அத்தியாயம் 5
காலையிலேயே எழுந்து, குளித்து, தேவையானவற்றை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு, சேலையைச் சுற்றத் தொடங்கிய காலாவதிக்கு ஒரே யோசனை. கொழும்பு செல்லும்போது பல்லவியைத் தவகணேசனின் வீட்டில் விட்டுவிட்டுப் போவதாகத்தான் முதலில் திட்டமிட்டிருந்தார். தவகணேசனிடமும் அதைப் பற்றிக் கதைத்திருந்தார். முதல்நாள் திருமணமாகி வந்த பெண்ணை அலைக்கழிக்க வேண்டாம் என்பது அவர் எண்ணமாயிருந்தது.
இப்போதோ, இங்கு வந்ததிலிருந்து யாரிடமும் எதிலும் பெரிதாக ஒட்டுதல் காட்டாமல் இருக்கும் பல்லவியைக் கவனித்துவிட்டுத் தன் முடிவை மாற்றிக்கொண்டார். சேர்ந்து இருந்தது ஒரு இரவுதான். அந்த வீடு, அவர்கள், அவளின் கணவன் என்று எல்லாமே அவளுக்குப் புதிதுதான். இருந்தாலுமே, அவர்களோடு பழகுவதற்கான எந்த முயற்சியையும் அவள் எடுப்பதாகத் தோன்றவில்லை. சொல்வதை மாத்திரம் செய்துகொண்டு ஒதுங்கியே நின்றாள்.
அதில், அறையை விட்டு வெளியே வந்து, “எனக்கு என்னவோ பல்லவிய விட்டுட்டுப் போக மனமில்லாம இருக்குத் தம்பி. சின்னவனோட திரும்பி வரேக்க உனக்குத் துணையா இருப்பாதானே. அதால அவவையும் கூட்டிக்கொண்டு போவம்.” என்றார் பாலமுரளியிடம்.
இதைப் பல்லவி எதிர்பார்க்கவில்லை. புறப்படப்போகிறவர்களுக்குப் பால் தேநீரை ஊற்றிக் கொடுத்துவிட்டு, தனக்கும் ஒன்றை எடுத்துக்கொண்டு, விறாந்தையில் ஒரு ஓரமாக தரையில் அமர்ந்திருந்தவள் தன்னையறியாமல் பாலமுரளியைப் பார்த்தாள்.
அந்த அதிகாலையிலேயே சில்லென்ற கிணற்று நீரில் அள்ளிக் குளித்துவிட்டு, ஒரு ஜீன்ஸ் ஷேர்ட்டில் தயாராகி வந்த பாலமுரளியும் அவளைத்தான் பார்த்தான். உடனே, வேகமாகப் பார்வையை அகற்றிக்கொண்டாள் அவள். என்னவோ, அவன் விழிகளை அவளால் சந்திக்க முடிவதில்லை. கத்தியைக் கண்ணிலேயே வைத்துக்கொண்டு நெஞ்சையே துளைப்பது போன்ற பிரம்மை அவளுக்குள்.
அன்னையிடம் திரும்பி, “சரி, அவளையும் வெளிக்கிடச் சொல்லுங்க.” என்றான் அவன்.
அடுத்த பத்தாவது நிமிடம் ஒரு சுடிதாரில் தயாராகி வந்தவளை ஒற்றைப் பார்வையால் அளந்துவிட்டு எல்லோரையும் கூட்டிக்கொண்டு புறப்பட்டான்.
அதிகாலை உறக்கத்தைக் கலைத்துவிட்ட சினத்தில் சிணுங்கியபடி தூங்கிவழிந்தான் விதுரன். அவனைத் தன் மடியிலேயே வைத்துக்கொண்டார் கலாவதி. ஏனோ மனம் பாரமாய் அழுத்தியது. பேரனுக்குத் தாய்ப்பாசமும் மகனுக்கு நல்ல துணையும் கிடைத்துவிட வேண்டும் என்றுதான் பல்லவியைக் கட்டிவைத்தார்.
என்ன, திருமணமான அடுத்த நாளே புறப்படுவதில் எப்படி வாழ்வார்களோ, என்ன நடக்குமோ, நல்லது கெட்டது சொல்லிக்கொடுக்க அருகில் அவரும் இருக்கமாட்டாரே என்று மனம் கலங்கிற்று. ‘இந்தப் பெண் வேறு தள்ளித் தள்ளியே நிற்கிறாளே. விதுக்குட்டி நான் இல்லாம என்ன செய்யப்போறானோ தெரியாது…’ விழிகள் கரிக்கப் பேரனை உச்சி முகர்ந்தார்.
