அந்தளவில் அவளில் நம்பிக்கை இல்லாமல்தான் கவனமாக இருக்கிறானா? அதனால்தான் அவளைத் தாய்மையுறச் செய்யாமல் தடுக்கிறானா? அதைப் பற்றி அவளிடம் பேசாமல், அவளின் சம்மதம் பெறாமல், எப்படி இப்படி அவனாக ஒரு முடிவை எடுத்தான்?
அவள் ஒரு தாதி. குழந்தை உண்டாகாமல் தடுக்க மாத்திரை, ஊசி என்று பெண்கள் பக்கம் நிறைய முறைகள் உண்டு என்று தெரியும். எல்லாப் பெண்களுக்கும் அந்த வழிமுறைகள் ஒத்துக்கொள்வதில்லை. உடல் பருமன், களைப்பு, இயலாமை என்று பக்கவிளைவுகள் வருவதுண்டு. அப்படி ஒரு நிலையை அவளுக்கு உருவாக்காமல், அவன் தன்னளவிலேயே பாதுகாப்பாக இருந்துகொள்வதில், அவன் மீது மெலிதான நல்லபிப்பிராயம் கூட உண்டாகியிருந்தது.
இப்போதோ, அந்த நல்லபிப்பிராயம் எங்கோ தொலைந்துவிட, பானுமதி சொன்னதை ஜீரணிக்க முடியாமல் நெற்றிப் பொட்டை அழுத்திவிட்டாள்.
பானுமதி தொடர்ந்து என்னவோ சொல்லிக்கொண்டிருந்தார். அவளின் செவிக்குள் எதுவும் சென்று சேரவில்லை.
அப்போது, எங்கோ போய்விட்டு, வெய்யில் சுட்டுவிடாமல் இருக்க, சேலையின் தலைப்பைத் தூக்கித் தலையில் போட்டுக்கொண்டு, இரண்டு கைகளிலும் பனங்காய்ப் பழங்களை ஏந்திக்கொண்டு வந்தார் சிவலோகநாயகி.
அதை ஓரமாக மண்ணில் வைத்தபடி, “இத ஒரு பாக்கில போட்டுக் குடுத்துவிடு. அவன் சின்னவனுக்கு விருப்பமாம்.” என்று பானுமதியிடம் சொன்னவரைப் பார்த்தாள் பல்லவி.
‘உங்கட மகனால நான் படுற பாட்ட பாத்தீங்களா அப்பம்மா?’ என்று கோபமாகக் கேட்கவேண்டும் போலிருந்தது. ஆனால், நியாயமேயற்று அவர் அவளின் அன்னையைக் குற்றம் சாட்டுவதுபோல், அவரை அவள் குற்றம் சாட்டி என்ன காணப்போகிறாள்.
தந்தையின் துரோகத்தை, தாயின் இறப்பை, அநாதையாய் நின்றதை என்று எத்தனையோவற்றையெல்லாம் தாண்டி வந்தவள் இதையும் தாண்டமாட்டாளா? தாண்டத்தானே வேண்டும். வேறு வழி? மனத்தின் துயரை அப்படியே தனக்குள் போட்டுப் புதைத்துவிட்டு அவரைக் கவனித்தாள்.
வீட்டின் சுவரோடு சாய்ந்து மண்ணிலேயே அமர்ந்துகொண்டு, சேலைத் தழைப்பாலேயே கழுத்தையும் முகத்தையும் துடைத்தார். சுருங்கிப்போன சருமம், நலிவடைந்துவிட்ட கால்கள், பலமிழந்த மெல்லிய கரங்கள் என்று பார்க்கையிலே பாசம் சுரந்தது அவளுக்கு.
