ஃபோட்டோவும் கழுவி அனுப்பினவர்.” என்றவள், “இந்தா இப்ப, கொஞ்ச ஃபோட்டோஸ் மெயிலுக்கு அனுப்புறன் பாருங்க.” என்று, கணனியை உயிர்ப்பித்து, படங்களை அனுப்பத்தொடங்கியவள், நேரத்தைப் பார்த்துவிட்டு, “இப்ப பாக்க வேணாம்மா, நேரம் போய்ட்டுது, தூங்குங்க. நாளைக்கு மாமி ஆக்களுக்கும் காட்டுங்க. சந்துரு மச்சானுக்கு நேற்றே அனுப்பிட்டன்!” என்று கூறிவிட்டு வைத்தாள்.
கைப்பேசியை அணைத்து வைத்துவிட்டுப் படுக்கையில் சரிந்த மங்கையுடன், நித்திராதேவி தன் கண்ணாமூச்சி ஆட்டத்தை மிகவும் விருப்பத்துடன் ஆரம்பித்தாள். மகள் கனடா சென்ற இந்த ஆறு மாதத்தில் நித்திராதேவி இவரின் எதிரியாகிப் போனாளே.
‘அப்பிடி நான் செய்த பாவம் தான் என்ன? எனக்கு ஏன் இந்தத் தண்டனை?’ மனத்துள் இதைக் கேட்டு கேட்டுத் துடிப்பதே மங்கையின் வழக்கம் ஆச்சு. என்னதான் தமையனோடு இருந்தாலும், தனிமையும் ஏகாந்தமும் அவரைப் போட்டுப் பாடாகப்படுத்தி எடுத்தது. இதுவரை, மகள் என்ற உறவில் தனக்கிருந்த அதீத பொறுப்பில் தன்னையே தான் அமிழ்த்தி இருந்தவர், அது இல்லையென்றாகிப் போனதில் செய்வதறியாது தவித்துப் போனார்.
பலவேளைகளில் ‘அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்?’ என்று, பிரமாண்டமாக, உயர்ந்தெழுந்த கேள்வியை அண்ணாந்து பார்த்தே களைத்துப் போனார், மங்கை. அது மட்டுமா? அதுவெல்லாம் என் வாழ்வில் இல்லவே இல்லை. வேண்டவே வேண்டாம் என்று, தூசென உதறிய நினைவுகளெல்லாம், இதய ஆழத்தில் எங்கோ ஒளிந்திருந்து புற்றீசல்களாகப் புறப்பட்டு, அவரின் கடந்தகாலக் கசப்புக்களைப் புடம் போட விளைகின்றதே.
கசப்பை மட்டும்மா? அதற்குமுன் மின்னி மறைந்த ஒவ்வொரு கணங்களும் உளமார உணர்ந்து அனுபவித்த, எல்லையில்லாத் தித்திப்பையும் உணர்த்திச் செல்கின்றதே! மறந்து, மக்கி விட்டதாக அவர் நினைத்திருந்த திடகாத்திரமான உருவம் ஒன்று, அவர் கண்ணுக்குள் வந்து நிற்க, துடித்துப் போய் எழுந்தமர்ந்தார், மங்கை.
“சே! என்ர மனம் ஏன் இப்பிடி வேண்டாததை எல்லாம் நினைக்கப் பாக்குது? இவ்வளவு நாட்களா எனக்குள்ள இருந்த வைராக்கியம் மக்கி மடிஞ்சு போயிற்றா என்ன? என்னை, என்ர அன்பைக் குப்பையாப் பாத்தவன இன்னும் நினைவில வச்சிருக்கிறனா?” என்று முணுமுணுத்தவாறே, ஜக்கிலிருந்த குளிர்ந்த நீரை வார்த்துக் கடகடவென்று பருகி, உள்ளத்தில் எழுந்த தாங்கொணா எரிச்சலைத் தணிக்க முயன்றார்.
மறந்துவிட்டேன்! வேண்டாத உன் நினைவுகளை அடியோடு அழித்துவிட்டேன்! உன் பிரிவால் நான் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை! வாழ்வில் உன்னோடு கைகோர்த்து வெற்றிபெற நினைத்த நான், இன்று, தனியாளாக, என் மகளையும் ஆளாக்கி, நிமிர்வாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என, மனத்தின் ஒருபுறம் ஆவேசக் கூச்சல் போட்டாலும், மறுபுறமோ, ஒருபோதுமின்றி, சற்றுமுன் தோன்றி விலக மறுத்து அழிச்சாட்டியம் பிடிக்கும் அவ்வுருவை ஆவேசத்துடன் வருடிப் பார்த்துக்கொண்டது.

கண் முன்னால் வராதே, போய்விடு என்றதும் ஒரேயடியாகப் போய்விட்டாயல்லவா? நீ அப்படிச் செய்யவில்லை என்றால் தான் ஆச்சரியம்! உன்னுள் சுயநலம் மட்டுமல்லவா ஓடுகின்றது என்று, கடினத்துடன் அவர் மனம் முணுமுணுத்துக் கொண்டது.
“எவ்வளவோ பேரிட்ட விசாரிச்சுப் பாத்திட்டன் கோகிலா! ஆனந்தும் அவன்ர குடும்பமும் எங்கயோ இடம் பெயர்ந்து போய்ட்டினமாம். எங்க போனவே, என்ன ஆனவே எண்ட விபரம் ஆருக்குமே தெரியேல்ல! மங்கையிட கோபம் ஆறட்டும் எண்டு சில வருடங்கள் பொறுத்திருந்தது தான் பிழையோ!” என்று, தமையன் அரட்டியதையும் நினைத்துக்கொண்டது.
இப்போ, எங்கு, எப்படி இருக்கிறாய்? ஓர் நொடி சரி என் நினைவு வருமா உனக்கு? இப்படியே, மனம் தன் நினைவுகளுக்கு என்றுமில்லாதவாறு சுதந்திரம் வழங்க, அவை சென்ற விதம் பார்த்து அரண்டு போனார், மங்கை. அணுக மறுத்த சயனத்தையும், வேண்டாம் வேண்டாமென்றாலும் அணுகி, வதைக்கத் துணிந்த கடந்தகால நினைவுகளையும் வெல்ல முடியாது, மிகவும் திணறினார் மங்கை. “சே…இதில இருந்து விடுபடவே ஏலாதா?” வாய்விட்டே அரட்டினார்.
‘அந்த மனிசன நான் இன்னும் மறக்கேல்லையா? அதெப்பிடி அவன் என்ர நினைவில இருக்கலாம்?’ தன்னையே தான் வெறுக்கத் துணிந்தார், மங்கை.
“இப்போதைக்கு நித்திரை வாராது போலக் கிடக்கு. என்ர செல்லம் அனுப்பின ஃபோட்டவச் சரி பாப்பம்! அதானே எனக்கு ஒரே ஒரு ஆறுதல்!” என்று புலம்பியவாறே, அனைவரும் உறக்கத்திலிருந்த வீட்டின் வரவேற்பறையில் இருந்த கணனியை உயிர்ப்பித்தார், மங்கை.

error: Alert: Content selection is disabled!!