அத்தியாயம் 6
மாமியும் மருமகளும், வீடு வந்து சேரும் வரை ஒற்றை வார்த்தை கதைத்துக்கொள்ளவில்லை. வெவ்வேறு மனநிலையில் இருந்தவர்களின் உள்ளங்களோ, பல்வேறுபட்ட உணர்வுகளால் தகித்துக்கொண்டிருந்தன!
“முதலாளிட தங்கச்சியும் நானும் விரும்புறம் அம்மா!” என்று, சில மாதங்களுக்கு முன், தயங்கிக்கொண்டே மகன் சொன்னதைக் கேட்ட ஆனந்தின் அன்னை, தன் அனைத்து நம்பிக்கையும் தவிடுபொடியாகி விட்டதாகத் துடித்துப் போய்விட்டார். கணவனோ இயலாதவர். அடுத்தடுத்து மூன்று மகள்கள். அவர்களின் வளர்ச்சியோ இவரை மிரளவைத்துக் கொண்டிருக்க, பொறுப்பாக இருந்த மகனும் காதலிக்கிறேன் என்று வந்து நின்றால், வறுமையில் உழலும் அவர்தான் என்ன செய்வார்? எரிக்கும் விழிகளால் மகனை உறுத்து விழித்தார்.
“இப்பிடி வந்து என்னட்டச் சொல்ல உனக்கு வெட்கமா இல்லையா ஆனந்த்? ஒரே ஒரு ஆம்பிளப்பிள்ள எண்டு உன்ன எவ்வளவு சிரமப்பட்டு வளர்த்தனான். தின்னக்குடிக்க எண்டு என்ன இல்லாட்டியும் உனக்குத் தேவையானதுகளப் பாத்துப் பாத்துச் செய்தனே! அதுக்கெல்லாம் நீ செய்யிற கைம்மாறு இதானா?” என்று கேட்டவர், தன்னை மறந்து கண்ணீர் உகுத்தார்.
பார்த்திருந்த மகனோ துடித்துப்போனான். “இது என்னம்மா உங்கட கதை? இப்ப நான் என்ன சொன்னனான் எண்டு இப்பிடி எல்லாம் கதைக்கிறீங்க?” பதறிப்போய்க் கேட்டான். “நானாப் போய் விரும்பேல்ல அம்மா. எப்பிடி எண்டு தெரியாமல்… என்னையும் அறியாமல்…” என்று, மிகவுமே தடுமாறினான். மங்கை… சரியான நல்ல பிள்ள அம்மா. நான் எண்டா சரியான விருப்பமும்.” தடுமாற்றத்துடன் சொல்லி, அந்தரப்பட்டவாறே தாயை ஏறிட்டான்.
அவனுக்கோ, காதலும் காதலியும் எவ்வளவு முக்கியமோ, அதைவிடப் பல மடங்கு அவன் அன்னை முக்கியம். அவர் அன்பும் மகிழ்ச்சியும்தான் அவன் மகிழ்வும் நிம்மதியும்.
மகன் சொன்னதைக் கேட்டிருந்தவரோ அவனையே பார்த்திருந்தார். மகன் காதலி என்று கை காட்டியவளின் செல்வநிலை அவரை அந்தளவுக்கு யோசிக்க வைத்தது. மனதில் சிலபல கணக்குகளைப் போட்டுப் பார்த்தாலும், அவருக்கு இக்காதலில் பெரிதாக நம்பிக்கை வரவில்லை.
“நடக்கிற கதையைச் சொல்லுத் தம்பி. அந்தப் பிள்ள ஏதோ வயசுக்கோளாறில உன்னோட சிரிச்சுக் கதைச்சுப் பழகியிருக்கும். வசதி வாய்ப்புள்ள பிள்ளைகளிட வேலையே இதான்.” என்றதும், ஆனந்தின் முகம் சட்டென்று சுருங்கியது.
“ஏனம்மா உங்கட மகனை நீங்களே இவ்வளவு தாழ்வாக் கதைக்கிறீங்க? எனக்கு என்ன குறை?” என்றவன் மனதில், அவன் தோற்றத்தில் மிகுந்த நம்பிக்கையுண்டு. ‘படிப்பும் பணமும் இல்லைதான், அதுக்கெண்டு திடகாத்திரமான கண்ணையும் கருத்தையும் நிறைக்கும் தோற்றம் எல்லாருக்கும் இருக்குமா என்ன?’ என, மனத்தில் எண்ணிக்கொண்டவன், “மங்கை என்ன உண்மையாவே விரும்புறா அம்மா.” அழுத்திச் சொன்னான்.