அவருக்கு அவளைப் பிடிக்காது என்பது அவளின் கணிப்பு. அதனாலேயே அவளும் அவரை நெருங்கியதில்லை. இப்போது, திருமணமாகி வேறு வீடு போனதா, இந்த வெய்யிலுக்குள்ளும் சென்று விதுரனுக்கு என்று பனம்பழம் பொறுக்கிக்கொண்டு வந்ததா, அல்லது, இயல்பாகவே அடி நெஞ்சில் இருந்த பாசமோ என்னவோ, “எப்பிடி இருக்கிறீங்க அப்பம்மா?” என்று, அவளை விசாரிக்க வைத்தது.
“எனக்கு என்ன? நான் நல்லாத்தான் இருக்கிறன். அவனைத்தான் கெட்டித்தனமா ஊரைவிட்டே துரத்திப்போட்டாய், என்ன?” என்றார் அவர்.
எப்போதுமே அவர் பேச்சுத்தானா? இந்த அப்பம்மா அவளை விளங்கிக்கொள்ளவே மாட்டாரா? அவள் முகம் வாடிப்போயிற்று.
பானுமதிக்கும் அந்த நேரம் அவளில் கோபம் இருந்ததுதான். இன்றைக்குத் திருமணமாகிப்போன பெண்ணிடம், திரும்பத் திரும்ப அதையே பேசுவதில் அர்த்தமில்லை என்று எண்ணி, “விடுங்க மாமி. விருந்துக்கு எண்டு வந்தவளிட்ட என்னத்துக்குப் பழசையெல்லாம் கதைக்கிறீங்க?” என்று சொன்னார்.
“விட்டுப்போட்டுத்தான் இருக்கிறன். வேற வழி? பெத்தவள், வயசான கிழவி, நாளைக்கு இருப்பனோ தெரியாது, நான் அழுது கூப்பிட்டும் இவள் சொன்னதைக் கேட்டு வரேல்லையே அவன். தாயும் மோளுமா சேந்து என்ர பிள்ளையை வாழவிடாம செய்துபோட்டாளவே!”
சுள்ளென்று ஒரு கோபம் வந்தது பல்லவிக்கு. ஏற்கனவே கலங்கிப்போயிருந்த மனமும் சேர்ந்து என்றுமில்லாமல் அவளை அவரின் பேச்சுக்குப் பதில் சொல்ல வைத்தது.
“என்னை என்ன எண்டாலும் சொல்லுங்கோ அப்பம்மா. அம்மாவை விடுங்க. அந்த மனுசி செத்து ஆறு வருசமாச்சு. ஆனா, இன்னும் உங்கட வாயில அரைபடுறா. அவா வாழேக்கயும் சந்தோசமா வாழ இல்ல. சாகேக்கயும் நிம்மதியா சாகேல்ல. செத்த பிறகும் அவவ வதைக்காதிங்க.” என்றாள் பட்டென்று.
பானுமதியும் இதை எதிர்பார்க்கவில்லை என்று அவரின் அதிர்ந்த முகமே சொல்லிற்று. “விடு பிள்ளை. அவாதான் சும்மா புலம்பிறா எண்டா நீயும் பதில் சொல்லிக்கொண்டு இருக்காத!” என்று அவளின் கையைத் தட்டிக்கொடுத்து அவளை ஆற்றுப்படுத்த முயன்றார் அவர்.
இனியும் அங்கிருந்தால் அவள் இருக்கிற மனநிலைக்கு இன்னும் எதையாவது கதைத்துவிடுவாள் என்று தெரிந்து, வீட்டுக்குள் போக எழுந்தாள். விதுரனுக்கும் உணவு கொடுக்க வேண்டுமே!
அப்போது சிலீர் என்று கண்ணாடி நொறுங்கும் சத்தம் கேட்டது. யாரும் சொல்லாமலேயே விதுரன்தான் என்று புரிந்தது. ‘கடவுளே! ஒரு பத்து நிமிசம்தானே அவனைக் கவனிக்காம விட்டன்.’ வேகமாக விறாந்தைக்கு ஓடினாள்.
அங்கு, தாராணிக்கு மிகவும் பிடித்த 3D வடிவிலான புத்தரின் கிறிஸ்டல் கண்ணாடிச் சிலை தரையில் நொறுங்கிக் கிடந்தது. அவளின் கைப்பேசியும் தரையில் கிடந்தது.
