நெஞ்சினில் நேச ராகமாய் 30 – 1

அத்தியாயம் 30

அச்சிட்டு வந்திருந்த திருமணப்பத்திரிகையில் நண்பன் குடும்பத்தினருக்கென எழுதியவற்றோடு அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தான், உதய். இவன் சென்ற நேரம் சாரதாவும் குணாவும் தான் இருந்தார்கள். இருவருக்கும் தனித்தனியாக அழைப்பிதழைக் கொடுத்து வரவேற்றவன், “அப்பா அம்மாக்கு ஃபோனில சொல்லிட்டன் குணா, எல்லாரும் கட்டாயம் வரோணும்.” என்று அன்போடு சொன்னான்.
“எங்கட வீட்டுக்கலியானம் இது. இப்பிடி வந்து சொல்லாட்டியும் எல்லாரும் வருவம்.” என்றார், சாரதா.“அது தெரியும் அன்ரி!” என்றவன், “குமார் அங்கிள் இல்லையா அன்ரி? அவருக்கும் குடுக்கோணும்.” என்று கேட்டுக்கொண்டிருக்கையில், உள்ளே நுழைந்தார் சாரதாவின் அண்ணன் குமார்.
“வாங்க உதய், எப்ப இலங்கைப் பயணம்?” என்று கேட்டுக் கொண்டே வந்த குமாரிடம், மலர்வுடன் பத்திரிகையை நீட்டியவாறே, “கலியாணத்துக்கு ரெண்டு கிழமைகளுக்கு முதல் போகலாமெண்டு இருக்கிறன் அங்கிள், பாப்பம்!” என்றதும், “எப்பிடியும் கலியாணத்தண்டு அங்க நிப்பான் பெரியப்பா!” நகைத்தான் குணா. முறுவலித்தவாறே அழைப்பிதழை வாங்கிப் பிரித்தவர் முகத்தில், கண்ணிமைக்கும் நேரத்தில் அதிர்வு இரேகைகளின் ஆக்கிரமிப்பு.
கரங்களிரண்டும் சிறு நடுக்கத்துடன் அழைப்பிதழை இறுகப் பற்றிக்கொள்ள, அவர் விழிகளிலோ அதீத கூர்மை. நெற்றி சுருங்க அழைப்பிதழை உற்றுப்பார்த்தார், குமார். மறுகணம், நம்பவே முடியாத ஆச்சரிய ஆக்கிரமிப்புடன் மின்னலென விரிந்த விழிகள், அருகில் நின்ற தங்கையைத் தொட்டுவிட்டு, அவசரம் அவசரமாக உதய் மீது நிலைத்தன. அடுத்த நிமிடம், உள்ளேயும் வெளியேயும் உறுப்புகள் வலுவிழக்க, தள்ளாடிக்கொண்டே தொப்பென்று அமர்ந்து விட்டார், அவர்.
தமையனைப் பார்த்த சாரதா என்னவோ ஏதோவென்று பதறிப்போனார். “அண்ணா! உடம்புக்கு ஏதாவது செய்யுதா?” கையிலிருந்த அழைப்பிதழை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு தமையனருகில் விரைய, “பெரியப்பா என்ன செய்யுது?” குணாவும் பதற்றமடைந்து விட்டான்.
அவரோ, கலங்கிச் சிவந்த விழிகளால் அழைப்பிதழையே வெறித்தார்! தொடர்ந்து, “அப்…ப, உங்களுக்குப் பாத்திருக்கிற … பிள்ளையிட பேர் … மகிழினியா?” தடுமாற்றத்தோடு, அப்பெயருக்கு நோகுமோ என்றவகையில் மென்மையாகக் கேட்டதில் திகைத்தான், உதய்.
“ஓம் அங்கிள், ஏன் கேட்கிறீங்க?” என்றவனை வறண்ட முறுவலுடன் நோக்கியவர், “பாத்தியா செல்வி, பெத்த மகளிட பேர மருமகன் சொல்லித்தான் தெரிஞ்சு கொள்ள வேண்டிய நிலையில் நான் இருக்கிறன்!” என்றபடி, சொல்லிலடங்கா வேதனையோடு அழைப்பிதழையே வெறித்தவரை, மூவரும் அதிர்வோடு நோக்கினார்கள்.
குமார் குடும்பத்தோடு இல்லை. ஒரே மகளும் மனைவியும் இலண்டனில் வசிக்கிறார்கள் என்றுதான் குணா ஒருமுறை சொல்லியிருந்தான். ‘இவர் என்ன கத சொல்லுறார்?’ திடுக்கிடலுடன் குழம்பித் தவித்தான் உதய்.
