நெஞ்சினில் நேச ராகமாய் 4 – 3

“இந்தச் சின்ன வீட்டில இருக்கிறதே ரெண்டு அறைகள். இந்த வடிவில, ரெண்டு குமர்கள வச்சுக்கொண்டு நீங்க ரெண்டு பேரும் இப்பிடியிருந்து சிரமப்பட வேண்டியிருக்கே!” தொடர்ந்து சொன்னதும், தலையைக் குனிந்து கொண்டாள், மங்கை.
இவளை விட ஒரு சில வருட வித்தியாசமே ஆனந்தின் மூத்த தங்கைகள் இருவருக்கும். அப்படியிருக்க, இருக்கும் அறையில் சிறியதை இவர்களுக்குகென்று கொடுத்திருந்தனர். பல சமயங்களில் மிகவும் தர்மசங்கடப்பட்டுப் போவாள் மங்கை. அதிலும், ஆனந்தின் தந்தை எப்போதுமே விறாந்தையில்தான் நித்திரை கொள்வாரென்றாலும், அதைப் பார்க்கையில் மிகவும் அந்தரப்படுவாள்.
“நீங்க எப்பிடி எப்பிடி எல்லாம் வளர்ந்திருப்பீங்க என்ன! அப்பிடி எல்லா வசதியோடையும் வச்சிருக்கத்தான் ஆனந்துக்கும் விருப்பம் மங்கை. ஒவ்வொருநாளும் சொல்லி சொல்லிக் கவலைப்படுறவன்!” மருமகளை நோட்டமிட்டுக்கொண்டே தொடர்ந்தார். “இப்பிடியெல்லாம் இருக்கவா வேணும் மங்கை? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கவன். இவன் ஆனந்துக்கு நான் சொன்னாக் கோபம் வருது.” என்றதும், மாமியாரை நிமிர்ந்து நோக்கினாள் அவள்.
“இல்ல மாமி, அப்பிடி எல்லாம் நான் ஒண்டும் சிரமமா நினைக்க இல்ல. உண்மையாவே எனக்கு இங்க ஒரு பிரச்சினையும் இல்ல. சந்தோசமாத்தான் இருக்கிறன்.” சட்டென்று உரைக்கவும் மறக்கவில்லை.

“நீங்க இப்பிடிச் சொல்லுறது உங்கட நல்ல மனசக் காட்டுது மங்கை. ஆனா, உண்மை நிலை வெட்ட வெளிச்சமா வெளியில கிடக்குதே! ஆனந்த், செய்த வேலையும் போய், வேலை தேடி இந்த அலை அலையிறான். அதைப் பாத்துக்கொண்டிருக்க மனம் கேக்குதில்லையம்மா!” கண்கள் கலங்கச் சொல்ல, அவள் விழிகளும் கலங்கின. “இப்ப என்ன! உரிமை இல்லாததையா கேக்கப் போறம்! அல்லது, வச்சுக்கொண்டு இன்னும் இன்னும் எண்டு வாங்கிப் பதுக்கி வைக்கவா போறம். எல்லாம் உங்கட நல்லதுக்குத் தானே!” அவர் தொடர்ந்து சொன்னது, அவளுக்குச் சட்டென்று புரியவில்லை.
அவள் முகத்தைப் பார்த்தே அதை விளங்கிக்கொண்டவர், “நானும் உங்கட மனுசனிட்ட எவ்வளவோ சொல்லிப் பாத்திட்டு விட்டுட்டன். அவன் அந்தப் பேச்செடுத்தாலே வள்ளெண்டு விழுறான்!” இப்போதும் விளங்காது பார்த்தவளுக்கு, அவர் கடைசியில் சொன்னதை மட்டும் நம்ப முடியவில்லை.
‘இவராவது மாமிட்டக் கோவப்படுறதாவது!’ மனத்துள் சொல்லிக்கொண்டே மௌனமாக மாமியாரைப் பார்த்தாள்.
“இப்ப ஏன் அங்கயே நிக்கிறீங்க? இப்படி வாங்க பிள்ளை, இருங்கோ. உங்களிட்டக் கொஞ்சம் கதைக்கோணும்.” சொல்லிக்கொண்டே, ஒரு பலகையை அவள் புறமாகத் தள்ளி விட, எடுத்து அமர்ந்துகொண்டாள். குடும்ப விடயமாக மாமியார் தன்னிடம் கதைக்க வேண்டுமென்றதில், அவள் மனமோ குளிர்ந்து போனது.
