பல்லவி – 2

அத்தியாயம் 2

அது இரண்டு அறைகள் கொண்ட கல்வீடு. வீட்டோடு சமையலறை இருந்தபோதிலும், தனியாக இருந்த தென்னோலை கொண்டு வேய்ந்த பழைய காலத்துக் குசினியையே இன்றும் பயன்படுத்தி வந்தனர்.

சிவலோகநாயகிக்கு வீட்டுக்குள் சமைப்பது, வீட்டோடு மலசலகூடம் வைத்திருப்பது எல்லாம் பிடிக்காது. வெள்ளி, செவ்வாய் என்றால் குளிர்சாதனப்பெட்டிக்குள் கூட மச்சம்(கறி) புழங்க அனுமதிக்கமாட்டார்.

மச்சப் பாத்திரங்கள் தனியாக, மரக்கறிப்(காய்கறி) பாத்திரங்கள் தனியாக என்று இருக்கும். அவற்றைக் கழுவுவதற்குப் பயன்படுத்தும் விம், தேங்காய்ப் பொச்சுக் கூடத் தனித்தனித்தான். யாராவது மறந்தோ கை தவறியோ மாற்றிப் பயன்படுத்திவிட்டால் வாயாலேயே வறுத்து எடுத்துவிடுவார். கிணற்றடிக்கு யாராவது மச்சத்தைக் கொண்டுபோய்விட்டால் தொலைத்துக்கட்டிவிடுவார்.

ஆரம்ப நாட்களில் அவரிடம் பலமுறை அகப்பட்டு வெந்து தணிந்திருக்கிறாள் பல்லவி. அதுவே இன்று ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும் கூட அவளின் கை எந்தப் பாத்திரத்தையும் மாற்றி வைக்காது. இன்றும் விறுவிறு என்று எஞ்சி இருந்தவற்றை ஒரு பாத்திரத்தினுள் போட்டு மூடி வைத்துவிட்டு, பாவித்த பாத்திரங்களை எல்லாம் எடுத்துச் சென்று, தென்னையின் கீழே இருந்த தண்ணீர் வாளி அருகே வைத்துத் தேய்க்க ஆரம்பித்தாள்.

கழுவியவற்றை மச்சப் பாத்திரங்கள் கவிழ்க்கும் தட்டியின் மீது கவிழ்த்து வைத்தாள். குசினியைத் தட்டிக் கூட்டிவிட்டு, வீட்டையும் ஒதுக்கிக் கூட்டிவிட்டு வந்தவளுக்குக் கோயிலுக்குப் போகவேண்டும் போல் மனம் பரிதவித்தது.

மனத்தில் இருப்பதையெல்லாம் அவள் கொட்டுமிடம் அதுதானே.

தயாராகி வந்து முன் விறாந்தையில் சரிந்திருந்தவரிடம், “கோயிலுக்குப் போயிட்டு வாறன் அப்பம்மா.” என்றாள்.

“மச்சம் சாப்பிட்டுட்டுக் கோயிலுக்குப் போகப்போறியோ?” என்று அதட்டியது அவர் குரல்.

“நான் இன்னும் சாப்பிடேல்ல. பெரியப்பா மீன் கொண்டு வாறதுக்கிடையில போயிட்டு வந்திடுவன்.” வீட்டின் கரையாக நின்ற சைக்கிளைத் திரும்பியபடி சொன்னாள் அவள்.

“இன்னும் ரெண்டு நாளில கலியாணத்தை வச்சுக்கொண்டு சும்மா வெளில மெனக்கெடுறேல்ல. கெதியா வந்து சேர்!”

இரண்டு தெருக்கள் தள்ளி இருக்கும் அந்த அம்மன் கோயில் சிறியதுதான். ஆனாலும், சின்ன வயது தொடங்கி அம்மாவின் கையைப் பற்றியபடி வந்துபோனவளுக்கு, இன்றைக்கு இன்னொரு அன்னையைப் போல் மாறிப்போயிருந்தாள் அம்மன். கைகளைக் கூப்பியவள் அம்மனையே பார்த்தாள். அந்த அன்னை அறியாத எதுவும் அவள் வாழ்வில் இல்லை. பிறகு எதை என்று கேட்க? வேண்ட? அவளுக்குத் தெரியாதா இவளுக்கு என்ன வேண்டும் என்று? அல்லது, அவளால் கூட எதையும் மாற்றியமைக்க முடியாதோ?

