பல்லவி 12 – 2

அது, முன் பத்தியில் போட்டிருந்த சீமெந்துத் தரையிலும், அவன் கால்களிலும் சிந்தியது. தண்ணீரைச் சிந்தியபடி குடுகுடு என்று வந்து, செம்பை டொம் என்று அவளின் முன்னே வைத்துவிட்டு, கையையும் வாயையும் அணிந்திருந்த சட்டையிலேயே துடைத்துக்கொண்டு போய் மீண்டும் டீவியின் முன்னே அமர்ந்துகொண்டான்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு அவனுக்கு எதையும் சொல்ல வாயே வரவில்லை. இதைத்தானே அவனின் தகப்பன் விரும்புகிறான்.

இப்படி, அவளின் எண்ணங்கள் அதுபாட்டில் எங்கெங்கோ சிக்கிச் சுழற, இடியப்பத்தை அவித்து முடித்து, எல்லாவற்றையும் ஒதுக்கிக் கழுவி வைத்தாள். பசித்தது. பேசாமல் போட்டுச் சாப்பிட்டாள். அவனும் சற்று நேரத்திலேயே வந்தான். நேரே கிணற்றடிக்குச் சென்று குளித்துவிட்டு வந்தவனுக்கு உணவைப் போட்டுக் கொடுத்தாள். அவளின் முகம் பாராமல் சாப்பிட்டு முடித்தான் அவன்.

வழமைபோன்று அவன் மகனோடு விறாந்தையில் சரிந்துவிட, அறைக்குள் சென்று படுத்துக்கொண்டாள் பல்லவி.

அடுத்தநாள் காலையில் அவனின் நடமாட்டத்தில்தான் விழித்தாள். இரவு படுத்தபோது சற்று நேரம் உறக்கமற்று அலைப்புற்றாலும், அளவுக்கதிகமாக மனமும் உடலும் சோர்ந்திருந்ததாலோ என்னவோ அடித்துப் போட்டதுபோன்று நன்றாக உறங்கியிருந்தாள்.

அது, மனத்துக்கும் உடலுக்கும் ஒருவிதத் தெம்பைத் தர, எழும்பி சற்றுக்குப் பாயிலேயே அமர்ந்திருந்தாள். முகத்தை இரு கைகளாலும் அழுத்தித் தேய்த்துவிட்டு, கலைந்து கிடந்த முடியைக் கொண்டையாக்கியபோதுதான் இரவு அவன் அவளிடம் வரவில்லை என்று பிடிபட்டது.

அவர்களுக்குள் தாம்பத்திய உறவு ஆரம்பித்ததிலிருந்து இப்படி அவன் விலகி இருந்தது இதுதான் முதல் முறை. கோபத்தைக் காட்டுகிறானா? அவளின் உதட்டோரம் இலேசாக வளைந்தது. நல்லது! அப்படியே இருந்துகொள்ளட்டும். அவளுக்கும் நிம்மதி. உண்மையில் நேற்றும் வந்திருந்தான் என்றால் அடிமனத்தில் இருந்தே வெறுத்திருப்பாள். எழுந்து பாயைச் சுருட்டி வைத்துவிட்டுத் தன் வேலைகளைப் பார்க்கப் போனாள்.

அன்றைக்குப் பிறகு அவன் முகம் பார்ப்பதை முற்றிலுமாகத் தவிர்த்தாள் பல்லவி. அந்தளவில் அவன் கேட்ட கேள்வி அவளைப் பாதித்திருந்தது. அவனும் எனக்கு என் மகன் மட்டுமே போதும் என்பதுபோல் ஒதுங்கியே இருந்தான்.

தினவழக்கம் எதிலும் மாற்றமில்லை. முட்டை, வெற்றிலை, கூடவே காணிக்குள் நிற்கும் தேசிமரங்களில் பிடுங்கும் தேசிக்காய்களை விற்றால் வரும் பணத்தையெல்லாம் அவளின் கைச் செலவுக்கு என்று அவளிடமே விட்டுவைத்தான். அதேபோல, தினமும் காலை உணவை உண்ண வருகையில் பகல் சமையலுக்கான இறைச்சியோ மீனோ எதுவோ ஒன்றும் கூடவே வரும். தேவையான பேச்சுகள் ஒருவர் மற்றவரின் முகம் பாராமலேயே நடந்தது.

