அத்தியாயம் 3
பல்லவியின் திருமண நாள் அவளுக்குப் பிடிக்காமலேயே விடிந்தது. ஆரி வேலைப்பாடு செய்த பிளவுஸ் ஒன்றை அவளே தைத்து, அதற்கு அன்னையின் கூரைச் சேலையை அணிந்துகொண்டாள். அளவான விலையில் புதிதாய் ஒன்று எடுப்போம் என்று பானுமதி சொல்லியும் மறுத்துவிட்டாள்.
அவர்களின் வீட்டை நிறைத்துக்கொண்டு அயலட்டை மனிதர்களும் உறவினர்களும் இருந்தாலும், தன்னளவில் தனித்துப்போய் நின்றவளுக்கு, அந்தச் சேலை அன்னை கூடவே இருப்பது போன்றதொரு உணர்வைத் தந்தது. அதனை மெல்ல வருடிக்கொடுத்தாள். விழிகள் தளும்புவதைத் தடுக்கவே முடியவில்லை. ‘அம்மா… எனக்கு இண்டைக்குக் கலியாணம் அம்மா..’ என்றாள் கண்ணாடியில் தன் சேலையைப் பார்த்தபடி.
கடைசி நாட்களில் அன்னை கண்ணீருடன் தவித்ததும், ‘இவனை நம்பி உன்னப் பெத்திட்டனே…’ என்று அரற்றியதும், ‘உன்ன எப்பிடிக் கரையேத்தப்போறனோ தெரியேல்லையே…’ என்று கண்ணீர் வடித்ததும் நினைவில் வந்தன.
என்னைப் பற்றி ஏன் கவலைப்படுகிறார் என்று யோசிக்காமல், ‘அப்பாவை அவன் இவன் எண்டு சொல்லாதீங்கம்மா…’ என்று கோபப்பட்டிருக்கிறாள். கடைசியில் அவளுக்காக அவ்வளவு கவலைப்பட்ட அம்மாவும்தானே அவளை நட்டாற்றில் விட்டுவிட்டுப் போய்விட்டார். அவளுக்காகவேனும் இருந்திருக்க வேண்டாமா?
“தலையக் காட்டு இந்தப் பூவை வைப்பம்.” முதல் நாள் இரவே கட்டி, பிரிட்ஜினுள் வைத்திருந்த பூவுடன் வந்த தாரணியின் பிரசன்னத்தில் நினைவுகள் கலைந்தாள் பல்லவி.
அவள்தான் மணப்பெண் அலங்காரம் செய்தது. அனைத்தையும் முடித்துவிட்டு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று இவளைச் சுற்றி சுற்றி வந்து பார்த்தாள்.
“எல்லாம் காணும் அக்கா.” என்றாள் பல்லவி.
“அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். நீ பேசாம இரு!” என்று அதட்டிவிட்டு அவளின் பொட்டைச் சரி செய்துவிட்டாள்.
கோயிலுக்குச் செல்வதற்கு நேரமாயிற்று என்றதும், “போவமா? வான் வந்திட்டுது.” என்றபடி அறைக்குள் வந்தார் பானுமதி.
அவளின் தோற்றம் அவருக்குத் திருப்தியாக இருந்தது. “பழைய சாறி எண்டு நினைச்சன். நல்லாத்தான் இருக்கு!” என்றவருக்கு அவளை அந்தக் கோலத்தில் பார்த்ததில் மனம் சற்றே நெகிழ்ந்து போயிற்று.
என்ன இருந்தாலும் தாயில்லாப் பிள்ளையாயிற்றே. சில நேரங்களில் கோபப்பட்டிருக்கிறார்தான்; சினந்திருக்கிறார்தான். அதெல்லாம் அவர்களின் ஏழ்மையால் உண்டானவை. மற்றும்படி, எங்கிருந்தாலும் அவள் நன்றாக வாழவேண்டும் என்பதுதான் அவரின் விருப்பமும். அதில், “இனி எல்லாம் உனக்கு நல்லதுதான் நடக்கும். பொறுமையா பொறுப்பா நடக்கோணும். சரியோ?” என்று அவளின் தலையைத் தடவிவிட்டார்.
அவளுக்கு விழிகள் தளும்பின. கண்ணீரைக் கண்களுக்குள்ளேயே இழுத்துப் பிடித்தபடி, “பெரியப்பாவை ஒருக்கா கூட்டிக்கொண்டு வாறீங்களா பெரியம்மா? கதைக்கோணும்.” என்றாள் தழுதழுத்த குரலில்.
“இப்ப என்னத்துக்கு? அவர் இருக்க நிக்க நேரமில்லாம திரியிறார். கூப்பிடப் பேசப்போறார்.” என்று சொன்னாலும் சென்று கையோடு அவரை அழைத்துக்கொண்டு வந்தார் பானுமதி.
“என்னம்மா? இந்த நேரம் என்ன கதைக்கக் கிடக்கு?” சால்வையைத் தலையில் தலைப்பாகையைப் போல் கட்டிக்கொண்டு, வேட்டி சட்டையில் பரபரத்துக்கொண்டு வந்தார் தவகணேசன்.
அவர்கள் இருவரையும் சேர்த்துப் பார்த்தவளுக்கு என்ன முயன்றும் முடியாமல் விழிகள் இரு சொட்டுக் கண்ணீரைச் சிந்தின. அவளின் கனவுகள் சிதறியிருக்கலாம். எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போயிருக்கலாம். வாழ்வே திசை மாறியிருக்கலாம். ஆனால், இன்றுவரை அவள் உயிரோடு இருப்பதற்கும், பாதுகாப்புடன் வாழ்வதற்கும் காரணம் அவர்களாயிற்றே. அவளின் கூடு கலைந்த நொடியில் தம் கூட்டுக்குள் இழுத்துக்கொண்டவர்களாயிற்றே.
