அத்தியாயம் 9
‘விரும்பத் தொடங்கியதில இருந்து நான் ஒண்டையும் ஆனந்திட்ட மறைச்சது இல்ல. அண்டில இருந்து, என்ர அம்மாட்டையும் அண்ணாட்டையும் எல்லா எல்லாத்தையும் மறச்சனான். அப்பிடியிருக்க, இந்த ஆனந்த் என்னட்ட இப்பிடி ஒளிச்சு மறைச்சு நடந்திருக்கிறாரே!’ மங்கையால் நம்பவே முடியவில்லை.
இதுவரை மிகவும் அற்புதமாகக் கழிந்த கணவனுடனான ஒவ்வொருநொடியும் அவள் நினைவில் உழன்று, அர்த்தமற்றதாகத் தோன்றியது. ‘அப்ப, வசதியானவள் எண்ட ஒரே காரணத்தால தான் விரும்பியிருக்கிறார். விரும்பினவரா? விரும்பினது போல நடிச்சிருக்கிறார். இல்லை எண்டால்… இல்லை எண்டால்…’ மனத்துள் உடைந்து போனவளால் தொடர்ந்து நினைக்கக் கூட முடியவில்லை. காதலித்த இரண்டு வருடங்களும் இவ்வளவுக்கு முட்டாளாக இருந்திருக்கிறாளே என்று, தன்னைத்தானே சாடிக்கொண்டாள்.
‘என்ர உண்மையான விருப்பத்த இந்தளவுக்குக் கீழ்த்தரமா, ஒரு சதத்துக்கு மதிப்பில்லாமல் செய்து போட்டாரே!’ தாங்கவே முடியாத வேதனையோடு மனத்துள் அழுதாள். கணவனை நினைக்க நினைக்க அருவருப்பாக இருந்தது. மனத்தில் புகையாக முட்டிய ஆத்திரத்தால், வெறுப்பால், அழகாக அனுபவித்த தாம்பத்தியம் செல்லாக் காசாகிக் கொண்டிருந்தது.
வீட்டுக்குத் தெரியாமல் கல்யாணம் செய்துகொள்ளலாம் என்றதிலிருந்து, அடுத்துவந்த ஒரு கிழமை விசுவமடுவில் தங்கியிருந்து, பின்னர் இவள் வீட்டுக்குப் போகலாம் என்றது வரை, தாயும் மகனுமாகத் திட்டமிட்டு நடந்துள்ளார்களே என்று உணர்ந்தவள் உடல் கூசியது.
வேலை இல்லை, வேலை தேடியலைந்து மிகவுமே சிரமப்பட்டு வருகிறேன் என்று எப்படியெல்லாம் சீறினார்! சினந்தார்! அப்போதெல்லாம் அவருக்காக நான் எவ்வளவு துடித்தேன்! எத்தனையைச் சகித்துக்கொண்டேன்! அத்தனையும் நாடகமா? என்னை வைத்து என் அண்ணாவை முட்டாளாக்கப் பார்க்கிறார்களே! அதைத்தானே அன்று அண்ணாவும் கேட்டார் என்றெல்லாம் உள்ளம் கதற, கண்ணீர் வழிய நின்றாள், மங்கை.
ஆனந்த் எப்படியானவர் என்று வெளிப்டையாகத் தெரிந்த பின்னும் அண்ணாவால் எப்படிப் பொறுமையாக இருக்க முடிந்தது என்று நினைத்தவளுக்கு, ஆனந்த் உன் புருசன் என்ற ஒன்றிற்காகத்தான் உன் சகோதரன் பொறுமையாக இருக்கிறார் என, மிகவும் தாமதமாகவே விளங்கியது. எப்போதும் உயிராக இருக்கும் தமையன் நினைவில் வாய் விட்டே அழ வேண்டும் போலிருந்தது. தான் பாதையில் செல்வதையும் மறந்து கேவினாள்.
“அண்ணா! என்ன மன்னிச்சுக்கொள்ளுங்க. நான்…நான் ஏமாந்திட்டன்!” நடை தள்ளாட சென்று கொண்டிருந்தவளை, “அண்ணி.. அண்ணி…” என்ற அழைப்பு, நின்று திரும்பிப் பார்க்க வைத்தது.
“இந்தப் பக்கமா எங்க அண்ணி போறீங்க?” கேட்டுக்கொண்டே அருகில் ஓடிவந்தாள் ஆனந்தின் கடைசித் தங்கை. கொஞ்சம் தள்ளி அவன் மற்றைய தங்கைகள் இருவரும் நின்றுகொண்டிருந்தார்கள்.