தினமும் அழைக்கும் கலாவதியிடமோ ரூபாவிடமோ இருவரும் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. பேசுகிற ஒவ்வொரு முறையும் சின்னவனை நன்றாகப் பார்த்துக்கொள்ளும்படி கலாவதி சொல்வார். தலையை ஆட்டிக் கேட்டுக்கொள்வாளே தவிர, அன்றைக்குப் பிறகு கண்டிப்புக் காட்டித் திருத்தப் போவதில்லை. தினமும் குளிக்க வார்ப்பது, எப்படியாவது மூன்று நேரமும் உணவு கொடுப்பது, நேசரிக்கு அனுப்புவது என்று அவற்றை மட்டும் குறையில்லாமல் பார்த்துக்கொண்டாள்.

பல்லவி வந்ததிலிருந்து காட்டிய கண்டிப்புத் தளர்ந்துபோனதில் விதுரனின் அட்டகாசங்கள் அளவில்லாமல் போய்க்கொண்டிருந்தன. பல்லைக் கடித்துப் பொறுத்துக்கொண்டு, அன்றைக்கும் நேசரிக்குச் செல்வதற்கு அவனைத் தயார்படுத்தி முடித்தபோது, அவளுக்கு அழைத்தான் பாலமுரளி.

பல்லவியின் புருவங்கள் சுருங்கிற்று. எடுக்காமல் விடத்தான் விருப்பமாக இருந்தது. ஆனால், ஏதும் பிரச்சனை என்றால் தவறாகிப்போய்விடுமே என்று ஏற்றாள்.

“தம்பி வெளிக்கிட்டானா?” எந்த விழிப்பும் இன்றி மொட்டையாகக் கேட்டான் அவன்.

“ஓம், வெளிக்கிட்டான்.” அவளும் ஒட்டாமலேயே பதில் சொன்னாள்.

“ஓ…! இஞ்ச என்ர பைக் பஞ்சராயிட்டுது. கராஜ்ல விட்டிருக்கிறன். எப்பிடியும் நான் வர மத்தியானம் ஆகிடும். அதால, இண்டைக்கு நேசரிக்குக் கூட்டிக்கொண்டு போகேலாது. அவனுக்கும் சொல்லிவிடு.” தலைப்புச் செய்தியைப்போல் அறிவித்தான் அவன்.

“ஓ…!” என்று இழுத்தவள் சட்டென்று தோன்றிய யோசனையில், “பின்னுக்கு நிக்கிற சைக்கிள்ல நான் கொண்டுபோய் விடவா?” என்று வினவினாள்.

“இல்ல. வேண்டாம்!” என்றான் அவன் உடனேயே.

“ஏன் வேண்டாம்?” அவனுடைய அந்த வேக மறுப்பு அவளை எதிர்கேள்வி கேட்க வைத்தது.

“அந்தச் சைக்கிள் ரூபான்ர. அவள் சுவிஸுக்கு போனதில இருந்து ஓடாம அப்பிடியே நிக்குது. சேவிஸுக்கும் விடேல்ல.” சொல்வதைக் கேட்பதை விட்டுவிட்டு இதென்ன தொணதொணப்பு என்கிற சினம் தொனிக்கச் சொன்னான் அவன்.

அதுவே, இதை விடக்கூடாது என்று அவளைத் தூண்டியது. “அண்டைக்கு ஒருக்கா பின் பக்கம் கிளீன் பண்ணேக்க, இங்க காணிக்கையே சும்மா ஓடிப்பாத்தனான். நல்லாத்தான் நிக்குது. அது ஓடும். நான் கூட்டிக்கொண்டு போறன். என்ன தூசு துடைக்கோணும்.” அவளும் ஒரு பிடிவாதத்துடன் சொன்னாள்.

அவனுக்கு அப்போதும் சம்மதிக்க விருப்பமில்லை. சைக்கிளை அவனே பார்த்து உறுதிப்படுத்தாமல் அனுப்ப மனமில்லை. போகிற வழியில் இருவருக்கும் ஏதுமானால் என்ன செய்வது?

“இல்ல விடு. ஒருக்கா சேவிஸுக்கு(service) விட்டு எடுத்தபிறகு பாப்பம். இண்டைக்கு ஒரு நாளைக்குப் போகாம நிண்டா ஒண்டும் நடக்காது.” என்று முடித்தான் அவன்.

