பல்லவி 14 – 1

அத்தியாயம் 14

அவளிடம் சீறிவிட்டு வைத்தாலும் அவன் பயந்ததுபோல் எதுவுமாகவில்லை என்பது, பாலமுரளியை நிதானப்படுத்தியது. கோபமும் குறைந்து போயிற்று.

பைக் தயாரானதும் இறைச்சிக் கடையில் ஆட்டிறைச்சிப் பங்கு ஒன்றை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தான். குசினிக்குள் பகல் சமையலுக்கான ஆயத்தத்தில் இருந்தாள் பல்லவி.

அவளின் முன்னே கொண்டுபோய் இறைச்சிப் பங்கை வைத்துவிட்டு, அணிந்திருந்த சட்டையைக் கழற்றி அங்கிருந்த கதிரையின் மீது எறிந்துவிட்டு, கிணற்றடி நோக்கி நடந்தான். உடலின் புழுக்கம், மனத்தினில் ஓடிய யோசனை எல்லாவற்றுக்கும் இதமாகத் தண்ணீரை அள்ளி ஊற்றிக்கொண்டு வந்தபோது, அவன் முகமே பாராமல் அவனுக்கான காலை உணவைப் போட்டுக் கொடுத்தாள் பல்லவி.

அவளின் முன்னேயே தரையில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினான். சாப்பிட்டதும் அவனுக்குத் தேநீர் வேண்டும் என்று தெரியுமாதலால் ஒரு அடுப்பில் தண்ணீரைக் கொதிக்க வைத்தாள்.

இறைச்சிப் பங்கை பெரிய சட்டிக்குள் போட்டு, அதனை வெட்டுவதற்கு ஆயத்தமாக, “நான் வெட்டித் தாறன். நீ மற்ற ஆயத்தங்களப் பார்.” என்று தடுத்தான் அவன்.

அவளும் ஒன்றும் சொல்லாமல் ஒரு பாத்திரத்தோடு எழுந்து போனாள். தட்டுமுட்டுச் சாமான்கள் போட்டுவைக்கும் கொட்டிலின் கூரையில் கட்டித் தொங்கவிட்டிருந்த சின்ன வெங்காயக் கட்டுகளில் இருந்து அன்றைக்குத் தேவையான வெங்காயங்களை இழுத்து எடுத்தாள். அப்படியே கறிவேப்பிலை மரத்திலிருந்து கறிவேப்பிலையை உருவினாள். கிணற்றடியில் நின்றிருந்த ரம்பை மரத்திலிருந்து இரண்டு ரம்பை இலைகளையும் பிடுங்கிக்கொண்டு வந்தாள்.

குத்தரிசிச் சோற்றுக்கு உலை வைத்துவிட்டு, வெங்காயம், உள்ளி, இஞ்சி எல்லாவற்றுக்கும் தோல் உரிக்க ஆரம்பித்தாள். அதற்குள் சாப்பிட்டுவிட்டு, பின் பக்கம் சென்று தட்டைக் கழுவி, அங்கிருந்த தட்டியிலேயே கவிழ்த்து வைத்துவிட்டு வந்தான் பாலமுரளி.

மீண்டும் தரையில் அமர்ந்து, இப்படி இறைச்சி வெட்டுவதற்கு என்றே பிரத்தியேகமாகப் பாவிக்கும் பெரிய பலகையைத் தன் முன்னே வைத்து, காலுக்குக் கீழே கத்தியைக் கொடுத்து நிமிர்த்தி வைத்துவிட்டு, அவள் சட்டிக்குள் போட்டு வைத்திருந்த இறைச்சியை வெட்ட ஆரம்பித்தான்.

