அத்தியாயம் 11
தவகணேசனின் வீட்டில் அவர்களுக்கு மிக நல்ல கவனிப்புக் கிடைத்தது. அது பல்லவிக்குப் புதுவித அனுபவம். போனவாரம் வரை அவளின் வீடு இது. இன்றைக்கு முக்கிய விருந்தாளியாக மாற்றப்பட்டு, மிகுந்த கவனிப்புக்கு உள்ளாகியிருக்கிறாள்.
திருமணமானால் இதெல்லாம் நடக்கும் போல என்று எண்ணிக்கொண்டாள். அதிசயமாக சிவலோகநாயகி ஒன்றும் சொல்லவில்லை. பாலமுரளியிடம் கலாவதி குறித்து, ரூபாவைப் பற்றி என்று நல்லபடியாகவே கேட்டுத் தெரிந்துகொண்டார்.
கணவன் மனைவி இருவரையும் ஒன்றாக இருத்திவைத்து பானுமதி விருந்து பரிமாற, விதுரனுக்கு உணவு கொடுக்கும் பொறுப்பைத் தாரணி எடுத்துக்கொண்டாள். அதற்கு இலஞ்சமாக அவளின் கைப்பேசியை வாங்கிக்கொண்டான் அவன். ‘குடுக்காதீங்க அக்கா, உடச்சுப்போடுவான்.’ என்று சொல்ல உன்னிய வாயை அடக்கிக்கொண்டாள் பல்லவி.
முதலாவது, இதை பாலமுரளி எப்படி எடுப்பான் என்று தெரியாது. இரண்டாவது, அவள் சொல்வதை விதுரன் கேட்பான் என்கிற நம்பிக்கை இல்லை.
ஆனால், அவள் பயந்தது சரியே என்பதுபோல், அதன் பிறகு ஒரு வாயைக் கூட அவளிடம் வாங்க மறுத்தான் விதுரன். அவனின் கவனம் முழுவதும் கைப்பேசியில் விளையாடும் கேமிலேயே இருந்தது.
தாரணி விடாமல் தெண்டித்தபோது(முயன்றபோது) வீடு முழுக்க மட்டுமல்ல காணி முழுவதுக்கும் தாரணியை அலையவைத்தான். களைத்துப்போய், “எப்பிடியடி இவனுக்குச் சாப்பாடு குடுக்கிறாய்? இந்த ஒரு நேரத்துக்கே எனக்கு மூச்சு வாங்குது?” என்று, இவளருகில் வந்து அமர்ந்துகொண்டு சிரித்தாள் தாரணி.
‘சொன்னேனே கேட்டாயா?’ என்பதுபோல் பாலமுரளியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “விடுங்கோக்கா, பிறகு நானே குடுக்கிறன்.” என்றாள் பல்லவி.
“அது வாற வழில வடை கேட்டவன். பல்லவி வேண்டாம் எண்டுதான் சொன்னவள். நான்தான் வாங்கிக் குடுத்தனான். அதுதான் பசிக்கேல்ல போல.” என்று இப்போதும் மகனுக்காக வந்து நின்றான் பாலமுரளி.
தாரணியும் இதற்குமேல் தன்னால் முடியாது என்று விட்டுவிட்டாள். விதுரனின் கையில் அவளின் கைப்பேசி நிரந்தரமாகிப் போயிற்று.
பல்லவியின் கவனம் அவனிலேயே இருந்தது. கேமில் தோற்றுவிட்டால் கைப்பேசியையே தூக்கி எறிந்துவிடுவான். அதற்குச் சாட்சி பாலமுரளியின் கைப்பேசி. அவன் ஒருமுறை அப்படிச் செய்ததிலிருந்து இவள் இவளுடையதைக் கொடுப்பதில்லை. இப்போது என்ன நடக்குமோ என்று பயந்தாள்.