நெஞ்சம் நெகிழ, “இவ்வளவு காலமும் என்னை வச்சுப் பாத்ததுக்கு நன்றி பெரியப்பா. எண்டைக்கும் மறக்க மாட்டன். திருப்பிச் செய்ய எனக்கு எண்டு ஆரும் இல்ல. அதால என்னட்ட இருக்கிற இத நீங்க வாங்கிக்கொள்ளோணும் பெரியப்பா. அக்கான்ர கலியாணத்துக்கு என்ர சின்ன பரிசு.” என்று தன் கையிலிருந்த நகைகளையும் பாஸ் புத்தகத்தையும் அவர்களின் புறம் நீட்டினாள்.
“உனக்கு என்னடி விசரா? எனக்குப் பரிசு தா எண்டு நான் கேட்டனானோ?” எல்லோருக்கும் முந்திக்கொண்டு சீறினாள் தாரணி.
“நீ திருப்பிச் செய்யோணும் எண்டு நினைச்சு நாங்க எதையும் செய்யேல்ல. நீயும் எங்களுக்கு ஒரு பிள்ளைதான். பேசாம எல்லாத்தையும் நீ கொண்டுபோற பெட்டிக்க கவனமா எடுத்து வை!” என்று தன்மையாக எடுத்துச் சொன்னார் தவகணேசன்.
கடன் பட்டுத்தான் இதையெல்லாம் செய்கிறார்கள். அந்தக் கடன் முடிக்கிறவரைக்கும் நெருக்கடிதான். இருந்தாலும், சற்று நேரத்தில் மணமாகப்போகும் பெண், தன்னிடம் இருப்பதை எல்லாம் தர நினைத்தபோது, அதை வாங்கிக்கொள்ள அவர்கள் தயாராயில்லை.
“பிளீஸ் பெரியம்மா. இது எல்லாமே அம்மான்ர நகைகள். என்னட்ட இருந்தாலும் எண்டைக்குமே இத நான் போட மாட்டன். போட எனக்கு விருப்பம் இல்ல. அதாலதான் சொல்லுறன் அக்காக்குக் குடுங்கோ. அப்பதான் எனக்கும் கொஞ்சம் சந்தோசமா இருக்கும். இது என்ர திருப்திக்காக. மன நிறைவுக்காக. இத நீங்க வாங்காட்டி நான் இந்த அறைய விட்டு வெளியில வரவே மாட்டன்.” கெஞ்சலில் ஆரம்பித்து மிரட்டலில் முடிக்கவும் பானுமதி அவளை முறைத்தார்.
“புதுசா ஒரு பழக்கம் கண்டு பிடிச்சிருக்கிறாய் என்ன, எல்லாத்துக்கும் வெருட்டுறது? அடி வாங்காம பேசாம நட, நேரமாச்சு.” என்று அதட்டினார்.
“பரவாயில்ல. நீங்க அடிச்சாலும் இத வாங்காட்டி நான் வெளில வரமாட்டன்.”
பெரியவர்கள் அவளின் பிடிவாதத்தைக் கண்டு திகைத்துப் போயினர். நேரம் வேறு போய்க்கொண்டிருந்தது. எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்க மறுத்தாள். அதற்கு மாறாக, “பெரியம்மாவ வாங்கச் சொல்லுங்கோ பெரியப்பா. இந்த ஆறு வருசத்துல எப்பயாவது இந்த நகைகளை நான் போட்டு நீங்க பாத்திருக்கிறீங்களா? எனக்கு உண்மையா இது சுமை. அந்தச் சுமை எனக்கு வேண்டாம். பிளீஸ் பெரியம்மா, வாங்குங்கோ.” என்று அவள் கண் கலங்கவும், அதற்குமேல் பெரியவர்கள் பிடிவாதம் பிடிக்கவில்லை.
தவகணேசன் பார்க்கவும் பானுமதி வாங்கிக்கொண்டார். அப்போதும், “நகைதானே உனக்கு வேண்டாம். சம்பளக் காச நீயே வச்சுக்கொள். எங்களால உனக்குத் தந்து அனுப்பேலாட்டியும் உன்ரயாவது உன்னட்ட இருக்கட்டும். அவசரம் ஆபத்துக்குத் தேவைப்படும்.” என்று வங்கிப் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தார்.
அதன்பிறகுதான் புறப்பட்டனர். சிவலோகநாயகிக்கு மிகுந்த கவலை. “கோயிலுக்காவது சும்மா வாடா எண்டு சொல்லுவம் எண்டு பாத்தா, ரெண்டு நாளாவே ஊருக்க அவனைக் காணேல்லையாம்.” என்று புலம்பியபடி திரிந்தார்.
காதில் விழுந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை பல்லவி. அவர் தகவல் சொல்லித்தான் அந்த மனிதர் கோயிலுக்கு வந்து நின்றிருக்கிறார் என்று கணிக்க முடியாமலா அவள் இருக்கிறாள்.
*****
யாழ்ப்பாணத்தில் கோண்டாவில் எனும் ஊரில்தான் பல்லவி பிறந்தது, வளர்ந்தது எல்லாம். இனி அவள் வாழப்போவது அதே யாழ்ப்பாணத்தில் கோப்பாய் எனும் ஊரில். கோப்பாயில் அமைந்திருக்கும் அம்மன் கோவிலின் முன்னே அவர்களின் வாகனம் வந்து நின்றது. என்ன முயன்றும் முடியாமல் அதீத பயத்திலும் பதட்டத்திலும் அவளுக்குக் கைகால்கள் நடுங்க ஆரம்பித்தன. தாரணியின் கையைப் பற்றியபடி மெல்ல இறங்கினாள்.

