அத்தியாயம் 10
பாலமுரளி குடும்பம் அன்று தவகணேசன் வீட்டுக்கு விருந்துக்குப் புறப்பட்டது. மனத்தில் ஒருவிதப் பரபரப்பும் சந்தோசமும் ஓங்கி நிற்க, குளித்துவிட்டு வந்து தயாராகிக்கொண்டிருந்தாள் பல்லவி.
அங்கு இருந்த நாட்களில் அவர்களோடு இந்தளவுக்கு மனத்தளவில் ஒட்டி வாழ்ந்தாளா தெரியாது. ஆறாத ரணங்களும், அவமானமும், அவர்களுக்குச் சுமையாக இருக்கிறோமோ என்கிற எண்ணமும் அதற்கு அவளை விட்டதில்லை. அதுவே, இங்கு வந்த பிறகு, மனம் அந்த வீட்டையும் அங்கு வாழ்ந்த வாழ்க்கையையும் தேடியது மெய். அதனாலேயே, அங்குப் போகப்போகிறோம் என்றதும் ஒருவித உற்சாகம் தொற்றிக்கொண்டது.
தாரணி வேறு காலையிலேயே அழைத்து, “வெளிக்கிட்டியாடி?” என்று கேட்டதும் மனத்துக்கு இதம் சேர்த்தது. “இனித்தானக்கா.” என்று இவள் சொன்னதற்கு, “வாறதுதான் வாறாய் நேரத்துக்கே வரமாட்டியாடி? உன்ர மனுசன் வேற இருட்ட முதல் வெளிக்கிடோணும், தோட்டத்தில வேல இருக்கு எண்டு சொன்னாராம். நீ நல்லா ஆடி அசைஞ்சு வா!” என்றவளின் திட்டல் கூட இப்போதும் இனித்தது.
உடை மாற்றுவது, உறங்குவது எல்லாம் அந்த அறையில் என்பதால் யன்னல் பெரும்பாலும் பூட்டியே இருக்கும். இதில், அவனும் இருக்கிறான் என்பதில் கதவையும் சாற்றியிருந்தாள்.
அதனால் காற்றுப்புகாத அறை, போட்டிருந்த லைட் என்று எல்லாமே அப்போதே வியர்வைச் சுரப்பிகளைத் திறந்துவிட்டிருந்தன. குளித்ததே வீண் என்று நினைத்தாள். வாயால் தன்னைத்தானே ஊதிக்கொண்டும், அவ்வப்போது கையால் காற்று விசுக்கியபடியும் சேலையைக் கட்டிமுடித்தாள்.
முகம் மட்டுமே பார்க்கும் அளவிலான கண்ணாடியில் சேலையைச் சரியாக அணிந்திருக்கிறோமா என்று பார்க்க முடியவில்லை. முன்னும் பின்னும் நகர்ந்து, இரு பக்கமும் திரும்பி திரும்பிப் பார்த்துத் திருப்திப்பட்டுக்கொண்டாள்.
முதுகுவரை இருந்த கூந்தலை நடு உச்சி பிரித்து, இருபக்கக் காதோரத்திலும் இருந்து கொஞ்சமாய் எடுத்துப் பின் பக்கம் பின்னில் அடக்கி, மிகுதியை விரித்துவிட்டாள். கண்ணுக்கு மை தீட்டி, நெற்றியில் திலகமும் இட்டுக்கொண்டுவிட்டுப் பார்த்தபோது திருப்தியாக இருந்தது.
கழற்றிப் போட்டிருந்த ஆடையை எடுத்து, முகத்தில் அரும்பியிருந்த வியர்வையை ஒற்றிவிட்டு, வேகமாக அறையை விட்டு வெளியே வந்தாள்.
ஒரு கை தானாக இடைச் சேலையைச் சரி செய்ய, மறுகையில் பர்ஸுமாக வந்தவளை முழுமையாக உள்வாங்கியது பாலமுரளியின் விழிகள். தாலிக்கொடிக்குத் துணையாகக் கழுத்தோடு ஒட்டியதுபோல் மிக மெல்லிய செயின், காதில் குட்டிச் சிமிக்கி, கையிலும் கம்பிபோன்று மெல்லிய காப்பு ஒரு சோடி அணிந்திருந்தாள்.