“இத்தறிக்கு இந்த வீட்டுநிலை உங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும் என்ன?” என்றவர், மருமகளின் தலையாட்டலைப் பெற்றுக்கொண்டு தொடர்ந்தார்.
“எனக்கென்னவோ உங்கட அண்ணாட்ட ஒரு வேலை..ம்ம்…அது இனிச் சரிப்படாது என்னம்மா? அதால, ஆனந்த் ஓடின லொறிய கேட்டுப் பாத்தா என்னம்மா? நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்றவர், மங்கையின் அதிர்ந்த பார்வையில், மனத்தில் சுறுசுறுவென்று எழுந்த கோபத்தை மிகவும் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டார். “எனக்கு மட்டும் அவரிட்டப் போய் உதவி கேக்க விருப்பமா என்ன? இல்லவே இல்ல! அதிலும் உங்கட மனுசன், நான் இப்பிடி ஒரு வார்த்த சொன்னதுக்கே என்னட்டக் குதியோ குதியெண்டு குதிச்சவர் தெரியுமா? ஆனா, அவன் கோபக்காரன்! மொக்கன்! நீங்க அப்பிடியா? புத்திசாலி! படிச்ச பிள்ள என்னம்மா.” மருமகளைத் தூக்கி நிறுத்திப் பாராட்டினார்.
“கொஞ்சம் பொறுமையா யோசிச்சுப் பாருங்க மங்கை. எங்கண்ட வீடு இப்ப இருக்கிற நிலைக்கு, ஆனந்துக்கு வேலையும் கிடைக்ககேல்ல எண்டு வையுங்க, எத்தினை நாளைக்கம்மா?”
மாமியாரின் கூற்றின் நிதர்சனம் புரியாதவளா அவள்! ஆனால், ‘அண்ணா அண்டைக்கு அப்பிடிச் சொன்ன பிறகும், அதும் இவர் விரும்பேல்ல எண்டும் தெரிஞ்ச பிறகும் அவேட்ட போய் கை ஏந்துறதோ?’ என்று எண்ணிய அவள் மனமோ இசைய மறுத்தது. “நான்..நானும் வேலைக்குப் போறன் மாமி. முதல், இங்க பக்கங்களில உள்ள பிள்ளைகளுக்கு வீட்டில வச்சே டியூசன் சொல்லிக்குடுக்கிறன்!” என்று தொடங்கியவளை முறைத்தார் அவர்.
“இதெல்லாம் வேலைக்கு ஆகுகிற கதையா மங்கை? முதல் எவ்வளவுக்கு எண்டு உங்களால சம்பாதிக்க ஏலும்?” என்றவர், சிறிது நேரம் மௌனம் காத்தார். “ஏன் மங்கை, உங்களுக்கு உரிமையானதைத்தானே கேக்கச் சொல்லுறன்.” என்றபடி, மருமகளைக் கூர்மையாகப் பார்த்தார்.
“உங்கட அண்ணா உங்களுக்குக் கலியாணம் பேசினவர் எல்லா? ஒத்த சதம் செலவழிக்காமல் செய்து வச்சிருப்பாரா? எவ்வளவு இலட்சம் செலவழிச்சிருப்பார் என்ன? நகை, தொகையெண்டு தந்திருக்க மாட்டாரோ? நான் அதையா கேக்கிறன்!” தலைகுனிந்த மருமகளைப் பார்த்துக்கொண்டே கேட்டார்.
“அட! ஒரு சதம் செலவில்லாமல் கலியாணம் முடிஞ்சிருக்கு. சாப்பாட்டுக்கே வசதியில்லாமல் இருக்கினம், குவிஞ்சு கிடக்கிறதில கொஞ்சமாக் கிள்ளிக் குடுக்கலாம் எல்லேம்மா? ” என்ற மாமியாரின் பேச்சில் மனத்தில் அடிவாங்கினாள் மங்கை.
‘செலவில்லாமல் இங்கு வந்தாய்!’ என, சொல்லாமல் சொல்லிக் காட்டியதைப் புரிந்து கொண்டவளுக்குக் கண்ணைக் கரித்தது. உன்னைக் காதலிக்கவில்லை, உன்னிடமுள்ள பணத்தைக் காதலித்தான் என்ற தமையனிடம் போய், உண்பதற்கு வழியில்லை…உதவு என்று கையேந்தினால், இப்படி ஒரு வாழ்வைத் தேடச் சொல்லி நாங்களா சொன்னோம் என, நிச்சயம் கேட்பாரே என்று நினைத்தவளுக்கு, மாமியார் சொல்வதுபோல் ராசனிடம் கையேந்த மனம் வரவில்லை.
