பல்லவி – 25

அத்தியாயம் 25

அன்று, விதுரனை நேசரியில் விட்டுவிட்டு நேராக வீட்டுக்கு வந்தான் பாலமுரளி. இந்தக் கொஞ்ச நாட்களாக இவன் இப்படித்தான். மகன் இல்லாத பொழுதுகளை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்று அவனிடம்தான் வகுப்புக்குப் போகவேண்டும்.

அவனை முறைத்துக்கொண்டு நின்றாள் பல்லவி. “என்ன முறைப்பு?” வீட்டுக் கதவை அடைத்துவிட்டு வந்து, அவளை அப்படியே தூக்கிக்கொண்டு அறைக்கு நடந்தபடி அதட்டினான்.

தன்னைக் கொண்டாடும் கணவனைக் கண்டு பல்லவிக்குச் சந்தோசம்தான். கூடவே வெட்கமும். “புதுசா இப்பிடி நடுவில நடுவில வந்தா பாக்கிற சனம் என்ன நினைக்கும்?”

“ஊர் சனத்துக்கு நான் எப்ப வாறன், எப்ப போறன் எண்டு பாக்கிறதுதான் வேலையா?” என்றவனின் உதடுகள், ஆசையோடு அவளின் கழுத்தோரத்தில் புதைந்தன.

“பாக்காமத்தான் சுதாக்கா என்னை ஓட்டித் தள்ளுறாவா?” என்று சிணுங்கியவளின் மனம் கணவனின் செய்கைகளில் மயங்கிற்று. அவளின் கைகள் தானாகவே அவன் பிடறிக் கேசத்துக்குள் நுழைந்து விளையாட ஆரம்பித்தது.

“அவள விடு. என்னைப் பிடிச்சிருக்கா உனக்கு? முதல் எல்லாம் முகத்தத் திருப்பிக்கொண்டு திரிவாய்.” அவனுக்கு எப்போதுமே அவளின் விரல்கள் தன் கேசத்துக்குள் விளையாடுவது பிடிக்கும். அதை அனுபவித்தபடி அவளின் முகம் பார்த்து வினவினான்.

“சொறி… அது… அந்த நேரம் மனதில நிறையக் குழப்பம்…” விழிகளில் மெல்லிய கலக்கம் சூழச் சொன்னாள் பல்லவி.

“ஏன்? இந்தக் கலியாணம் பிடிக்கேல்லையா?” அவள் கன்னம் வருடியபடி மென் குரலில் வினவினான் பாலமுரளி.

இல்லை என்று மறுத்துத் தலையை அசைத்தவள், “அது அப்ப.” என்றாள் வேகமாக.

சிறு முறுவல் அரும்பிற்று அவன் உதடுகளில்.

“என்னை?” பதில் தெரிந்தே கேட்டான்.

“உங்களையும் பிடிக்கேல்ல. அதுவும் அப்பதான்.” என்றாள் இப்போதும் வேகமாக.

அவன் முறுவல் விரிந்தது. “ரெண்டாவது கலியாணம் எண்டா?”

“ம்! ஆனா, ரெண்டாவது கலியாணம் எண்டுறதை விட, அந்த நிலைக்கு நான் ஏன் வந்தனான் எண்டுறதுதான் கவலையாயிருந்தது.” என்றவளுக்கு அவன் தவறாகப் புரிந்துகொண்டு விடுவானோ என்று பயம் வந்தது.

“பிளீஸ்! பிறகு இதையெல்லாம் நீங்க மனதுக்க ஏத்தி கவலைப் படக்கூடாது. நான் சொல்லுறது எல்லாம் அந்த நேரம் இருந்த என்ர மனநிலையத்தான்.” என்றவளின் பேச்சில் முறுவல் நன்றாகவே விரிய, “எனக்குத் தெரியும். நீ சொல்லு!” என்றான் அவன்.

