அத்தியாயம் 7
“இஞ்ச பாருங்க மங்கை, இப்பிடி ஆடியாடி ஒவ்வொண்டையும் செய்து கொண்டிருந்தா ஒரு வேலையும் நடக்காது. முன்னேறிக் காட்டுகிறன் எண்டு வாய் கிழியச் சபதம் போட்டு என்ன பிரயோசனம்? அதுக்கு முதுக வளைச்சு ஓடியாடி வேலைகளைச் செய்யோணும்.” துவைத்து உலர்த்திய துணிகளுடன் வீட்டினுள் நுழைந்தவளை, ஏளனப் பார்வையுடன் வரவேற்றார், ஆனந்தின் அன்னை.
“உங்கட வீட்டில என்ன வளர்ப்பு வளர்த்தீனமோ தெரியா! ஒரு வேலையையும் உருப்படியாச் செய்யத் தெரியேல்ல!” எள்ளல் பார்வையோடு சிடுசிடுத்தார்.
“இதே, என்ர மூத்தவளப் பாருங்க, உங்களவிட வயசு குறைவு, பத்துப்பேருக்குச் சமை எண்டாலும் முகம் கோணாமல் வாய்க்கு ருசியா வேகவேகமாச் செய்திருவாள். காசு பணம் வசதி வாய்ப்பு எல்லாம் இருந்து என்ன பிரயோசனம்? ஒரு பொம்பளைப்பிள்ளைய முறையாக வளக்கவும் தெரியோணும். புருசனுக்கு ஒருவாய் சமைச்சுப் போடத் தெரியேல்ல, அதுக்க கலியாண ஆசை!” எகத்தாளமாகச் சொல்லிக்கொண்டே, இடிப்பதற்காக ஊறப் போட்டிருந்த அரிசியைத் தூக்கி வெளியில் வைத்து அதன் நீரை வடித்தார்.
“இந்தாங்க, சட்டுப் புட்டெண்டு இதை இடிச்சு வறுத்து வையுங்க. சுகுணா வீட்டில கடனாக கொஞ்சம் காசு கேட்டிருந்தன், வாங்கிக்கொண்டு வாறன்.” என்றவாறே நகர்ந்தவர், “கடனை உடனை வாங்கிச்சரி மூண்டு வேளையும் வயித்தை நிரப்புவமே!” என்றவாறே திரும்பி, ஒற்றை வார்த்தை உதிர்காது அரிசியையே பார்த்து நிற்பவளை முறைத்தார்.
“என்ன மங்கை, அரிசிய இப்பிடிப் பார்க்கிறீங்க? இடிப்பிங்களோ? அல்லது போன முறைபோல, உங்கட புருசன் வந்தப் பிறகு அவனைக்கொண்டு வேலை வாங்குவோமெண்டு அவன் வாறவரைக்கும் வச்சுத் தட்டிக் கொண்டிருப்பீங்களோ?” அதட்டலாகக் கேட்டவரை, தயக்கத்துடன் ஏறிட்டாள், அவள்.
“இங்கபாரும் பிள்ள, எங்கட வசதிக்கு ஆள் வச்சு மா இடிக்கிறது, வீட்டு வேலைகள் செய்யிறது எல்லாம் சரிவராது. எங்கட வேலைகளை நாங்கள்தான் செய்யோணும். உங்களுக்கு இதுகள் எல்லாம் பழக்கம் இல்லை எண்டா இப்ப பழகிக்கொள்ளுங்க.” நீதான் செய்ய வேண்டும் என உறுதியாகச் சொன்னது அவர் குரல்.
விழிகளில் துளிர்த்த கண்ணீரை வெளியேற்ற மனமின்றி உள்ளிழுத்து அடக்கிக்கொண்டே, சமையலறையை ஒட்டிய தாழ்வாரத்திலிருந்த உரலை உருட்டி வெளியில் எடுத்து, சுத்தப்படுத்தி, மாவை இடிப்பதற்கு ஆயத்தப்படுத்தினாள், மங்கை.
சற்று நின்று, அவள் வேலை செய்வதைப் பார்த்துத் திருப்தியுடன் நகர்ந்தார், ஆனந்தின் அன்னை.
பெரிய அலுமினியப் பாத்திரத்தில் காணப்பட்ட, ஊறிய சிவப்புப்பச்சை அரிசியைப் பார்த்தவள் மனமோ அலறியது.
