பல்லவி 22 – 2

பாலமுரளிக்குச் சிரிப்பு வரும் போல் இருந்தது. கூடவே, தன் மீதான அவளின் அக்கறையும் கவலையும் மனத்தை இதமாக வருடிச் சென்றன. “நான் என்ன இண்டைக்கு நேற்றா பைக் ஓடுறன், நீ இவ்வளவு பயப்பிட? நான் கவனமா போவன். நீ போ!” என்றான் இதமான குரலில்.

“ம்ம்.” என்றவளுக்கு அவனை அனுப்பவே மனமில்லை. மறிக்க முடியாத நிலையில் நின்றாள்.

“என்னடி?” என்றான் அவளின் அந்த முகத்தைக் கடந்து போக முடியாத சலிப்புடன். “நீ இப்பிடி நிண்டா நான் எப்பிடிப் போக?”

“இல்ல ஒண்டுமில்ல. நீங்க கவனமா போயிட்டு வாங்க.” என்றாள் சிறு சிரிப்புடன். அந்த முகத்தை விழிகளுக்குள் நிரப்பிக்கொண்டு, ஒரு தலையசைப்புடன் விடைபெற்றுக்கொண்டான் அவன்.

தன்னை அனுப்ப விருப்பமற்று நின்ற அவளின் நிலை, அவன் முகத்தினில் சிறு சிரிப்பை மறைய விடாமல் பிடித்து வைத்தது. இன்னொரு திருமணம் என்று முடிவானபோது தன் வாழ்க்கை இந்தளவுக்கு மலர்ச்சியாக மாறும் என்று அவன் எண்ணவில்லை. மகனுக்கு ஒரு அன்னை. இவ்வளவுதான் அவன் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் இன்று?

இன்றும் அவர்கள் ஒன்றும் மனமொத்த தம்பதியராக வாழ ஆரம்பிக்கவில்லைதான். ஆனால், வாழ்ந்துவிடுவோம் என்கிற நம்பிக்கை உண்டாக ஆரம்பித்திருந்தது.

அந்தளவில், ஆரம்ப நாட்களைப்போல விதுரனைக் கடமைக்காகக் கவனிக்காமல் ஒவ்வொன்றையும் மெய்யான பாசத்தோடு பார்த்து பார்த்துச் செய்துகொண்டிருந்தாள். அவனுடைய தேவைகளையும் அவள் எப்போதுமே மறுத்ததில்லைதான். இப்போது அதுகூட மாற ஆரம்பித்திருந்தது.

மனைவியின் எண்ணங்களோடே ஊருக்கு வந்தவன் நேராகத் தோட்டத்துக்கே சென்றான். வேலைகளை முடித்துக்கொண்டு இருள் கவியும் பொழுதில் வீடு வந்தவனை, அவர்கள் இல்லாத வெறுமைதான் வரவேற்றது.

மனமும் உடலும் சோர்ந்து போனது.

‘இன்னும் ஒரு நாளே ஆகேல்ல. இதுக்கே இப்பிடியா?’ தலையை உதறிக்கொண்டு குளித்துவிட்டு வந்தான். அவன் வந்ததும் கற்கண்டுடன் அவள் தருகிற தேநீருக்கு நாக்கு ஏங்கியது.

“முரளி அண்ணா, சாப்பிட வாங்கோ! புட்டு அவிச்சிட்டன்.” இவன் நடமாட்டத்தைக் கவனித்துவிட்டுத் தன் வீட்டிலிருந்து குரல் கொடுத்தாள் சுதா.

“மணி வந்திட்டானா?” என்றான் இவனும் இங்கிருந்தே.

“இல்ல. இப்ப வருவார்.”

“வந்த பிறகு கூப்பிடு. கறி சமைக்காத, இங்க இருக்கு.” என்றுவிட்டு வந்து விறாந்தையில் அமர்ந்துகொண்டான். தொலைக்காட்சி வேலை செய்தாலும் கவனம் அதில் பத்தியமாட்டேன் என்றது.

மகனைக் காட்டிலும் மனைவிதான் அவன் நினைவுகளை அதிகமாக ஆக்கிரமித்தாள். பேசாமல் அவளுக்கு அழைத்தான்.

“என்ன நடக்குது?” எடுத்ததும் கேட்டாள் பல்லவி.

“இப்பதான் வீட்டை வந்து குளிச்சிட்டு, டீவி பாத்துக்கொண்டு இருக்கிறன்.”

“சாப்பிட்டீங்களா?”