மகனையும் மருமகளையும் பார்த்தார். அவர் நடுவில் இருக்க அவரின் இருபுறமும் அமர்ந்திருந்தனர். பாலமுரளி ஓட்டோ போகும் பாதையில் கவனமாக இருக்க, அவள் நகரும் வீதியில் பார்வையைப் பதித்திருந்தாள். ‘கடவுளே… ரெண்டு பேரையும் நல்லபடியா சேத்து வச்சிடு.’ என்று வேண்டிக்கொண்டார்.
இவர்களின் திருமணம் முடிந்து ஒருவாரம் கழித்துப் புறப்படுவது போல்தான் டிக்கட் பார்த்தார் கலாவதி. அப்படிப் பார்த்த அந்த நாட்கள் அங்கு ரூபாவின் கணவனுக்குப் பொருந்தி வரவில்லை. அவன் வேலை செய்யும் இடத்தில் பிள்ளைப்பேற்றுக்கு ஒரு மாதம் விடுமுறை கேட்டிருந்தபடியினால், இப்போது லீவு எடுத்துக்கொண்டு விமானநிலையம் வந்து கலாவதியை அழைத்துச் செல்ல முடியாது என்றிருந்தான். அவனுடைய வேலை நேரத்தைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தபோது, இங்கே பாலமுரளியின் திருமணத்துக்கு அடுத்த நாள் மாத்திரமே பொருந்தி வந்தது.
அப்படிப் புறப்படக் கலாவதிக்கு விருப்பமில்லை. டிராவல்ஸ் நடத்துபவரிடம் எல்லோருக்கும் ஏற்றதாக வேறு ஒருநாள் பார்த்துத் தரச்சொல்லி நின்றவரை, “அதுதான் நீங்க ஆசைப்பட்ட மாதிரிக் கலியாணம் முடிஞ்சிடும்தானேம்மா. அடுத்த நாளே வெளிக்கிடுங்க.” என்று பாலமுரளிதான் இந்த டிக்கெட்டை போடவைத்திருந்தான்.
‘அதுவும் சரிதான். நான் இங்க இருந்தாலும் நந்தி மாதிரி நடுவுக்க இருப்பன். ரெண்டு பேரும் தனியா இருந்தா கதைச்சு பழகுவினம்.’ என்று, வேறு வழியும் இல்லாததால் அவர்தான் தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டிருந்தார்.
இப்போதோ, இப்படிப் புறப்பட்டிருக்க வேண்டாமோ என்பதிலேயே நின்றது மனது.
பெட்டிகளுக்கும் சேர்த்தே பஸ்ஸில் டிக்கெட் புக் செய்திருந்தான் பாலமுரளி. அதில், பெரிய சிரமமில்லாமல் அவர்களின் பயணம் அமைந்துபோயிற்று. கொழும்புக்கு வந்து, கட்டுநாயக்கா விமானநிலையத்துக்கு வந்து சேர்ந்ததும் கலாவதியின் விழிகள் கலங்கத் தொடங்கிற்று. விதுரனின் கையை விடவேயில்லை. தன்னுடனேயே வைத்துக்கொண்டார். அவனுக்கு ஓராயிரம் அறிவுரைகளையும் புத்திமதிகளையும் சொன்னார்.
“விடுங்கம்மா. நான் இருக்கிறன்தானே. பாத்துக்கொள்ள மாட்டனா?” என்ற பாலமுரளியின் பேச்சை அவர் கேட்பதாகவே இல்லை.
இத்தனை நாட்களும் கூடவே இருந்து தன்னைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்ட அம்மம்மா புறப்படப்போகிறார் என்றதும் விதுரனும் அழ ஆரம்பித்தான்.
கலாவதிக்கு நெஞ்சே அடைத்துக்கொண்டு வந்தது. இங்கு இருப்பது மகனும் பேரனும். அங்கு இருப்பது மகள். பேரக்குழந்தைகளும் வரப்போகிறார்கள். மனம் கிடந்து இருபக்கமும் அல்லாடியாது. என்ன வாழ்க்கையடா இது என்று அந்த நிமிடத்தில் அனைத்தையும் வெறுத்தார்.
“கவனம் என்னம்மா. சின்னவனைப் பக்குவமா பாத்துக்கொள்ளுங்கோ. தம்பி, அவாவும் சின்ன பிள்ளைதான். நீதான் ரெண்டு பேரையும் பொறுப்பா கவனிக்க வேணுமப்பு.” சின்னவனை உச்சிமுகர்ந்து, மகன் மருமகளை வருடி, அணைத்து, கண்ணீருடன் அவர் விடைபெற்றபோது, பல்லவிக்கும் நெஞ்சுக்குள் அடைத்துக்கொண்டு வந்தது.
