பல்லவி 22 – 1

அத்தியாயம் 22

நாளடைவில் கலாவதிக்கும் தன் தவறு புரிந்தது. வயதில் பெரியவராக நடந்துகொள்ளத் தவறியதை உணர்ந்துகொண்டார். அருகில் அவரும் இல்லாமல் அவள் ஒருத்தியாகப் பேரனைச் சமாளிப்பது இலகுவல்ல என்று புரிய, தினமும் அவளோடு எடுத்துக் கதைத்தார். பேரனுக்கும் தன்னால் இயன்ற புத்திமதிகளைச் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார்.

பல்லவியால் அவரின் மனநிலையை விளங்கிக்கொள்ள முடிந்தது. அதில், அவளும் அதையெல்லாம் தூக்கிப் பிடிக்காமல் இயல்பாகவே கதைக்க ஆரம்பித்தாள். பாலமுரளி இதையெல்லாம் கவனித்தான். இன்று வரையிலும் ரூபா அன்று கதைத்ததைப் பற்றித் தன்னிடம் மூச்சு விடாத மனைவி மீது இன்னுமின்னும் நேசம் உண்டாயிற்று.

அன்று வெள்ளிக்கிழமை. காலையில் இருந்தே கோயிலுக்குப் போய்விட்டு வந்தால் என்ன என்று தோன்றிக்கொண்டே இருந்தது பாலமுரளிக்கு. இத்தனை நாட்களும் மனதில் ஏதோ ஒரு சஞ்சலம் இருந்துகொண்டே இருக்கும். இப்போது, மகனிடமும் மனைவியிடமும் தெரிகிற மாற்றங்கள், அவன் மனத்தை நிறைக்க ஆரம்பித்திருந்தன.

அதனாலோ என்னவோ மனது இயல்பாய்க் கடவுளை நாடிற்று. மாலையில் பெரிதாக வேலை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்றதும், அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு கோயிலுக்கே போவோம் என்று வீட்டுக்கு வந்தான்.

அங்கே, விறாந்தையின் தரையில் அமர்ந்திருந்து, ஸ்டாண்டின் மீது பிரேமை வைத்து, பிரேமுக்குள் அடைத்திருந்த துணியின் மீது, ஊசி நூலைக்கொண்டு பூ டிசைன் ஒன்றினைப் போடுவதற்கு முயன்றுகொண்டு இருந்தாள் பல்லவி.

இது, இப்போதெல்லாம் அவன் அடிக்கடி காணும் காட்சி. சிறு சிரிப்புடன் வாசலிலேயே புல்லட்டை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் வந்தான்.

இப்படி, திடீரென்று அவன் வருவான் என்று பல்லவி எதிர்பார்க்கவில்லை. “என்ன?” என்றாள் வேகமாக எழுந்து நின்று.

“என்ன என்ன?” நடை நிற்க ஒன்றும் விளங்காமல் புருவம் சுருக்கினான் அவன்.

‘அடியேய்! நீயே காட்டிக் குடுத்திடாத!’ என்று மனம் அலற, “இல்ல. இந்த நேரம் எப்பவும் வரமாட்டிங்க. அதான்.” என்று உளறினாள்.

அவனுக்குப் புரியவில்லை. “அப்பிடி வராத நேரம் வந்தா என்ன?” என்றான் கேட்டான்.

அதற்குள், ‘கிளிங்’ என்று என்னவோ சத்தம் வந்தது.

வேகமாகப் பின்னால் திரும்பிப் பார்த்துவிட்டு, “அது பூனை..” என்று அவன் கேளாமலேயே பதில் சொன்னாள் அவள்.

அவன் எட்டிப் பார்த்தான். அங்கே குசினிக்குள் இரண்டு கால் பூனை இவனுக்கு மறைவாக ஒதுங்குவது தெரிந்தது. வந்த சிரிப்பை உதட்டுக்குள் மறைத்துக்கொண்டான். இப்படி மறைக்கும் அளவுக்கு என்ன இருக்கிறது என்று அறியும் ஆர்வம் எழுந்தது.

“விடு! அந்தப் பூனையைப் பாக்க!” என்று நடந்தவனை விடாமல், “இல்ல வேண்டாம். நானே பாக்கிறன். நீங்க போய்க் குளிச்சிட்டு வாங்கோ.” என்று, அவன் முன்னால் வந்து நின்று தடுத்தாள் பல்லவி.

