அத்தியாயம் 12
விருந்துக்குப் புறப்பட்டபோது அவர்களே அறியாமல் அவர்களுக்குள் உருவாக ஆரம்பித்திருந்த அந்த மெல்லிய இணக்கம், வரும்போது முற்றிலுமாக மறைந்திருந்தது. பாலமுரளிக்கு சும்மாவே கடுமையைப் பிரதிபலிக்கும் முகம். இப்போதோ விழிகளில் சிவப்பேறி, தாடை இறுகி என்று பார்க்கவே பயமூட்டினான்.
‘அப்பிடி நான் என்ன பிழை செய்தனான் எண்டு பயப்பிட? செய்தது முழுக்க அவனும் அவன்ர மகனும். இதுல என்னை முறைக்கிறான்!’ என்று, தேவையற்ற தன் பயத்தைப் போக்கிக்கொள்ள முயன்றாலும் முடியாமல், பல்லவியின் நெஞ்சை மெல்லிய கலக்கம் சூழ்ந்தது.
அவர்கள் வீட்டு வாசலில் வந்து இறங்கியபோது, வழமை போன்று சிறுவர்கள் வீதியில் விளையாடிக்கொண்டிருந்தனர். உடனே விதுரனும் அவர்களிடம் ஓடினான். வெய்யில் இறங்கிய பொழுது என்பதில் முற்றத்தில் அமர்ந்திருந்த சுதா, இவர்களைக் கண்டுவிட்டு, விருந்தைப் பற்றி விசாரித்தபடி எழுந்து கேட்டடிக்கு வந்தாள்.
தம் மனத்துக்குள் இருப்பதை மறைத்துக்கொண்டு கணவனும் மனைவியும் அவளோடு உரையாடினாலும், அவர்களுக்குள் என்னவோ சரியில்லை என்பதைப் பாலமுரளியின் முகம் காட்டிக்கொடுத்தது. அவனறியாமல் கண்ணால் அவனைக் காட்டி என்ன என்று விசாரித்தாள் சுதா. ஒன்றும் சொல்லாமல் மெலிதாகச் சிரித்தாள் பல்லவி.
அவனை வைத்துக்கொண்டு வேறு என்ன சொல்வது? அதைவிட, அவளிடம் நடந்ததைப் பகிரவும் விருப்பமில்லை. ‘மனுசன் மனுசிக்க என்னவோ சண்டை போல…’ என்று எண்ணியபடி, அத்தோடு அவர்களை விட்டுவிட்டாள் சுதா.
பல்லவி கேட்டை திறந்துவிட, வீட்டின் பின்பக்கம் இறக்கியிருந்த பத்தியின் கீழே பைக்கை நிறுத்தக் கொண்டுபோனான் பாலமுரளி. விதுரனும் கூட இருந்தாலாவது இவன் அமைதியாகப் போகச் சாத்தியங்கள் உண்டு. இப்போது, என்ன சொல்லுவானோ, சண்டை ஏதும் பிடிப்பானோ என்று பலதும் ஓடிற்று. எதையும் காட்டிக்கொள்ளாமல் வீட்டின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தாள்.
இரவுக்குப் பிட்டோ, இடியப்பத்தையோ அவித்துவிட்டுச் சாப்பிடும்படி கறி கட்டிக்கொடுத்திருந்தார் பானுமதி. அதைக் கொண்டுபோய்க் குசினிக்குள் வைத்துவிட்டுத் திரும்பியவளின் முன்னால், இறுகிய முகத்துடன் நின்றிருந்தான் அவன். ஏற்கனவே பயந்துகொண்டிருந்ததில் அவனைக் கண்டு திடுக்கிட்டுப் போனாள் பல்லவி. வீட்டின் கதவு சாற்றப்பட்டிருப்பதும் அவனுக்குப் பின்னே தெரிந்தது.
“இப்பிடித்தான் எல்லாருக்கும் முன்னால வச்சு அவனை அதட்டுவியா? என்னவோ மாட்ட இழுத்துக்கொண்டு போற மாதிரிப் போறாய்.” அவளின் முகத்தின் முன்னே சீறினான் அவன்.
அவளுக்கு நடுங்கியது. கூடவே கோபமும் வந்தது. “அவன் ஒண்டும் சின்ன காரியம் செய்யேல்ல, கூப்பிட்டு வச்சுக் கொஞ்சுறதுக்கு!” அவளில் நம்பிக்கை இல்லை; பிள்ளையை ஒழுங்காக வளர்க்கவும் இல்லை; இதில் கோபம் வேறா என்று புகைந்தது அவளுக்கு.