‘கடனை எல்லாம் கெதியா குடுத்திட்டு இவளுக்கு நகை செய்யோணும்.’ என்கிற எண்ணம் மனத்தில் விழ, “வெளிக்கிடுவமா?” என்றான் அவளிடம்.
“ம்.” என்றுவிட்டு, எதற்கும் இருக்கட்டும் என்று விதுரனுக்கு எடுத்துவைத்திருந்த இன்னொரு செட் உடை அடங்கிய பாக்கினுள், தன் பர்ஸை வைத்துவிட்டு நிமிர்ந்தவளின் பார்வையில், வீட்டின் திறப்பை எடுத்துக்கொண்டிருந்த பாலமுரளி பட்டான்.
‘என்ன இது? கண்றாவி கலர்ல ஒரு ஷேர்ட்?’ பார்த்ததுமே இதுதான் தோன்றியது. அவனே கருமை நிறம். இதில், அடர் பிரவுனில் ஒரு ஷேர்ட். கலாவதி பல வருடங்களுக்கு முதல் அயர்ன் செய்து, மடித்து வைத்திருக்க வேண்டும் என்று, அதன் மடிப்புகள் கோடிழுத்தது போன்று அப்படியே நிற்பதிலேயே தெரிந்தது.
‘அண்டைக்குக் கொழும்புக்கு வரேக்கையும் இப்பிடித்தான். கண்ணில படுறத வாங்கிக் கொண்டுவந்து வச்சு ஏனோதானோ எண்டு போடுவானோ?’ விலை, தரம் என்பதைத்தான் விட்டாலும் பார்ப்பதற்கு நல்லதாக வாங்கி, பொருத்தமாக, நேர்த்தியாக அணிவதில்லையா? தலைக்கு டை அடிக்கும் பழக்கம் இல்லை என்பதைத் திருமணத்துக்கே அப்படியே நின்றவனை வைத்து ஊகித்திருந்தாள். அணியும் ஆடைகளிலும் கவனம் இல்லை என்றால் எப்படி?
முதன் முதலாகக் குடும்பமாகப் போகப்போகிறார்கள். பார்க்கிறவர்கள் என்ன நினைப்பார்கள்? இருபத்தி நான்குக்கும் முற்பத்தியிரண்டுக்கும் ஓரளவு இடைவெளி உண்டுதான். இவனானால் அதை இன்னுமே பலமடங்காகப் பெருப்பித்துக் காட்டுவான் போலிருந்தது.
இதையெல்லாம் அவனிடம் சொல்ல முடியாது. வேறு எதைச் சொல்லி உடையை மாற்ற வைப்பது என்றும் தெரியவில்லை. அப்படியே போகவும் பிடிக்கவில்லை. விதுரனுக்கு முழுக் காற்சட்டையும் ஷேர்ட்டும் அவள்தான் அணிவித்துவிட்டாள். அவனுக்கு?
அவன் திறப்பை எடுத்துக்கொண்டு வாசலுக்குச் சென்று செருப்பை மாட்டியபிறகும் அவள் உள்ளேயே நிற்கவும், “இன்னும் ஏன் அங்கேயே நிக்கிறாய்?” என்று வினவினான் அவன்.
“அது… வேற ஷேர்ட் இல்லையா?” தன்னை அவள் கவனிக்கிறாள் என்று எண்ணிவிடுவானோ என்று எண்ணினாலும், வேறு வழியற்றுக் கேட்டாள் பல்லவி.
அவள் எண்ணியதுபோலவே அவன் முகம் பளீரென்று மலர்ந்தது. இருந்தும், “ஏன் இதுக்கென்ன? நல்லா இல்லையா?” என்றான் தன்னைத் தானே ஒருமுறை பார்த்துக்கொண்டு.
‘கொடுமையா இருக்கு’ என்று மனம் சொன்னதைச் சொல்லாமல், “நான் வேற எடுத்துத் தரவா?” என்றாள்.
“சரிசரி! எதையெண்டாலும் கெதியா எடு. நேரம் போகுது.” அணிந்த செருப்பை மீண்டும் கழற்றிவிட்டுவிட்டு, அவளின் பின்னோடு அறைக்குள் வந்தான் அவன்.
