பல்லவி 23 – 1

அத்தியாயம் 23

சிவலோகநாயகியின் புறுபுறுப்பில்தான் அன்றைய நாளே பல்லவிக்கு ஆரம்பித்தது. காரணம், அங்கிருந்த பல்லவியின் சைக்கிளை ஓடுகிறேன் என்று எடுத்து, வளர்ந்து வந்துகொண்டிருந்த ரோஜாச் செடியின் மீது விழுத்தி, செடியை முறித்திருந்தான் விதுரன்.

பல்லவிக்கும் கவலையாகத்தான் போயிற்று. இருந்தாலும், அன்றுபோல் கடுமையாகக் கடிய மனம் வராமல், “தம்பி, இன்னொருத்தர் வீட்டை வந்திருக்கேக்க இப்பிடி நடக்கக் கூடாது எண்டு சொல்லியிருக்கிறனா இல்லையா? எங்கட வீட்டை வந்து உங்களுக்குப் பிடிச்சதை ஆராவது உடைச்சா உங்களுக்குப் பிடிக்காது எல்லா. அதை மாதிரித்தான் நாங்க மற்றவேக்குச் செய்தாலும் இருக்கும். பாருங்கோ, எல்லாரும் இப்ப உங்களச் சரியில்லாத பிள்ளை எண்டு சொல்லப்போயினம். இது கூடாது எல்லாப்பு.” என்று கனிவுடன் எடுத்துச் சொன்னாள்.

“அது நான் வேணும் எண்டு செய்யேல்ல. ஸ்டாண்ட் போட்டனான். நிக்கேல்ல.”

கோபப்படாமல் அவன் அப்படிக் காரணம் சொன்னதே அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. உன்னிப்பாக அவனையே கவனிக்கிறவளுக்கு அது பெரும் மாற்றமாகத் தெரிந்தது.

“எனக்குத் தெரியும், என்ர பிள்ளை வேணும் எண்டு செய்திருக்க மாட்டான் எண்டு. ஆனா, இனி இன்னும் கவனமா இருக்கோணும், சரியா?” என்று கேட்டு, சரி என்ற அவனுடைய தலையசைப்பைப் பெற்றுக்கொண்டவளுக்கு மிகுந்த திருப்தி.

“என்ர செல்லம்!” என்று அவள் அவனை அணைத்துக்கொள்ள, பார்த்திருந்த சிவலோகநாயகி ஆரம்பித்துவிட்டார்.

“பெறாத பிள்ளையிலேயே பாசம் பொத்துக்கொண்டு வருதாம். இஞ்ச நான் பெத்த பிள்ளை சாகக் கிடக்கிறான். கொஞ்சமாவது இரங்குறியா நீ?” என்றதும் அடுத்த நொடியே, “அப்பம்மா! கதைக்கிறத யோசிச்சு கதைங்க!” என்று குரல் உயர்த்தியிருந்தாள் பல்லவி.

அவன் மனத்தில் தன்னை அன்னையாக உணரவைக்க அவள் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கையில், அவன் முன்னே இது என்ன பேச்சு என்று பதறியது அவளுக்கு. உடனேயே, தன் கைகளுக்குள் நின்ற விதுரன் எங்கே என்று பார்த்தாள்.

நல்ல காலம், அங்கே தென்னையிலிருந்து விழுந்த தென்னோலையைத் தவகணேசன் இழுத்துக்கொண்டு போவதைக் கண்டுவிட்டு, ஓடிப்போய் அதில் அமர்ந்துகொண்டிருந்தான் அவன்.

அதைப் பார்த்த பிறகுதான் ஆசுவாசமானாள். ஆனால், சிவலோகநாயகி மீது கோபம் பொங்கியது. இனி இதை விடக்கூடாது என்று முடிவு எடுத்தாள்.