‘இது இவ்வளவையும் நான் இடிச்சு முடிக்கோணுமா? பிறகு வறுக்கவும்…” வாய்விட்டே முணுமுணுத்தவளுக்கு, அப்படியே அழ வேண்டும் போலிருந்தது.
ஆனால், தோள் சாய்த்துக் கதறியழ எனக்கென்று யார் உள்ளார் என்ற நினைவெழ, திடுக்கிட்டாள். காதலித்த இருவருடங்களுமே, வண்ணமயமான வசந்தத்தை மட்டுமே சுவாசித்து மயங்கித் திரிந்த நாட்கள்! அதே, வீட்டுக்கு ஒழித்துத் திருமணம் செய்திருந்தாலும், முதல் ஒரு கிழமையும், அனைத்துப் பிரச்சனைகளையும் மறந்து கழிந்தது அவர்களின் தாம்பத்திய வாழ்வு!
‘அதுக்குப் பிறகோ!’ என நினைத்ததும், கேட்டுக் கேள்வியில்லாது பெருமூச்சொன்று வெளியேறியது.
‘ஆனந்த் இப்ப எல்லாம் சரியா மாறிட்டார்.’ என்ற அவள் நினைவை, முறைத்து அடக்கியது அவள் மனசாட்சி.
எவ்வளவு பெரிய குடும்பப் பொறுப்பு. வேலை இல்லையே எண்ட கவலை வேற. அவரும் மனுசர் தானே. தன் மனத்தில் எழும் கவலைகளை உன்னிடம் காட்டாமல் வேறுயாரிடம் காட்டுவதாம்? அன்புக்கும், ஆசைக்கும், கொஞ்சலுக்கும் மட்டுமா நீ! மனைவி என்ற உறவு! முறைப்புக்கும், சிடுசிடுப்புக்கும், கோபதாபங்களைக் காட்டவும் அவனுக்கு நீதானே! அதேபோல, உனக்கும் அவன் தானே என்ற மனசாட்சியின் அதட்டலில் ஆனந்தை விளங்கிக்கொள்ள முடிந்தது. அதுவே, எப்போதும் போல் கணவன் மீது அளவில்லா நேசம் கொள்ள வைத்தது.
பிறந்த வீட்டின் மறுப்போ, மாமியின் ஏச்சுப் பேச்சுகளோ, மைத்துனிமாரின் ஒட்டாத தன்மைகளோ, மாமாவின் மௌனமோ அவளைப் பாதிக்க மறுத்தது. முகத்தில் இடம்பிடித்த சிறு முறுவலுடன், ஒவ்வொரு இடிக்கும் துள்ளித் தெறித்த அரிசியை ஒதுக்கி ஒதுக்கி இடிக்க முயன்றாள்.
இவள் திருமணம் முடித்து இரு மாதங்கள் கடந்திருந்தன.
அன்று பளை சென்று வந்ததிலிருந்து இவளின் மாமியார் ஆளே மாறிப் போய்விட்டார். அவர் நிலையில் இருந்தால் யாருமே இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என, தன்னைத்தானே சமாதானம் பண்ணிக்கொண்டாள், மங்கை.
“என்ன மங்கை இப்பிடிச் செய்திட்டிங்க. நைசா கதைச்சுப் பேசிக் காரியம் செய்ய ஏலாத பிள்ளையா நீங்க? கொஞ்சம் பொறுமையாக் கதைச்சிருக்க உங்கட அம்மாவும் அண்ணாவும் கட்டாயம் உதவி இருப்பினம்.” அன்று வீடு வந்ததும், வருவித்துக்கொண்ட பொறுமையோடு கதைத்தார், ஆனந்தின் அன்னை.
“ நீங்களே பார்த்தீங்கதானே மாமி, இவர் என்னவோ சொத்துக்காக விரும்பினார் எண்டு கதைக்கேக்க அந்தச் சொத்து ஆருக்கு வேணும் சொல்லுங்க?” அப்போதும் கோபம் அடங்காது சொன்ன மருமகளை, முறைக்க மட்டுமே அப்போதைக்கு முடிந்தது.