பாலமுரளியின் கண்கள் சிரித்தன. இருந்த பதட்டத்தில் அதைக் கவனிக்கத் தவறினாள் பல்லவி.

“பூனையை நீ பாத்தா என்ன? நான் பாத்தா என்ன?” என்றபடி அவளை ஒதுக்கிவிட்டு அவன் ஓரடி எடுத்துவைக்க, அப்போதும் அவள் விடவில்லை.

“பூனை என்ன புலியா நீங்க பாக்க? அத நானே பாப்பன். நீங்க வந்த வேலையப் பாருங்கோ. போங்கோ!” என்றவளின் கைகள் அவன் மார்பில் அழுந்தி, அவனை நகரவிடாமல் செய்தன.

பெரிய தடைதான்!

ஜில் என்ற காலை நேரத்துக் குளிர்காற்று மேனியைத் தழுவிய உணர்வு பாலமுரளிக்கு. விரிந்த சிரிப்புடன் அவளைப் பார்த்தான். பல்லவிக்கு அதிர்ச்சியும் வியப்பும். ‘இவன் இவ்வளவு அழகாகச் சிரிப்பானா?’ வாயை பிளந்துகொள்ளும் நிலையில் இருந்தாள் அவள்.

“சரி வா, அந்த ரெண்டு கால் பூனையை நீயும் நானுமா சேர்ந்தே பாப்பம்!” என்றவன், அவளையும் சேர்த்து இழுத்துக்கொண்டு குசினிக்குள் புகுந்தான்.

அங்கே, அவன் பெற்ற திருட்டுப் பூனை, விழிகளை உருட்டியபடி நல்லெண்யில் பொரித்த முட்டையை வாய்க்குள் அடைத்துக்கொண்டிருந்தான். அவன் உதடுகள் எண்ணெயில் பளபளத்தன. அதுவும், இவன் பார்த்துவிடக் கூடாது என்று, அவன் மண் அடுப்புக்கு மேலே அமர்ந்திருந்த காட்சியைக் கண்டு, சிரிப்பு வெடித்தது பாலமுரளிக்கு.

ஆனாலும், அவளோடு விளையாடிப் பார்க்கும் ஆசை எழுந்ததில், “இண்டைக்கு வெள்ளிக்கிழமை எல்லா?” என்றான் அதட்டலாக.

அவளும் மாட்டிக்கொண்டதில் விழித்தாள். “அது… எங்களுக்கு மரக்கறிதான். தம்பிக்கு மட்டும்… மரக்கறி பிடிக்கேல்லையாம் எண்டு சொன்னவன். அதுதான்… ஒரே ஒரு முட்டைதான்.” என்றாள் அவனைப் பாராமல்.

“இத மறைக்கத்தான் வராத நேரம் ஏன் வந்தாய், குசினிக்க பூனை எண்டுற கதை எல்லாம் என்ன? இதுல, என்னை உள்ளுக்கு விடாம வெளில தள்ளுறாய். என்னடி, என்ர பிள்ளைக்குக் களவையும் பொய்யையும் பழக்கிறியா?”

அவன் என்னவோ அவளிடம் வம்பிழுக்கத்தான் சொன்னான். அவளுக்கோ அது பழைய சண்டையை நினைவூட்டியதில் முகம் சுருங்கிப் போயிற்று.

“தம்பி கேக்கிறான் பாவமே எண்டுதான் பொரிச்சுக் குடுத்தனான். வெள்ளிக்கிழமை எண்டபடியா நீங்க பேசுவீங்க எண்டுதான் மறைக்கப் பாத்தனான். மற்றும்படி உங்கட மகனுக்குக் களவையும் பொய்யையும் சொல்லிக் குடுக்கேல்ல!” என்றவள் வேகமாக அறைக்குள் சென்று புகுந்துகொண்டாள்.

‘என்ர மகனா?’ அந்த வார்த்தைக்கு அவள் கொடுத்த அழுத்தத்துக்குப் பிறகுதான் அவனுக்குப் பொறித் தட்டியது. சுறுசுறு என்று கோபம் தலைக்கு ஏற, பல்லைக் கடித்தான். மிகுந்த வேகத்துடன் அவளிடம் சென்று, “நான் அவனை எங்கட மகனாத்தான் நினைக்கிறன். நீதான் என்ர மகனா பாத்திருக்கிறாய். அதுதான், விளையாட்டுக்கு நான் சொன்னது உனக்குக் குத்தி இருக்கு!” என்றான் குற்றம் சாட்டும் குரலில்.

