“ஒவ்வொருநாளும் காலமேல இருந்து இரவுவரை வேலை தேடி அலைஞ்சு திரிஞ்சாலும் உங்களிட்டம் வந்து கையேந்த நினைக்கேல்ல என்ர மனுசன்.” நன்றாகக் குரலை உயர்த்தினாள், மங்கை.
“அவர் இப்பிடித் துன்பப்படுறாரே எண்டு பாத்து நானாத்தான் இங்க வந்தனான். அதுவும் உங்களிட்டப் பிச்சை கேட்க வரேல்லையே! எனக்கு உரிமையானதக் கேட்டு வந்தனான். இது அவருக்குத் தெரிஞ்சாலே என்னைக் கொண்டு போட்டிருவார்.” கண்ணீருடன் சொன்னவளின் காதலையும், புருசன் மீது அவள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் பார்த்து வருத்தமே எழுந்தது ராசனுக்கு.
‘இந்த அன்புக்கும் நம்பிக்கைக்கும் அவன் தகுதியானவனா என்ற கேள்வியோடு தங்கையை உற்றுப் பார்த்தான், ராசன். ‘உண்மையைச் சொன்னா விளங்கிக்கொள்ளுறாள் இல்லையே. இனி நான் என்ன செய்யேலும். பட்டுத் தெரியட்டும்.’ என நினைத்தவாறே பேச வாய்திறக்க முதல், “ஏய்ய்ய்ய்…” என்ற கத்தலோடு போட்டிபோட்டுக்கொண்டு வந்து விழுந்தது, மங்கையின் உடைகள் அடங்கிய பெரிய பையொன்று.
எல்லோர் பார்வையும் அதிர்வுடன் வீட்டு வாயிலில் நிலைக்க, அங்கே, மூச்சிரைக்க, உக்கிரத்துடன் நின்று கொண்டிருந்தார், மங்கையின் அன்னை சரசு.
“நீங்க ஏன் எழும்பி வந்தீங்க மாமி? உள்ளுக்க வாங்கோ, இவர் கதைச்சுக்கொள்ளுவார்.” என்றபடி, கரம் பற்றிய மருமகளைப் பார்வையால் அடக்கினார், சரசு.
“இங்க பாரடி, எந்த முகத்தோட இந்த வீட்டு வாசல்படிய மிதிச்சனி?” கேட்டவாறே கீழிறங்கியவரின் தோற்றத்தில் அதிர்ந்து நின்றாள், மங்கை. எப்போதும் கம்பீரமாக வலம் வரும் தாய், ஓய்ந்துபோய் நெடுநாளாக வருத்தத்தில் கிடந்த தோற்றத்தில் இருப்பதைப் பார்த்துப் பதறிப்போனாள்.
“அம்மா, உங்களுக்கு என்ன நடந்தது? ஏன் இப்பிடி இருக்கிறீங்க? சுகமில்லையா?” கேட்டுக்கொண்டே தாயை நோக்கி முன்னேறினாள்.
“வேணாம், எனக்குக் கிட்ட வராத! அங்கயே நில்!” வெறுப்புடன் சீறிப்பாய்ந்த சொற்களும், தீப்பிழம்பாக ஜொலித்த பார்வையும், மங்கையின் நெஞ்சைக் குளிரவைத்து, தேங்கி நிற்கச் செய்தது.
“அம்மா, நீங்க உள்ளே போங்க நான் பார்த்துக்கொள்கிறேன்!” சொன்ன மகனையும் முறைத்தார், சரசு.
“இதுதானே ராசா…இப்பிடிச் சொல்லி சொல்லியே, இண்டைக்கு இவள் உனக்கு எவ்வளவு நல்ல பெயரக் கூசாமல் வாங்கித் தந்திட்டாள். இனியும் பாக்கிறதுக்கு என்ன இருக்கு. இதெல்லாம் இருந்து பாக்க வேணாம் எண்டு நினைச்சுத்தான் உன்ர அப்பா நேரத்தோட போய்ட்டார்!” விரக்தியாகச் சொன்னவர் விழிகளில் நீர்க் கோடுகள்.
“உனக்கு…உறவெண்டு இந்த வீட்டில ஆருமே இல்லை. அதேபோல உரிமையெண்டும் இங்கு ஒண்டுமே இல்ல. மாத்துத் துணிக்குக் கூட அங்க வழியிருக்காது எண்டு நல்லாத் தெரியும்.” சொன்னவரின் பார்வை, மகளை இகழ்ச்சியும் வெறுப்புமாக அளந்தது.
மங்கையோ அப்படியே கூனிக் குறுகிப் போனாள். அன்னை என்றாலும், அவர் இகழ்ச்சி மறைமுகமாகச் சென்று தாக்குவது தன் கணவனை அல்லவா? உன் கணவன், உனக்கு மாற்றுத்துணி வாங்கித்தருமளவிற்குக் கூட வக்கற்றவன் என்றல்லவா கூறுகிறார்.