அங்கு வைத்து அவனை அதட்டவும் மனம் வரமாட்டேன் என்றது. என்னவாவது செய்யட்டும் என்று விடவும் முடியவில்லை. “பெரியமான்ர ஃபோன குடுங்கோப்பு.” என்று இரண்டு மூன்று தரம் கெஞ்சிப் பார்த்தாள். அதற்குப் பலனே இல்லை. “விடடி, விளையாடட்டும்.” என்றாள் அவனைப் பற்றி அறியாத தாரணி.
தகப்பன் தலையிட்டு வாங்கிக்கொடுத்தான் என்றால் நன்றாக இருக்குமே என்று அவனைப் பார்த்தாள். தவகணேசன், எதிர்வீட்டு மாமா என்று ஆண்களோடு சேர்ந்து மர நிழலின் கீழே அமர்ந்து, உரையாடிக்கொண்டிருந்தான் அவன்.
‘பிள்ளையைக் கொஞ்சமாவது கவனிக்கிறானா? முட்டுக் குடுக்கிறதுக்கு மட்டும் வந்திடுவான்.’ அவளின் விடாத பார்வை அவனைச் சேர்ந்தது போலும். திரும்பிப் பார்த்தான்.
மற்றவர்கள் அறியா வண்ணம், ‘இஞ்ச வாங்க’ என்று தலையை மெலிதாக அசைத்தாள்.
“பொறுங்கோ வாறன்.” என்று சொல்லிவிட்டு உடனேயே எழுந்துவந்தான் அவன்.
வேகமாகச் சமையல் கட்டுக்குள் சென்று திரும்பி வந்தவளின் கையில் சில்வர் கப்பில் தண்ணீர் இருந்தது. “குடிக்கத் தண்ணி கேட்டீங்க.” என்று, அதை அவனிடம் நீட்டியபடி, “தம்பிட்ட இருந்து ஃபோன வாங்கிக் குடுங்கோ. நான் சொல்ல சொல்லக் கேக்கிறார் இல்ல.” என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும் மெல்லிய குரலில்.
பார்வை ஒருமுறை மகனிடம் சென்று வர, “கேம்தானே. விளையாடட்டுமன். இப்ப என்ன அதுக்கு?” என்றான் அவன்.
“அது அக்கான்ர ஃபோன். விலை கூடினது. இப்பதான் வாங்கினவா. எறிஞ்சு உடைச்சிட்டா என்ன செய்வீங்க?”
அவளின் கேள்வி நியாயமாகத்தான் இருந்தது. மகனிடம் சென்று தன்மையாகச் சொல்லிப் பார்த்தான். விதுரன் செவிமடுக்க மறுத்தான். வலுக்கட்டாயமாக வாங்க முயன்றபோது கொடுக்க மறுத்துக் கூச்சலிட்டான். “அப்பான்ரய வச்சு விளையாடு தம்பி. பெரியமான்ரய குடு.” என்று அவனுடையதைக் கொடுத்தான்.
“போங்கப்பா, அதுல ஒண்டுமே தெரியாது. பழைய ஃபோன். இது புதுசு. பெருசா இருக்கு.” என்றான் அவன் அப்போதும் கேமில் கவனமாக.
இனி என்ன செய்ய என்று தெரியாது பாலமுரளி பல்லவியைத்தான் பார்த்தான்.
“விடுங்கோ மச்சான். விளையாடட்டும். நான்தான் குடுத்தனான்.” என்றுகொண்டு வந்தாள் தாரணி.
“எதுக்கும் கவனம். உடச்சுப்போடுவான்.”
“எங்கட விதுக்குட்டி அப்பிடியெல்லாம் செய்யமாட்டார் மச்சான்.” என்றாள் அவள்.
இதற்குமேல் அவன் என்ன செய்ய? பல்லவியை மீண்டும் பார்த்துவிட்டு, “தம்பி, கவனமா விளையாடோணும். அது பெரியம்மான்ர ஃபோன்.” என்றுவிட்டு மீண்டும் ஆண்களோடு இணைந்துகொண்டான்.
பல்லவிக்கும் அதை அவனிடமிருந்து வேறு எப்படி வாங்க என்று தெரியவில்லை. எந்த நேரத்தில் என்ன செய்வானோ என்று, ஒருவித அழுத்தத்திலேயே அவளை வைத்திருந்தான் விதுரன்.
