பல்லவி – 13

அத்தியாயம் 13

கராஜில் ஒரு ஓரமாக இருந்த பழைய டயர் ஒன்றின் மீது அமர்ந்திருந்த பாலமுரளி, முழங்கைகளைத் தொடைகளில் ஊன்றி இரு கைகளாலும் தலையைப் பற்றிக்கொண்டான். விழிகளை இறுக்கி மூடியிருந்தாலும் அவளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனைப் பதம் பார்த்துக்கொண்டிருந்தன.

வாயைத் திறக்கவே பயந்தவள் மாதிரி இருந்துவிட்டு என்ன போடு போடுகிறாள்?

அன்றைக்கு அப்பா என்று கதறிக்கொண்டு ஓடி வந்த மகனின் கண்ணீரில் துடித்துப்போனான். அதன் பிறகும் யாருக்கும் எதற்கும் பயப்படாதவன் அவர்கள் அங்கிருந்து புறப்படுகிற வரைக்கும் இவன் காலையேதான் சுற்றிக்கொண்டிருந்தான். அதுவேறு அவன் பயந்துபோனதின் அளவைச் சொல்ல, தான் பெற்ற பிள்ளையாக இருந்திருந்தால் இந்தளவிற்குக் கடுமையைக் காட்டியிருப்பாளா என்று அவனுக்குள் தோன்றியது உண்மை. அதைத்தான் கேட்டான்.

இன்றைக்கு அதையே அவள் குத்திக்காட்டியபோது அது அவளுக்கு எந்தளவில் வலித்திருக்கும் என்று உணர முடிந்தது. நெஞ்சில் பாரம் ஒன்று ஏறி அமர்ந்துகொள்ள, அவளை எப்படிச் சமாளிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தான்.

அதுவே, இத்தனை நாட்களாக முறுக்கிக்கொண்டிருந்த மனத்தை அவளின்பால் சரிய வைத்தது. வேகமாக வேலையை முடித்துக்கொண்டு அவளிடம் சென்றுவிட நினைத்தான்.

இங்கே பல்லவியோ அவனிடம் சொன்னதைச் செய்தே தீருவது என்கிற பிடிவாதத்தில் வேகமாக ஓடிப்போய் சைக்கிளை நன்றாகத் துடைத்தாள். தண்ணீரை அள்ளி ஊற்றி டயர்களை கழுவினாள். ‘இப்போதைக்கு இது போதும். மிச்சத்த வந்து கவனிப்பம்’ என்று எண்ணியவள், அவன் பயப்படுவது போன்று ஏதாவது நடந்துவிடக்கூடாது என்று எண்ணி, ஓடிப் பார்த்தாள். பிரேக், டயர்கள், காற்று போதுமான அளவுக்கு இருக்கிறதா என்று அனைத்தையும் கவனித்து, சீட்டினை ஆராய்ந்து, பெல்லை அடித்துப்பார்த்து, பின் கரியர் பெலப்பாக இருக்கிறதா என்றும் பார்த்துக்கொண்டாள்.

அவனின் மறுப்பைப் புறம் தள்ளிவிட்டுப் புறப்படுகிறாள். அவளின் காலத்துக்கு அவனின் மகனுக்கு ஏதாவது நடந்துவிட்டால் கடித்துக் குதறிவிடுவானே.

மனத்தில் ஒருவித உற்சாகம் பிறக்க, “விதுரன், இண்டைக்கு நேசரிக்கு சைக்கிள்லதான் போகப்போறம். இஞ்சயே இருங்கோ. குளிச்சிட்டு ஓடிவாறன்.” என்று அவனிடம் சொல்லிவிட்டு, மாற்றுடைகளை எடுத்துக்கொண்டு கிணற்றடிக்கு ஓடினாள்.

மின்னலாகக் குளித்து, வேகமாக ஒரு பாவாடை சட்டையில் தயாராகி வந்தவளுக்கு என்னவோ மலையையே புரட்டப்போவது போல் கையும் காலும் பரபரத்தன.

அவளுடைய பேர்ஸ், கைப்பேசி, அவனின் பாக் மூன்றையும் முன்னுக்கு இருந்த பாஸ்கெட்டில் வைத்துவிட்டு, தண்ணீர் போத்தலை ஹாண்டிலில் கொளுவினாள். சைக்கிளை வீதிவரை உருட்டிக்கொண்டு வந்தாள்.

“கரியர்ல பயப்பிடாம இருப்பீங்களா?”

