மகனின் கண்ணீரைக் காண முடியாத ஒரு தந்தையின் மனது கண் முன்னே. அந்த மனத்துக்காக உன்னை நம்பமாட்டேன் என்று அவன் சொன்னதைக் கூட மன்னிக்கத் தயாராக இருந்தாள் அவள். தாய்க்கு நல்ல மகன். சகோதரிகளுக்கு நல்ல தமையன். மகனுக்கு அருமையான தகப்பன். அவளுக்குக் கூட இந்த நிமிடத்தில் அவன் மீது எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை. அவனைப் போன்ற ஒரு தந்தையின் ஆசை நிறைவேறியே ஆகவேண்டும். அவள் மனது அவளே அறியாது உறுதி எடுத்துக்கொண்டது.
இதற்குள் அவன் இறைச்சி வெட்டி முடித்திருந்தான். “கொழுப்பில்லாத இந்த இறைச்சியை நல்லெண்ணைல பொரிச்சு எடு. இதுல குழம்பு வை. எலும்ப வெளில கொண்டுபோய்க் கொத்திக்கொண்டு வாறன். நல்ல காரசாரமா ரசம் வை.” என்றுவிட்டு, எலும்புச் சட்டியையும் எலும்பு கொத்தும் கத்தியையும் எடுத்துக்கொண்டு வெளியே நடந்தான் அவன்.
“அப்பிடியே இண்டைக்கு ஆஞ்சுகொண்டு வந்த கத்தரிக்காயில ரெண்டு தாங்கோ. பால் கறி வைப்பம். முட்டையும் அவிக்கட்டோ?” வெளியே சென்றுவிட்டவனின் காதில் விழும் வகையில், அவன் போன திசையை எட்டிப் பார்த்துச் சற்றே சத்தமாக வினவினாள்.
“அவி அவி நல்லாருக்கும்.” அங்கிருந்தே பதில் சொன்னவன், சந்தைக்குக் கொடுக்க என்று கட்டிவைத்து, கடைசியில் டயர் பஞ்சரானதில் கொடுக்க முடியாமல் போன கத்தரிக்காய்ச் சாக்கிலிருந்து, கத்தரிக்காய்களை எடுத்துக் கொடுத்துவிட்டு, எலும்புகளைக் கொத்தப் போனான்.
இத்தனை நாட்களாகக் கடமைக்குச் சமைத்த பல்லவியும் பிரத்தியேகக் கவனம் எடுத்து வாய்க்கு ருசியாகச் சமைக்க ஆரம்பித்தாள். கொத்திய எலும்புகளைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, “சமைச்சு வை, வரேக்க அப்பிடியே தம்பியையும் கூட்டிக்கொண்டு வாறன்.” என்றுவிட்டு, சைக்கிளை ஒரு கையில் பற்றியபடி, புல்லட்டில் புறப்பட்டான் அவன்.
சற்று நேரத்தில் இருவரும் வந்து சேர்ந்தனர். எப்போதும்போல அடுப்பின் முன்னே அவள் அமர்ந்திருக்க, அவளைப் பார்ப்பதுபோல் அப்பாவும் மகனும் தரையில் அமர்ந்துகொண்டனர். இருவருக்கும் உணவைப் போட்டுக் கொடுத்தாள்.
விதுரன் சோற்றை விட்டுவிட்டு பொரித்த இறைச்சியை நல்ல வெட்டு வெட்டினான். பாலமுரளி கேட்டு கேட்டுச் சாப்பிட்டதிலேயே சுவை அவனுக்கு மிகவும் பிடித்துப்போயிற்று என்று கண்டு மகிழ்ந்தாள் பல்லவி. உணவு நல்ல காரசாரமாக இருந்ததில் அவனுக்கு வியர்க்க ஆரம்பித்தது. எழுந்து போய்த் துவாய் ஒன்றைக் கொண்டுவந்து கொடுத்தாள். தேகத்தையும் முகத்தையும் துடைத்துக்கொண்டு சாப்பிட்டான் அவன்.
குழம்பு, ரசம், முட்டை என்று அவள் ஒதுங்கிவிட, அவளின் தட்டைப் பார்த்துவிட்டு, “இறைச்சி ஏன் போடேல்ல?” என்று கேட்டான்.
“எனக்குப் பெருசா விருப்பமில்லை.”
“அத முதலே சொல்ல மாட்டியா?” அவன் குரலில் மெல்லிய கோபம் எட்டிப் பார்த்தது. “சொல்லியிருந்தா மீன் ஏதும் வாங்கிக்கொண்டு வந்திருப்பன்.”
“இப்ப இந்தச் சாப்பாட்டுக்கு என்ன குறை? நல்லாத்தான் இருக்கு.” என்றுவிட்டுச் சாப்பிட்டாள் அவள்.
உணவு வேளை முடிந்ததும் அப்பாவும் மகனும் விறாந்தையில் சரிந்துகொண்டனர்.
செய்வதற்கு வேலை எதுவும் இல்லை என்றால் அவளும் இந்த நேரத்தில் சும்மா சரிந்து எழும்புவாள். எரிக்கும் உச்சி வெயிலுக்கு வேறு என்னதான் செய்வதும்? இன்று, அறைக்குச் செல்லாமல் அவளும் வந்து விறாந்தையில் அமரவும் பாலமுரளி கேள்வியாகப் பார்த்தான். அதற்குப் பதில் சொல்லாது விதுரனிடம் கேள்வி கேட்டாள் பல்லவி.
“விது, இண்டைக்கு நேசரிக்குக் கொண்டுபோனதச் சாப்பிட்டதோ?”