அதுவேறு அவளுக்குத் தேவையில்லாத வேலை பார்த்துவிட்டோமோ என்று யோசிக்க வைத்தது. விதுரன் கேட்டை திறக்கிறேன் என்று கேட்டடிக்கு ஓடியிருந்தான். அதைத் திறக்கும்போதும் பூட்டும்போதும் பல்லியாக அதில் தொங்குவது அவனுக்கு மிகவும் பிடிக்கும்.
அறையின் லைட்டை போட்டுவிட்டு, வேகமாக அலமாரி அருகே சென்று, அவனுடைய உடைகளை ஆராய்ந்தாள். ஒன்றுகூட அவளுக்குப் பிடித்ததாக இல்லை. விசர்தான் வந்தது.
ஒரு கட்டில் இல்லை. சேலை அணிவதற்கு ஏற்ற நிலைக்கண்ணாடி இல்லை. மேலே ஓடும் ஃபேனைப் போட்டால் தலையில் விழுந்துவிடுமோ என்கிற அளவுக்குச் சத்தம். பயத்தில் அதைப் பாவிக்கவே மாட்டாள். பாத்திர பண்டங்களும் மிகப் பழையவை. ஒரு கேஸ் அடுப்பு இல்லை. அவனுடைய புல்லட்டும் அறுதப்பழையது. ஆடைகள் கூட நல்லதாக ஒன்றையும் காணோம் என்றால் என்னத்தை உழைத்துக் கிழிக்கிறானாம்? இதில், இரவு பகல் பாராது தோட்டத்திலேயே கிடப்பான்.
பொங்கிக்கொண்டு வந்த சினத்தை அடக்கிக்கொண்டு இருப்பதில் நல்லதாக ஒன்றை வெளியில் எடுத்தாள்.
“எனக்கு அதப் பாத்தாலும் இத மாதிரித்தான் இருக்கு. நீதான் மாத்து எண்டுறாய். சரி கொண்டா.” என்றபடி அணிந்திருந்த ஷேர்ட்டின் பட்டன்களைக் கழற்ற ஆரம்பித்தான் அவன்.
வேகமாக அவனிடமிருந்து பார்வையை அகற்றிக்கொண்டு, “பொறுங்கோ, அயர்ன் பண்ணித் தாறன்.” என்றவள் அயர்ன் பொக்ஸை எடுத்துக் கரண்டில் அடித்தாள்.
“இது வேறயா?” பொய்யாகச் சலித்தான் பாலமுரளி. ஆனால், உள்ளே சிலு சிலு என்றிருந்தது.
இத்தனை நாட்களாக முகம் பார்த்து ஒரு வார்த்தை கதைக்காதவள், இன்றைக்கு அவனைக் கவனித்து, அவனுக்காகச் செய்யும் ஒவ்வொன்றும் அவன் மனதுக்குள் மெல்லிய மழைச்சாரலைத் தூவிச் சென்றது.
ஒரு பெட்ஷீட்டை நான்காக மடித்துத் தரையில் விரித்துவிட்டு, அதன்மீது வைத்து ஷேர்ட்டை அயர்ன் செய்ய ஆரம்பித்தாள் பல்லவி. உள் பெனியனோடு வாசலுக்குச் சென்று வெளியே எட்டிப் பார்த்தான் பாலமுரளி. விதுரன் கேட்டில் இன்னும் அங்கும் இங்குமாகத் தொங்கிக்கொண்டிருந்தான்.
“விழுந்து எழும்புறேல்ல தம்பி. பிறகு உனக்கும் உடுப்பு மாத்தச் சொல்லுவாள் அம்மா.” என்றுவிட்டு மீண்டும் அறைக்குள் வந்தான்.
அவள் வேலையை முடித்திருந்தாள். அவனிடம் சட்டையை நீட்டிவிட்டு, அயர்ன்பொக்ஸை கவனமாக எடுத்து வைத்தாள். பெட்ஷீட்டையும் உதறி மடித்து வைத்தாள். அவன் கழற்றிப் போட்டிருந்த ஷேர்ட்டை எடுத்து, அறைக்குள் இருந்த கொடியில் போட்டுவிட்டுத் திரும்பியவளை வேகமாக வளைத்தான் பாலமுரளி.