அவனுக்குக் கோபம் வந்தது. “எப்ப பாத்தாலும் சாப்பிட்டியா குடிச்சியா எண்டாமா வேற கதை!” என்றான் வேகமாக. போகும்போதும் மறக்காமல் சாப்பிடு, கவனமாக இரு, நேரத்துக்கே படு என்று ஆயிரம் முறை சொன்னவள், அங்குப் போயும் அதையே சொன்னால் அவனும் என்னதான் செய்வான்?

அவளுக்குச் சிரிப்பு வந்தது. “வேற என்ன கதைக்க? எனக்கு உண்மையாவே தெரியேல்ல. நீங்க ஏதாவது கதைங்க.” என்றாள் அவள்.

“அங்க வேலை எல்லாம் எப்பிடிப் போகுது?”

“ம், எல்லாம் நல்லா போகுது. இண்டைக்கு வெட்டுப் பலகாரம் செய்தனாங்க. பெரியம்மா மிளகாய்த் தூள் அரைக்க மில்லுக்குப் போய்ட்டா. நான் ஒரு சாறி பிளவுசுக்கு சிம்பிளா ஆரி வேக் செய்தனான். நல்ல வடிவா வந்தது. பிறகு உங்களுக்கு ஃபோட்டோ அனுப்பி விடுறன், பாருங்கோ. எனக்குச் சந்தோசமா இருந்தது.” என்றாள் உற்சாகமாக.

“உன்ர பிளவுசுக்கும் போடோணும் எண்டு சொன்னனீ எல்லா. போட்டுட்டியா?” அவன் நினைவு படுத்தினான்.

“இல்ல, இன்னொரு அக்கா தாரணி அக்கான்ர ஃபிரென்ட். அவாவும் அவான்ர பிளவுஸ் கொண்டுவந்து தந்தவா. அதையும் முடிச்சிட்டு என்ரய செய்யோணும்.”

“பிறகு நேரமில்லாம போகப்போகுது. நீ முதல் உன்ரய முடி.”

“நல்ல கதையெல்லோ! நான் பழகிட்டு எனக்கே செய்யாம இருப்பனா? அது எப்பிடியும் செய்திடுவன். இதெல்லாம் பயிற்சி எண்டு நீங்கதானே சொன்னனீங்க. அதான், இங்க கேக்கிறவேக்கு இங்க இருக்கேக்கதானே செய்யலாம் எண்டு மாட்டன் எண்டு சொல்லாம செய்றன்.”

“நீ அப்ப பே பிசி எண்டு சொல்லு. எனக்குத்தான் இங்க நீயும் தம்பியும் இல்லாம விசரா இருக்கு.” என்றான் அவன்.

அவளுக்குப் பாவமாகப் போயிற்று. “சுதாக்கா வீட்டை போய்க் கொஞ்ச நேரம் கதைச்சுக்கொண்டு இருக்கோவன். சாப்பாட்டுக்கும் அக்காட்டச் சொல்லிப்போட்டுத்தான் வந்தனான். விடியவுக்கு மட்டும் நீங்க பாருங்கோ. பகலுக்கும் இரவுக்கும் அவா தருவா.” என்றாள் மென்குரலில்.

அங்கே போகத்தான் போகிறான். இருந்தாலும் அலுப்பாக இருந்தது. இப்படி நேரத்துக்கே அனுப்பியிருக்க வேண்டாமோ என்று இப்போது நினைத்தான்.

“என்ன, சத்தமே இல்லாம இருக்கிறீங்க? வெளிக்கிட்டு வரவா?” என்னதான் ஒன்றன் பின் ஒன்றாக வேலைகள் இருந்தாலுமே, அவன் இல்லாத வெறுமையை அவளும் தானே உணர்ந்துகொண்டிருக்கிறாள். அதில் கேட்டாள்.

“சேச்சே வேண்டாம். ரெண்டு நாளைக்குத்தானே. அதவிடு! தம்பி என்ன செய்றான்? குழப்படி செய்தவனா?” தன்னைத் தேற்றிக்கொண்டு பேச்சை மகன் புறமாகத் திருப்பினான்.

“இல்லையே. பிள்ளை இந்த முறை ஆச்சாப்பிள்ளை. அதவிட, இப்ப அவரைப் பற்றி இங்கயும் எல்லாருக்கும் தெரியும் எல்லா. அதால எல்லாருமே அவரை வலு கவனமா கவனிக்கினம். அதால ஓகே.” என்று சிரித்தாள் அவள்.

