நெஞ்சினில் நேச ராகமாய் 29 – 2

மகள், சிலதுகள் என்று சொல்லி நான்கைந்து மின்னஞ்சல்களில் புகைப்படங்களை அனுப்பி இருக்கவே, ஒன்றொன்றாக ரசித்து ரசித்துப் பார்க்கத் தொடங்கியதில், அதுவரை. மனத்தை அழுத்தி நின்ற வெறுமையும் வெறுப்பும் கூட தோல்வியைத் தழுவி அடங்கிக்கொள்ள முயன்றன.
நயாகரா அழகியின் பால்வண்ண நீரோட்டம் பின்புறம் படர்ந்திருக்க, அதற்கு இணையாக, வாழ்வின் ரசனையெல்லாம் விழிகளால் போட்டி போட்டுக்கொண்டு தளம்ப, மகளும் மருமகனும் நின்ற புகைப்படங்களைப் பார்த்த மங்கையின் இதயத்திலிருந்தெழுந்த நிம்மதியும், அன்பும் கனத்து அவர் விழிகளால் கசிந்தன. தன்னையே மறந்திருந்து அவர்கள் புகைப்படத்தைப் பார்த்திருந்தவர், விழிகளைத் துடைத்துக்கொண்டு, அடுத்தடுத்த புகைப்படங்களைப் பார்க்கத்தொடங்கினார்.
மருமகனின் உறவுகளையும், அவர்களுடன் மகளின் நெருக்கத்தையும் ஒவ்வொரு படங்களும் அவருக்குத் தெள்ளத் தெளிவாகக் காட்டி நிற்க, ‘வித் சாரதா அன்ரி’ஸ் ஃபாமிலி!’ என, மகள் எழுதியிருந்த மின்னஞ்சலைத் திறந்து, அவர்களையே உற்றுப்பார்த்தார். ‘ஓயாமல், சாரதா அன்ரி, குணாண்ணா, குமார் அங்கிள், பிள்ளைகள் எண்டு மாறி மாறிச் சொல்வாளே! அவேயா இவே! இவவ எங்கயோ பாத்த போல இருக்கே! ஹ்ம்ம்..’ என்று எண்ணிக்கொண்டே உற்று நோக்கியவரால் சட்டென்று அனுமானிக்க முடியாதிருக்கவே, அடுத்த மின்னஞ்சலைத் திறந்து, அதிலிருந்த குணாவைப் பார்த்தவர், மனத்தில் உஷாவை அவனுக்கருகில் நிறுத்திப்பார்த்துத் திருப்திப்பட்டுக் கொண்டார்.
அடுத்த மின்னஞ்சல், ‘வித் மை லவ்லி குமார் அங்கிள்!’ என்றிருக்க, மகளின் பேச்சில் அடிக்கடி வந்து போகும் பெயர் என்பதால், பார்க்கும் ஆவலோடு திறந்தார். மறுநொடி, விரிந்த விழிகள் நிலைகுத்தி நிற்க, நெஞ்சம் பலத்த சத்தத்தோடு அதிர, உள்ளே போகவும் வெளியே வரவும் வழியின்றி மூச்சுக்காற்று தத்தளிக்க, அப்படியே விறைத்து விதிர் விதிர்த்துப்போய்விட்டார் மங்கை.
இரவு பத்துமணிக்குப் பின்னரே படுக்கைக்குப் போயிருந்தாலும், படுத்ததும் அமைதியாக உறங்கிவிட்ட மனைவியைப் போல் உறக்கம் கொள்ள முடியாது, புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார், ராசன். தங்கையின் கவலை, நீண்ட காலமாக அவர் மனத்தை அரித்து, உறக்கத்துக்குப் பங்கம் விளைவித்திருந்தாலும், தங்கை மகளின் வாழ்வு நன்றாக அமைந்த திருப்தியில் உள்ளம் நிறைந்திருந்தவர், இப்போதோ, புதிதாக முளைவிட்டு வளர்ந்து கொண்டிருக்கும் சிக்கலை, எப்படி விடுவிப்பது என்றறியாது குழம்பிக்கொண்டிருக்கிறார்.
விடுவிக்க முதல், ‘சிக்கல் என்று தெரிந்தே படுமுடிச்சைப் போடுறாரே உதய்! அத அறுபடாமல் விடுவிக்க அவரால ஏலுமா? இதில என்னால் செய்ய முடிஞ்சது எண்டு என்ன இருக்கு?’ என்றெல்லாம் நினைத்துக் குழம்பிக்கொண்டிருந்தவர், மங்கை நித்திரை கொள்ளவில்லை என்பதை, மகளுடன் அவர் கதைத்த பேச்சுக் குரலில் அறிந்திருந்தார். தங்கை, எழுந்து வந்து கணனியில் அமர்ந்ததையும் உணர்ந்தே இருந்தார்.