சிந்தனையுடன் அமர்ந்திருந்த மருமகளை மீண்டும் சிறுபொழுது பார்த்திருந்தவர், “இஞ்ச பாருங்க மங்கை, நான் எதைக் கதைச்சாலும் உங்கட நன்மையை நினைச்சுத்தான் கதைக்கிறன். நீங்க சின்னஞ்சிறுசுகள், சந்தோசமா வாழ வேணாமா? நாளைக்கு உங்கட பிள்ளைகள் இப்பிடி வயித்துக்கும் வாய்க்கும் சிரமப்பட்டு வளருறதப் பாக்க உங்களுக்கு விருப்பமா?” எங்கு அடித்தால் அசைக்கலாம் என்று யோசித்து மெல்ல அடித்துப் பார்த்தார்.
அது சரியாக வேலை செய்தது! சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள், மங்கை.
“நீங்க வளர்ந்த அளவுக்கு எண்டு இல்லாட்டியும் உங்கட குழந்தைகள் எப்பிடி எப்படியெல்லாம் வளர வேண்டியவே எண்டு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கவன்.” ஊக்கினார்.
“கேக்க மனசுக்குச் சங்கடமா இருந்தாலும் நான் இப்ப சொல்லுறதுதான் உண்மை மங்கை. தன்ர மனிசி குழந்தைகளையோ இந்தக் குடும்பத்தையோ பாக்க ஏலாத வக்கில்லாதவன் இல்ல என்ர மகன். ஆனா, இண்டைக்கு இப்பிடி இந்த வீடு இருக்கு எண்டா …பிழையா நீங்க நினைக்கக் கூடாது மங்கை, உங்களால தான் என்ன? நான் சொல்லுறது சரியல்லோ?” என்று கேட்டு அவளை வலியோடு பார்க்க வைத்தார். குன்றிக் குறுகிப் போனாள் மங்கை. அவமானமாகவும் இருந்தது.
“உங்கட கலியாணம் கொஞ்சமும் எதிர்பாராமல் நடந்த ஒண்டு. ஓம் எல்லா? உங்களுக்குப் பேசிவந்த கலியாணத்த நீங்களே தடுத்திருக்கலாம். கண்ணக் கசக்கிக்கொண்டு ஆனந்திட்டப் போகாமல் உறுதியாக நிண்டிருக்க, தம்பி நல்ல நிலைக்கு வந்த பிறகு உங்களைக் கட்டி இருப்பான். இப்பிடி அவசரப்பட்டிருக்க மாட்டான் என்ர மகன். வேலையும் போயிருக்காது.” இறுக்கமான குரலில் அவர் சொன்னதில் உண்மையுண்டே!
“இப்ப, அந்த லொறியைத் கேட்டு வாங்கினா உங்களுக்கு எண்டு ஒரு வருமானம் வரும். அதோட, உங்களுக்கு நாலஞ்சு வீடுகள் இருக்காமே! அதில ஒண்டில நீங்க ரெண்டு பேருமா தனியப் போயிருங்கம்மா. எங்களைக் கூட்டிக்கொண்டு போகச் சொல்லேல்ல. கூப்பிட்டாலும் வரவும் மாட்டம். உங்கட சந்தோசத்துக்கு வழி சொல்லுறன்.” என்று, வாய் காயும் வரை ஓதிய பிறகே, மங்கையின் மனத்தில் எழுந்த ஆசையுணர்வு முகத்தில் பிரதிபலித்தது.
அவள் முகத்தில் நிலைத்த பார்வையை விலக்கவில்லை ஆனந்தின் அன்னை. “எனக்கு உங்கட சந்தோசம் மட்டும் தான்மா முக்கியம்!” என்றதும் மங்கையோ உருகிப் போனாள்.
விழிகள் கசிய அவரை அன்பொழுகப் பார்த்தவளின் இதயம் முழுமையும், விசுவமடுவில் தாம் சிட்டாகச் சுற்றித்திரிந்த அந்த ஒரு கிழமையை நினைக்கத் தொடங்கியது. ‘தனிமையில் சென்றால்…’ நினைத்துப் பார்க்கவே, அவள் மனமும் உடலும் அவ் ஏகாந்தத்திற்காக ஏங்கித் தவிக்கத் தொடங்கியது.

error: Alert: Content selection is disabled!!