அதற்குள் மேசைக்குக் கொண்டுவந்திருந்த உணவுப் பாத்திரங்களை எல்லாம் குசினிக்குக் கொண்டுசென்று, எல்லாவற்றையும் ஒதுக்கி, மூடி வைத்துவிட்டு வந்த பானுமதி, அவளை இழுத்துக்கொண்டு சென்று வீட்டின் பின்பக்க வாசல்படியில் அமர்ந்துகொண்டார். தாரணியும் வந்து அவர்கள் கால் வைத்திருந்த படிக்கட்டில் அமர்ந்தாள்.
அவளின் கையைப் பற்றித் தன் மடியில் வைத்துக்கொண்டு, “சொல்லு, எப்பிடி இருக்கிறாய்? நல்லா இருக்கிறியா? அந்தத் தம்பி என்ன மாதிரி? உன்னோட நல்ல மாதிரி பழகிறாரா? இந்தச் சின்ன பெடியன் என்னடியப்பா, இங்க புது இடத்திலேயே ஒரு இடத்தில இருக்கிறான் இல்ல. அங்க குசினிக்க ஊறுகாய்ச் சட்டியத் தட்டி விழுத்தப் பாத்தான். நல்ல காலம் நான் பாத்திட்டன். அங்க எப்பிடிச் சமாளிக்கிறாய்?” என்று, குரலைத் தணித்து, வேறு யாருக்கும் கேட்டுவிடாதபடிக்கு விசாரித்தார் பானுமதி.
பாலமுரளி நல்லவன், பொறுப்பானவன் என்று விசாரித்து அறிந்துதான் கட்டிவைத்தார்கள். இருந்தாலும், ஏற்கனவே திருமணமானவன், ஒரு மகனும் உண்டு, அப்படியானவனுக்கு அவளைக் கொடுத்திருக்கிறோம் என்பது அவர்கள் மனத்தை நெருடாமல் இல்லை.
இப்போதானால், நொடி நேரம் கூட ஒரு இடத்தில் நிற்கமாட்டேன் என்று இருந்த விதுரனைப் பார்த்தபோது, அனுபவம் இல்லாத சின்ன பெண் எப்படிச் சமாளிக்கிறாளோ என்கிற கவலையும் சேர்ந்துகொண்டது.
பல்லவிக்கு, ‘நன்றாக இருக்கிறாயா?’ என்கிற அந்தக் கேள்வியின் பொருள் பல நேரங்களில் விளங்குவதே இல்லை. இப்போதும் அப்படித்தான். புருவம் சுருக்கி யோசித்தாள்.
நன்றாகச் சாப்பிடுகிறாள். உறக்கத்துக்குக் குறை இல்லை. உடைக்கும் பற்றாக்குறை இல்லை. கொடுமைக்காரக் கணவன் என்று சொல்வதற்கும் இல்லை. அவன் கெட்டவனுமன்று. மாமியாரும் அருமையான பெண்மணி. இதன் அடிப்படையில் என்றால் அவள் நன்றாகத்தான் இருக்கிறாள். அதில், “ஓம் பெரியம்மா. ஒரு குறையும் இல்ல.” என்றாள்.
அவரின் முகம் மலர்ந்தது.
“உண்மையாத்தானே சொல்லுறாய்? எனக்காகச் சொல்லேல்லையே? நீயும் அந்தத் தம்பியும் சந்தோசமா இருக்கிறீங்கதானே?”
அவள் பதில் சொல்வதற்கு முதல், “அடியேய், உனக்கு அம்மா கேக்கிறது விளங்குதா இல்லையா? மச்சான் உன்ன நல்லா கவனிக்கிறாரா? நீங்க ரெண்டு பேரும் சேந்து குடும்பம் நடத்துறீங்களா? இல்ல, கண்டும் காணாம இருக்கிறாரா? இதைத்தான் அம்மா நல்லாருக்கிறியா, சந்தோசமா இருக்கிறியா, உண்மையத்தான் சொல்லுறியா எண்டு சுத்திவளச்சுக் கேட்டுக்கொண்டு இருக்கிறா.” என்று இடையில் புகுந்த தாரணியின் பேச்சில், அவளின் முதுகில் ஒன்று போட்டார் பானுமதி.