எதுவும் பேசாது நிற்கும் அண்ணியை பார்த்துக் கலவரம் அடைந்தாள், சின்னவள். ‘அழுது கொண்டு நிற்கிறாவே! என்ன நடந்தது?’ உள்ளே கலவரம் எழ, “வீடு இந்தப் பக்கம் அண்ணி…வாங்க…” கரம் பிடித்து நடக்கத் தொடங்கியவள், அப்போதுதான் மங்கையின் ஒரு கரத்தில் கடைக்குக்கொண்டு சென்ற பை இருப்பதைப் பார்த்துவிட்டு, “கடைக்குப் போய்ட்டு வாறீங்களா அண்ணி? குறுக்கு ரோட்டால வந்தீங்களா? ஏன் சாமான்கள் ஒண்டும் வாங்கேல்ல?” என்றவளுக்கு, ‘கடைக்காரர் அண்ணிய ஏசிட்டாரோ! அதுதான் அழுகிறாவோ!’ எனத் தோன்றியது.
“அந்தாள் ஏதாவது சொல்லி ஏசினவரா அண்ணி?” கேட்டவளைப் பார்க்கவும் பிடிக்கவில்லை மங்கைக்கு.
நால்வருமாக வாயிலால் நுழைய, “என்ன மங்கை, இவ்வளவு நேரம்?” கேட்ட ஆனந்தின் அன்னை, அவள் கரம் வெறுமையாக இருப்பதைப் பார்த்ததும் நெற்றியைச் சுருக்கினார். அவளோ, அவரை வெறித்தாள். அவள் பார்வையில் மாற்றத்தைக் கண்டதும், சட்டென்று ஒரு கணம் குழம்பிப் போனார்.
“மங்கை! அழுதியா என்ன? ஏன் கண்கள் சிவந்திருக்கு?” கரிசனையாக கேட்ட கணவன் முகம் பாராது, சட்டென்று வீட்டினுள் நுழைந்து தம் அறைக்குள் புகுந்துகொண்டாள் அவள்.
“அம்மா, கடைக்காரர் அண்ணிய ஏசி இருப்பார் போல! ரோட்டில அழுதுகொண்டே வந்து கொண்டிருந்தவா!” தங்கை சொன்னதும், “பச்.. இதுக்குத்தான் மா அவள அனுப்ப வேணாம் எண்டனான். இப்ப பாருங்க!” என்ற மகனிடம், “இதென்னடா பெரிய விசயம்? உன்ர தங்கச்சிமார் வேண்டாத ஏச்சுப்பேச்சா? ஒருநாள் ஏச்சு வாங்கினா உன்ர பெஞ்சாதி கரைஞ்சு போக மாட்டா!” சிடுசிடுத்தார்.
“பச்!…இதெல்லாம் அவளுக்குப் பழக்கமில்ல…” என்று, தொடர்ந்து ஆதரவாகப் பேசிய மகன் கதையைக் கேட்கும் பொறுமையில்லை, அவன் தாய்க்கு. “சரி சரி விடு. கொஞ்ச நேரத்தில சரியாகிருவா. அவவக் கலியாணம் செய்யப்போய் வேலைவெட்டியில்லாம வீட்டில நிற்கிற எண்டுறத உன்ர மனிசிட்ட தெளிவாச் சொல்லு தம்பி. அதை விட்டுட்டு அவவுக்கு வக்காலத்து வேண்டினியோ, உன்ர தலையில் ஏறி இருந்திருவினம்.” படபடத்தவர், “இப்ப நீ போய், குடுக்கவேண்டிய காசக் குடுத்திட்டு இந்தச் சாமான்களை வாங்கிக்கொண்டு வா அய்யா.” குரலைத் தணித்துக் குசுகுசுத்தார்.
“ம்ம்… மங்கையை ஒருக்காப் பாத்திட்டுப் போறன்!” என, எழுந்து வீட்டினுள் நுழைந்தான், ஆனந்த்.
தம் அறையில், முழங்காலில் தலை கவிழ்த்து மனைவி அமர்ந்திருந்த கோலம் அவன் நெஞ்சைப் பிசையச் செய்தது. “ப்ச்…மங்கை, இதென்ன சின்னப்பிள்ளைகள் போல?” என்றவாறே அவளருகில் சென்றமர்ந்து, “இங்க பாரன் மங்கை…” கனிவுடன் அவள் தலையை நிமிர்த்த முயன்றான்.