சிறிது நேரத்தில், மேசையில் எதுவோ விழும் சத்தம் கேட்கவே, “என்னது?” என்றுகொண்டே, எழுந்து வெளியில் வந்தவர் கண்ட காட்சியில், இயக்கம் மறந்து நின்றது ஒரேயொரு கணம்தான். “கோகி…கோகி…இங்க வந்து பாருங்க!” பெரிதாக அழைத்துக்கொண்டே தங்கையை அணுகி, “மங்க, என்னம்மா, என்ன செய்யிது?” மேசையில் கவிழ்ந்திருந்த தலையை உயர்த்துகையில் கணனித் திரையில் பளிச்சிட்ட புகைப்படம் கண்ணில் பட, மீண்டும் இயக்கம் மறந்து போனார், ராசன்.
“என்னப்பா என்ன?” என்று எழுந்து வந்த கோகிலாவும், “என்ன ராசன், என்ன நடந்தது?” என்று பதற்றத்துடன் எழுந்து வந்த சரசுவும், மயங்கியிருந்த மங்கையையும், அவரைப் பார்க்காது விறைத்து நின்ற ராசனையும் பார்த்தவர்கள் விழிகளும் கணனித் திரையில் நிலைத்தன. ஒருபுறம் கணவனும் மறுபுறமும் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் நிற்க, நடுவில், மலர்வுடன் நிற்கும் மகிழைப் புகைப்படத்தில் கண்டு, வித்தியாசமாக எதையும் அனுமானிக்க முடியாமல் நின்ற பெண்களில் முதலில் சுதாகரித்துக் கொண்டார், கோகிலா.
“மங்க மங்க…” மைத்துனியின் தலையை நிமிர்த்திய அரவத்தில் தானும் சுயநினைவுக்கு வந்த ராசன், சட்டென்று மேசையிலிருந்த குளிர் நீரைத் தங்கையின் முகத்தில் தெளித்து, “மங்க மங்க, இஞ்ச பார். கண்ணைத்திற. எழும்பு மங்கை.” உலுக்கினார்.
இடியாக இறங்கிய அதிர்வில் தப்பிப் போயிருந்த நினைவை, முகத்தில் பட்ட சில்லிட்ட குளிர் நீர் மீட்க, விழிமலர்ந்த மங்கை, வழியும் விழிநீருடன் தமையனையும் கணனித் திரையையும் மாறிமாறிப் பார்த்தார். “அண்ணா …மகிழ்…” கொந்தளித்துத் தடுமாறும் உள்ளக்கிடக்கைகளுக்கு வார்த்தை வடிவளிக்க முடியாது தடுமாறும் சகோதரியை, தன்னுள்ளக் கலக்கம் மறைத்து, ஆதரவாகப் பார்த்தார், ராசன்.
“என்னம்மா! கொஞ்ச நேரத்தில எல்லாரையும் நல்லாப் பயப்படுத்திப்போட்ட! மகிழ் போனதில இருந்து உனக்குச் சரியான தூக்கம் இல்ல!” திசை திருப்ப முயன்றார்,ராசன்.
மகளுக்கு என்னவோ ஏதோ எனத் தடுமாறி நின்ற சரசுவோ, “ஓம் ஓம்! சாப்பாடும் அப்பிடியும் இப்பிடியும் தான்! பிள்ளைகளுக்குக் கலியாணம் செய்து குடுக்கிறேல்லையா? அதுக்குப் பிறகு அவே அவே தங்கட வாழ்க்கையைப் பாக்கத்தானே வேணும். ஊருலகத்தில நடவாததா இது! அதுக்காக, இப்பிடிப் பட்டினி கிடந்து ஆரும் உருகிறேல்ல. இவ்வளவுக்கும், ஒவ்வொருநாளும் அவளோட கதைச்சுக் கொண்டே இந்தப் பாடு எண்டா. இப்ப, இந்த நடு இரவில இந்தப் போட்டோக்களப் பார்க்கோணுமா?” சிடுசிடுத்தபடி மகளை முறைத்தார்.
“சரி சரி, எல்லாம் கொஞ்ச நாட்கள் போகச் சரியாகிரும். உனக்கு ஏதாவது செய்யிதா மங்க? திடீரெண்டு என்ன நடந்தது? டொக்டரிட்ட போகப் போறயா?” தவிப்பு மறையாது வினவினார், கோகிலா.
மங்கையோ, தனக்கே தனக்கான உடமை பறிபோன வேதனையில் துடித்தவாறே, “அண்ணி மகிழ்…” மீண்டும் திக்கினார்.
“அவளுக்கென்ன மங்க? என்னப்பா, கோல் ஏதாவது வந்ததா?” முகம் கசங்க நின்ற கணவனிடம் வினவினார் கோகிலா.
“எப்படி அண்ணா அவளால இதச் செய்யேலுமா இருந்தது? அந்தளவுக்கு நான் வேண்டாதவளாப் போய்ட்டனா? அவளுக்காகவே வாழ்ந்த சீவன் நான். அம்மா எண்ட கடமையில இருந்து ஒரு கணம், ஒரே ஒரு கணம் நான் தவறினது இல்ல.” கசங்கித் துடித்தபடி மங்கை சொன்னதில், சரசுவும் கோகிலாவும் ஒருவரை ஒருவர் கேள்வியாகப் பார்த்துக்கொண்டனர்.