“ஓ! அத்தையாக்களோட போறனான்.” இலகுவாக ஏறி, இரண்டு பக்கமும் கால்களைப் போட்டுக்கொண்டு அமர்ந்தபடி சொன்னான் அவன்.

“எண்டாலும் கவனமா இருக்கோணும். கால சில்லுக்க விட்டுடக் கூடாது. என்னைக் கட்டிப் பிடிங்கோ.” அவளும் அந்தப் பக்கம் காலை விட்டு, பெடலை சரி செய்தபடி சொல்ல, அவனும் அவளை இறுக்கிக் கட்டிக்கொண்டான்.

“என்ன எண்டாலும் அம்மாட்ட சொல்லோணும். கவனமா இருக்கோணும், சரியா?” என்றபடி சைக்கிளை வீதிக்கு ஏற்றினாள். அவளுக்கு நேசரிக்கு வழிகாட்டி விதுரன்தான். அவனும் சரியாகவே காட்டினான். எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நேசரியின் முன்னே சென்று சைக்கிளை நிறுத்தியவளுக்கு, என்னவோ பெரிதாகச் சாதித்துவிட்டது போன்று உள்ளம் துள்ளிற்று.

எவ்வளவு பயந்தான். நல்லபடியாக அவனைக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டாளே. இனி எதையாவது சொல்லட்டும் பார்ப்போம் என்று எண்ணியபடி, அவனை ஒரு கையிலும், அவன் பாக், தண்ணீர் போத்தல் இன்னொரு கையிலுமாக அவனின் வகுப்புக்கு நடந்தாள்.

அவளை அவனோடு கண்டுவிட்டுப் புருவங்களைச் சுருக்கினார் அவனது வகுப்பாசிரியை. யார் என்று கேட்கிறார். சட்டென்று மனத்தினில் மெல்லிய சங்கடம் சூழ்ந்தது. அதை அவருக்குக் காட்டாமல், “நான் விதுரன்ர அம்மா.” என்று முறுவலித்தாள்.

“ஓ! இனி நீங்கதான் கூட்டிக்கொண்டு வருவீங்களா?” தனக்குள் உருவான கேள்விகளை அடக்கிக்கொண்டு விசாரித்தார் ஆசிரியை.

“தெரியேல்ல. இவரின்ர பைக் பஞ்சராயிட்டுது. அதுதான் இண்டைக்கு நான் கூட்டிக்கொண்டு வந்தனான்.” என்றவளுக்கு விதுரனைப் பற்றி விசாரித்துப்பார்க்கலாமா என்று தோன்றிற்று. என்றாலும் முதல் நாளே வேண்டாம் என்று தவிர்த்தாள்.

“கூட்டிக்கொண்டு போக இவர் வருவார். இல்லாட்டி நான் வருவன், மிஸ்.” என்று அவரிடம் சொல்லிவிட்டு, “விது, குழப்படி செய்யக்கூடாது. சாப்பாடு மிச்சம் வைக்காம சாப்பிடோணும், சரியா.” என்றாள் கனிந்த குரலில். ஏனோ அவனை அங்கே விட்டுவிட்டுப் போவதை நினைக்கையில் மனத்தில் பிசைந்தது.

இதென்ன புதுவிதமான உணர்வு? அவன் இத்தனை நாட்களாக வந்து போகிற நேசரிதான். அவள்தான் புதிதாகக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறாள். அதற்கா இப்படித் தோன்றுகிறது? ஒன்றும் விளங்காமல், அவனை அணைத்து முத்தமிட வேண்டும் போல் தோன்றிய உணர்வை அடக்கிக்கொண்டு, அவன் வகுப்பறைக்குள் போய் அமர்ந்துகொள்ளும் வரை பார்த்திருந்துவிட்டு, “பாய் மிஸ்.” என்று ஒரு முறுவலோடு விடைபெற்றாள்.

அவளுக்கிருந்த யோசனைகள், தயக்கங்கள் அவருக்கு இல்லை போலும். “ஒரு நிமிசம் நில்லுங்கோ, வாறன்.” என்றவர், “பிள்ளைகள்! எல்லாரும் உங்க உங்க இடத்தில இருங்கோ. இனி வெளில வாறேல்ல, சரியோ!” என்று வகுப்பைப் பார்த்துச் சொல்லிவிட்டு, அவளிடம் வந்தார்.

“உங்கட பெயர்?”

“பல்லவி. பல்லவி பாலமுரளி.”