“என்ன ஒண்டும் நடக்காது? சும்மாவே உங்கட மகனுக்கு நேசரிக்குப் போகக் கள்ளம். படிக்கத் துப்பரவுக்கும்(கொஞ்சத்துக்கும்) விருப்பம் இல்ல. இதுல, நீங்களும் மறிச்சா நல்லாத்தான் இருக்கும்.” அவள் என்ன சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளாதவனின் குணம், அவளைக் கொதிக்க வைக்க வேகமாகப் படபடத்தாள்.

அந்தப் பக்கத்தில் சத்தமே இல்லாமல் போயிற்று. அவனுடைய அந்த அமைதியும் மறுப்பாகவே மொழிபெயர்க்கப்பட்டுவிட, “பயப்பிடாதீங்க. உங்கட மகன நல்லபடியா நேசரிக்கு கூட்டிக்கொண்டு போவன். அதட்டவோ உருட்டவோ மிரட்டவோ மாட்டன், சரியா.” என்றாள் குத்தலாக.

அதைக் கேட்ட பாலமுரளியின் முகம் கடுத்தது. “நீ முதல் ஒழுங்கா கதைக்கப் பழகு. பிறகு கூட்டிக்கொண்டு போறதைப் பற்றி யோசிக்கலாம்.” என்றுவிட்டுப் பட்டென்று அழைப்பைத் துண்டித்தான்.

அவமானத்தில் முகம் சுண்டிப்போனது அவளுக்கு. கூடவே, கோபம் ஒன்றும் புசுபுசு என்று வந்தது. என்ன நினைத்துக்கொண்டிருக்கிறான் அவளைப் பற்றி? முதுகெலும்பே அற்றவள் என்றா? அல்லது, அவன் எவ்வளவுதான் அவமதித்தாலும் அலட்சியப்படுத்தினாலும் வாயை மூடிக்கொண்டு ஒரு மூலையில் இருப்பாள் என்றா? முதல், அப்படி என்ன தவறாகக் கதைத்தாளாம்? நடந்த பேச்சைத் தனக்குள் ஒருமுறை ஓட்டிப் பார்த்தாள்.

‘உங்கட மகன்’ என்று அவள் சொன்னதைத் தவிர வேறு எதுவும் நெருடவில்லை. அப்போ அதுதானா? இன்னுமே கோபம் உச்சிக்கு ஏற அவனுக்கு அவள் அழைத்தாள்.

“இப்ப என்ன?” என்றான் அவன் எடுத்ததும்.

“பெத்தவளா இருந்தா இப்பிடிச் செய்வியா எண்டு கேட்டது நீங்க. அதின்ர அர்த்தம், அவனை நான் மகனா பாக்க இல்லை எண்டுறது. சோ, அப்படிச் சொன்ன நீங்கதான், அவன் எனக்கு ஆரு, நான் அவனுக்கு ஆரு எண்டுறதையும் சொல்லோணும். சொன்னீங்க எண்டா அதுக்குப் பிறகு அப்பிடியே சொல்லுறன். அதுவரைக்கும் உங்கட மகன உங்கட மகன் எண்டுதான் சொல்லுவன். அதே மாதிரி, உங்கட மகனை தேவையில்லாம அதட்டுறன் உருட்டுறன் எண்டு சொன்னதும் நீங்கதான். நீங்க சொல்லாத எதையும் புதுசா நான் சொல்லேல்ல. பரவாயில்ல, நீங்க என்ன சொன்னாலும் கேட்டுக்கொண்டு உங்க ரெண்டு பேருக்கும் பணிவிடை செய்யத்தானே இந்த வீட்டில நான் இருக்கிறன். அதால, விதுரனக் கவனமா கூட்டிக்கொண்டு போறதும் என்ர வேலைல ஒண்டுதான். அத நான் செய்றன்.” என்றுவிட்டு, அவனைப் போலவே பட்டென்று அழைப்பைத் துண்டித்தாள் பல்லவி.

இத்தனை நாட்களாக நெஞ்சுக்குள்ளேயே நின்று அழுத்திய கோபத்தையெல்லாம் இன்றைக்கு ஓரளவுக்கேனும் காட்ட முடிந்ததில் அவளுக்கு மிகுந்த திருப்தி.

error: Alert: Content selection is disabled!!