“அப்படியிருக்க, ஆரிட நிழல் அவளில படக்கூடாது எண்டு இருந்தேனோ, அவரோட…அவரோட இவ்வளவு செந்தளிப்பா நிக்கிறாள். என்னால இதத் தாங்கேலாது அண்ணா. என்ர மகள் என்னிட்ட இருந்து போய்ட்டாள். தகப்பனோட சேர்ந்திட்டாள்!” மீண்டும் கணனித் திரையை வெறித்தவாறே, குமுறி அழுத மங்கையோடு இணைந்து, அப்போதுதான் விபரம் புரிய, அதிர்ந்து நின்றனர், கோகிலாவும் சரசுவும்.
“அடிப்பாவி மகளே! பாத்து பாத்து ஊட்டி வளர்த்து, படிக்க வச்சு, சீரும் சிறப்புமா வாழ்க்கையும் அமைச்சுக் குடுத்த பிறகு, கொஞ்சமும் நன்றியில்லாம அந்த ஏமாற்றுக்காரனோட சேர்ந்திட்டாளே! கடைசியில அப்பன்காரன் மாதிரியே ஏமாற்றிட்டாளே! நல்லா இருப்பாளா? அதப் ஃபோட்டோ போட்டு உனக்கே அனுப்பியும் வைப்பாளா?” குரலுயர்த்திப் புலம்பிய சரசுவை, மகன் பேச்சு வாயடைக்க வைத்தது.
“போதும்மா போதும்! ஆளாளுக்கு மகிழ ஒண்டும் சொல்ல வேணாம். ஏம்மா, அவளப் போய் இப்பிடிச் சபிக்க உங்களுக்கு எப்பிடி மனம் வருது!” கலங்கிவிட்டார் ராசன். “பாவம்மா அவள்! இந்த மனிசன்தான் தகப்பன் எண்டு அவளுக்கு இந்த நிமிசம் வரைக்கும் தெரியாது!” என்றதும் தான், மகள், பேசும் போதெல்லாம் ‘குமார் அங்கிள்’ என்று சொல்வதே மங்கை நினைவில் மின்னியது.
பல வருடங்களுக்கு முதல், தன் வாழ்வை யாருடன் இணைத்த வேகத்தில் அறுத்துக்கொண்டாரோ, அதே ஆனந்தகுமார், இப்போது மகிழ் வாழப்போன இடத்தில், அதுவும் மாப்பிள்ளையின் நெருங்கிய நட்பில்! சிந்தித்துப் பார்க்கவே கடினமாக இருந்தது, மங்கைக்கு. உலகம் உள்ளங்கையளவு என்பது, மிகவும் தாமதமாக அவர் நினைவில் மின்னியது.
“இஞ்சேப்பா …அப்பிடி எண்டா, இவர்… இந்த ஆள் கனடால இருக்கிறது உங்களுக்கு முதலே தெரியுமா? அதுவும் குணாட மாமா குமார் எண்டு. மகிழ் வாய் ஓயாமல் சொல்லேக்கையே தெரியுமா? அதெப்பிடி அவளுக்குத் தெரிய வராமல் இருக்கும்!?” ஒருபோதுமின்றி, கோகிலாவின் குரலும் பார்வையும் குற்றஞ்சாட்டும் பாணியில் கணவனை நோக்கிப் பாய்ந்தன.
தங்கையைப் பார்த்த ராசனோ, “மங்க உனக்கு உடம்புக்கு ஏதாவது செய்யுதாம்மா? அப்பிடி ஏதும் எண்டால் மறைக்காமல் சொல்லிரம்மா!” என்றவரை, மங்கையோ நம்பமுடியாத தன்மையோடு வெற்றுப்பார்வை பார்த்தார். ‘அண்ணா தனக்குத் தெரிஞ்சும் என்ர மகள் அந்தாளோட பழகிறதத் தடுக்க நினைக்கேல்லயே!’ எண்ணியவர் மனமோ, துளியும் நம்ப முடியாது அலறியது.
“என்ர உடம்புக்கு இப்பவரைக்கும் ஒரு கேடும் இல்ல அண்ணா, ஆனா இனி…” வெறுப்புடன் சொன்னவாறே கணணியை நிறுத்தியவர், மற்றைய பெண்களுடன் சேர்ந்து தமையனைக் கேள்வியாக நோக்கினார்.
தங்கையையும், தாய், மனைவியையும் ஆழ் பார்வை பார்த்த ராசன், ஒரு நெடிய மூச்சுடன் கதைக்கத் தொடங்கினார். “மகிழக் கூட்டிக்கொண்டுபோக உதய் வந்த நேரம், அவருக்கும் எனக்கும் இடையில ஏதாவது பிரச்சனையா எண்டு மாறி மாறிக் கேட்டீங்களே நினைவிருக்கா?” கேட்டு நிதானித்தவர், “அப்பதான் உதய் இந்த விசயத்தச் சொன்னவர்.” என்று, நடந்ததைச் சொல்லத் தொடங்கினார்.

error: Alert: Content selection is disabled!!