“அட தெய்வமே! இதெல்லாம் கற்பனைக்குத்தான் நல்லா இருக்கும். சும்மா இப்பிடி அலட்டல் கதை கதைச்சு உன்ர வாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்ளாத சொல்லிப்போட்டன். முதல், அந்த ராசன் ஒருநாளும் இதுக்கெல்லாம் ஓமெண்டு சொல்லுவாரோ? வீண் பிரச்சனை அய்யா, பெரிய இடத்து வம்பு தும்பு எங்களுக்கு ஏன் சொல்லு?” இப்படித்தான் முதலில் கதைத்தார்.
ஆனால், அவர் மகனோ ஆணித்தரமாகக் கதைத்தான். “மங்கை என்னை ஒருநாளும் ஏமாத்த மாட்டாம்மா. அந்தளவுக்கு என்னை விரும்பிறா. நீங்க நம்பினாலும் நம்பாட்டியும் அதான் உண்மை. வேறு ஓராளக் கடைசிவரை கலியாணம் செய்யவும் மாட்டா.” என்றவன், “அவவிட அண்ணாட சம்மதம் ஆருக்கு வேணும்?” அலட்சியமாகச் சொன்னான். அதிர்ந்து போனார், அவன் அன்னை.
“நீங்க மட்டும் சரியெண்டு தலையாட்டுங்க, அவளைக் கலியாணம் செய்து கூட்டிக்கொண்டு வாறன்.” வீராப்பாகச் சொன்னாலும் குரலில் கெஞ்சலும் கலந்தே இருந்தது.
“அய்யைய்யோ! இது என்ன கதை தம்பி? கலியாணம் செய்யிறதா? இப்பவேவா? அய்யோ வேணாம் வேணாம். இங்க வீட்டுக்கக் குமர்ப்பிள்ளைகள் இருக்கேக்க இதென்ன கதை தம்பி?” பதறினார். “சரி, அப்பிடியே விரும்பினாலும் இப்பக் கலியாணத்துக்கு என்ன அவசரம்?” தொடர்ந்து படபடத்தார்.
“இல்ல ஒரு கதைக்குச் சொன்னனான் என்றுவிட்டுப் போனான், ஆனந்த்.
சில மாதங்கள் சென்றிருக்கும். “மங்கைக்குக் கலியாணம் பேசிட்டினம் அம்மா. இப்ப எங்கட கலியாணம் நடக்கோணும் . வேற வழியே இல்ல. ” என்றபடி வந்து நின்றவன், தாயின் சம்மதத்துடன் மங்கையைக் கல்யாணம் செய்து கொண்டான். கல்யாணம் முடித்து வீடு வரும் வரை துளியும் நம்பிக்கையில்லை இவருக்கு! மங்கை, கடைசியில் தன் மகனை ஏமாற்றி விடுவாள் என்றே எதிர்பார்த்தார். அவள், தன் காதலை இந்தளவுக்கு மதிப்பாள் என்பது இவரும் எதிர்பாராதது. அதன்பின், அவர் மனத்தில் துளிர் விட்டிருந்த ஆசையெனும் மரமோ, தளிர்த்து வளரத் தொடங்கியது.
அந்த உந்துதலில் இன்று காலை புறப்பட்டு வந்திருந்தவர், ‘ஒரு மாதிரி அவளுக்கு உரிமையானதில இப்போதைக்குக் கொஞ்சத்த எண்டாலும் கேட்டு வாங்கிக்கொள்ளலாம் எண்டு நினைச்சனே. இவளோ இப்பிடிச் சொல்லிட்டு வந்திட்டாளே.’ என்று, மருமகள் வீட்டாரை விட, மருமகளில் மிகுந்த ஆத்திரம் எழுந்தது.
‘தான் ஏதோ உலகத்தில இல்லாத பெரிய ரதி மாதிரியும், நானும் என்ர மகனும் இவள்தான் வேணும் எண்டு தவம் கிடந்த மாதிரியும், ஒண்டுமே வேணாம் வாழ்ந்து காட்டுறன் எண்டுறாளே. எப்பிடி வாழ்ந்து காட்டுவாள்? வெறுங்கை முழம் போடுமா? இப்பிடியான மடச்சி எண்டு தெரிஞ்சிருக்க என்ர மகனை இவள்ட பக்கமும் திரும்ப விட்டிருக்க மாட்டனே.’ என்று, மங்கையைப் ட்டு உலுக்கி எடுக்கும் ஆத்திரத்தில் குமுறிக்கொண்டே வந்தார்.