“உங்கட வீட்டிலயும்தான் கஷ்டம். அதுக்காக உங்கட தங்கச்சியாக்கள ரெண்டாவதா கட்டிக் குடுப்பீங்களா? இல்லதானே. அவே மாதிரித்தானே நானும். பிறகும் ஏன் எனக்கு மட்டும் இப்பிடி. காரணம் அந்த ஆள். அந்த ஆள் செய்த வேல. முதல் நாள் இரவு என்னைக் கட்டிப்பிடிச்சுக்கொண்டு படுத்த அம்மா, அடுத்த நாள் விடிய தூக்குல தொங்குறதப் பாத்தா எப்பிடி இருக்கும் சொல்லுங்க?” என்றவளுக்கு விழிகள் கலங்கிக் போயிற்று.

“எனக்கு அம்மாவிலயும்தான் கோவம். முதலுமே அவவின்ர உழைப்பிலதான் எங்கட குடும்பம் வாழ்ந்தது. அவா நினைச்சிருந்தா அந்த ஆள இப்ப நான் தூக்கி எறிஞ்ச மாதிரி எறிஞ்சுபோட்டு வாழ்ந்திருக்கலாம். அடுத்த நாலு வருசத்துல நானும் உழைக்க ஆரம்பிச்சிட்டன். சந்தோசம் இல்லாட்டியும் அவாவும் ஒரு நிம்மதியான வாழ்க்கைய வாழ்ந்திருப்பா. மானம், மரியாதை, ஊர் கேவலமா கதைக்கும் எண்டு யோசிச்சு அவா கண்டது என்ன? என்னை அநாதையா விட்டுட்டுப் போனது மட்டும்தான். அதுதான், அவாவே இல்லை எண்டேக்க அவா சேத்து வச்ச நகையும் எனக்கு வேண்டாம் எண்டு எல்லாத்தையும் அக்காக்குக் குடுத்திட்டன்.” என்றவளுக்குக் கண்ணீர் பெருகி வழிந்தது.

இப்படியான நேரங்களில் வார்த்தைகள் கைகொடுக்காது என்று அறிந்து, ஒன்றும் சொல்லாமல் அவளை மார்போடு சேர்த்தணைத்து, முதுகை வருடிக்கொடுத்தான். அவள் சற்றுத் தேறிக்கொண்டதும், “இனி அவரப் பற்றி உன்னட்டக் கதைக்க மாட்டன், சரியா?” என்றான் அவள் முகம் பார்த்து.

சரி என்பதாகத் தலையை அசைத்தாள் அவள்.

“அதே மாதிரி, இந்தக் கலியாணத்தையோ என்னையோ என்னால மாத்தேலாது. ஆனா, உன்ன சந்தோசமா வச்சிருப்பன். என்னை நம்புறாய்தானே?” என்று கனிந்த குரலில், அவளின் கன்னங்களைத் தாங்கிக் கேட்டான் அவன்.

தெரியும் என்பதுபோல் தலையை அசைத்தவள் மென் முறுவலுடன் எம்பி அவன் கன்னத்தில் தன் இதழ்களை ஒற்றினாள்

மழைச்சாரலாக மனம் நனைத்த முத்தத்தில் சிறு வியப்புடன் புருவங்களை உயர்த்தினான் அவன். அவள் சிரிக்க, “கிஸ் இப்பிடித் தரக்கூடாது!” என்றவன் எப்படி என்று காட்டினான். அவளின் கை அவனின் சட்டையை இறுக்கிப் பற்றிக் கசக்கியது. அன்பைப் பரிமாற ஆரம்பித்த முத்தம், வேறு ஏதோ ஒன்றைக் கேட்டு நின்றது. அவள் தடுமாற, அவன் விடாமல் பற்ற என்று இருவரும் தடுமாறிச் சரிந்தனர். கடைசியில் அங்கிருந்த கொடியும் அறுந்து, அவர்களோடு சேர்ந்து விழுந்தது.

பயமும் சிரிப்புமாக அவனைக் இறுக்கிக் கட்டிக்கொண்டாள் பல்லவி.

“பயப்பிடாத! ஒண்டும் நடக்கேல்ல. உடுப்புக்கு மேலதான் விழுந்திருக்கிறம்.” என்றான் அவன்.

“கடவுளே, இனி இந்தக் கொடியக் கட்டி, உடுப்பை எல்லாம் எடுத்துப்போட்டு… உங்களோட நான் படுற பாடு இருக்கே!” என்று சலித்துவிட்டு, “எழும்புங்கோ!” என்றாள் அவனைத் தள்ளிவிட்டபடி.