“அண்ணா! என்னண்ணா சொல்கிறீங்க? உதய் கலியாணம் செய்யப்போற பிள்ளை உங்கட மகளா?” பதற்றமான செல்வி எனும் சாரதா, “தம்பி, அவே பளையா? தாயிட பேர் மங்கையா?” உச்சகட்ட அதிர்வில் வினவ, அவனோ, தலை சுற்றிப்போனான். “ஓம் அன்ரி, மகிழ் பிறக்க முதலே பிரிஞ்சதா…” அவனால் சொல்லி முடிக்க இயலவில்லை. குமாரைப் பார்த்துத் தடுமாறினான்.
“எப்பிடி அங்கிள்! என்னால உண்மையா நம்பேலாமல் கிடக்கு.” தொடர்ந்தவன் மனத்திலோ, ஏற்கனவே தன் பாட்டிக்கு இக்கல்யாணத்தில் முழுச்சம்மதம் இல்லையே! இப்போது இதுவும் தெரியவர, இன்னும் ஏதாவது பிரச்சனைகள் உருவாகுமோ என்ற கலக்கமெழ, குமாரைப் பார்க்கையில் சினமே எழுந்தது. ‘பெத்த மகளிட பேர் தெரியாதாம்! பெரிசாக் கவலைப்படுறாரே! ஓடுகாலி மகள் எண்ட பேர் மகிழுக்கு வர இந்தப்பெரிய மனிசனும் தானே காரணம்!’ என்று, மனத்தில் நினைத்ததைப் பட்டென்று கேட்டும் விட்டான், உதய்.
அவன் கேட்ட விதத்தில் மௌனமாகத் தலை கவிழ்த்திருந்தவர், சிறிது நேரத்தின் பின் நிமிர்கையில், உள்ளத்து உளைச்சலைத் தெள்ளத் தெளிவாகக் காட்டி நின்றது கன்றிக் கறுத்திருந்த அவர் முகம். “என்ர வாழ்க்கையில நடந்து முடிஞ்சத, இப்ப வரைக்கும் நான் ஆரிட்டையும் சொன்னதில்ல.” இறங்கிய குரலில் சொல்லி நிறுத்தியவர், கண்ணீருடன் அமர்ந்திருந்த தங்கையைப் பார்த்துவிட்டு உதய்யிடம் தொடர்ந்தார்.
“அம்மா எண்டா எனக்கு உயிர் உதய். அதேநேரம், மங்கையையும் மனசார விரும்பினனான்.” என்றவர் முகம் இறுக, விழிகளை அழுந்த மூடிக்கொண்டார். தன்னுள் பிரவாகமாக எழுந்த உணர்வுகளை அடக்கி, கட்டுக்குள் கொண்டுவர மிகவும் பிரயத்தனம் செய்தார், குமார். “அவள, அம்மாட அனுமதியோட கலியாணம் செய்ய நினைச்சன். எந்தக் காரணத்துக்காகவும் அவளப் பிரிய நினைச்சதே இல்ல.” என்றவர், இன்று தன் வாழ்விருக்கும் நிலையையெண்ணியதும் விரக்தியாய் முறுவலித்தார்.
“அம்மாக்கோ, அவள்ட வசதி வாய்ப்புகளும் காசு பணமும் தான் கண்ணில தெரிஞ்சிருக்கு. அண்டைக்கு அம்மா சொன்ன சிலதுகளுக்கு நானும் தலையாட்டிட்டன். ஆனால், என்ர மங்கய, அவளிட வசதி வாய்ப்புகளுக்காக நான் விரும்பேல்ல உதய்! சத்தியமாத்தான் சொல்லுறன். ” என்றவர், மருமகனாக வரப் போகிறவன் முன்னால் மிகவும் தலை தாழ்ந்துவிட்டதாக உணர்ந்து வெட்கிப்போனார்.
மனைவி சொல்லாமல் கொள்ளாமல் போன அன்றிலிருந்து, நடந்தவை அனைத்தும் மனதில் வலம் வர, அன்றே உதிரியாகிச் சிதைந்து போன உள்ளத்தில், சொல்லவொண்ணா வேதனையை உணர்ந்துகொண்டார் ஆனந்த்.
தன்னுள்ளத்தின் வலியையும் கசப்பையும் முக்கி முணகி மென்று விழுங்கிக்கொண்டவர், “தானும் குழந்தையும் கண்காணாது எங்கயாவது போயிரக் காரணம் ஆகிராத எண்டு சொல்லிட்டாள் உதய். அதுக்குப் பிறகும் என்ன செய்ய? நானே கண்காணாத தூரத்துக்கு வந்திட்டன்!” இத்தனை காலமும், எதை நினைத்து நினைத்து தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாரோ அதையே சொன்னார்.