“பல்லவி, விதுரன்ர அப்பாட்ட நிறையத் தரம் இதைப் பற்றிக் கதைச்சிட்டன். ஆனா, இதுவரைக்கும் எந்த மாற்றமும் நடக்கேல்ல. அவர் எனக்குத்தான் விளக்கம் சொல்லுவாரே தவிர மகனிட்ட ஏதும் கேக்கிறாரா, சொல்லுறாரா எண்டே எனக்குத் தெரியறது இல்ல.” எனும்போதே பல்லவிக்கு மெலிதாக முகம் கன்றிற்று.

“இனி நீங்க இருக்கிறீங்க. நீங்களாவது கவனிக்கோணும் எண்டுதான் சொல்லுறன். விதுரன் சரியான குழப்படி. அவன் நினைக்கிற மாதிரித்தான் எல்லாரும் நடக்கோணும். இல்லையோ பிரச்சினைதான். மற்றப் பிள்ளைகளுக்கு அடிக்கிறது, கலர் பென்சில்களைத் தூக்கி எறியிறது, சொல்லுறது கேக்கிறேல்ல, சாப்பிடுறேல்ல. ஒவ்வொரு நாளும் வீட்டில இருந்து கொண்டுவாற சாப்பாட்ட மற்றப் பிள்ளைகளுக்குத்தான் குடுக்கிறான்.” என்றதும் அதிர்ச்சியோடு பார்த்தாள் பல்லவி.

இத்தனை நாட்களும் வீட்டில் சாப்பிடாவிட்டாலும் கொண்டுபோவதைச் சாப்பிட்டுவிட்டு வருகிறான் என்கிற ஒரு திருப்தி இருந்தது. அவள் கேட்டபோதெல்லாம் அப்படித்தானே அவனும் சொன்னான். அப்படியானால் பொய்யும் சொல்லப் பழகியிருக்கிறானா? அங்கே நன்றாக விளையாடுவதால் ஆளுக்குப் பசிக்கிறது போலும் என்று அவளாக ஒன்றை எண்ணிக்கொண்டு, விதம் விதமாகச் செய்து கொடுத்துவிட்டது எல்லாம் வீணா? முகம் மாறாமல் காக்க வெகுவாகச் சிரமப்பட்டாள் பல்லவி.

“கொஞ்சம் படிப்பும் சொல்லிக் குடுங்கோ. பாட்டு, ரைம்ஸ், கலர்ஸ், நம்பர்ஸ் இதெல்லாம் ஆரம்பிச்சிட்டம். பள்ளிக்கூடம் போக இன்னும் கொஞ்ச நாள்தானே இருக்கு. எழுத்துக்களும் முழுமையா இல்லாட்டியும் பாத்தா சொல்லுற அளவுக்குப் பழக்க ஆரம்பிச்சிட்டம். விதுரன் இது எதுலயும் கவனம் இல்ல. விதுரன்ர அப்பா இனியும் கவனிப்பார் எண்டுற நம்பிக்கை எனக்குத் துப்பரவுக்கும் இல்ல. அதுதான் உங்களப் பாத்ததும் சொல்லீட்டன். இனி நீங்க கொஞ்சம் கவனிச்சுச் சொல்லிக்குடுங்கோ.”

பல்லவிக்கு அவரின் முகமே பார்க்க முடியவில்லை. ஒருவித அவமான உணர்வு தாக்கிற்று. “ஓகே மிஸ், இனிக் கட்டாயம் கவனிக்கிறன். அது, முதல் தாய் இல்ல, அவருக்கும் ஒரே வேல. மாமி வயசானவா, அவவுக்கும்…” என்று அவள் விளக்கம் சொல்லும்போதே வேகமாக இடைமறித்து, “இதையெல்லாம் உங்கட ஹஸ்பண்ட் ஏற்கனவே சொல்லிட்டார் பல்லவி. நீங்களும் அதையே சொல்லாதீங்கோ, பிளீஸ்.” என்று அவர் சொன்னதும், என்ன முயன்றும் முடியாமல் அவள் முகம் கறுத்துப் போனது.

“கட்டாயம் மிஸ். கவனிக்கிறன்.” என்று முடித்துக்கொண்டவளுக்கு பாலமுரளி மீதுதான் அத்தனை கோபமும் திரும்பிற்று.