“இவ்வளவு நாளும் உங்களிட்ட நான் எதுவும் கதைச்சது இல்ல அப்பம்மா. ஒரு அம்மாவா நீங்க பாவம் எண்டுதான் நினைச்சிருக்கிறன். ஆனா, இனி ஏலாது. மகன் மகன் எண்டு சொல்லுறீங்களே, உடம்பில உசார் இருந்த காலமெல்லாம் ஊர் மேஞ்சுபோட்டு, இப்ப சாகிற காலம் வந்ததும் வந்து படுத்துக்கிடந்தா அவரை நான் பாக்கோணுமா? அம்மா இருந்த காலத்தில கூட, குடிச்சதத் தவிர ஒண்டும் செய்தது இல்ல. இண்டைக்கு நான் அவரை மன்னிச்சா நாளைக்கு என்ர மனுசனும் இப்பிடி ஒரு பிழை செய்தா, அப்ப நான் என்ன செய்யோணும் எண்டு சொல்லுறீங்க? அந்த அவளையும் சேத்து வச்சு வாழோணுமா? இல்ல, நீ எங்க எண்டாலும் ஊர் மேஞ்சுட்டு வா, நான் உனக்கு மனுசியா இருக்கிறன் எண்டு இருக்கோணுமா? நாளைக்குத் தாரணி அக்கான்ர அத்தான் இப்பிடிச் செய்தாலும் அதைத்தான் செய்யோணுமா?” என்றவளின் பேச்சில் வாயடைத்துப் போய் நின்றுவிட்டார் சிவலோகநாயகி.

அவரை மீறியே நெஞ்சு பதறியது. மகனை மன்னித்து ஏற்கிறாள் இல்லையே என்கிற கோபம் இருக்கிறதே தவிர, அவள் மீது பாசம் இல்லாமல் இல்லையே. அப்படி ஒன்று அவளுக்கு நடந்தால் அவருக்கு உயிரே போய்விடுமே. கடவுளே! அவரின் பேத்திகளுக்கு அப்படி ஒரு நிலை என்றால்? சுவரைப் பற்றிக்கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டார்.

அவரின் நிலையைக் கணித்தாலும் பல்லவிக்குக் கோபம் அடங்கமாட்டேன் என்றது.

“அந்த ஆள் எவ்வளவோ கேவலமான வேலைகள் பாத்தும் பாசம் காட்டுற உங்களை மாதிரி ஒரு அம்மா எனக்கு இல்ல. அதுக்குக் காரணம் அந்த ஆள். அப்பிடியான அந்த ஆளை நான் மன்னிக்கோணுமா? உங்களுக்கு எப்பிடியோ, நான் மன்னிக்க மாட்டன்! செத்தாலும் அந்தாளின்ர முகம் பாக்க மாட்டன். இனிமேல் நீங்க என்னட்ட இதைப் பற்றிக் கதைக்கவே கூடாது. கதைச்சால் இனி நான் இஞ்ச வரமாட்டன்!” என்று அறிவித்துவிட்டு, வீட்டுக்குள் போய் அடைந்துகொண்டவளுக்குக் கோபத்தில் கைகால் எல்லாம் நடுங்கின.

கணவனின் கோபத்தைத் தாங்கமுடியாமல் அல்லாடிக்கொண்டிருந்தவளுக்கு அவரின் பேச்சும் சேர்ந்துகொண்டதில் வெடித்திருந்தாள். அவளருகில் வந்து ஆதரவாக அமர்ந்தாள் தாரணி.

அவள் விழிகள் கலங்கி இருப்பதைப் பார்த்து, “அதுதான் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிட்டாய் எல்லோ. இனிக் கதைக்க மாட்டா. நீ அழாத!” என்று அவளின் கையைத் தட்டிக்கொடுத்தாள்.

“நான் இப்பிடிக் கதைப்பன் எண்டு அவா எதிர்பாக்கேல்ல போல. உடைஞ்சிட்டா பாத்தீங்களா. இதாலதான் அவா என்ன கதைச்சாலும் வாய மூடிக்கொண்டு போயிடுவன். ஆனா இண்டைக்குத் தம்பியப் பற்றிக் கதைக்கவும்தான்… சொறி அக்கா. நான் அப்பிடி அத்தானைப் பற்றிச் சொல்லி இருக்கக் கூடாது.” என்றவளை, “உனக்கென்ன விசரா? விடு!” என்று தடுத்தாள் தாரணி.

“இப்ப அவாவை நினைக்கப் பாவமா இருக்கு அக்கா. நான் கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம் போல.” என்று அப்போதும் கண் கலங்கினாள் பல்லவி.

“ஆரு? அந்த மனுசி பாவமா உனக்கு? இன்னும் கொஞ்ச நேரத்தில, வாயோடி காட்டுறாய் எண்டு விறகுக் கட்டைய தூக்கிக்கொண்டு வந்தாலும் வருவா. எதுக்கும் கவனமா இரு!” என்றவளின் பேச்சில் அழுகை போய் முறுவல் அரும்பிற்று அவளுக்கு.

