நெஞ்சினில் நேச ராகமாய் 4 – 1

அத்தியாயம் 4

“கிரீச்ச்ச்…” படலை திறபட, வீட்டினுள்ளிருந்து ஓடிவந்த ஆனந்தின் தங்கைமார் மெல்ல எட்டிப் பார்த்தார்கள். “அம்மா, அண்ணா வாறார்!” உரத்தொலித்த சின்னமகளின் குரலில், பின்புறத்திலிருந்து விரைந்து வந்தார், ஆனந்தின் அன்னை.
“வாய்யா வா! அத்த வீட்டில இருந்து வெள்ளனவே வெளிக்கிட்டிட்டீங்க போல!” என்றவர், “எப்பிடியம்மா இருக்கிறீங்க?” மருமகளிடம் நலம் விசாரித்தார். “இஞ்ச நிண்டு பிராக்குப் பார்த்தது போதும், ஓடிப்போய் தேத்தண்ணி போடு! சைக்கிள் மிதிச்சுக் களைச்சுப்போய் வந்திருக்கிறான் என்ர மகன்!” மூத்த மகளை விரட்டினார்.
அன்று, தமையன் திருமணம் செய்து வந்தபோது பாடசாலை சென்றிருந்ததால், தம் அண்ணியைக் காணாத ஆனந்தின் இளைய தங்கைமார் இருவரும், ஆராயும் பார்வையுடன் தமக்குள் குசுகுசுத்துக்கொள்ள, மங்கையிடம் சிக்கனச் சிரிப்பொன்றை உதிர்த்த மூத்தவளோ, தாயை முறைத்துவிட்டு உள்ளே நகர்ந்தாள்.
“நீங்க உள்ளுக்க வாங்க!” நகர்ந்த தாயைப் பின்தொடர்ந்து, “என்னம்மா நடந்தது?” என்றவாறே ஆனந்தும் உள்ளே சென்றுவிட, அங்கேயே நின்றிருந்தாள் மங்கை.
வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் நடந்திருந்தாலும், விசுவமடுவில் தங்கியிருந்த ஒரு கிழமையும், இருவருக்குமே வாழ்க்கை வண்ணமயமாகக் காட்சி தந்தது. இதுவரை, கண்டிப்பான அன்னைக்கு மகளாக, அன்பைப் பொழியும் தமையனுக்குத் தங்கையாக இருந்தவள், இப்போதோ, தன் ஆண்மையாலும் அன்பாலும் ஆண்ட கணவனுக்கு ஆசை மனைவியாகியிருந்தாள். அவள் நினைவில் அன்னை, தமையன் நிழலோ, “அத்த அத்த” என, தன் மழலையால் திக்குமுக்காட வைத்த அண்ணன் மகன் சந்துருவோ, அன்பு அண்ணியோ துளியும் எட்டியும் பார்க்கவில்லை. அவர்களோடு இருந்த காலம் தொலைவில் சென்றுவிட, அவள் நினைவை முழுமையாக ஆக்கிரமித்திருந்தான், கணவன் ஆனந்த். துணையின் அன்பில் கரைந்துருகியவள், பிறந்த வீட்டை மறந்துவிட்டாள். நினைத்துப் பார்க்க அனுமதிக்கவில்லை, அவள் அன்புக் கணவன்.
உள்ளே சென்ற கணவனும் மாமியும் தாழ்ந்த குரலில் கதைப்பது மங்கையின் செவிகளை எட்டினாலும், என்னவென்று தெளிவாக விளங்கவில்லை. கணவனைத் தொடர்ந்து செல்ல மிகவும் தயங்கி நின்றவளை, இறுகிய முகத்துடன் பார்த்திருந்த ஆனந்தின் தந்தை, “உள்ள போங்கம்மா! செல்வி, அண்ணிய உள்ள கூட்டிக்கொண்டு போ!” சின்னமகளிடம் சொன்னவர், வேறெதுவும் கதைக்கவில்லை.
“அட! வாசலிலயே நிற்கிறீங்களா? உள்ளே வாங்கவன். இது உங்கட வீடு எல்லா? ஆரும் வரவேற்க வேணுமாம்மா!” கணவனின் குரலில் எட்டிப் பார்த்த ஆனந்தின் தாய் கடிந்து கொள்ள, மெல்ல கணவனருகில் சென்று நின்றவளை முறைத்தான் அவன். “என்ன வெட்டுவன் கொத்துவன் எண்டு திரியிறாராமே உன்ர அண்ணா. பொலிசில வேற சொல்லி இருக்கிறாராம். அதும், நான் உன்ன இழுத்துக்கொண்டு ஓடிட்டன் எண்டு. அந்தாளுக்கு என்ன புத்தி பிசகீட்டா மங்க? விரும்பிறம் எண்டு எழுதி வச்சிட்டு வந்த பிறகும்…” என்று சீறிய மகனை, இடைமறித்தார் அவன் அன்னை.