“அவர் இப்பிடித்தான் மங்கை, ஆர் எவரெண்டு பாராமக் கத்துற ஆள்! இனி நீ அங்க எல்லாம் போகத் தேவேல்லை. அம்மாட்டக் கண்டிப்பாச் சொல்லுறன் சரியா?” என்றவனை, சரேலென்று நிமிர்ந்து பார்த்தாள், அவன் மனைவி.
அவள் பார்வையிலிருந்த தீவிரத்தில் சற்றுத் தடுமாறிப் போனான் ஆனந்த். “என்ன…மங்கை? என்னில கோவமா?” தடுமாறியவனை, தன் கூரிய பார்வையால் துளைத்தாள், அவள். ‘சே! நீ எல்லாம் ஒரு மனிசனா?’ கேட்கத் துடித்த நாவை மிகவும் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டாள். ஆனால், மனதின் கொந்தளிப்பெல்லாம் அவள் நயனங்களால் கசிவதை மட்டும் மட்டுப்படுத்த முடியவில்லை.
“மங்கை…என்ன மங்கை, ஏன் இப்பிடிப் பாக்கிறயப்பா?” என்றவனிடம், “என்னைக் கொஞ்ச நேரம் தனிய இருக்க விடேலுமா?” சீறவும், திடுக்கிட்டுப் போனான், ஆனந்த்.
“என்ன மங்கை குரல் உயருது? இப்ப என்ன நடந்திட்டிது எண்டு இப்பிடிப் பெரிசு பண்ணுற?” நெற்றி சுருங்கக் கேட்டான்.
“ஒண்டுமே நடக்கேல்ல. நான் எதையுமே பெரிசு பண்ணவும் இல்ல. அந்தளவுக்கு எல்லாம் எனக்கு மூளையும் இல்ல. எனக்கு இப்ப சரியாத் தலையிடிக்குது. தயவு செய்து…கொஞ்ச நேரம் என்னைத் தனியாக இருக்க விடுங்க!” வெடுசுடுவென்று சொன்னவேகத்தில் மீண்டும் முழங்காலில் தலையைக் கவிழ்த்துக்கொண்டாள், மங்கை.
ஆனந்திற்கு ஒன்றுமே விளங்கவில்லை. முதன் முதலாக இந்தளவுக்குச் சீறியுள்ளாள். அவளை அப்படியே விட்டுச் செல்ல மனம் வரவில்லை. மீண்டும் சமாதானம் செய்விக்க முயன்றான். அதற்குள், அவன் சின்னத்தங்கை அண்ணா என்றபடி வந்து எட்டிப் பார்த்தாள். சட்டென்று எழுந்துவிட்டான்.
“ம்ம்..சரி சரி…என்ர ஆளுக்குக் கோபம் வருமெண்டு இப்பதானே தெரியுது.” சீண்டிக்கொண்டுதான் வெளியேறியிருந்தான்.
‘என்ர ஆள்’ என்று அவன் சொன்னது நாரசாரமாக அவள் செவிகளில் விழுந்து உள்ளத்து எரிச்சலை அதிகரித்தது. மனம் கொதிக்க கொதிக்க அழுதபடி அமர்ந்திருந்தாள், மங்கை.
அறையை விட்டு வெளியில் வராமல் இருந்தவளைச் சத்தமாக அழைத்தார், ஆனந்த் அன்னை. அவன்தான் அதை இதைச் சொல்லிச் சமாளித்தான். நேரம் செல்ல செல்ல, கடைக்காரர் ஏசினார் என்ற சிறு விடயத்திற்காக, இவ்வளவு தூரம் கோபத்தைப் பிடித்துவைத்துச் சாதிக்கும் மனைவியில் ஆத்திரமே வந்தது. தாயின் முன்னால் அதைக் காட்டாது அடக்கிக்கொண்டான். உண்மையில் அவரிடம் மனைவியை விட்டுக்கொடுக்க மனம் இடம் கொடுக்கவில்லை.
இரவுணவுக்கு அழைத்தான். “எனக்குப் பசிக்கேல்ல. வயிறு கொஞ்சம் சரியில்ல.” முகம் பாராது இறுக்கமாக மொழிந்தாள், அவள். புசுபுசுவென்று ஆத்திரம் எழ, இரண்டு தட்டுத் தட்டத்தான் உன்னினான்.
“செய்க்” தங்கைகள் முன்னால் வீண் பிரச்சனைகளை வளர்க்க மனமின்றித் தன்னை அடக்கிக்கொண்டவன், “சரிதான் போடி!” சீறலுடன் சென்றுவிட்டான். அதே வேகத்தில், இரவுணவை முடித்து வந்து படுத்ததும் உடல் அயர்ச்சியில் உறங்கியும் போனான்.