“அச்சோ என்ன…” என்று தடுமாறியவளைத் திருப்பி நிதானமாய் முத்தமிட்டான். “தம்…பி” என்று தட்டுத்தடுமாறி முணுமுணுத்தவளை விலகி, அவள் சிவந்து நிற்கும் அழகை ரசித்தான். என்னதான் இன்னும் முழுதாய் மனத்தளவில் ஒன்றிப்போகவில்லை என்றாலும் என் கணவன் என்கிற நினைப்பும், அவனோடான உறவும் அவளுக்குள்ளும் சிலபல மாற்றங்களை உண்டாக்க ஆரம்பித்திருந்தது.
புறப்பட வேண்டும் என்று தெரிந்தாலும் அவனால் அவளை விட்டு விலக முடியவில்லை. அந்தளவில் அவனுக்கான அவளின் அக்கறையான சின்ன செய்கை அவனை மொத்தமாய்க் கட்டியிழுத்திருந்தது.
ஆரத்தழுவி முகம் முழுக்க முத்தமிட்டு அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்துத் தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டுவந்த பிறகே விலகினான்.
இதற்குள், பாலமுரளி சொன்னது போலவே மண்ணில் விழுந்து எழுந்து ஆடைகளை அழுக்காக்கியிருந்தான் விதுரன். “என்ன விதுரன் இது? நல்ல உடுப்பு எல்லா?” பயணம் புறப்பட முதலே களைத்துப்போனாள் பல்லவி.
“விடு! பிள்ளைகள் எண்டா அப்பிடித்தான்! நீ வேற எடுத்துக்கொண்டு வா.” என்ற பாலமுரளி, “கொஞ்ச நேரமாவது கையையும் காலையும் வச்சுக்கொண்டு சும்மா இருக்க மாட்டியாடா?” என்று சிரித்தபடி மகனின் ஆடைகளைக் கழற்றினான். எரிச்சலுடன் சென்று வேறு எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தாள் பல்லவி.
விதுரனை முன்னாலும் பல்லவியைப் பின்னாலும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டான் பாலமுரளி. அந்தத் தெருவுக்கே அவர்கள் இன்றைக்கு விருத்துக்குப் போவது தெரியும். சுதா வாசலுக்கே வந்து வழியனுப்பி வைத்தாள். தெருவில் நடந்துவந்த மூன்றாவது வீட்டுக்காரர், “கவனமா போயிட்டு வாங்கோ!” என்றார்.
இப்படி, தெருவே வேடிக்கை பார்க்கக் கணவனின் பைக்கில் பின்னால் அமர்ந்து, அவன் தோளைப் பற்றியபடி பயணிப்பது பல்லவிக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
கோப்பாய்ச் சாந்தியைக் கடக்கையில் ஒரு கடையைக் கண்டுவிட்டு, “அப்பா, வடை வேணும். வாங்கித் தாங்கோ.” என்றான் விதுரன். உடனேயே பைக்கை அந்தக் கடையின் முன்னே நிறுத்தினான் பாலமுரளி.
“போறது விருந்துக்கு. பிறகு ஏன் இஞ்ச வாங்குறீங்க?” அவன்தான் சின்ன பிள்ளை கேட்கிறான் என்றால் இவனாவது சொல்ல வேண்டாமா என்று இருந்தது பல்லவிக்கு.
“போறதுக்கிடையில வடை செமிச்சிடும்.” பைக்கிலிருந்து மகனை இறக்கியபடி சொன்னான் பாலமுரளி.
பல்லவியும் இறங்கி நின்றுகொண்டாள். ஷேர்ட் பொக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்தபடி “உனக்கும் வேணுமா?” என்று அவளிடம் வினவினான் அவன்.
அவனுக்கே வேண்டாம் என்கிறாள். இதில் அவளுக்கு வேண்டுமாவாம்? அவனை ஒரு வெட்டும் பார்வை பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள் பல்லவி. மையிட்டிருந்த அந்த விழிகளில் தெறித்த கோபத்தில் பாலமுரளியின் விழிகள் தங்கி மீண்டன.