இதையெல்லாம் அவனறியாமல் கவனித்த பல்லவிக்கு மெல்லிய ஆச்சரியம். அதுவும் நன்றாகச் சிவந்த, கொழுப்பற்ற இறைச்சித் துண்டுகளை ஒரு பாத்திரத்திலும், ஈரல், கொழுப்பு, மிகுதி இறைச்சியை இன்னொரு பாத்திரத்திலும், எலும்பு தனியாகவும் என்று அவன் பிரித்துப் போட்டதைப் பார்த்து விழிகளை விரித்தாள்.

‘இவன் இருக்கிற இந்த ஒழுங்குக்குப் பிள்ளையைக் கொஞ்சமாவது மாத்தலாம்.’ அதுவரை அடங்கிக்கிடந்த கோபம் மீண்டும் அவள் முன்னே வந்து நின்றது. அவனையே பார்த்தாள். என்ன சொன்னாலும் மகனுக்காகத்தான் நிற்கப்போகிறான். தெரிந்தும் பேசுவதா, இல்லையா? அவளின் யோசனை நிறைந்த பார்வை அவனைச் சென்று சேர்ந்திருக்க வேண்டும். நிமிர்ந்து, “என்ன?” என்றான்.

“அண்டைக்கு நான் அவனைக் கண்டிச்சது பிழை எண்டு சொன்னீங்க. நேசரி டீச்சர் உங்களிட்ட ஒண்டுமே சொன்னது இல்லையா?” என்று நிதானமாகக் கேட்டாள்.

“அவேக்கு வேற என்ன வேல? அம்மா அப்பாவைக் கண்டாலே காணும் சும்மா பிள்ளைகளைப் பற்றிக் குறை சொல்லிக்கொண்டு வந்திடுவினம்.” இறைச்சி வெட்டுவதில் கவனமாக இருந்தபடி சொன்னான் அவன்.

நம்ப முடியாமல் அவனைப் பார்த்தாள் பல்லவி. எதைச் சொன்னாலும் அதற்கொரு பதிலைத் தனக்கு ஏற்றதுபோல் சொல்கிறவனை என்ன செய்வது?

அவன் ஒன்றும் முட்டாள் இல்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நிற்கிறவனும் இல்லை. கல்வி, பழக்கவழக்கம், ஒழுக்கம் எல்லாம் ஒரு பிள்ளைக்கு எவ்வளவு முக்கியம் என்று தெரியாதவனும் இல்லை. பிறகும் ஏன் அவள் சொல்ல வருவதை விளங்கிக்கொள்கிறானே இல்லை?

பாசம் கண்ணை மறைக்கிறதா? அன்னை இல்லாத பிள்ளை என்கிற பரிதாபமா? எதுவானாலும் அது நல்லதற்கு இல்லையே. நாளைக்கு விதுரன் தவறான பாதையில் சென்றுவிட்டால் அளவுக்கதிகமாகத் துடிக்கப்போகிறவனும் இவன்தானே.

“என்னையே என்னத்துக்குப் பாக்கிறாய்? முதல் என்னத்துக்குத் தம்பியக் கொண்டுபோய் விட்டாச்சு எண்டு நீயா எனக்குச் சொல்லேல்ல? நான் யோசிச்சுக்கொண்டு இருப்பன் எண்டு தெரியாதா?” அவள் பேச்சை ஆரம்பித்துவிட்டதில் கேட்டான் அவன்.

“சொல்லோணும் எண்டுதான் நினைச்சனான். அந்த டீச்சர் சொன்னதைக் கேட்டு வந்த சினத்திலதான் சொல்லேல்ல.”

அப்படிச் சொன்னவளை நிமிர்ந்து முறைத்தான் அவன். “உனக்கே இன்னும் பொறுப்பு வரேல்ல. இதுல நீ தம்பியச் சொல்லுவியா?”

இதோடு இரண்டாவது தரம் இவன் இப்படிச் சொல்வது.

சுர் என்று கோபம் வர, பட்டென்று கையில் இருந்த வெங்காயத்தைத் தூக்கி அவன் மீது எறிந்தாள் பல்லவி.

“ஏய்! என்ன இது?”