சற்றுமுன் தாயின் உடல் நிலையைப் பார்த்து இரக்கமுற்ற மனமோ, இப்போது முறுக்கிக்கொண்டு அவரை எதிரி போல் பார்த்தது. “இஞ்ச பாருங்க…” என, ஆரம்பித்தவளை கதைக்கவிடவில்லை. சரசு.
“உன்ர கதைகளைக் கேட்க, இங்க ஆரும் வேலைவெட்டி இல்லாம மத்தவனிட குடிய எப்பிடிக் கொடுக்கலாம் எண்டு யோசிச்சுக் கொண்டிருக்கேல்ல.” சொன்னவரின் பார்வை, தள்ளி நிற்கும் ஆனந்தின் அன்னையைச் சுட்டுவிட்டு மகளிடம் திரும்பியது.
“அதால, இந்த உடுப்புக்கள எடுத்துக்கொண்டு கண்ணில படாமல் போயிரு!” சொல்லிக்கொண்டே தள்ளாட, “மாமி, இங்க பாருங்க, சொன்னாக் கேளுங்க, உள்ளே வாங்க முதல். இஞ்சேப்பா, நீங்க சரி சொல்லுங்கோவன்!” பதறினாள், கோகிலா.
மகள் காதலித்தாள், அவனுடன் சென்று விட்டாள் என்பது அறிந்த மறுகணம் மயங்கிச் சரிந்த சரசு, ஒரு கிழமை வைத்தியசாலையில் இருந்து எல்லோரையும் மிகவும் கலவரப்படுத்திவிட்டார். இப்போது வீடு திரும்பியிருந்தாலும், இன்னமும் முழுதாகக் குணமடையவில்லை. அப்படி இருப்பவருக்கு மீண்டும் ஏதாவது நடந்துவிட்டால் என்ற பயம் கோகிலாவைப் பிடித்துக்கொள்ள, மாமியாரை உள்ளே அழைத்துச் செல்ல முயன்றாள்.
“இஞ்ச பாருங்க..” மங்கையின் குரல், அவர்களை நிறுத்தித் திரும்ப வைத்தது. “உங்களிட்டப் பிச்சை கேட்க நான் வரேல்ல. அப்ப, எனக்கெண்டு இங்க ஒண்டுமே இல்லையா?” கண்ணீர் வழியக் கேட்டவள், “தேவையில்ல! எனக்கு ஒண்டுமே வேணாம். உங்கட உறவு, பரிதாபம், காசு எதுவுமே தேவையில்லை. இது எல்லாத்தையும் விட, என்ர புருசனும் அவர்ட குடும்பமும் தான் எனக்கு முக்கியம்!” மூச்சுவாங்க, கிட்டத்தட்டக் கத்தினாள்.
இதைக் கேட்ட ஆனந்தின் அன்னையோ அதிர்ந்து போனார். ‘அட மூளை கெட்டவளே! உன்ர பங்குச் சொத்தக் கேட்டு வாங்கு எண்டா ஒண்டுமே வேணாம், புருசனும் அவன்ட குடும்பமும் போதும் எண்டுறாளே!’ மங்கையின் முட்டாள்தனத்தை எண்ணியெண்ணி மனதுள் கொந்தளித்தார்.
ஆனால், அவர் மருமகளோ, விடாமல் தாயையும் தமையனையும் சாடியவள், “சே! நீங்க எல்லாரும் மனிசரே? எல்லாத்தையும் வச்சு அனுபவிச்சுச் சந்தோசமா இருங்க!” என்று சொன்னவேகத்தில் திரும்பி நடக்கத் தொடங்கியவள் சட்டென்று நின்றாள். “இருந்து பாருங்க, நிச்சயம் உங்களுக்கு முன்னால நல்லா வாழ்ந்து காட்டுவன். பாக்கத்தான் போறீங்க!” விடுவிடுவென்று வெளியேற, கொதிக்கும் மனதோடு அவளைத் தொடந்தார், ஆனந்தின் அன்னை.
மகளின் ஆடைகளை வீசியெறிந்து, எடுத்துக்கொண்டு போ என்று கத்திய தாயும், ஏன் இங்கு வந்தாய் என்று சீறிய தமையனும், சூடாக வார்த்தைகளைப் பிரயோகித்துவிட்டு, திரும்பியும் பாராது வீராப்பாகச் செல்பவளை அதிர்வுடன் பார்த்து நின்றனர்.