“சின்ன பிள்ளைகள் எண்டா அப்பிடித்தான். உனக்கே எங்க எப்பிடி நடக்கோணும் எண்டு தெரியேல்ல. இதுல நீ அவனைச் சொல்லுவியா?”
“வேற எப்பிடி நடந்திருக்கோணும் எண்டு சொல்லுறீங்க? உங்களுக்கு வேணுமெண்டால் அது வெறும் கண்ணாடிச் சிலையா இருக்கலாம். ஆனா அக்காக்கு? பத்து வருசத்துக்கும் மேல ஆசை ஆசையா அவா பாதுகாத்த கிறிஸ்ட்டல் சிலை. உங்களையும் என்னையும் சங்கடப்படுத்தக் கூடாது எண்டு அவா எதையும் காட்டிக்கொள்ள இல்லையே தவிர, உள்ளுக்குள்ள எவ்வளவுக்கு அழுவா எண்டு எனக்குத் தெரியும். இதுல, ஃபோனை வேற தூக்கி எறிஞ்சிட்டான். அவன் இப்பிடி நடப்பான் எண்டு தெரிஞ்சுதான், அத வாங்குங்கோ எண்டு முதலே சொன்னனான். அத நீங்க செய்திருந்தாலாவது இது நடந்திருக்காது. அப்பாவும் மகனுமா சேந்து எல்லாப் பிழையையும் செய்துபோட்டு என்னட்ட வந்து கத்துறீங்க. முதல் என்ன பழக்கம் அது, என்னை வா போ எண்டு கதைக்கிறான் அவன்?”
இத்தனை நாட்களாகப் பயத்திலோ அல்லது ஒட்டுதல் இல்லாத தன்மையிலோ அவள் போட்டிருந்த வாய்ப்பூட்டு, இன்றைக்குத் தணிக்க முடியாத கோபத்தில் திறந்துகொண்டது.
“நீ பாசமா நடந்தாத்தானே அவன் உன்னில பாசம் வைக்க. மரியாதை தர.” பட்டென்று சொன்னான் அவன்.
“பத்து வருசமா இருந்தா என்ன, இருவது வருசமா இருந்தா என்ன? உடைஞ்சது வெறும் கண்ணாடிச் சிலை. அதுக்கு ஓவரா கதை சொல்லாத நீ! ஃபோனுக்கு ஏதும் நடந்திருந்தாலாவது பரவாயில்ல. ஒண்டுமே இல்லாத விசயத்துக்குத் தேவையில்லாம ஆர்ப்பாட்டம் செய்து, அவனிட்ட கடுமை காட்டினது நீ. அதுல பயந்துதான் அவன் அப்பிடிச் செய்திருப்பான்.”
இது என்ன விதமான வாதம் என்று அவளுக்கு விளங்கவே இல்லை. “அப்ப அவன் செய்தது சரி, நான் செய்தது பிழை, அப்பிடியா?” என்று கேட்டாள்.
“ஏய்! சும்மா சும்மா அவன் செய்தது சரியா பிழையா எண்டு கேட்டுக்கொண்டு நிக்காத. இதுவே என்ர கை பட்டு உடைஞ்சிருந்தாலும் இப்பிடித்தான் துள்ளி இருப்பியா? இல்லத்தானே. அப்ப, அவன் சின்ன பிள்ளை, நீ நினைச்ச மாதிரி அதட்டலாம் மிரட்டலாம் எண்டுற தைரியம்தானே அப்பிடிச் செய்ய வச்சது. அதுல பயந்து அவன் ஏதும் கதைச்சிருப்பான்.” என்றவனின் நியாயத்தில் வாயடைத்துப்போனது அவளுக்கு.
அடுத்தவரின் கைப்பேசியை எறிந்தது பிழை இல்லை. அந்தளவுக்கு அவனுக்கு வரும் கோபமும் தவறில்லை. கண்ணாடிச் சிலையை உடைத்ததும் பிழை இல்லை. ஆனால், அதற்கு அவள் கண்டித்தது பிழையாம். இவனிடம் பேசுவதே வீண்!