“அங்க இருந்தா, நிச்சயம் என்னால அவேய விட்டு விலகி இருந்திருக்க ஏலாது. வீண் பிரச்சனைகள் தான் மிஞ்சியிருக்கும்!” இரத்தச் சிவப்பில் மின்னிய விழிகளில் நீர் கசிவதைப் பொருட்படுத்தாது அரட்டினார். “எந்தப் பணம் என்ர வாழ்க்கையில விளையாடிச்சோ, இப்ப அது என்னட்டத் தேவைக்கு அதிகமாவே இருக்கு! என்ர தங்கச்சிகள் மூணு பேரையும் என்ர உழைப்பில நிறைவாக வாழ வச்சிட்டன்.” மீண்டும் கசந்த முறுவல் மின்னி மறைந்தது.
“கண்மூடித் திறக்கிறதுக்க என்ர காலியான வாழ்க்க கலைஞ்சிட்டு உதய்! கலைஞ்சிட்டு!” தலையைக் கைகளில் தாங்கிக்கொண்டு அமைதி காத்தார்.
சற்றுமுன் சல சல பேச்சால் நிறைந்திருந்த அந்த வரவேற்பறை நிசப்தத்தைக் கடன் வாங்கியிருந்தது. “அவளோட நான் வாழ்ந்தது எண்ணிச் சில நாள்கள்தான். ஆனா அந்த நாள்களிட நினைவுகளிலதான் நான் இப்பவும் நடமாடிக் கொண்டிருக்கிறன். இனியும் நடமாடுவன்!” என்றவர், சட்டென்று எழுந்து வந்து உதய்யை இறுக அணைத்துக்கொண்டார்.
“இதுவரைக்கும் என்ர மகளுக்கெண்டு எதையும் செய்யிற பாக்கியம் எனக்குக் கிடைக்கேல்ல உதய். அந்தளவுக்கு நான் ஒரு பாவி! என்ன விரும்பிக் கட்டினவள் எனக்குத் தந்த தண்டனை அது!” சொன்னவர் முகத்தில் விரக்தி. “இப்ப, என்ர மகளுக்கு இவ்வளவு அருமையான துணை கிடைச்சிருக்கு. அந்த வகையில நான் குடுத்து வச்சவன் தானே! இத்தின வருசங்களா மனசுக்கச் சேர்த்து வச்சிருக்கிற ஏக்கத்திற்கு ஈடா, இனிச்சரி என்ர கண்பார்வையில அவள் வாழுவாள். அதப்பார்த்துக்கொண்டு வாழ்ந்து முடிச்சிருவன் உதய்!” என்றவர் வார்த்தைகளில் தெறித்த வலியும் வேதனையும் விழிகளாலும் வழிந்தது.
மிகவும் பாடுபட்டுத் தன்னைச் சமாளித்துக்கொண்டான் உதய்.
“இந்த விசயம் இப்ப உங்கட வீட்டுக்குத் தெரிய வேணாம் உதய். தேவையில்லாத சங்கடங்கள் ஏன்!” என்று குமார் சொன்னதையேதான் அவனும் மனத்தில் நினைத்துக்கொண்டான்.
கல்யாணம் முடிந்து பெற்றோர் கனடா திரும்பிய பின்னரே, இவ்விடயத்தை மகன் மூலம் அறிந்துகொண்ட சரவணனும் குடும்பத்தாரும் அளவில்லாது திகைத்தாலும், ஏற்கனவே குமாரைத் தெரியுமாதலால், அவரை வெறுக்கவோ, ஒதுக்கவோ முனையவில்லை.
இதையெல்லாம் சொல்லி முடித்த ராசன், இறுகிப் போய் அமர்ந்திருக்கும் தங்கையை நோக்கிவிட்டுத் தாயைப் பார்க்க, அவரோ, நெருப்பாக நின்றார். “சரி தம்பி, உதய் உன்னட்டச் சொன்ன பிறகு சரி, எங்களிட்டச் சொல்லோணும் எண்டு நீ நினைக்கேல்லையா? அப்ப, அந்தக் கேடுகெட்டவன் ஆர் எண்டு தெரியாமலே அவேயோட இந்தப் புத்திகெட்டவள் பழகுகிறாளா?” கொந்தளித்துப் போனார், சரசு.

error: Alert: Content selection is disabled!!