அதுதான் உண்மை! அண்ட சராசரத்தையே ஆளும் அன்னையால் கூட அவள் வாழ்வில் நடந்துவிட்ட எதையும் மாற்றியமைக்க முடியாது எனும்போது அவள் எம்மாத்திரம்? காற்றடிக்கிற பக்கம் பறக்கிற சருகாக அலையத்தான் வேண்டும்.

காலைப் பூசை முடிந்துவிட்டபடியால் கோயிலுக்குள் யாருமில்லை. அவளை ஆற்றுப்படுத்திக்கொள்ள அந்த அமைதி வேண்டுமாக இருந்தது. அந்த மண்டபத்தின் ஒரு மூலையில் சென்று அமர்ந்துகொண்டாள்.

ஆறாமலேயே கிடக்கும் இந்த ரணங்களை எல்லாம் எப்படி ஆற்றப்போகிறாள்? இறந்தகாலம் மிகுந்த வலிகளைத் தந்தது. நிகழ்காலம் அவள் கையிலேயே இல்லை. எதிர்காலம் மீதிருந்த மெல்லிய நம்பிக்கை கூட நடக்கப்போகிற இந்தத் திருமணத்தால் முற்றிலும் நசிந்துபோனது.

சொன்னால் நிறுத்தியிருப்பார்கள். ஆனால், எப்படிச் சொல்லுவாள்?

தங்கள் நிலையைப் பற்றி அவள் யோசிக்கவில்லை என்பதுதான் பானுமதியின் கோபமே. ஆனால், அவர்களைப் பற்றி யோசித்ததால்தான் இந்தத் திருமணத்திற்கே சம்மதித்திருக்கிறாள் என்று யார் அவரிடம் சொல்வது?

அவர்களுக்குப் பெரிய வசதி இல்லை. இவளை விட இரண்டு வயது மூத்த தாரணி இன்னும் திருமணத்திற்கு நிற்கிறாள். நிச்சயம் அவளுக்குச் சீதனம் கொடுக்கவேண்டி வரும். அப்படியிருக்கையில் இதை மறுத்து, எனக்கும் சீதனம் கொடுத்துக் கட்டி வையுங்கள் என்று எப்படி அவளால் கேட்க இயலும்? என் பாரத்தை இன்னும் சுமவுங்கள் என்று எப்படிச் சொல்வாள்?

அதனால்தான் சம்மதித்துவிட்டாள். ஆனால், ஏற்றுக்கொள்ள முடியாமல் மனம் கிடந்து பாடாய்ப் பட்டது.

அப்போது, அவளின் சிந்தனையைக் கலைக்கும் விதமாக, “பல்லவி…” என்று நலிந்து மெலிந்து ஒலித்தது ஒரு குரல்.

உடலே தூக்கிப்போட விழுக்கென்று திரும்பிப் பார்த்தாள். கலைந்த தலை, சிவந்த விழிகள், குறைந்தது பத்து நாட்கள் தோய்க்காதது போன்ற சாரமும் சட்டையுமாக நின்றிருந்தார் அந்த மனிதர். அவள் இந்தப் பூமிக்கு வரக் காரணமாய் இருந்தவர். சாபக்கேடான இந்த வாழ்க்கையை அவளுக்குப் பரிசளித்தவர். நான் ஏன் உயிருடன் இருக்கிறேன் என்று பலமுறை நினைக்கக் காரணமானவர். எண்ணங்கள் ஓட ஓட அவள் விழிகளில் தீப்பற்றிக்கொண்டது.

“என்ன மன்னிக்கமாட்டியாம்மா?” கண்ணீர் வழிந்த விழிகளோடு சேர்ந்து அவரின் இரு கரங்களும் அவளிடம் யாசித்தன.

மன்னிப்பா? அவள் நெஞ்சு கொதிக்க ஆரம்பித்தது. அன்னையின் சன்னிதானத்தில் மட்டுப்பட ஆரம்பித்திருந்த சீற்றமும் சினமும் இருமடங்காகப் பொங்கின.

“நான் செய்த பிழைக்கு உன்ர கால்ல எண்டாலும் விழுறன். என்னோட கதைக்காம இருக்காத பிள்ளை!” அவள் காலில் விழுவதற்காக வந்தவரை மின்னல் வேகத்தில் கையை நீட்டித் தடுத்தாள் பல்லவி.

நெஞ்சிலிருந்து கொதித்துக்கொண்டு வந்த வார்த்தைகளைக் கொட்டிவிட அவள் உள்ளமும் உதடுகளும் துடித்தன. கோயிலில் இருக்கிறோம் என்கிற எண்ணம் கோபத்தை அடக்கியது. சரக்கென்று எழுந்து, அவரின் முகம் கூடப் பாராமல், கோயிலை விட்டு வெளியே வந்து சைக்கிளை எடுத்தாள்.