“அங்க போயும் சாப்பிடோணும். அதால, ரெண்டு வடை காணும். வாங்கிக்கொண்டு ஓடிவா.” என்று மகனைப் பணத்தோடு அனுப்பிவிட்டான்.
கைகள் இரண்டையும் கட்டிக்கொண்டு பிராக்குப் பார்ப்பதுபோல் இவனைப் பாராமல் நின்றிருந்தவளிடம், “வாங்கித் தாங்கப்பா எண்டு கேக்கிற பிள்ளைட்ட எப்பிடி மாட்டன் எண்டு சொல்லுறது?” என்று வினவினான் அவன்.
மகனைத் திருத்துவதை விட்டுவிட்டு அவளைச் சமாளிக்க முயல்கிறான். பல்லவிக்குக் கோபம் வந்தது. அதில், “முதல் இது என்ன பழக்கம் உங்களுக்கு, கடையில இருந்து ஒவ்வொரு நாளும் கள்ளத்தீனி வாங்கிக் குடுக்கிறது? உங்களாலதான் வீட்டுச் சாப்பாடு எண்டாலே விதுரன் ஓடுறார்.” என்றாள் அவள்.
முதன் முதலாக வாய்திறந்து அவனோடு மல்லுக்கட்டுகிறாள். அதை அவள் உணராதபோதும் அவன் கவனித்தான். அவளுக்குள் உண்டாகியிருக்கும் அந்த மாற்றங்கள் தந்த கிளுகிளுப்போடு, “இனி என்ன, உனக்கும் சேத்து வாங்கிக்கொண்டு வரவா?” ரன்றான் சிறு சிரிப்போடு.
சீண்டுகிறான் என்று புரிந்தது. அவளுக்குத்தான் சிரிப்பு வர மறுத்தது. ‘நீயாச்சு உன்ர மகனாச்சு..’ என்று எண்ணியபடி பார்வையைத் திருப்பிக்கொண்டாள்.
பாலமுரளிக்குத் தன் தவறு தெரியாமல் இல்லை. ஆனால், மகன் ஆசையாகக் கேட்கிறபோது மறுக்க முடிவதில்லை. அதில், அவளைச் சமாளிக்க முயன்று தோற்றிருந்தான்.
“கொஞ்சம் வளரட்டும். மாறிடுவான்.” என்றவனிடம் அதற்குமேல் வாதிடப் போகவில்லை அவள். சொல்வதைச் சொல்லியாயிற்று. கேட்கமாட்டேன் என்று நின்றால் அவள் என்ன செய்ய?
இதற்குள் விதுரனும் வடையோடு வந்தான். மீண்டும் அவர்களின் பயணம் ஆரம்பித்தது.
ஒருவழியாகக் கோப்பாயில் இருந்து கோண்டாவிலுக்குள் நுழைந்தார்கள். ‘என் சொந்த ஊர்’ என்கிற உணர்வு எழுந்து வந்து, மனத்தினில் பாரத்தையும் பரவசத்தையும் ஒருங்கே சேர்ப்பித்தது. அம்மன் கோவிலின் தெருவுக்குள் நுழைந்தபோது மனத்தினுள் சொல்லமுடியாத உணர்வுகள் பொங்கின. “கோயிலுக்குப் போயிட்டுப் போவமா?” முதன் முதலாகத் தனக்குப் பிடித்த ஒன்றைக் கணவனிடம் கேட்டாள்.
அவனும் கோயிலின் முன்னே புல்லட்டை நிறுத்தினான். குடும்பமாகச் சென்று வணங்கினர். எப்போதும் போல அன்னையின் முகத்தையே பார்த்தவளின் மனது கலங்கிப் போயிற்று.
இன்றும் ஒன்றும் வேண்டிக்கொள்ளவில்லை. ஆனாலும், மனம் மெல்ல மெல்ல அமைதியடைந்தது. அங்கு இருந்த அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் அவளின் நலனை விசாரித்துக்கொண்டனர். அவளின் கணவனையும் மகனையும் குறுகுறு என்று பார்த்தனர். சற்றே முகம் சுருங்கினாலும் எதையும் காட்டிக்கொள்ளாமல் அங்கிருந்து புறப்பட்டாள்.