“அத பிறகு செய். இப்ப பேசாம இரு!” என்றவன் அந்தக் கொடியில் கிடந்த உடைகளையே அவர்களுக்கு மெத்தையாக்கினான்.

மனங்கள் சங்கமித்த மிக மிக நிறைவான ஒரு உறவு. வியர்த்து வழிந்தாலும் விலக மனமற்றுச் சேர்ந்தே இருந்தனர்.

“இந்த உடுப்பெல்லாம் திரும்ப நான் தோய்க்கோணும்!” பொய்ச் சலிப்புடன் சொன்னாள் அவள்.

“தண்ணி நான் அள்ளித் தாறன். நீ தோய்!” என்றான் அவன் தன் அணைப்பை இறுக்கியபடி.

சுகமாக அவன் கைகளுக்குள் அடங்கி இருந்தவளுக்கு நீண்ட நாட்களாக அவளுக்குள் இருக்கும் கேள்வி நினைவில் வந்தது. அவனிடம் எப்படிக் கேட்பது என்று யோசித்தாள்.

“என்ன?” அவள் முகத்தைப் பார்த்துவிட்டுக் கேட்டான் அவன்.

“அது… ஏன் இப்பிடிக் கவனமா இருக்கிறீங்க? தம்பிய நான் பாசமா பாக்கமாட்டன் எண்டு பயமா?” அவன் முகம் பாராமல் மார்பு முடியை வருடியபடி கேட்டாள் பல்லவி.

“அதுவும்தான்!” என்றான் அவன். வேகமாக நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் பெரும் வலி இருந்தது. கண்ணீரும் சேர ஆரம்பித்தது.

“சொல்லுறத முழுசா கேட்டுட்டு அழு!” என்று அதட்டினான் அவன். “ஆரம்பம் உன்னைப் பற்றி எனக்கு என்ன தெரியும் சொல்லு? நான் அவனுக்கு அப்பா. அதைப் பற்றி எப்பிடி யோசிக்காம இருப்பன்? நம்பிக்கை இல்லாம இல்ல. ஆனாலும் ஒரு பயம். அதோட…” என்றவன் அவளை இன்னும் தன் நெருக்கத்தில் கொண்டுவந்து, “இப்பவே எனக்கும் உனக்கும் நடுவுல தம்பி இருக்கிறான். இன்னொரு பிள்ளையும் வந்தா நீயும் நானும் பாவம் இல்லையா?” என்றான் சன்னச் சிரிப்புடன்.

அவள் உதடு கடித்துப் பார்வையைத் தழைக்க, அந்த இதழ்களில் சற்று நேரம் மூழ்கி எழுந்தான் பாலமுரளி. மனத்தில் கிறக்கம் பிறக்க, அவன் மார்புக்குள் தன் முகத்தை மறைத்துக்கொண்டாள் பல்லவி.

“மகன் மட்டும் காணும் எண்டு இருந்த நான், அம்மா எண்டுற ஒருத்தியப் பற்றி அறியாமலே வளந்த தம்பி, மனுசனோட அஞ்சு வயசுப் பிள்ளையையும் பாக்கவேண்டிய நீ எண்டு, மூண்டு பேருக்கும் இந்த வாழ்க்கை பழக, மூண்டு பேரும் நாங்க ஒரு குடும்பம் எண்டு நினைக்க அவகாசம் வேணும்தானே. அதுக்கிடையில இன்னொரு குழந்தை எண்டா அது மூண்டு பேரையும் பாதிக்கும். அதுதான் உடனே வேண்டாம் எண்டு நினைச்சன்.” என்றவன், “இதுல கொஞ்சமே கொஞ்சம் என்ர சுயநலமும் இருக்கு.” என்றான் அவள் காதுக்குள் கிசுகிசுப்பாக.

அதைக்கேட்டு முகத்தை அவன் மார்புக்குள் இருந்து எடுக்காமலேயே அவன் கையில் கிள்ளிவிட்டாள் பல்லவி.

சந்தோசமாகச் சிரித்தான் பாலமுரளி; இனி அவன் வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லை என்கிற மகிழ்வோடு!

error: Alert: Content selection is disabled!!