திகைத்துப்போய்த் திரும்பித் தாராணியைப் பார்த்தாள் பல்லவி. அவளுக்கு முகமெல்லாம் சிவந்து, விழிகள் கலங்கிப் போயிருந்தது. தொண்டைக்குள் அடைத்துக்கொண்டு வந்த எதையோ விழுங்கித் தன்னைச் சமாளிக்க முயன்றுகொண்டு, கைப்பேசியை எடுத்து ஆராய்ந்தாள்.
அதைப் பார்த்த பல்லவிக்கு ஆத்திரத்தை அடக்கவே முடியவில்லை. “அடங்காதவனே, வந்த இடத்திலயாவது கையக் கால வச்சுக்கொண்டு சும்மா இருக்க மாட்டியா? என்ன பழக்கம் இது, எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சு உடைக்கிறது. வா இங்கால!”
சினமிகுதியில் அவன் கையைப் பற்றி ஒரே இழுவையாக இழுத்துக்கொண்டு போய், அவளும் தாராணியும் பாவித்த அறைக்குள் தள்ளினாள். “இஞ்சயே இருக்கோணும் சொல்லிப்போட்டன்! அசஞ்சியோ வெளுத்து விட்டுடுவன்.” என்றவளின் பேச்சைக் கேட்காமல், “நீ போ! எனக்கு உன்னப் பிடிக்கேல்ல!” என்று மூர்க்கமாக அவளைத் தள்ளி விட்டுவிட்டு, “அப்பா!” என்று கத்திக்கொண்டு அறையை விட்டு வெளியே ஓடினான் விதுரன்.
சிலை விழுந்த சத்தத்துக்கு, “என்ன? என்ன உடைஞ்சது?” என்று அவசரமாக ஓடிவந்த ஆண்களின் கண்ணிலும் காதிலும் கூட இது விழுந்தது. பாலமுரளி அப்படியே இறுகிப்போனான். அழுகையோடு ஓடிவந்த மகனை தூக்கிக்கொண்டான்.
இதையெல்லாம் பார்த்த தவகணேசனுக்கு யாருக்காகக் கதைப்பது என்றே தெரியாத நிலை. கூடவே, இதனால் பல்லவிக்கும் அவனுக்கும் ஏதும் சண்டை வந்துவிடுமோ என்றும் பயந்தார்.
விதுரன் தள்ளிவிட்டு ஓடியதில் அலமாரியோடு மோதியிருந்தாள் பல்லவி. அதன் கைப்பிடி வேறு அவள் முதுகைப் பதம் பார்த்திருந்தது. “அம்மா!”என்று பின் முதுகை நெளித்தவள், ‘எல்லாம் அவனால! வளத்து வச்சிருக்கிறான் கண்டறியாத வளப்பு!’ என்று பாலமுரளியைத்தான் திட்டினாள்.
தன்னைச் சமாளித்துக்கொண்டு மீண்டும் விறாந்தைக்கு விரைந்து வந்தபோது, விழிகள் சிவக்க அவளை உறுத்து விழித்தான் பாலமுரளி. அவள் சொன்னபோதாவது வாங்கியிருக்க இதையெல்லாம் தவிர்த்திருக்கலாம். அதை விட்டுவிட்டு அவளை எதற்கு முறைக்கிறான்?
அவனை அலட்சியம் செய்து, கைப்பேசிக்கு என்னாகிற்றோ என்று ஆராய்ந்துகொண்டிருந்த தாரணியிடம், “சொறி அக்கா, இதுக்குத்தான் குடுக்காதீங்க எண்டு சொன்னனான். உடஞ்சிட்டுதா? தாங்க நான் பாக்கிறன்.” என்று வாங்கி ஆராய்ந்தாள்.