“மாமா என்னவாம்?” அவனுக்குத் தெரியும், இந்தக் கேள்வி அவளுக்குப் பிடிக்காது என்று. ஆனால், அன்று வைத்தியசாலைக்குச் சென்றபோது பார்த்த சிவலோகநாயகியின் கண்ணீர் அவனைக் கேட்க வைத்தது.

நொடி நேரம் அமைதி காத்துவிட்டு, “பெரியப்பா கடைக்குப் போய்ட்டார்.” என்றாள் பல்லவி.

“நான் ஆர கேட்டனான் எண்டு உனக்குத் தெரியும்.”

“உங்களுக்கு மாமா பெரியப்பா மட்டும்தான்!” அவளும் அழுத்திச் சொன்னாள்.

“இப்பிடிக் கோபத்தைப் பிடிச்சுத் தொங்கி என்ன காணப்போறாய் பல்லவி?” மெல்லிய கோபம் முளைக்கக் கேட்டான் அவன்.

“என்ர அம்மாக்கு நானாவது துரோகம் செய்யாம இருக்கோணும் எண்டு நினைக்கிறன். அது பிழையா?” என்றாள் அடைத்துவிட்ட குரலில்.

யாரும் அவளை விளங்கிக்கொள்ளாவிட்டால் பரவாயில்லை. அவனும் அப்படி இருப்பது வலித்தது. அன்றைக்கும் அரக்கியா என்று கேட்டானே.

“உன்ர மனது எனக்கு விளங்குது பல்லவி. ஆனா, இல்லாத ஒருத்தருக்காக இருக்கிற ஒருத்தரை வருத்தாத.” தன் கோபம் விடுத்து இதமான குரலில் எடுத்துச் சொன்னான் அவன்.

“அவா இல்லாம போனதே இவராலதான்.” திரும்பவும் அழுத்திச் சொன்னாள் அவள். அவளுக்கு அவன் திரும்பத் திரும்ப அந்த மனிதருக்காகப் பேசுவது பிடிக்கவில்லை.

“அதெல்லாம் நடந்து முடிஞ்சது.” என்றவனிடம், “இப்ப என்ன சொல்ல வாறீங்க? நாளைக்கு நீங்க இப்பிடி நடந்தாலும் நான் எப்பிடி நடக்கோணும் எண்டு மறைமுகமா உணத்துறீங்களா?” என்றவளின் கேள்வியில் கொதித்துப் போனான் அவன்.

“ஏய் என்னடி கதைக்கிறாய்? இப்ப வந்தன் எண்டு வை, செவிட்டிலேயே ரெண்டு போட்டுடுவன். என்னை என்ன…” கோபத்தில் வார்த்தைகளை விட விரும்பாமல் பட்டென்று அழைப்பைத் துண்டித்தான் பாலமுரளி. அவனுக்கு விழிகள் எல்லாம் சிவந்து போயிற்று. மனைவி இறந்தும் கூட, பிள்ளை மட்டுமே போதும் என்று இருந்தவனைப் பார்த்து என்ன கேட்டுவிட்டாள்?

ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அங்கிருந்து அதையே யோசிக்கப் பிடிக்காமல் கறிச் சட்டியைத் தூக்கிக்கொண்டு சுதா வீட்டுக்கு நடந்தான்.

இங்கே பல்லவியின் விழிகளினோரம் கண்ணீர் மல்கிற்று. சிவலோகநாயகியும் அவள் வந்ததில் இருந்து இதைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார். அவளைப் பெற்றவர் நடக்க முடியாமல் கிடக்கிறாராம், சாகப் போகிறாராம், அவள் எட்டியே பார்க்கவில்லையாம், இத்தனை நாட்களாக இங்கேதான் இருந்தாராம், அவள் வருகிறாள் என்றதும் தன்னைப் பார்க்கப் பிரியப்பட மாட்டாள் என்று வலுக்கட்டாயமாக நண்பரின் வீட்டுக்குப் போய்விட்டாராம் என்று, அவளை வார்த்தைகளாலேயே வதைத்தார்.

அவள்தான் காதிலேயே விழாதவள் போன்று நடமாடிக்கொண்டிருந்தாள். இதில், அவனும் இப்படிப் பேசவும் கோவம் வந்துவிட்டது.

அவளை விளங்க வைக்கத்தான் அப்படிக் கேட்டாள். இருந்தாலும் பிழைதானே. ஆனால், அவரோடு கதைக்காமல் இருக்கும்போதே அவரைப் போல் இருந்துவிடாதே என்று சொன்ன அவன் தங்கை, அவரோடு கதைப்பதாக இருந்திருந்தால் இன்னும் என்னவெல்லாம் கேட்டிருப்பாளோ என்கிற கேள்வியும் அவள் மனத்துக்குள்ளிருந்து இப்படிக் கேட்க வைத்தது என்று, யார் அவனுக்குச் சொல்வது?