நேற்றிலிருந்துதான் என்றாலும் அவர்களின் வீட்டுக்கு வந்ததில் இருந்து ஒருவித தைரியத்தையும் திடத்தையும் தந்தது அவர்தான். அந்த வீட்டில் அவர்கள் மூவருக்கும் நடுவில் பாலமாக நின்று அனைத்தையும் கொண்டோடியதும் அவர்தான். அவரின் பிரிவு அவளையும் பாதிக்க, கலங்கிய விழிகளோடு, “ஒண்டுக்கும் கவலைப்படாம கவனமா போயிட்டு வாங்கோ மாமி.” என்று தன்னை மீறியே சொன்னாள்.
நொடியில் விளக்கேற்றியதுபோல் மலர்ந்துபோயிற்று அவரின் முகம். கண்களில் கண்ணீர் மின்னச் சிரித்தார். “உங்கள நம்பித்தான் ஆச்சி ரெண்டு பேரையும் விட்டுட்டுப் போறன். அவன் பாவமம்மா. கட்டி ஒரு பிள்ளையப் பெத்தாலும் பெருசா எந்தச் சுகத்தையும் அனுபவிக்கேல்ல. பாத்துக்கொள்ளுங்கோம்மா.” குரல் தழுதழுக்கச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
மீண்டும் பஸ் பயணம்.
வரும்போது கலாவதியும் அவளும் முன்னிருக்கையிலும் பாலமுரளி பெட்டிகளை வைத்த சீட்டுக்குப் பக்கத்திலும் என்று அமர்ந்துகொண்டபோது ஒன்றும் பெரிதாகத் தோன்றவில்லை. இப்போது, அவளை ஜன்னல் புறமாக விட்டுவிட்டு அவன் அருகில் அமர்ந்துகொண்டபோது தடுமாறினாள் பல்லவி. அதுவும், விதுரன் சிணுங்கியபோதெல்லாம் அவனைத் தூக்கி, தட்டிக்கொடுத்து, தலைசாய்த்த போதிலெல்லாம் அவன் கை இவளில் பட்டுச் செல்ல, தனக்குள் நடுங்கியபடி அமர்ந்திருந்தாள்.
விதுரனின் அழுகை நின்றபாடில்லை. சிணுங்கிக்கொண்டே இருந்தான். கடைசியில் ஒரு நிறுத்தத்தில் வீதியோரமாக விற்றுக்கொண்டிருந்த ரிமோர்ட் கார் ஒன்றை பாலமுரளி வாங்கிக்கொடுத்த பிறகே சமாதானமானான். காரோடு விளையாடிக்கொண்டிருந்தவன் அதிகாலையில் எழுந்ததிலும், அழுததாலும் சற்று நேரத்தில் உறங்கிப்போனான். அப்படியே பாலமுரளியும் சொக்கினான். ஆனாலும், பிடிவாதமாக அவன் விழித்தே இருப்பதைக் கவனித்தாள் பல்லவி.
விதுரனை வாங்குவோமா என்று நினைத்தாலும் கேட்கத் தயக்கமாக இருந்தது. ஊரிலிருந்து வரும்போது கலாவதியும் அவனும்தான் விதுரனை மாற்றிமாற்றி வைத்திருந்தனர். இப்போது அவன் மட்டும்தான். ஐந்து வயதுச் சிறுவனை மடியிலேயே வைத்திருப்பது இலகு அல்ல. நிச்சயம் உடலில் நோ உண்டாகியிருக்கும். விதுரன் வேறு உறக்கத்துக்குத் தகப்பனின் மடி வசதியாக இல்லாததால் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் என்று திரும்பிக்கொண்டே இருந்தான்.
கொஞ்சம் கூடச் சினக்காமல், அவனுக்கு வசதி செய்வதிலேயே கவனமாக இருந்த பாலமுரளி, அவளுக்குள் மெல்லிய ஆச்சரியத்தைப் பரப்பினான். அதனாலோ என்னவோ தன்னை மீறித் திரும்பி அவனைப் பார்த்தாள்.
“என்ன?” என்றான் அவன் உடனேயே.
என்ன சொல்வது என்று தெரியாது திகைத்துவிட்டு, “விதுரனை நான் வச்சிருக்கவா?” என்றாள் மெல்லிய குரலில்.
“வச்சிருப்பியா?”
“ம்… ஆள் நித்திரைதானே.” விழித்திருந்தால் சேருவானோ தெரியாது என்பதில் சொன்னாள். இந்த இரண்டு நாட்களும் எப்படி அவள் அவனோடு ஒட்ட முனையவில்லையோ அப்படித்தான் விதுரனும் அவளோடு ஒட்டிக்கொள்ள வரவில்லை.