மங்கையோ, உறக்கம் என்பதை உணராது அப்படியே அமர்ந்திருந்தாள். பிறந்ததிலிருந்து மெத்தையில் துயின்று பழகியவள், இப்போதெல்லாம் அதைப்பற்றி எண்ணியே பார்ப்பதில்லை! காரணம், ஓலைப்பாயில் துயின்றாலும், மனத்தில் நிறைந்தவன் அருகில் இருந்தானே! பழக்கமற்ற நிலம் அண்டினாலும், அதை உணரச் செய்யவிடாமல் பார்த்துக் கொண்டானே! ‘நீயே என்ர உலகம், என்ர வாழ்க்கை எண்டு வந்தவள…’ எண்ணிக்கொண்டே, அமைதியாகத் துயில்பவனின் வரிவடிவைப் பார்த்தவளின் உள்ளமோ கொதித்தது. அக்கணம், அவள் மனத்தில் எழுந்த கேள்வியே, ‘இந்த வாழ்க்கை, இப்பிடியான ஒரு புருசன் உனக்குத் தேவைதானா?’ என்பதே.
‘உன்ர அன்புக்கு இவன் தகுதியானவனா? உன்ன ஏமாத்திக்கொண்டு, கொஞ்சம் சரி குற்ற உணர்ச்சி இல்லாமல் உன்னோட கொஞ்சிக் குலாவுறவன் எப்படிப்பட்டவனாக இருப்பான். நீ ஏமாந்திட்ட மங்கை! நம்ப ஏலாட்டியும் அதான் உண்மை!’ மனமிட்ட கூக்குரலில் இதயம் வலியெடுக்க, அந்த வேதனை விழிகளால் வெளியேற முனைந்தது. ஆனால் அவளோ, இப்பொழுது அதைக் கொஞ்சமும் விரும்பவில்லை. கடினப்பட்ட மனத்துடன் விழிகளை அழுந்தத் துடைத்துக்கொண்டாள்.
அடுத்த நாள் காலை, இருந்த இடத்தில் சுருண்டு படுத்திருந்தவளைக் கண்டதும், பரிதாபமும் கோபமும் போட்டி போட்டுக்கொண்டு எழுந்தது, ஆனந்தின் மனத்தில். வேலைக்குச் செல்லும் அவசரம், மௌனமாகத் தயாராகினான். உறக்கம் கலைந்து எழுந்தவள், அப்போதும் அவனை ஏறிடவில்லை. சுறுசுறுவென்று பரவிய ஆத்திரத்தைச் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டவன், ‘உனக்கு மட்டுமாடி கோவம் வரும்? எனக்கும் வருமடி! வேலை முடிஞ்சு வந்து வச்சுக்கொள்ளுறன்!’ கறுவிக்கொண்டேதான் புறப்பட்டுச் சென்றான்.
மைத்துனிமாரும் பள்ளி சென்றபின், அறையை விட்டு வெளியே வந்தவளின் கன்றிச் சிவந்த முகத்தைப் பார்த்துக் கடுகடுத்தார்,அவள் மாமி. “ஊருலகத்தில நடக்காதது நடந்திட்டா மங்கை? உங்கட மனுசனையே அந்தாள் நடுரோட்டில நிப்பாட்டி வச்சி ஏசி இருக்கிறார். உங்களுக்கு இது ஒரு பெரிய குறையாப் போச்சா? நீங்க நல்ல வசதியான மனுசர்தான் எண்டாலும் உங்கட மனிசன் ஏழை மங்கை. அதை மறந்தீராதிங்க.” படபடத்தவர், “நான் சந்தை வரை போய்ட்டு வாறன். பாண் இருக்குச் சாப்பிடுங்க. பிறகு, உலைய வச்சு அரிசி போட்டுட்டு, முருங்க இலையப் புடுங்கி துப்பராக்கி வச்சு விடுங்க. நான் வந்தப் பிறகு கறிகளச் சமைக்கலாம்.” என்றவாறே வெளியேறினார்.
விறுவிறுவென்று காலைக் கடன்களை முடித்தாள், மங்கை. ஆனந்தின் அன்னை, எப்போதும் பணம் வைக்கும் அரிசிப் பானையிலிருந்து சில நூறுகளை எடுத்துக்கொண்டவள், கணமும் தாமதியாது வீட்டை விட்டுப் புறப்பட்டு விட்டாள். என்ன வேகத்தில் காதலனை நம்பி பிறந்த வீட்டைத் துறந்தாளோ, அதே வேகத்தில், கணவனை வெறுத்து மீண்டும் புறப்பட்டாள், அவள்.