“என்னப் பாத்தா எப்பிடித் தெரியுது? விதுரன் மாதிரியா? இனியும் இப்பிடி விதுரனோட என்னை ஒப்பிட்டுக் கதைச்சீங்களோ அடுத்த முறை விறகுக்கட்டதான் வரும்.” என்று மிரட்டியவளைப் பார்த்துக் கண்ணால் சிரித்தான் அவன்.

“உயரம்தான் கொஞ்சம் வித்தியாசமே தவிர மற்றும்படி ரெண்டு பேரும் ஒண்டுதான். இல்லாம சின்ன பிள்ளை மாதிரி வெங்காயத்தால எறிவியா?” அவள் எறிந்த வெங்காயங்களைப் பொறுக்கிச் சட்டிக்குள் போட்டபடி சொன்னான் அவன்.

“ப்ச்! நான் என்ன சொல்லுறன் எண்டு உங்களுக்கு விளங்கேல்லையா? அவன் சாப்பாட்டைக் கூட மற்றப் பிள்ளைகளுக்குக் குடுத்திட்டு வந்து சாப்பிட்டன் எண்டு பொய் சொல்லுறான். இந்தப் பழக்கம்தான் நாளைக்குப் பயப்பிடாம பெரிய விசயங்கள்லயும் பொய் சொல்ல வைக்கும்…” என்று அவள் சொல்லிமுடிக்க முதலே இடையிட்டு, “என்ர பிள்ளை அப்பிடி எல்லாம் போகமாட்டான். நீ கொஞ்சம் படிப்பை மட்டும் சொல்லிக்குடு. அவன் பெரியாளா வருவான்.” என்றான் அவன் நம்பிக்கையோடு.

அயர்ந்துபோய் அவனைப் பார்த்தாள் பல்லவி. மகன் என்று வந்துவிட்டால் எப்படி மாறிவிடுகிறான்? பெற்ற தாய் இல்லாது போனாலும் இப்படியொரு தந்தை கிடைக்க விதுரன் கொடுத்து வைத்திருக்க வேண்டும். என்னவோ அவளுக்கு இந்தத் தகப்பன் மீது இப்போது எந்தக் கோபமும் வரமாட்டேன் என்றது.

அதில், எதுவும் பேசத் தோன்றாமல் அமைதியானாள்.

அவளுக்குள் என்ன ஓடுகிறது என்று உணராதவனை அவளின் அந்த அமைதி தொந்தரவு செய்தது. “சைக்கிளை சேவிஸுக்கு விடுறதுக்குக் கேட்டுட்டுத்தான் வந்தனான். இண்டைக்குக் குடுத்தா ரெண்டு நாளில வந்திடும். பிறகு நீ தேவைக்குப் பயன்படுத்தலாம்.” என்றான் மறைமுகச் சமாதானமாக.

அவள் அதற்கும் ஒன்றும் சொல்லாமல் கேட்டுக்கொண்டாள்.

சற்று நேரத்தில் எது உந்தியதோ, அல்லது, எப்படியாவது அவளைச் சமாதானம் செய்துவிட வேண்டும் என்று அவன் மனது பிரியப்பட்டதாலோ, “என்னவோ தெரியா. என்னால அவனிட்ட கோபத்தைக் காட்டேலாது. நீயும் கோபப்படாம எப்பிடியாவது அவனை நல்லபடியா வளத்துத் தா. இவ்வளவு காலத்திலயும் எனக்கு எண்டு எந்த ஆசையும் இல்ல. அவன் நல்லா படிச்சு பெரிய உத்தியோகம் பாக்கோணும். அத நான் பாக்கோணும். அவ்வளவும்தான். அதுக்கு என்ன தேவையோ அதைச் செய். ஆனா அழ வைக்காத.” என்றான் அவன்.

விழிகள் பனிக்க அவனைப் பார்த்தாள் பல்லவி.

error: Alert: Content selection is disabled!!