அவர் அப்படியானவர்தான். ஆனால், இனி இதைப் பற்றிப் பேசமாட்டார். அப்படிப் பார்க்கையில் அவள் பேசியது சரிதான். அவள் நெஞ்சில் இருந்த பாரம் அகன்று போனது.

இங்கே வெளியே, இருந்த இடத்திலேயே ஒடுங்கி, விழிகள் கலங்க அமர்ந்திருந்த சிவலோகநாயகியின் அருகில் சென்று அமர்ந்தார் பானுமதி.

“பதினெட்டு வயசுக் குமரா இருக்கேக்க அவள் அனுபவிச்சத்துகள் நிறைய மாமி. அது காணாது எண்டு ரெண்டாவதா கட்டி, பெறாத பிள்ளைக்குத் தாயாகி, அந்தப் பெடியனச் சமாளிக்கப் படாத பாடு படுறாள். இந்த நிலம ஏன் அவளுக்கு வந்தது எண்டு சொல்லுங்கோ பாப்பம்? ஆனாலும், அதைப் பற்றி அவள் ஒரு வார்த்த சொல்ல இல்லை. அவளைப் போய் ஏன் மாமி நோகடிக்கிறீங்க? உங்கட சின்ன மகனைப் பாக்க இவர் இருக்கிறார், நீங்க இருக்கிறீங்க, நாங்க இருக்கிறோம். அது போதும். இனி அவளிட்ட இதைப் பற்றிக் கதைக்காதீங்கோ.” என்று அவரின் கையைத் தட்டிக்கொடுத்தார்.

“எண்டாலும் பாத்தியா அவளுக்கு என்ன வாய் எண்டு?” இத்தனை நாட்களும் சத்தமில்லாமல் இருந்தவளின் இன்றைய பேச்சை அவரால் ஏற்கவே முடியவில்லை.

“அவள் உங்கள மாதிரி.” என்று சொன்ன பானுமதியை முறைத்தார் சிவலோகநாயகி.

“இத நான் சொல்லேல்ல மாமி. நீங்கதான் முந்திச் சொல்லுறனீங்க.” சிறு சிரிப்புடன் சொல்லிவிட்டு மெதுவாக அவரிடமிருந்து கழன்றுகொண்டார் பானுமதி.

அன்று இரவு, கணவன் அழைப்பானோ என்று பொறுத்துப் பார்த்த பல்லவி, அவன் அழைக்கவில்லை என்றதும் தானே அழைத்தாள். சிவலோகநாயகியிடம் கோபப்பட்டதாலோ என்னவோ, கணவனை, அவனின் அனுசரணையான பேச்சை மனம் நாடிற்று.

அவனும் ஏற்றான்.

நேற்றுப்போலவே, “ஏன் எடுக்கேல்ல?” என்று இவளே ஆரம்பித்தாள்.

“ஆர கூட்டிக்கொண்டு ஓடலாம் எண்டு தேடிக்கொண்டு திரிஞ்சதில நேரமில்லாம போயிட்டுது.” என்றான் அவன் பட்டென்று.

பல்லவிக்கு ஒரு கணம் வாயடைத்துப் போனது. கோபத்தில் கதைக்கிறான் என்று தெரிந்தாலும், அவளின் நெஞ்சைப் பதம் பார்த்தது அவன் சொன்னது. மெல்லத் தன் வலியை விழுங்கிக்கொண்டு, “கோபமா?” என்றாள் சின்னதாகிவிட்ட குரலில்.

பதில் சொல்லவில்லை அவன். அவளும் அமைதியாகிப்போனாள். இருவரும் இணைப்பில் இருந்தாலும் பேசிக்கொள்ளவில்லை. பல்லவிக்கு அவனுடைய அந்த மௌனம் பெரும் கொடுமையாக இருந்தது. ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல், “என்னட்ட கோவப்படாதீங்கப்பா, பிளீஸ்!” எனும்போதே தேம்பியிருந்தாள்.

இதைப் பாலமுரளி எதிர்பார்க்கவில்லை. “ஏய்! என்னடி இது? அங்க இருந்துகொண்டு அழாத!” என்று அவசரமாகச் சொன்னான்.

“நீங்கதான் என்னை அழ வைக்கிறீங்க.” விசும்பிக்கொண்டே சொன்னாள் அவள்.

error: Alert: Content selection is disabled!!