ஒரு மூலையில் மெலிதாக அதன் சில்வர் பெயர்ந்திருந்தது. மற்றும்படி எந்தச் சேதமும் இல்லை. இருந்தாலும், நாம் பொன்னைப் போல் பொத்திப் பாதுகாக்கும் ஒரு பொருளின் மீது சின்ன கீறல் விழுந்தாலே மனம் தாங்காதே. “சொறி அக்கா. அவனைக் கவனிச்சுக்கொண்டேதான் இருந்தனான். ஒரு பத்து நிமிசம் மறந்திட்டன். அதுக்கிடையில…” என்றவளுக்கு மேலே என்ன சொல்வது என்று தெரியவே இல்லை.
தவகணேசன் பானுமதிக்குமே மனத்துக்கு ஒருமாதிரி ஆகிப்போனது. அந்தப் புத்தர் சிலை, கைப்பேசி இரண்டுமே தாராணிக்கு மிகவுமே பிடித்தவைகள். ஆனால், மருமகனின் மகனிடம் கோபிக்கவா முடியும்?
“ஃபோன் வேல செய்துதானே. விடுங்கோ. சிலை வேற பாத்து வாங்கலாம்.” என்று அந்தச் சூழ்நிலையைச் சமாளித்தார் தவகணேசன். அவருக்கு பாலமுரளியின் இறுகிய தோற்றம் வேறு கவலையை உண்டாக்கிற்று. அதற்குள், பானுமதியும் ஓடிப்போய்த் தும்புத்தடியோடு வந்தார்.
“அப்பிடியே எல்லாரும் காலப் பாத்து வச்சு வெளில போங்கோ.” என்றுவிட்டு, அவர் கவனமாகக் கூட்ட ஆரம்பிக்க, “தாங்க பெரியம்மா, நான் செய்றன்.” என்று தும்புத்தடியைத் தான் வாங்கிக்கொண்டாள் பல்லவி.
தாரணியைப் பார்த்த பாலமுரளியின் முகத்தில் பெரும் சங்கடம். அழும் மகனைக் கடியவும் முடியவில்லை. “சொறிமா. தம்பி இப்பிடிச் செய்வான் எண்டு நினைக்கேல்ல. சிலை நான் வாங்கித்தாறன். ஃபோனும் பழுது எண்டா சொல்லுங்கோ, கட்டாயம் வாங்கித் தாறன்.” என்று சொன்னான்.
உள்ளே பெரும் கவலையாக இருந்தாலும் இதற்குள் தன்னைச் சமாளித்துக்கொண்டிருந்தாள் தாரணி. “பரவாயில்ல மச்சான். அதெல்லாம் ஒண்டும் இல்ல. ஃபோன பாருங்கோ. ஒரு பிரச்சினையும் இல்லாம வேலை செய்யுது. அந்தப் புத்தர் சிலை பள்ளிக்கூடம் படிக்கிற காலத்தில, கண்டிக்கு டூர் போன நேரம் ஆசையா வாங்கினது. பல்லவியையே தொடவிடமாட்டன். அது உடைஞ்சிட்டுது எண்டுதான் தம்பிய அதட்டிப்போட்டாள். நீங்களும் அதப் பெருசா எடுக்காதீங்கோ.” என்று பல்லவிக்காகப் பேசினாள் அவள்.
அதற்கு அவன் ஒன்றும் சொல்லவில்லை. சிலை கட்டாயம் வாங்கித் தருவதாக மட்டும் சொல்லிவிட்டு, இன்னுமே தேம்பும் மகனுடன் வெளியே நடந்தான். அதன்பிறகு பல்லவியைத் திரும்பியும் பார்க்கவில்லை. விதுரனையும் தன் பார்வை வட்டத்திலேயே வைத்துக்கொண்டான்.
தன்னில் கோபமாக இருக்கிறான் என்று பல்லவியால் உணர முடிந்தது. ஆனபோதிலும் அவனை லட்சியம் செய்யவில்லை. பிள்ளை தப்புச் செய்தால் தண்டிப்பதோ கண்டிப்பதோ குற்றமா என்ன?