தன் வயதைக் கூட யோசிக்காமல், அவளை விட வேகமாக ஓடி வந்து, மீண்டும் அவளின் முன்னால் நின்றார் அவர். “நான் செய்தது பிழைதானம்மா. என்னை மன்னிக்க மாட்டியா?” மீண்டும் இறைஞ்சினார்.

அதற்குமேல் அவளால் முடியவில்லை. கோயிலை விட்டு வெளியே வந்துவிட்டதும் வசதியாகப் போயிற்று. “பிழையா? நீங்க செய்தது துரோகம்! பச்சைத் துரோகம். கட்டின மனுசிக்கும் நேர்மையா இல்லாம, பெத்த பிள்ளைக்கும் பொறுப்பான தகப்பனா இல்லாம… சீ!” என்றவளின் அந்த ஒற்றை வார்த்தையில் குன்றிப்போனார் மனிதர்.

முகத்தில் காறி உமிழ்ந்ததைப்போல் இருந்ததில் அவளின் முகம் பார்க்க முடியாமல் தலை குனிந்து கண்ணீர் வடித்தார்.

“இந்த மன்னிப்பு எனக்கு என்னத்த திருப்பித் தரும்? என்ர அம்மான்ர உயிரை? சந்தோசமான வாழ்க்கையை? கேடுகெட்ட இன்னாரின்ர மகள் எண்டுற பெயரை? எத மாத்தித் தரும்? இல்ல, இந்தக் கலியாணத்தைத்தான் நிப்பாட்டுமா?”

அவளின் சீறலில் துடித்து நிமிர்ந்தார் அவர். ‘என்னது? இந்தக் கலியாணத்தில என்ர பிள்ளைக்கு விருப்பம் இல்லையா? அம்மா விருப்பம் எண்டு சொன்னாவே.’ அவர் உள்ளம் படபடத்தது. “நான் அண்ணாவோட கதைக்கிறன். கலியாணத்தை நிப்பாட்டுறன்.” எப்படியாவது அவளுக்கு வேண்டியதைச் செய்துவிடும் வேகத்தோடு சொன்னார்.

“நிப்பாட்ட நினைச்சிருந்தா அத நானே செய்திருப்பன். பெரியப்பாவும் நிப்பாட்டி இருப்பார். ஆனா, தன்னைப் பெத்த தாய் தகப்பனையும் பாத்து, தான் பெத்த பிள்ளைகளுக்கும் எந்தக் குறையும் வைக்காம, பெறாத பிள்ளை என்னையும் பாக்கிற அந்த மனுசனுக்கு, இனியும் பாரமா இருக்க எனக்குத்தான் விருப்பம் இல்ல. அதைவிட, என்ர எந்த நல்லது கெட்டதிலயும் தலையிடுற உரிமையோ தகுதியோ உங்களுக்கு இல்ல. எனக்கு உங்கட முகத்தில முழிக்கவே விருப்பம் இல்ல!” என்றவளுக்கு என்ன பதிலைச் சொல்லுவார்?

அப்பா அப்பா என்று அவரையே சுற்றிவந்த பெண். அவளை இந்த நிலையில் கொண்டுவந்து நிறுத்தியது அவர்தானே.

“சரியம்மா. இனி உனக்கு முன்னால வரமாட்டன். ஆனா நீ… நீ சந்தோசமா வாழோணும். வாழுவாய். நல்லாருப்பாய்.” அவளை ஆசிர்வதிப்பதுபோல் கைகளை உயர்த்திச் சொல்லிவிட்டுத் திரும்பி நடந்தார் அவர்.

“ஒரு நிமிசம்.”

கண்களில் ஏக்கமும் பாசமும் அப்பட்டமாய்ச் சொட்ட வேகமாகத் திரும்பிப் பார்த்தார் அவர்.

“தயவுசெய்து செத்துகித்துப் போயிடாதீங்க. அந்தப் பழியையும் சேத்து என்னால சுமக்கேலாது.” என்றுவிட்டு அவரைத் திரும்பியும் பாராமல் சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள் அவள்.

மொத்தமாய் உடைந்துபோனார் மனிதர். நடுங்கித் தள்ளாடிய உடலைச் சுமக்க முடியாமல், அருகில் நின்ற மரத்தைப் பற்றித் தன்னை நிலைநிறுத்த முயன்றார்.

error: Alert: Content selection is disabled!!