“அதானே தம்பி. ஒண்டும் தெரியாத சின்ன பிள்ளையாம். பொத்திப் பொத்தி வளர்த்தவேயாம். ஏதோ, நாங்கள் எல்லாம் பிள்ளைகள ரோட்டில விட்டு வளக்கிற போல எல்லோ இவேட கதை இருக்கு. தங்கச்சிட மனசக் குழப்பி மயக்கிட்ட எண்டு உன்னில பழிபோட்டு இருக்கினம். அதக் கேக்கேக்க என்ர மனம் என்ன பாடுபடும்?” தழுதழுத்தவாறே கண்களைக் கசக்கினார்.
“எல்லாமே காசு பணம் செய்யிற வேல ராசா. நம்மட்ட அது இல்லை எண்டதால தானே இப்பிடிப்பட்ட கதை பேச்சு? இதுவே நீ ஒரு பணக்காரன் எண்டா இப்பிடியெல்லாம் வாய்க்கு வந்தபடி கதைப்பீனமே?” என்றவர், மங்கையைக் கூர்ந்து ஆராய்ந்தார். “இங்க பாருங்கம்மா, நீங்களும் சேர்ந்தல்லோ விரும்பினது? இப்ப, பழி முழுதும் என்ர மகனில. அவனுக்கு என்ன விதியா சொல்லுங்க பாப்பம்? இஞ்ச வீட்டில ஒண்டுக்கு மூண்டு பொம்பளைப்பிள்ளைகள் இருக்கேக்க, அவன் விரும்பினான் எண்டதால மட்டும்தான் கலியாணத்துக்குச் சம்மதம் சொன்னனான்.” கண்ணீர் விட்டார்.
“உங்களை என்ர மகள் போல நினச்சன். உங்களுக்கு கலியாணம் முற்றாக்கினதாச் சொல்லி, நீங்க சரியாக் கவலைப்பட்டதையும் தம்பி சொன்னவர். எல்லாம் சேந்துதான் சரி, கட்டு எண்டானான். இப்பப் பாருங்க, எல்லாப்பழியும் எங்கண்ட தலையில!” என்றவர், விழிகள் கலங்க நிற்கும் மங்கையிடம் கரம் கூப்பினார். “நான் அண்டைக்கே சொன்னனே, இனி இதான் உங்கட வீடம்மா! வீட்டையும் மனுசனையும் கவனிக்கிறது உங்கட பொறுப்பு!” என்றவர் கரங்களை, அவசரத்துடன் பற்றிக்கொண்ட மங்கை பேச முற்பட, அதற்குக் கொஞ்சமும் அனுமதியாது தொடர்ந்தார், அவர்.
“அவன்ர மரியாதையும் கௌரவமும் உங்களுக்கு முக்கியமில்லையா? அண்டைக்கு உங்கட சொந்தக்காரச் சனம் சேர்ந்து வந்து இந்த வீட்டு வாசலில நிண்டு என்ர மகன என்ன மாதிரியெல்லாம் ஏசினவே தெரியுமா? அக்கம் பக்கமெல்லாம் வந்து நிண்டு பாத்தவே. சத்தியமா மங்கை, நாண்டு கொண்டு சாகலாம் போல இருந்தது.” என்றுகொண்டே கண்களை அழுந்தத் துடைத்துக்கொண்டவர், “எங்களிட்ட காசு இல்லதான், ஆனா மரியாதைய விட்டுட்டு இஞ்ச நாங்க வாழேல்ல.” கோபமாகவே சொன்னார்.
“இந்தப் பொல்லாப்பெல்லாம் வேணாம் எண்டு நான் ஒரு வார்த்த சொல்லியிருக்க என்ர மகன் உங்களத் திரும்பியும் பார்த்திரான்!” மிகவும் கர்வமாகச் சொன்னவரையும், கணவனையும் அதிர்வுடன் பார்த்தாள், மங்கை. ‘உங்களால என்னை அப்பிடி ஒதுக்க ஏலுமா?’ கேட்ட மனைவியின் பார்வை புரிந்தும் தவிர்த்தான், ஆனந்த்.
தாய் மீது கணவனுக்கிருக்கும் அன்பும் பணிவும் தெரியுமென்றாலும், மனத்தில் மிகவும் சங்கடமாக உணர்ந்தாள், மங்கை. ‘அப்ப, வேணாம் விட்டிரு எண்டா விலகிரும் அளவிலா எங்கட அன்பு இருக்கு?’ நம்பவே முடியாமல் திண்டாடியது மங்கை மனம். அப்போதும், “மாமி..நான்…நான்…எனக்கு எப்பவுமே இவரும் இந்தக் குடும்பமும்தான் முக்கியம்.” தொண்டை அடைக்கக் கூறியவள், ஈரமான விழிகளுடன் கணவனை ஏறிட, அவனோ இளகாமல் நின்றான்.