“மாமி, உள்ளுக்க வாங்கோ.” வற்புறுத்தி அழைத்த மருமகளின் கரம் பற்றி உள்ளே சென்று சோஃபாவில் அமர்ந்து கொண்ட சரசு, இயலாமையுடன் சாய்ந்து விழிகளை இறுக மூடிக்கொண்டார். ஈரைந்து மாதங்கள் எத்தனையோ உபாதைகளுடன் சுமந்த அவர் வயிறோ, நெருப்பாகத் தகித்தது. ஏறக்குறைய ஈர்பத்து வருடங்கள் கண்ணின் மணியாக பாதுகாத்து வளர்த்த நெஞ்சமோ, சொல்லவொணா வலியில் கிடந்து துடித்தது. இக்கணம், பெற்றுச் சீராட்டிப் பாராட்டிப் பேணி வளர்த்து, தம் பிள்ளைகள் சிறப்பாக வாழும் பொழுது மனமார வாழ்த்த விளையும் தாய்மையின் உள்ளமோ, அவளைக் கேவலமாகச் சபிக்கவே விருப்பம் கொண்டது.
“அவள் என்ர வயிற்றில பிறந்தவள் தானா? இவ்வளவு திமிர் பிடித்த சுயநலவாதியா என்ர மகள்?” புலம்பியவரை ஆதரவாக அணைத்துக்கொண்டாள், கோகிலா.
“விடுங்க மாமி, அவள் சின்னப்பிள்ளை…ஏதோ..” என்று தொடங்கியவள், சரசுவின் முறைப்பில் சட்டென்று பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.
“அம்மா, நான் தான் கதைச்சுக் கொண்டிருந்தனே, அதுக்குள்ள நீங்க ஏன் எழும்பி வந்தனீங்க? இப்பதான் கொஞ்சம் சுகம் வருது, திரும்பவும்…” கடிந்து கொண்ட மகனை, கோபச் சிவப்பேறிய விழிகளுடன் ஏறிட்டார், சரசு.
“நீங்க எதை அப்பிடிக் கதைச்சீங்க தம்பி? அவள் கதைக்கிறத வாய் பாத்துக்கொண்டு எல்லா நிண்டீங்க!” என்றவர் குரலிலும் பாவனையிலும் கோபம் தெறித்தது. “முதல், அவள நிப்பாட்டி வச்சு என்ன கத வேண்டிக்கிடக்கு? என்ன துணிவிருந்தா அந்தப் பொம்பிளையையும் கூட்டிக்கொண்டு வந்து, நிமிர்ந்து நிண்டு சொத்தில் பங்கு கேட்பாள்!” என்றவர் குரல் நடுங்கியது.
“எல்லாமே எங்களால ஏலும் எண்டு போகத் தெரிஞ்சவளுக்கு நாங்க சிரமப்பட்டுச் சேர்த்து வச்சிருக்கிற சொத்து மட்டும் எதுக்காம்? வெட்கமா இல்லையா? பச்! வெட்கம் மானம் ரோசம் பாக்கிற மனுசர் இப்பிடியெல்லாமா நடப்பீனம்!” கசப்புடன் சொல்லிக்கொண்டவர், இயலாமல் சாய்ந்து விழிகள் மூடினார்.
“வேணாம் தம்பி, வேணவே வேணாம். அவள் இனி இந்த வீட்டுக்கு வேணவே வேணாம்.” என்ற தாயை கண்டிப்புடன் பார்த்தான், ராசன்.
“அம்மா, அவள் எப்பிடிச் சின்னப்பிள்ளைத்தனமா அவசரம் அவசரமா லவ் பண்ணிக் கலியாணம் செய்துகொண்டு போனாளோ, அதே மாதிரி நீங்களும் அவசரப்பட்டு ஒரு முடிவையும் எடுக்க நினையாதீங்க சரியா?” என்ற மகனை, கோபத்தை மீறிய ஆச்சரியத்துடன் பார்த்தார், சரசு.
தங்கை மீது கணவனுக்குள்ள பாசத்தை உணர்ந்திருந்தாலும், கோகிலாவால் தன் கணவனின் வார்த்தைகளை நினைத்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. ‘இப்பிடி ஒரு அண்ணாவ வருத்துறதுக்கு எந்த அன்பான சகோதரியாலும் ஏலுமா?’ என எண்ணிக்கொண்டவள், ‘ஏலுமே…எண்டு செய்தும் காட்டிட்டாவே மங்கை!’ மனத்துள் அரட்டினாள்.
“இந்த நிமிடம் வரைக்கும் அவள் செய்த செயலால என்ர மனம் கொதிக்குது தான்மா. வெளில தலைகாட்ட ஏலாமல் அவமானமா இருக்கு.” என்ற ராசன் கண்கள் கலங்கின.
“அதுக்கெண்டு…எக்கேடும் கெட்டுப்போ எண்டு அவேய நம்பி எங்கட பிள்ளையை எப்படிம்மா விட்டு விலகிறது?” என்று கேட்ட மகனை நன்றாகவே முறைத்த சரசுவின் விழிகளிலிருந்து நீர் கோடாக இறங்கியது.

