அவளோ, மனதுள் பிரளயமாகத் திரண்ட உணர்வுகளுடன் போராடிக்கொண்டே, கழுவுவதை விரைவு படுத்தினாள்.
ஆனந்த், மங்கை மற்றும் அவன் பெற்றோர் நால்வருமாக இரண்டு நாட்களுக்கு முன் காவல் நிலையம் சென்றிருந்தார்கள். மங்கையின் தமையன் ராசன், இன்னும் சிலருடன் அங்கு வந்து காத்திருந்தான். ஆனந்துடன் சைக்கிளில் வந்திறங்கிய தங்கையைக் கண்டதும், அவன் இள ரத்தம் கொதித்தது. அவமானமும் கோபமும் போட்டிபோட சட்டென்று தன் பார்வையைத் திருப்பிக்கொண்டாலும், கணத்தில் பதிந்த தங்கையின் தோற்றம் அவன் மனத்தில் அப்படியே ஒட்டிக்கொண்டது. ‘எப்பிடியிருந்தவள்? எப்பிடி எப்பிடியெல்லாம் வாழ வைக்கோணும் எண்டு நினைச்சு இருந்தனான். பத்தே பத்து நாள்களில இப்பிடி வாடி வதங்கிட்டாளே! இதெல்லாம் இவளுக்குத் தேவையா?” மனதுள் அழுதுவிட்டான் ராசன். ஆனால், அடுத்த கணம் அது சுவடின்றிப் போனது.
“நான் இவர முழு மனசா விரும்பினன். வீட்டில வேற கலியாணம் பேசினவே. எனக்கு விருப்பமில்ல எண்டு சொல்லியும் இவே அதைக் கொஞ்சமும் காதிலயே வாங்கேல்ல.” என்று சொல்லத் தொடங்கியவள், இறுகி நிற்கும் தமையனை அவசரமாகப் பார்த்துவிட்டு மேலும் தொடர்ந்தாள். “நான் விரும்பிறதச் சொன்னா ஏற்க மாட்டினம் எண்டு நல்லாத் தெரியும். அதால, என்ர முழு விருப்பத்தோடதான் இவரக் கலியாணம் செய்தனான்.” கணவன் கரத்தை இறுகப்பற்றியவாறே, காவலரிடம் அவள் சொல்ல சொல்ல நெஞ்சம் கொதித்துப் போனான், ராசன்.
‘நான் அவளுக்கு அண்ணன்தான். ஆனா, என்ர சொந்த மகளைவிடவும் அன்பாப் பாத்துக் கொண்டனே! அதுக்கு எவ்வளவு பெரிய கைம்மாறு செய்திட்டாள்? தான் விரும்பிறன் எண்டு ஒரு வார்த்த சொல்லேல்ல. சம்மதிப்பினமா இல்லையா எண்டதே வேற கதை. வீட்ட விட்டுட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறுற அளவுக்குத் துணிஞ்சிருக்கிறாள். எந்தளவுக்குத் சுயநலம் இருந்தா இப்பிடியெல்லாம் நடந்திருப்பாள்.’ அவனுள், தங்கை மீதிருந்த அன்பையும் மேவி, கோபமும் வெறுப்பும் படர்ந்தது. தங்கையைக் கூர்மையாகப் பார்த்தவாறே அவளை நோக்கி ஓரடி எடுத்து வைத்தான்.
அவளோ, திமிராக முறைத்துக்கொண்டு நின்ற ஆனந்த் பின்னால் ஒடுங்கினாள். ‘கூடப் பிறந்தவன விட, நேற்றுவரைக்கும் பாராட்டிச் சீராட்டியவன விட, எண்ணிச் சிலகாலம் லவ் பண்ணுறன் எண்டவன் பெரியாளா ஆகிட்டான்!’ கோபத்தையும் ஆத்திரத்தையும் மீறிக் கண்கள் கலங்கின, ராசனுக்கு.
“பரவாயில்லையே, நீ செய்த எளிய வேலைக்கு இவ்வளவு தெளிவா விளக்கம் சொல்லிட்டயே!” இடுங்கிய பார்வையோடு இகழ்ச்சியாகச் சொன்னான், ராசன். மங்கை அதுவரை என்ன துணிவில் கதைத்தாளோ இறைவனுக்கே வெளிச்சம். இப்போதோ உடல் நடுங்கியது. தமையன் பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை. கண்ணீரோடு தரையைப் பார்த்து நின்றாள்
வலு நிதானமாக நகர்ந்த ராசன் பார்வை, ஆனந்தின் முகத்தில் நிலைத்தது. அவனும் நிமிர்வாகவே பார்க்க முயன்றான். ஆனால்,நெஞ்சம் குளிர் கண்டது.