அப்படித்தானா என்று ஒரு கணம் குழம்பினாலும், “சொல்லுறதை எல்லாம் சொல்லிப்போட்டு நடிக்க வேண்டாம்!” என்றாள் முகத்தைத் திருப்பிக்கொண்டு.

“நடிக்கிறனோ? முதல், தொட்டதுக்கும் முகத்தைத் திருப்பாம என்னைப் பாரடி!” என்றவனின் கை அவளின் தாடையைப் பற்றித் தன்னை நோக்கித் திருப்பியது.

“ப்ச் விடுங்க!” அவன் கையை எடுத்துவிட முனைந்தாள் அவள்.

“சும்மா ஆசைக்கு விளையாடினா இப்பிடித்தான் கோவிப்பியா? சுருக்கு சுருக்கு எண்டு முகத்தைத் திருப்புறது இதுதான் கடைசியா இருக்கோணும், சொல்லிப்போட்டன்! இல்லையோ, திருப்புறதுக்கு முகமே இல்லாம கடிச்சு விட்டுடுவன்!” என்றான் அவன்.

இப்போது அவளுக்கும் தான் அவசரப்பட்டுவிட்டோம் என்று புரிந்தது. ஆனாலும், காட்டிக்கொள்ள விருப்பம் இல்லை.

“ஆட்டோடயும் மாட்டோடயும் பழகி அந்தக் குணம் வந்திட்டுது!” என்று அவனுக்குக் கேட்கும்படி முணுமுணுத்தபடி அவனைத் தள்ளி விட்டுவிட்டுப் போனாள் அவள்.

“அப்ப உன்னோட பழக விடு. உன்ர குணம் வரட்டும்.” என்றான் அவன்.

‘ம்க்கும்! பழகாமத்தான் இருக்கிறார். வந்திட்டார் பெரிய இவர் மாதிரிக் கத சொல்லிக்கொண்டு!’ என்று எண்ணியவளுக்கு முகம் சூடாகிப் போயிற்று. குசினிக்குள் வந்தபோது விதுரன் வெறும் தட்டை வழித்துக்கொண்டிருந்தான்.

முழுவதுமாக நனைந்தாயிற்று. இனி எதற்கு முக்காடு? “இன்னொரு முட்டை பொரிச்சுத் தரட்டா?” என்று வினவினாள்.

“அப்பா போன பிறகு.” கண்கள் மின்ன ரகசியக் குரலில் சொன்னான் அவன்.

பல்லவிக்குச் சிரிப்பு வந்தது. “அவர் பாத்தா பாக்கட்டும்!” என்றுவிட்டுப் பொரித்துக் கொடுத்தாள்.

*****

தாராணிக்குத் திருமணம் பொருந்தி வந்திருந்தது. மாப்பிள்ளை இத்தாலியில் இருந்தான். இப்போது நிச்சயம் செய்துவிட்டு, ஆறு மாதங்கள் கழித்து மாப்பிள்ளை வந்ததும் திருமணம் என்று முடிவாகியிருந்தது.

அதன்படி, பெண் வீட்டினர் மாப்பிள்ளை வீட்டுக்குச் சென்று சம்மந்தம் கலந்துவிட்டு வந்திருந்தனர். அதற்குக் குடும்பமாகப் போய்விட்டு வந்திருந்தார்கள். இப்போது, மாப்பிள்ளை வீட்டினர் பெண் வீட்டுக்கு விருந்துக்கு வர இருந்ததில், தன் துணைக்குப் பல்லவியை இரண்டு நாட்களுக்கு முதலே வரச் சொன்னாள் தாரணி.

தன் திருமணத்தின் போது அனைத்தையும் செய்த அக்காவுக்குத் துணையாய் நிற்கவே பல்லவியும் பிரியப்பட்டாள். சனிக்கிழமை விருந்து. புதன் மாலையே வா என்றாள் தாரணி. அப்படிப் புதன் மாலை போனால் ஞாயிறு திரும்பலாம் என்று அவளே சொன்னாள்.

விடயம் அறிந்த பாலமுரளியும் போய்விட்டு வா என்றான். எல்லாம் சரிதான். அவளுக்குத்தான் பாலமுரளியையும் விதுரனையும் விட்டுவிட்டுப் போக மனமில்லை. முக்கியமாக விதுரன். அவனையும் கூட்டிக்கொண்டு போகவா என்று பாலமுரளியிடம் எப்படிக் கேட்பது? அதுவும், அங்கு வைத்து அவ்வளவு நடந்த பிறகு. அந்த நினைவில் கேட்க வாயே வரமாட்டேன் என்றது.