“இப்பிடி நீங்க சொல்லிக் கேட்கச் சந்தோசமா இருக்கம்மா! சொல்லுறதோட நிப்பாட்டாமல் செய்தும் காட்டுங்க. அப்பதான் என்ர மனம் குளிரும்!” என்றவர், “சரி சரி, இப்போதைக்கு இந்தக் கதைய விடுவம். எல்லாம் பிறகு கதைக்கலாம்.” மகனைப் பார்த்துச் சொன்னவாறே, “தேத்தண்ணி போடச் சொல்லி எவ்வளவு நேரமாயிற்று. குசினிக்க நிண்டு நீ என்னதான் செய்யிற பிள்ள?” மகளைச் சாடியபடி சமையலறை நோக்கி நகர்ந்தார்.
தானும் விசுக்கென்று நகர எத்தனித்த கணவன் கரத்தைச் சட்டென்று பற்றிக்கொண்டாள், மங்கை. “சொறி ஆனந்த், அண்ணா ஒரு பேச்சுக்குச் சொல்லியிருப்பார். ஆரா இருந்தாலும் கோவம் வாறது இயல்பு தானே! ” என்றதும், அவள் கரத்தைப் பட்டென்று விலக்கிவிட்டு முறைத்தான், அவன்.
“என்ன, உன்ர அண்ணாக்கு நான் பயந்திட்டன் எண்டு நினைச்சு ஆறுதல் சொல்லுறியோ? அப்பிடிப் பயப்படுறவனா இருந்தா உன்னக் கலியாணம் செய்திருக்க மாட்டன்.” என்றவன், விருட்டென்று பின்புறமாக சென்று மறைய, கணவனின் கோபமும் மாமியின் பேச்சும் ஏற்படுத்திய அதிர்வில் அதே இடத்தில் நின்றிருந்தாள், மங்கை.
நாட்கள் சில உருண்டோடின! செழிப்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மங்கை, மிக மிகச் சாதாரண நிலையிலிருந்த கணவன் குடும்பத்தில் இல்லாமைக்கும் பற்றாக்குறைகளுக்கும் இடையில் சிக்கித் திண்டாடினாலும், கணவன் மீது கொண்ட அன்பால் அதைப் பொறுத்து இன்முகமாகவே நடமாடினாள். ஆனந்தும், அப்பப்போ சிடுசிடுத்தாலும் அன்பான கணவனாகவே நடந்து கொண்டான்.
இப்படியிருக்கையில் ஒருநாள் காலையில், “மூண்டு பேருக்கும் பள்ளிக்கூட வசதிக்கட்டணக்காசு வேணும் அம்மா. அதோட கொப்பி முடிஞ்சிட்டு, அதுக்கும் காசு வேணும்.” என்றவாறே, பள்ளிச்சீருடையில் வந்து நின்ற மகள்களை உறுத்து விழித்தார்,ஆனந்தின் அன்னை.
“கேட்டோண்ண ஓடிப்போய்ப் புடுங்கித்தர, வீட்டுக்குப் பின்னால காசு மரமா நட்டு வச்சிருக்கிறன்? அவன் ஒருவன்ட உழைப்ப நம்பித்தானே இந்தக் குடும்பமே உருண்டது!” சொன்னவர், மரத்தடியில் அமர்ந்திருந்த கணவனை ஒரு முறைப்பு முறைத்தார். அவரோ, சிலநாட்களாக பிடித்துக்கொண்ட காய்ச்சலில் சுருண்டிருந்தார்.
“இருந்த பொல்லாத வேலையும் போய், காலம போனா இரவு வரை வேல தேடி தேடி நாயா, நாக்கத் தொங்கப் போட்டுக்கொண்டு அலையிறான் என்ர மகன்.” குரல் உயர்த்திக் கத்தினார்.
வீட்டின் அருகிலிருந்த கறிவேப்பிலை மரத்தின் கீழிருந்து பாத்திரங்களைத் துலக்கிக்கொண்டிருந்த மங்கை, செவிகளில் மோதிய அவரின் பேச்சில் விழிகள் கலங்க, மனம் குமைய வேலையைத் தொடர்ந்தாள்.
“இண்டையான் பாட்டுக்கு எதையாவது சொல்லிச் சமாளியுங்கடி. ஒண்றிரண்டு நாள்களில ஆரிட்டயாவது கடன உடன வாங்கித் தாறன். வயித்த நிரப்பிறதே திண்டாட்டமா இருக்கேக்க கண்டறியாத படிப்பு! எல்லாரும் பேசாம படிப்ப நிப்பாட்டிப்போட்டு ஏதாவது வேலைக்குப் போங்க!” சீறியவாறு எழுந்தவர், “எவ்வளவு நேரமா இந்த நாலு இயத்துகளக் கழுவறன் எண்டு தேச்சிக்கொண்டு இருப்பீங்க மங்கை? சட்டுப்புட்டெண்டு சுறுசுறுப்பாக் கழுவிப்போட்டு வாங்க பாப்பம்.” அதட்டலும் சலிப்புமாகச் சொல்லிக்கொண்டே நகர்ந்தார்.

error: Alert: Content selection is disabled!!