“ஓம்.” டிவியில் கவனம் இருக்கப் பதில் சொன்னான் அவன். கணவன் மனைவி இருவரின் பார்வையும் சந்தித்து மீண்டது.
“உண்மையா சாப்பிட்டதோ? என்னட்ட உங்கட மிஸ்ஸின்ர நம்பர் இருக்கு. எடுத்துக் கேப்பன்.”
அவனிடம் சத்தமே இல்லை.
“சொல்லுங்கோ விது. சாப்பிட்டதோ இல்ல ஃபிரெண்ட்ஸுக்கு குடுத்ததோ?”
“ஃபிரெண்ட்ஸுக்குக் குடுத்தனான்.” தகப்பனின் மடிக்குள் புகுந்தபடி வாய்க்குள் முணுமுணுத்தான் அவன். மீண்டும் கணவன் மனைவி இருவரின் பார்வையும் சந்தித்து மீண்டது.
“சத்தமா சொல்லுங்கோ. எனக்குக் கேக்கேல்லை.” பல்லவி விடாமல் கேட்டாள்.
“ஃபிரெண்ட்ஸுக்கு குடுத்தனான்.” தகப்பனின் தோளில் முகத்தை மறைத்தபடி மீண்டும் சொன்னான் அவன்.
“பிறகேன் சாப்பிட்டனான் எண்டு பொய் சொன்னனீங்க?”
மீண்டும் அவனிடமிருந்து சத்தமில்லாமல் போனது.
“சாப்பிடாட்டி சாப்பிடேல்லை எண்டு சொல்லோணும். ஃபிரெண்ட்ஸுக்கு குடுத்தா அதச் சொல்லோணும். அதை விட்டுப்போட்டு இது என்ன பழக்கம் பொய் சொல்லுறது?”
பாலமுரளிக்கு மகனை அப்படிப் பார்க்க முடியவில்லை. ‘விடு’ என்று அவளிடம் வாயசைத்தான். அவள் விடவில்லை.
“இனி இப்பிடிச் செய்யக் கூடாது. ஒவ்வொரு நாளும் வந்து சாப்பாட்டை என்ன செய்தீங்க எண்டு சொல்லோணும். ஃபிரெண்ட்ஸுக்குக் குடுத்தாலும் பேசமாட்டன். ஆனா, உண்மையச் சொல்லோணும். சரியா?” என்று கேட்டு, “சொல்லுவன்.” என்று அவன் வாயிலிருந்து வரவழைத்த பிறகே விட்டாள்.
பாலமுரளிக்கு வாயே திறக்க முடியவில்லை. அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுந்து, அறைக்குச் சென்று தானும் சரிந்துகொண்டாள் பல்லவி. விதுரனின் முன்னே எதையும் பேசமுடியாமல், அவளைத் தடுக்கவும் முடியாமல் திணறிய பாலமுரளி, அவளின் இதழ்களில் சிறு சிரிப்பை வரவழைத்தான்.
சற்று நேரத்தில் சத்தமில்லாமல் கதவைச் சாற்றிவிட்டு வந்து அவளருகில் அமர்ந்தான் பாலமுரளி. மனம் தடதடக்க ஆரம்பிக்க, திரும்பி அவனைப் பார்த்தாள்.
“அதென்ன பார்வை?” என்றான் அவன்.
“ஏன், பாக்கவும் கூடாதா?”
இதற்கு என்ன சொல்வது? அவனுக்கு அவளிடம் மன்னிப்புக் கேட்க முடியுமா தெரியாது. குறைந்த பட்சமாக அன்றைக்குப் பேசியதற்கு இன்றைக்குச் சமாதானம் செய்யவேண்டும் என்று நினைத்தான். எப்படி என்றுதான் தெரியவில்லை. அவளின் ஒற்றைக் கையைப் பற்றித் தன்னிடம் கொண்டுவந்து விரல்களை வருடினான்.
“இண்டைக்குச் சாப்பாடு நல்லா இருந்தது.”
“ஓ… அப்ப இவ்வளவு நாளும் நல்லா இல்லையோ?”
அவளை முறைத்தான் அவன். சும்மாவே அவனுக்கு இப்படிப் பார்த்து பார்த்துப் பேச வராது. இதில், ஆரம்பிக்க முதலே அடித்து மூடுகிறாளே. அவன் நிலை கண்டு எழுந்த சிரிப்பை அவனுக்குக் காட்டாமல் அடக்கிக்கொண்டாள் பல்லவி. “கொஞ்சம் தள்ளிப் படு.” என்றான் அவன்.
“தம்பி?”
“அவன் நித்திரை.”
அவள் தள்ளிப் படுக்க, அவளின் தலையணையிலேயே அவனும் தலையை வைத்துக்கொண்டு சரிந்தான்.
இருவரின் தேகமும் உரசிக்கொண்டது. பல்லவிக்குள் ஒருவித இறுக்கம் படர்ந்தது. அவனுக்கு முதுகு காட்டித் திரும்பிப் படுத்தாள். அவனும் அவள் புறமே திரும்பிப் படுத்து அவளின் இடையில் கையைப் போட்டான். “எப்ப பாத்தாலும் முறைக்காம கொஞ்சம் சிரிக்கவும் பழகு!” என்றவனின் கை அவளைத் தன்னுடன் சேர்த்து இறுக்கிக்கொண்டது.
விழிகளை இறுக்கி மூடிக்கொண்டு அடுத்து நடக்கப்போவதற்குத் தன்னைத் தயார் படுத்தினாள் பல்லவி. ஆனால், அதற்குமேல் அவன் முன்னேறவில்லை. அது அவளின் இறுக்கத்தைத் தளர்த்த மெல்ல உறக்கத்துக்குச் சென்றாள்.