“என்ன? காசேதும் வேணுமா?” யோசனையும் தயக்கமுமாக இருந்தவளைக் கவனித்துவிட்டு வினவினான் பாலமுரளி.

“இல்ல… அது… நான் தம்பியையும் கூட்டிக்கொண்டு போகட்டா?” என்றவள் அவன் முகத்தில் விருப்பமின்மையைக் காணவும், “பிளீஸ், மாட்டன் எண்டு சொல்லாதீங்கோ. நான் அவன பேசமாட்டன். அடிக்க மாட்டன். கவனமா பாப்பன்.” என்றாள் வேகமாக.

அவளின் விழிகளில் தெரிந்த தவிப்பில் அவனுக்கு மனம் கரைந்து போயிற்று. “என்ன நீ? நான் அதுக்கு யோசிக்க இல்ல. இவன் அங்க வந்து குழப்படி செய்தா நானும் இல்லாம நீதான் கஷ்டப்படுவாய். அதத்தான் யோசிச்சனான். சரி பரவாயில்ல, கூட்டிக்கொண்டு போ. நேசரில நான் சொல்லி விடுறன். ஆனா, அவன் மட்டும் இல்ல நீயும் கவனமா இரு.” என்றான் அவன்.

அவளுக்கு முகம் மலர்ந்து போயிற்று. சரி என்பதாக வேகமாகத் தலையை ஆட்டினாள். “விருந்து அண்டைக்கு நேரத்துக்கே வாங்கோ. உடுப்பு எல்லாம் எடுத்து வச்சிட்டுப் போறன்.”

“வரோணுமா?” என்றான் மறுக்க மனம் வராமல். அவனும் போவதுதான் முறை. ஆனால், அன்றைக்கு இவனுடைய தோட்டக்காணியை உழுவதற்கு வருவார்கள். அதற்கு அவன் நிற்கவேண்டும். என்ன செய்வது என்று யோசித்தான்.

“என்ன கேள்வி இது? கட்டாயம் நீங்க வாங்க. பிறகு, பெரியப்பா ஏதும் நினைப்பார். எனக்கும் விசரா இருக்கும்.”

பயணத்துக்குத் தேவையானவற்றை ஒரு பாக்கில் எடுத்து வைத்தபடி இயல்பாகச் சொன்னவளைச் சிறு சிரிப்புடன் பார்த்தான் அவன். ஆரம்ப நாட்களில் இவள்தானே அவன் முகம் பார்ப்பதையே தவிர்த்துக்கொண்டு திரிந்தவள். இன்றைக்குத் தன் வீட்டு விழாவில் அவன் இல்லாமல் நிற்கமாட்டேன் என்கிறாள்.

வீடுகளில் குட்டி குட்டிக் கலவரங்கள் வெடிப்பது கூட நல்லிணக்கத்துக்குத்தான் போலும்.

“என்ன பாக்கிறீங்க? வருவீங்கதானே. வரோணும். அவ்வளவுதான்!” என்று அவளே முடித்தாள்.

மலர்ந்த முறுவலுடன், “சரி வாறன். ஆனா, நான் திரும்பி வரேக்க நீயும் வந்திடோணும். நான் வராட்டி நீ இன்னும் ஒரு நாள் கூடுதலா நிண்டுட்டு வரலாம்.” என்றான் அவன்.

அவளுக்கு அவன் வருவதாகச் சொன்னதே போதுமாக இருந்தது. அதில், “அதெல்லாம் வேண்டாம். நீங்க வாங்க. பிறகு உங்களோடயே நானும் வாறன்.” என்று முடித்துக்கொண்டாள்.

அவளையும் மகனையும் கொண்டுபோய் இறக்கிவிட்டான் பாலமுரளி. அவன் புறப்பட்டபோது அவனோடு வாசலுக்கே வந்தாள் பல்லவி. “கவனமா போங்க என்ன. வேகமா ஓடாதீங்கோ.” என்றவளின் விழிகளில் அவனைத் தனியாக அனுப்புகிறோமே என்கிற பெரும் தவிப்புத் தெரிந்தது.

error: Alert: Content selection is disabled!!