அவனுக்கும் ஆசுவாசமாகிக்கொள்ள வேண்டுமாய் இருந்தது போலும். மகனின் உறக்கம் கலையாமல் மெதுவாகத் தூக்கி அவளின் மடியில் இருத்தினான். அவளும் கவனமாக மார்போடு அவனைச் சேர்த்துக்கொண்டாள். அந்த இடைவெளிக்குள் அவன் கை அவளின் வயிற்றோடு மாட்டிக்கொண்டு மெதுவாக வெளிவந்தது.
விதிர்விதிர்த்துப்போனாள் பல்லவி. இப்படி ஒன்று நடக்கும் என்று தெரிந்திருந்தால் விதுரனைக் கேட்டே இருக்கமாட்டாள். வியர்த்துக்கொண்டு வந்தது. வேகமாகப் பார்வையை யன்னல் புறம் திருப்பிக்கொண்டாள். அவன் பார்வை அவள் முகத்தில் படிந்திருப்பது தெரிந்தாலும் திரும்பவே இல்லை.
இதற்கே இந்தப் பாடாக இருக்கிறதென்றால் மிகுதி வாழ்க்கைக்கு? நெஞ்சம் எதிர்காலத்தை எண்ணி நடுங்கிற்று. இந்த பஸ்ஸில் அவன், அவள், விதுரன் என்று அமர்ந்திருக்கும் இந்தக் காட்சிதான் இனி அவள் வாழ்க்கை. இதையெல்லாம் ஏற்று வாழ்ந்துதான் ஆகவேண்டும். அந்த முடிவில்தான் பாலமுரளிக்குக் கழுத்தை நீட்டினாள். ஆனாலும் அடுத்ததை யோசிக்க முடியாமல் மனம் முரண்டிக்கொண்டு நின்றது. முடிவை எடுப்பது வேறு. அதன்படி மனமுவந்து நடப்பது வேறு என்பதை உணர்ந்துகொண்டிருந்தாள் பல்லவி.
பாலமுரளியின் தலை ஒருமுறை அவள் தோளில் பட்டு மீளவும் திரும்பிப் பார்த்தாள். “ரெண்டுநாளா ஆன(சீரான) நித்திரை இல்ல. அது இப்ப கண்ணைக் கட்டுது.” என்றான் அவன் முகத்தைத் தேய்த்துவிட்டபடி.
அது உண்மை என்று அவளுக்கே தெரியுமே. அதில், “நீங்க படுங்கோ. நான் முழிச்சுத்தான் இருப்பன்.” என்றாள்.
அவன் அவளைப் பார்த்தான். உறக்கத்துக்காகக் காத்திருந்த விழிகள் சிவப்பேறிப் போயிருந்தது. அந்தப் பார்வையே ஒருவிதப் பயத்தைத் தர, “இல்ல. எனக்கு நித்திரை வரேல்ல. அதான்..” என்றாள் முணுமுணுப்பாக.
“ம்ம்! என்ன எண்டாலும் ஒரு தட்டுத் தட்டு.” என்றுவிட்டு உடலைத் தளர்த்தி, கால்களை நீட்டி, மார்புக்குக் குறுக்காகக் கைகளைக் கட்டிக்கொண்டு, சீட்டில் தலைசாய்த்து விழிகளை மூடிக்கொண்டான் அவன்.
பல்லவியும் பார்வையை ஜன்னலின் புறம் திருப்பிக்கொண்டாள். சற்று நேரத்தில் பஸ்ஸின் அசைவுக்கு ஏற்ப அவன் தலை அவளின் தோளில் பட்டு பட்டு மீண்டது. திரும்பி அவனைப் பார்த்தாள். நல்ல உறக்கத்தில் இருந்தான். சற்றே பயம் தெளிய அவள் விழிகள் அவனை ஆராய்ந்தன.
விவசாயம் பார்ப்பதாலோ என்னவோ நல்ல திடகாத்திரமான கன்னங்கரிய தோற்றம். வாலிபன், இளமையானவன் போன்ற சொற்களை எல்லாம் கடந்து முழுமையான ஒரு மனிதனின் முகம். அதில் விளையாட்டுத்தனம் இல்லை; சிறுபிள்ளைத்தனம் இல்லை; அசட்டுத்தனம் இல்லை. எதிலும் ஒரு தீவிரமும், கவனமும், கூர்மையும்தான் தெரிந்தன. அடர்ந்த கேசமாக இருந்தாலும் நான்கில் ஒரு பங்குக்கு மேல் நரைத்திருந்தது. இது எப்படி? முப்பத்தியிரண்டு வயது என்றுதானே சொன்னார்கள்? அதற்குள் இந்தளவில் நரைக்குமா? அல்லது, வயது கூடவோ?
நரை விழுந்து, ஐந்து வயதில் மகன் இருக்கும் ஒருவனுக்கு அவள் மனைவி. நெஞ்சைக் கவ்விய விரக்தியோடு விழிகளைத் திருப்பிக்கொண்டாள்.