“இப்பிடி எல்லாம் ரோசம் பார்த்தா உருப்பட்ட மாதிரித் தான்!” சலித்துக்கொண்டவர், “அங்கப் போய் வந்தத உங்கட மனுசனிட்டச் சொல்லி விட்டிராதீங்க! பிறகு மேலயும் கீழயும் குதிப்பான்.” அலுத்துக்கொண்டவர், “இன்னும் ஒண்டும் காலம் போகேல்ல மங்கை. ஆறுதலா யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க. உங்களுக்கானத மற்றவேக்கு ஏன் விட்டுக் கொடுக்கோணும்? நாளைக்கு உங்கட பிள்ளைகள் வாய்க்கும் வயித்துக்கும் அல்லற்படுறதக் காண உங்களுக்கு விருப்பமா என்ன?” போற போக்கில் சொல்லிவிட்டே சென்றார்.
அவர் என்ன சொன்னாலும் மங்கைக்கோ, இன்னொருதரம் தன் பிறந்த வீட்டு வாசல்படியை மிதிக்கும் எண்ணம் கொஞ்சமும் இல்லை. மறுபடியும், உன் பணத்திற்காகவே உன்னைக் காதலித்தான் என்ற அவப்பெயரைக் கணவனுக்கு வாங்கித்தர அவள் விரும்பவில்லை.
விசுவமடுவில், இவர்கள் போயிருந்த அத்தை வீட்டுக்கருகிலுள்ள கடையொன்றைக் கவனித்துக்கொள்ள ஒருவர் தேவையென்று கேட்கவே, இருந்த இடத்திலிருந்து செய்யக்கூடிய வேலை என்பதால், ஒரு கிழமைக்கு முன்னர்தான் அங்கு சென்றிருந்தார், ஆனந்தின் தந்தை.
காலையில் கண் விழித்ததிலிருந்து, இரவு சமையலறையை ஒதுக்கி வைப்பது வரை அனைத்து வேலைகளும் ஒன்றொன்றாக மங்கை வசம் வந்து சேர்ந்தன. பழக்கமில்லை, முடியாது என்று சுணங்கி விலகாது சிரமப்பட்டென்றாலும் எல்லாவற்றையும் பொறுமையாகச் செய்தாள். கூடவே, திடீர் திடீரென்று ஊசியாகக் குத்தும் மாமியின் வார்த்தைகள்தான் அவளை மிகவும் சோர்வடையச் செய்தன.
மா இடிப்பதாகப் பெயர் பண்ணி, அரிசியை சுற்றி இறைத்துக்கொண்டிருந்தவளின் கோலத்தைப் பார்த்து நகைத்தவாறே வந்திறங்கினான், ஆனந்த்.
“இதென்ன வேலை மங்க? உனக்கேன் இந்த வேண்டாத வேலை? அம்மா எங்க?” கேட்டுக்கொண்டே வந்தவன், “தங்கச்சி ஆட்களையும் காணேல்ல.” சைக்கிளை ஓரமாக நிறுத்தினான்.
“என்ன வேளைக்கே வந்திட்டீங்க?” உலக்கையை அருகில் சாய்த்து வைத்தவள், “அவே ராதையக்கா வீட்டுக்குப் படிக்கப் போயிருக்கினம். மாமி கடைக்குப் போயிருக்கிறா. தேத்தண்ணி போடுறன் வாங்க.” என்றபடி நகர்ந்தாள்.
“ஓ! தனியவா நிக்கிற?” என்றுகொண்டே,சமையலறை நோக்கிச் சென்றுகொண்டிருந்தவளை எட்டிப் பிடித்து நிறுத்தினான், ஆனந்த்.
“என்ன ஆனந்த் இது? முதல் கைய விடுங்க. மாமி இப்ப வந்திருவா. மாவை இடிச்சு வறுக்கவும் சொன்னவா. உங்களுக்கு டீ போட்டுத் தந்திட்டு…” என்றவளை, வீட்டினுள் இழுத்துச் சென்றான், அவன்.
“அதெல்லாம் பிறகு பாத்துக்கொள்ளலாம். நான் இடிச்சுத் தாறன், நீ வறு.” என்று சொல்லிக்கொண்டே மனைவியை ஆசையுடன் அணைத்துக்கொண்டான்.
‘இவர் என்ன இண்டு சரியான சந்தோசமா இருக்கிறார்!’ மனத்தில் சட்டென்று தோன்றினாலும், கணவன் அருகாமை அவளை மேலே சிந்திக்க அனுமதிக்கவில்லை.