“இந்தப் பெரியவர் உன்ன விரும்பினவரோ?” இகழ்ச்சி நகை இதழோரத்தில் நெளிய, தங்கையைப் பார்த்தான் ராசன்.
அவதியும் அந்தரமுமாக நிமிர்ந்தவள், “ஓம் அண்ணா” என்று சொல்ல பெரிதும் விரும்பினாள். நா அசையவில்லை.
“அதை மட்டும் நான் துளிகூட நம்பமாட்டன். விருப்பம் உன்னில இல்ல, எங்களிட்ட இருக்கிற சொத்துப்பத்தில! காசில! இதை நீயே கெதியாத் தெரிஞ்சு கொள்ளுவ!” சொல்லிக்கொண்டு வர, அதுவரை இருந்த பதற்றமும் பயமும் விலக, விறுக்கென்று முன்னால் வந்த மங்கை, “அண்ணா!” கிரீச்சிட்டாள்.
“என்ர ஆனந்தப் பற்றி நீங்க எது வேணும் எண்டாலும் கதைக்க, நான் வாய மூடிக்கொண்டு பேசாமல் நிப்பன் எண்டு நினையாதீங்க சரியா?” கோபமாகச் சீறியவள், தமையனின் அடிபட்ட பார்வையை அசட்டை செய்துவிட்டுத் தொடர்ந்தாள். “போட்டிருந்த நகைகளைக் கூட கழட்டி வச்சிட்டு வரச் சொன்னவர் இவர். என்னை வடிவா வச்சிருக்கத் தன்னால ஏலும் எண்ட நம்பிக்கை தந்தவர். இவரைப் போய்…ச்சே! உங்களுக்கு எப்பவும் காசு காசு காசுதான் முக்கியம்! எங்கயோ கண்காணாத தேசத்தில, லண்டனில, உங்கட ஃப்ரெண்டின்ட தம்பி எண்ட ஒரு தகுதியை மட்டும் நம்பி ஒருத்தன எனக்குக் கலியாணம் செய்யப் பாப்பீங்க. அதே, கண்ணுக்கு முன்னால இருக்கிற நல்ல பெடியன விரும்பினா காசு, வசதி இல்ல எண்ட ஒண்டுக்காக வேணாம் எண்டுவீங்க. உதாசீனம் செய்வீங்க என்ன? வசதி வாய்ப்பில கெளரவம் பாக்கிற ஆக்கள் தானே நீங்க? ஒருவேளை, நான் இவர விரும்பிறன் எண்டு உங்களிட்டச் சொல்லி இருந்தா, அம்மாவோ நீங்களோ சம்மதமெண்டு சொல்லி இருப்பீங்களா? இல்லையல்லோ?” மூச்சுவிடாது படபடவென்று கதைக்க, ‘இவள் என்ர தங்கச்சியா?’ அதிர்ந்து போனான் ராசன்.
அடுத்தநொடி, தன்னுள் எழுந்த ஆத்திரம், வலி அனைத்தையும் அழுத்தி அடக்கிக்கொண்டவன், “இஞ்ச பார், இதுக்கும் பிறகு இதில நிண்டு உன்னோட கதைச்சு என்ர சக்தியையும் வீணாக்கி, தரத்தையும் இறக்கிக்கொள்ள நான் தாயாரில்ல. ஆனா ஒண்டு, இப்ப நான் சொன்னது எவ்வளவு உண்மை எண்டது நிச்சயம் உனக்குக் கூடிய விரைவில தெரிய வரும். அந்த நேரம் காலம் கடந்திருக்கும்!” என்ற வேகத்தில் வெளியேறிவிட்டான்.
காவல் நிலையத்திலிருந்து வரும் வழியெல்லாம் ஆனந்தின் அன்னை புலம்பித் தள்ளி விட்டார். “உங்கட அண்ணாக்குக் காசுக்கு மேல இருக்கிற திமிர் மங்கை. பாருங்கவன், என்ன எல்லாம் இழிவாக் கதைச்சிட்டுப் போறார்!” அவர் ஆரம்பிக்க, இவள் மனத்திலும் அதேதான் ஓடிக் கொண்டிருந்தது. கணவனை, தமையன் அவ்வாறு உதாசீனம் செய்ததை அவளால் கொஞ்சமும் தாங்க முடியவில்லை. ‘கோவமிருக்கும்தான், அதுக்கெண்டு இப்பிடியா?’ என்று ஆத்திரம் கொண்டாள்.