தாரணி அழைக்கவும் ஒரு நெடிய மூச்சுடன் எழுந்து போனாள்.

பாலமுரளிக்குச் சுதா வீட்டில் உணவு இறங்கவே மாட்டேன் என்றது. கோவமாக இருந்தாலும் கூட அவன் நினைவுகள் முழுமைக்குள்ளும் பல்லவி புகுந்திருந்தாள். “என்ன அண்ணா, பல்லவி இல்லாததால பசியும் இல்லையோ?” என்ற சுதாவின் கேலியையும் வாங்கிக்கொண்டு, இரவு பத்துமணிபோல் வீடு திரும்பினான்.

சமாதானத் தூதாக அவள் செய்த பிளவுசுகளின் புகைப்படங்களை அனுப்பியிருந்தாள் பல்லவி. எடுத்துப் பார்த்தான். உண்மையில் கெட்டிக்காரிதான். அந்தளவில் இந்தக் குறுகிய நாட்களில் மிக நேர்த்தியாகச் செய்யக் கற்றிருந்தாள்.

பாராட்டும் ஆசை எழுந்தது. அவள் மீதிருந்த கோபம் அதற்கு விடவில்லை. எவ்வளவு தைரியம் இருந்தால் அவனைப் பார்த்து அப்படிக் கேட்பாள்? அந்தக் கோபத்தை இழுத்துப் பிடித்தபடி படுத்துக்கொண்டான்.

இங்கே, பல்லவிக்கு விதுரனோடு உறங்குவதற்குக் கிடைத்த முதல் நாள் இதுதான். அவனோ, உறக்கம் வருகிறவரைக்கும் அவளை ஒரு வழி செய்தான். அதிசயமாக அவளுக்குக் கோபம் வரவேயில்லை. “டேய் மோசக்காரா! கொஞ்ச நேரமாவது சும்மா இரனடா!” என்று கொஞ்சத்தான் முடிந்தது.

பார்த்த பானுமதிக்கு பெறாமகளின் மனமாற்றம் நன்கே புரிந்தது. அன்றைக்கும் இன்றைக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கண்டு நிறைவாக உணர்ந்தார். வாழ்ந்துவிடுவாள் என்கிற நம்பிக்கை பிறந்தது. அப்படியே, அதைக் கணவரின் காதுக்கும் சந்தோசமாகக் கடத்தினார். ஆனால், எதையும் காட்டிக்கொள்ளவில்லை.

எதிர்காலக் கணவனோடு தொந்தரவுகள் அற்றுத் தாரணி கதைப்பதற்கு ஏற்ப, பல்லவியும் விதுரனும் விறாந்தையில் சரிந்துகொண்டனர்.

“அப்பிடிக் கதைக்கிறதுக்கெல்லாம் ஒண்டும் இல்ல. நீ வா!” என்ற தாரணியின் பேச்சை அவள் கேட்கவில்லை. சிவலோகநாயகி விறாந்தையின் இன்னொரு பக்கத்தைப் பிடித்துக்கொள்ள, பானுமதியும் தவகணேசனும் முன் பத்திக்கு இடம் பெயர்ந்திருந்தனர்.

தன்னருகில் உறங்கும் விதுரனைப் பார்த்தாள் பல்லவி. மூக்கும் முழியுமாக இருக்கும் மகனுக்கு ஆசையோடு முத்தங்களாகக் கொடுத்து ஓய்ந்தாள். இது எப்படி இத்தனை நாட்களாக அவள் கண்ணிலும் கருத்திலும் படாமல் போயிற்று என்று தெரியவில்லை.

நெஞ்சுக்குள் சுரக்க ஆரம்பித்துவிட்ட பாசம்தான் இதற்கெல்லாம் காரணம் என்பதை அறியாதவள், அவனைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டாள். ‘அப்பாவுக்கும் மகனுக்கும் கோபம் வந்தா நான் சரி!’ சிறு சிரிப்புடன் எண்ணிக்கொண்டவள், தலைமாட்டில் இருந்த கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள்.

அவள் அனுப்பிய புகைப்படங்களைப் பார்த்திருந்தான். ஆனால், பதில் இல்லை. ஒரு பெருமூச்சுடன் அதை வைத்துவிட்டு விழிகளை மூடிக்கொண்டாள்.

error: Alert: Content selection is disabled!!