மங்கையோ, இத்தனை வருடங்கள் பெற்று வளர்த்த தாய்க்கும், பாராட்டிச் சீராட்டிய தமையனுக்கும் இப்படியா துளியும் பாசமில்லாது போகும் என்று நம்பவே முடியாது தவித்தாள்.சிறுவயதிலிருந்து அவர்கள் சொல்கேட்டு நடக்கவில்லையா? சிறு சிறு விடயங்களில் கூட அவர்கள் விருப்பத்தை என் விருப்பமாக நினைக்கவில்லையா என்றெண்ணிய மனமோ, விக்கி விக்கி அழுதது.
வாழ்க்கையென்று வரும் போது, வாழப்போகும் எனக்கு அது பிடித்தமானதாக இருக்க வேண்டுமென்ற என் எண்ணத்தில் ஏதாவது குறையுண்டா? எங்கோ கண்காணாத தேசத்தில் சென்று குளிரிலும் பனியிலும் வாழ்வதை விட, நம்மூரில், மனதுக்குப் பிடித்தவருடன் வாழும் வாழ்க்கை எந்த விதத்தில் குறைந்து போனது என்று சென்ற அவள் சிந்தனை, தன் செயலை நியாயப்படுத்தவே முனைந்தது.
‘உங்களிட்டச் சம்மதம் கேட்டாக் கிடைக்கவே கிடைக்காது எண்டதால தானே வீட்ட விட்டுப் போனனான். அதுக்கெண்டு ஒரேயடியா என்னை ஒதுக்குவீங்களோ? என்ர கண்ணீரும் துன்பமும் உங்களுக்கு ஒண்டுமே இல்லையா?’ சற்றுமுன் அவர்கள் முன்னால் மனம் திறந்து கேட்க முடியாமல் போனதை, மனத்துள் அவர்களை நிறுத்தி வைத்துக் கேட்டாள், மங்கை.
‘நீங்க வருத்தம் வந்த ஆளப் போல நிக்க நான் பதறேல்லையா அம்மா? அதப்போல, என்னப் பாத்தோன்ன உங்களுக்கு இருக்கேல்லையே. அப்பிடி மட்டும் இருந்திருக்க இப்பிடி உதாசீனப்படுத்தி இருப்பீங்களா?’ எனத் தவித்தவள் மனமோ, அவள் தாயின் இக்கோலத்துக்குச் சொந்தக்காரியே தான்தான் என்பதைச் சிறிதும் உணர்ந்து கொள்ளவில்லை.
‘ஆனந்திட குணமென்ன, இவேண்ட குணமென்ன! காசு, சொத்து எண்டு கணக்குப் பாத்திட்டினமே.’ தன் செய்கையில் என்னதான் கோபமிருந்தாலும், தான் கேட்டதைத் தமையன் கட்டாயம் செய்வார் என்ற நம்பிக்கையில் சென்றாளே. அது பொய்த்துப் போனதே.
‘என்ர ஆனந்தப் பற்றிக் கதைக்கேக்க எவ்வளவு ஏளனம்? உங்களிட்ட வேலை பாத்திருந்தாலும், கை நீட்டிச் சம்பளம் வாங்கியிருந்தாலும், இப்ப அவர் உங்கட மகளிட புருசன் எல்லா? அவரை எப்பிடி இழிவாக் கதைக்கேண்டது. இண்டையோட எல்லாம் முடிஞ்சிட்டா?’ என்று நினைத்துக்கொண்டபோது பிறந்த வீடே வெறுத்துப் போனது அவளுக்கு.
‘என்ர புருசன மதிக்காதவேட வீட்டு வாசல நான் ஒருநாளும் மிதிக்க மாட்டன்.’ உறுதியாக எண்ணிக்கொண்டாள் அவள். அதோடு சேர்ந்து, ‘வாழ்ந்து காட்டுவன்! என்ர புருசனிட துணையோடு நல்லா வாழ்ந்து காட்டுவன்!’ மனக்குமுறலுடன் சபதமே செய்து கொண்டாள், மங்கை .