“அவர் கதைச்ச விதத்தில கொஞ்சம் சரி தங்கச்சி வாழுற வீடு எண்ட மரியாதை இருந்ததா மங்கை? நீங்களே சொல்லுங்க பாப்பம்? பார்வையிலயே எவ்வளவு எள்ளல்! ஏளனம்!” மருமகள் தன் மகனை விட்டுக் கொடுக்காது தமையனிடம் எதிர்த்துக் கதைத்ததில் மிகவும் மனம் குளிர்ந்தவர், இன்னும் இன்னும் அவள் கோபத்தைத் தூண்ட நினைத்தார்.
“அதுமட்டுமா? என்ர மகன் உங்கட சொத்துக்காக விரும்பினவன் எண்டு அபாண்டமாப் பழிபோட்டுட்டுப் போறாரே! இதெல்லாம் அடுக்குமா? வாய் அவிஞ்சு போவார்!” கோபமும் தளுதளுப்புமாகச் சொல்லிக்கொண்டு வராத கண்ணீரை அழுந்தத் துடைத்தார்.
“நீங்க வேற, கொஞ்ச நேரம் சும்மா வாங்கம்மா. அந்தாள் ஏதோ உளறினா நீங்க ஏன் அழுறீங்க?” தாயைச் சமாதானம் செய்தான், ஆனந்த். அவனுக்கோ, மனைவி தன்னை விட்டுக்கொடாமல் கதைத்தது மிதமிஞ்சிய மகிழ்வைக் கொடுத்திருந்தது. அவன் சொத்துப் பத்துக்காகவா விரும்பினான், இல்லையே! பிறகு அதை நினைத்துக் கவலைப்பட என்ன இருக்கு என்று அதைத் தட்டிவிட்டு விட்டான்.
“இல்ல ஐயா, தெரியாமத் தான் கேக்கிறன், சொத்தில உங்களுக்குப் பங்கில்லையா மங்கை? உங்கட அண்ணா இதுதான் சாட்டெண்டு எல்லாத்தையும் தான் சுருட்டப் போறார். தம்பிய இப்பிடிச் சொன்னா உங்களுக்குக் கோவம் வரும் எண்டு தெரியும். இனி எக்காலத்திலும் சொத்துக் கதையோட போக மாட்டீங்க எல்லா? அங்க நிக்கிறார் உங்கட அண்ணா. வலு சுலபமா உங்கள ஏமாளி ஆக்கிப் போட்டார் பாருங்கவன்.” மனிசி விடுவதாக இல்லை.
“சும்மா இருங்க எண்டுறன் அம்மா. உண்மையாவே அவேட ஒத்த சதமும் எங்களுக்கு வேணாம். இனி இந்தக் கதையை விடுங்க.” என்றான், ஆனந்த்.
மாமியாரின் கதைகளைக் கேட்ட மங்கை மனத்துள்ளும் ஒருவகை ஆத்திரம் உருவானது. என்றாலும், மனதோரம் ஒதுங்கிக் கிடந்த தமையன் மீதான பாசம், அமைதியாக இருக்க விரும்பாது தட்டுத் தடுமாறி எழுந்து நின்றது.
“ப்ச்…அண்ணா இன்னும் சரியான கோபத்தில இருக்கிறார் மாமி. கொஞ்ச நாள் போக எல்லாம் சரியாகிரும் . இவரிட நல்ல குணங்கள அவே நிச்சயம் விளங்கிக்கொள்ளுவினம்.” மாமியாருக்குச் சொல்வது போல் தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.
“அப்பிடி எண்டுறீங்களோ? பாப்பம் பாப்பம். அப்பிடியெண்டா ஆருக்குத்தான் சந்தோசம் இல்ல. நீங்க சொல்லுறது பலிக்கட்டும் மங்கை.” என்றவருக்கு, அது பலிக்குமா என்ற ஐயம் நிறையவே இருந்தது.
இப்படி, கடந்த நாட்களின் நினைவுகள் மனத்துள் அலைமோத, பிறந்த வீட்டின் செழிப்பும், புகுந்த வீட்டின் வறுமையும் ஒன்றுடன் ஒன்று போட்டியிட, கழுவிய பாத்திரங்களுடன் சமையலறைக்குள் நுழைந்து, உரிய இடத்தில் வைத்துவிட்டு அப்பால் நகர முயன்றவளை, தன் பேச்சால் நிறுத்தினார், ஆனந்தின் அன்னை.
“ஏன் மங்கை, எத்தின நாளைக்குத்தான் உங்கட புருசன் வேலை தேடி இப்பிடி அலையிறது? அரிசி சாமான் வாங்கிற கடையில கடன் ஐயாயிரம் தாண்டி நிற்குது! என்ன செய்யிறதம்மா?” கவலையாகக் கேட்ட மாமியாருக்கு, பதில் சொல்லத் தெரியாது முழித்தாள் அவள்.