“அதுசரி! உங்கட மகனை நல்லா பாப்பன் எண்டுற நம்பிக்கை இல்லாத உங்களுக்கு, நான் செய்ற எல்லாமே பிழையாத்தான் தெரியும்.” என்றுவிட்டு அவள் நடக்க, வேகமாக அவள் கையைப் பற்றி இழுத்து, மீண்டும் தன் முன்னே நிறுத்தினான் அவன்.
திகைத்துத் தடுமாறி, அவனையே பற்றிக்கொண்டு நிமிர்ந்தவளின் முகத்தின் முன்னே குனிந்து, “நம்பப்போய்த்தான் உன்ன இந்த வீட்டுக்குக் கொண்டுவந்தனான். உன்னட்ட அவனை விட்டுட்டுப் போனனான். ஆனா இனிக் கவனமாத்தான் இருப்பன். எனக்கு முன்னாலேயே அவனை இந்தளவுக்கு அதட்டி உருட்டுற நீ, நான் இல்லாத நேரம் என்ன கொடுமையெல்லாம் செய்தியோ ஆருக்குத் தெரியும்? நீ பெத்த பிள்ளையா இருந்திருந்தா இப்பிடி நடந்திருப்பியா? இந்தளவுக்குப் பயந்து நடுங்க விட்டிருப்பியா? நீயெல்லாம்…” என்று பல்லைக் கடித்தவன் அப்படியே அவளை உதறித் தள்ளிவிட்டுப் போனான்.
அப்படியே உறைந்து நின்றாள் பல்லவி. என்ன வார்த்தை கேட்டுவிட்டான்? அவள் நெஞ்சு துடித்துத் தவித்தது. அவன் நடையிலேயே வீட்டைவிட்டு வெளியேறுவது பார்வையில் பட்டாலும் கருத்தில் பதியவில்லை. ஏன்? ஏன் இப்படி அவளுக்கு மட்டும் எல்லாமே தலைகீழாக நடக்கிறது? அப்படி யாருக்கு என்ன பாவம் செய்தாள்? மனமொப்பாத வாழ்க்கையாக இருந்தபோதுகூட, நடப்பதை ஏற்று, அதன் போக்கில் வாழ ஆரம்பித்தவளின் மனது மீண்டும் பரிதவித்துப் போனது.
அப்படியே எவ்வளவு நேரம் நின்றாளோ தெரியாது. இனியும் எதையும் யோசிக்க முடியாத அளவுக்குத் தலை விண் விண் என்று வலித்தது. நெற்றிப்பொட்டை அழுத்திவிட்டாள். இன்றைக்கு முழுக்க இதைத்தானே செய்கிறாள்.
ஒரு பனடோலைத் தண்ணீரோடு விழுங்கிவிட்டு, அன்றைக்கு அணிந்து போனவை, விதுரன் ஏற்கனவே அழுக்காக்கிக் கழற்றிப் போட்டது என்று எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போய்த் தோய்த்துப் போட்டுவிட்டு வந்தாள்.
ஆண்களின் ஜீன்ஸ், ஷேர்ட்டுகளெல்லாம் கழுவிப் பழக்கமில்லை அவளுக்கு. அவற்றில் இருக்கிற அழுக்கை நீக்கி, அலம்பி முடிப்பதற்குள் நாரி(இடுப்பு) விட்டே போயிற்று.
உடலும் மனமும் ஓய்வுக்குக் கெஞ்சினாலும் ஒரு பிடிவாதத்துடன் விதுரனையும் கூட்டிக்கொண்டு வந்து, குளிக்க வார்த்து, உடை மாற்றிவிட்டு, இடியப்பம் அவித்தாள். முதல் தடவை இறக்கியதுமே அவனுக்கு இடியப்பமும் பருப்பும் சுறாமீனும் போட்டுக் குழைத்து, தீத்தி(ஊட்டி)விடப் போக, தானே சாப்பிடப்போவதாகச் சொன்னான் அவன்.
பேசாமல் அவன் முன்னே பிளேட்டை வைத்தாள். விறாந்தையில் ஓடிக்கொண்டிருந்த டீவியை, குசினிக்குள் இருந்து எட்டி எட்டிப் பார்த்தபடி சாப்பிட்டான் அவன். இடியப்பம் பருப்புடன் சேர்ந்து களியாகிப்போனதுதான் மிச்சம். அப்படியே எழும்பி, செம்பைத் தூக்கிக்கொண்டு போய் வீட்டின் வாசலிலேயே நின்று கையைக் கழுவினான்.