‘போற இடமெல்லாம் சிறப்பத் தேடித்தாற மாதிரித்தான் வளத்து வச்சிருக்கிறான். இதுக்க அவனைக் கண்டிச்சா இவருக்குக் கோவம் வேற வருது!’ விதுரனை விட்டதும் அவனுக்கு மெசேஜில் தெரிவிக்க வேண்டும் என்று எண்ணியிருந்ததைச் செயலாக்காமல் வீட்டுக்குப் புறப்பட்டாள். கொண்டுபோய் விட்டாளா, என்ன ஏது என்று தெரியாமல் கிடந்து தவிக்கட்டும்!

அவள் எதிர்பார்த்தது போலவே இங்கே பாலமுரளியின் யோசனை இவர்களைச் சுற்றித்தான் இருந்தது. இடையில் எந்தப் பிரச்சனையும் வந்திராவிட்டால் இந்நேரம் போய்ச் சேர்ந்திருக்க வேண்டும். இன்னும் அவள் அதைத் தெரிவிக்கவில்லையே. அவன் பயந்தது போலவே ஏதும் ஆகிற்றோ? இதற்குத்தானே வேண்டாம் என்றான். கேட்டாளா?

இனியும் பொறுக்க முடியாமல் அவளுக்கு அழைத்தான். அவள் அழைப்பை ஏற்கவில்லை. ‘விசரி! சொல்ல சொல்லக் கேக்காம வெளிக்கிட்டுட்டு உயிரை வாங்குறாள்.’ பொறுமையற்று மீண்டும் மீண்டும் அழைத்தான். ‘தம்பியையும் வச்சுக்கொண்டு எங்க நிண்டு என்ன பாடுபடுறாளோ?’

“தம்பி, இன்னும் எவ்வளவு நேரமாகும்?” பொறுமையற்று கராஜ் பெடியனை விசாரித்தான்.

“நீங்களே பாக்கிறீங்கதானே அண்ணா. வேல நடந்துகொண்டுதான் இருக்கு. முடிச்சிடுவன், கொஞ்சம் பொறுங்கோ.” என்றான் அவன்.

மீண்டும் அவளுக்கு அழைத்தான்.

இங்கே வீடு திரும்பிக்கொண்டிருந்த பல்லவிக்கு பாஸ்கெட்டில் கிடந்த கைப்பேசி அலறுவது கேட்காமல் இல்லை. ஆனாலும், கோபம் தீரமாட்டேன் என்றது. நேசரிக்கு போன முதல் நாளே அவளுக்கு எவ்வளவு பெரிய தலையிறக்கம். காரணம் அவன்தானே! ‘நல்லா பயந்து நடுங்கட்டும்.’ அப்படி அவனைத் தவிக்க விட்டதில் மெல்லிய உற்சாகம் கூடத் தொற்றிக்கொண்டது.

நிறைய நாட்களுக்குப் பிறகு அவள் மட்டுமாக இப்படிப் பயணிப்பதும், சைக்கிளை மிதிக்கையில் முகத்தில் வந்து மோதிய காற்றும் நன்றாக இருந்தன. பெரிதாக ஒன்றுமே இல்லை. விதுரனைக் கொண்டுபோய் விட்டுவிட்டு வருகிறாள். ஆனாலும், வெளியே வந்தது சிறகடித்துப் பறக்கும் உணர்வைத் தந்தது. மனத்தை இலகுவாக்கிற்று. ஒருவித நிதானத்தை உண்டாக்கிற்று.

வெளி உலகத்தைப் பாராமல், வீட்டுக்குள் அடைந்து கிடப்பது எவ்வளவு பெரிய மன அழுத்தத்தைத் தருகிறது என்பதை அப்போது உணர்ந்தாள்.

பாலமுரளி இன்னுமே விடாமல் அழைத்துக்கொண்டிருந்தான். அதற்குமேல் அவனைச் சோதிக்க விரும்பாமல், சைக்கிளை வீதியின் கரையாக நிறுத்தி, ‘உங்கட மகனை நல்லபடியா கொண்டுபோய் விட்டுட்டன். பயப்படாதீங்க!’ என்று புலனத்தின் வாயிலாக ஒரு குறுஞ்செய்தியைத் தட்டிவிட்டாள்.

அடுத்த நிமிடமே அவனிடமிருந்து ´வொய்ஸ் மெசேஜ்’ வந்தது. “இத முதலே சொல்லமாட்டியா? பொறு, வீட்டை வந்து இருக்கு உனக்கு!” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பியிருந்தான்.

error: Alert: Content selection is disabled!!