“அவளுக்கு நீ அக்கா எண்டாலும் உனக்கு இன்னும் கலியாணம் நடக்கேல்ல. அதுக்குள்ள கிழட்டுக் கத கதைக்காம எழும்பிப் போ. போய் ஏதாவது குடிக்கப்போயினமா எண்டு கேட்டுக்கொண்டு வா! சின்னவனையும் எங்க எண்டு பார்.” என்று துரத்திவிட்டார்.
“பாத்தியாடி இந்த அம்மாவை. நான் உனக்கு ஹெல்ப்தானே செய்தனான். அது விளங்காம…” என்று அவரை முறைத்துவிட்டுப் போனாள் அவள். போகிறவளையே மெல்லிய முறுவலோடு பார்த்தாள் பல்லவி.
“இவளொருத்தி!” என்று அலுத்துவிட்டு, “நீ சொல்லு, அடுத்த குழந்தையைப் பற்றி ஏதும் சொன்னவரே? முதல், ரெண்டு பேரும் அதைப் பற்றிக் கதைச்சீங்களா?” என்று மீண்டும் விசாரித்தார் பானுமதி.
அவனின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நினைவில் வந்து போக, “அது பெரியம்மா, இப்ப வேண்டாம் எண்டு நினைக்கிறார்.” என்றாள் அவரின் முகம் பாராமல்.
“ஓ…” என்று முகம் சுருங்க இழுத்துவிட்டு, “இப்பதானே கலியாணமே நடந்தது. உன்னைப் பற்றி அவரும் அவரைப் பற்றி நீயும் விளங்கி நடக்கக் காலம் வேணும்தானே. நீ விதுரனோட ஒட்டோணும். அவன் உன்னோட சேரவேணும். அதுதான் இதெல்லாம் நடந்த பிறகு பாப்பம் எண்டு நினைக்கிறார் போல. கொஞ்ச நாள் போக எல்லாம் சரியா வரும். உனக்கும் இப்ப என்ன அவசரம்?” என்று, அவளுக்கு மாத்திரமல்லாமல் தனக்கும் சேர்த்தே சொன்னார் பானுமதி.
பல்லவி இன்னும் அவளின் புதிய வாழ்க்கைக்கே இசைவாக்கம் அடைந்திருக்கவில்லை. இதில், எங்கே இதைப் பற்றியெல்லாம் யோசிக்க? அதில், பெரிய அக்கறையற்றுக் கேட்டுக்கொண்டாள். பானுமதியால் அப்படி இருக்க முடியவில்லை. அதுதான் ஒரு பிள்ளை இருக்கிறதே போதும் என்று சொல்லிவிட்டால் அவள் பாவமே என்று ஓடியது அவருக்கு.
அதில், “அவர் என்ன சொன்னாலும் கதைச்சுப் பேசிக் குறைஞ்சது ஒரு பிள்ளையையாவது நீயும் பெத்துடு. அதே மாதிரி, எந்தக் காலத்திலயும் இந்தச் சின்னவனைக் கை விட்டுடாத. பாவம், தாயில்லாப் பிள்ளை. அந்தக் குறை தெரியாம வளக்கோணும். அவன்தான் உனக்கு மூத்த மகன். அத எண்டைக்கும் மறந்திடாத. இப்பவே உனக்கு எண்டு ஒரு பிள்ளை வந்திட்டா அவனில பாசம் காட்டமாட்டியோ எண்டு யோசிச்சிட்டுத்தான் கொஞ்சக் காலம் போகட்டும் எண்டு உன்ர மனுசன் சொல்லியிருக்கிறார் போல.” என்று அவர் தன்பாட்டுக்குச் சொல்ல, அதிர்வுடன் அவரைப் பார்த்தாள் பல்லவி.

