பல்லவி 7 – 1

அத்தியாயம் 7

காலையில் அவனுடைய நடமாட்டத்தில்தான் கண் விழித்தாள் பல்லவி. நேற்றைய பயணத்தினால் உண்டான களைப்பு, அதற்கு முந்தைய நாளின் திருமணக் களைப்பு என்று எதுவும் அவளை விட்டு நீங்கியிருக்கவில்லை. உடலின் அசதி இன்னும் கொஞ்ச நேரம் படேன் என்று சொன்னது. ஆனாலும், அவனுக்குப் பயந்து, வேகமாக எழுந்து, பாயைச் சுருட்டித் தலையணையோடு எடுத்து வைத்துவிட்டுக் கிணற்றடிக்கு ஓடினாள்.

அவள் முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தபோது, ஒரு செம்பு நிறையப் பசும்பாலுடன் அவளிடம் வந்தான் அவன்.

“நல்லா காச்சு. தம்பிக்கு ஆறின பிறகு தனிப்பால் குடுக்கோணும். எனக்குச் சீனி குறைவா போட்டு டீ ஆத்து. உனக்கு எப்பிடி விருப்பம்?”

செம்பை அவனிடமிருந்து வாங்கியபடி, “நான் பால் குடிக்கிறேல்ல. தேத்தண்ணி குடிப்பன்.” என்றுவிட்டுக் குசினிக்கு நடந்தாள் அவள்.

நாசுக்காக அவன் முகம் பார்ப்பதைத் தவிர்த்தாள். அப்படிப் பார்த்துப் பேச ஆரம்பித்தால் நெருங்கிவிடுவானோ என்கிற அச்சம் அவளைத் தள்ளியே நிறுத்தியது.

“விடியக்காலம வெறும் தேத்தண்ணியா? இல்ல, மா ஏதும் போட்டுக் குடிக்கிறனியா?” அவளின் செய்கை உணர்த்தும் குறிப்பை உணராமல் அவளோடு குசினிக்குள் கூட வந்தபடி வினவினான் அவன்.

சின்ன குசினி. மண்ணால் செய்யப்பட இரண்டு அடுப்புகள். அதன் அருகிலேயே இருந்து சமைப்பதற்கு ஏதுவாகப் பலகைக் கட்டை ஒன்று. இருந்தபடியே புழங்கக்கூடிய வகையில் ஒரு தட்டினை அடித்து, பாத்திரங்கள் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன.

இன்னொரு பக்கத்தில் கயிற்றில் விறகுக் கட்டைகள் தொங்கின. தண்ணீர் குடம், கெட்டில், கூடவே மா, சீனி, அரிசி வைத்திருந்த வாளிகள் என்று நிறைந்திருந்தது. அந்தக் குசினிக்குள் அவளோடு அவனும் நிற்பது அவளுக்கு மூச்சு முட்டும் உணர்வைத் தந்தது.

“இல்ல, அது பெரியம்மா நெஸ்டர்மோல்ட் போட்டு ஊத்தித் தருவா. ஆனா எனக்குத் தேத்தண்ணியே போதும்.” என்று அவனுக்கான பதிலைச் சொல்லியபடி, அங்கிருந்த பலகைக் கட்டையில் அமர்ந்து, பாத்திரத்தை அடுப்பில் வைத்துப் பாலை அதற்குள் ஊற்றினாள். அடுப்பினுள் விறகுகளைத் தள்ளி, காய்ந்த தேங்காய்த் தும்புகளை வைத்து நெருப்பை மூட்டினாள்.

“அப்ப, இப்ப மட்டும் தேத்தண்ணியக் குடி. பால் கேனை பால்பண்ணையில இறக்கிப்போட்டு, தோட்டத்துக்குப் போயிட்டு ஒரு எட்டு மணிபோலத் தம்பிய நேசரிக்குக் கூட்டிக்கொண்டு போக வருவன். அப்ப மா வாங்கிக்கொண்டு வாறன்.” என்றுவிட்டு வெளியே நடந்தான் அவன்.

அதன் பிறகுதான் மூச்சை இழுத்துவிட்டாள் அவள்.

பாலமுரளியிடம் பத்து மாடுகளும் ஐந்து கன்றுகளும் இருந்தன. கூடவே, இரண்டு ஆடுகள், கோழிகளும் வைத்திருந்தான். அவர்களின் காணி பெரிது என்பதால் அங்கேயே அதற்கான கொட்டில்கள் இருந்தன. அங்கு, மாடுகள் போட்டிருந்த சாணியை அள்ளி எருமேடையில் கொண்டுபோய்ப் போட்டான். கொட்டகைகளைத் தண்ணீர் அடித்துக் கழுவினான். மாட்டுக்கு வைக்கோலை எடுத்துப் போட்டுக்கொண்டிருக்கையில் டீயுடன் வெளியே வந்தாள் பல்லவி.

வெளி வாசலில் அவன் சொன்ன பால் கேன்கள் இருந்தன.

அவனை எப்படி அழைப்பது என்று தயங்கிவிட்டு, “டீ ஊத்திட்டன்!” என்றாள் மெல்லிய குரலில்.

அவனும் கைகளை அங்கிருந்த பைப்பில் கழுவிக்கொண்டு வந்தான். சாரமும் டீ- ஷேர்ட்டும் அணிந்திருந்தான். கால்கள் அதற்குள் அழுக்கேறியிருந்தன. நன்றாக வியர்த்திருந்தான். இப்படியே வீட்டுக்குள் வரப்போகிறானா என்று அவள் பார்க்க, அவளின் கையில் இருந்த கப்பை வாங்கிக்கொண்டு, வீட்டின் வெளியே இறக்கியிருந்த அந்தப் பத்தியின் தரையிலேயே அமர்ந்து பருகினான் அவன்.

தேநீரைப் பற்றி ஏதும் சொல்வானோ என்று நின்று பார்த்தாள் பல்லவி. அதைப் பற்றிய எண்ணமே இல்லாமல் தொடர்ந்து பருகியவனின் பார்வை, மாடுகளின் மீதுதான் இருந்தது.

அவள் உள்ளே செல்லத் திரும்ப, “எட்டு மணிபோல வருவன். சாப்பாடு குடுத்து, தம்பிய வெளிக்கிடுத்திவிடு. நேசரி பேக், தண்ணிப் போத்தல் எங்க இருக்கு எண்டு தம்பியே காட்டுவான். சாப்பாடும் கட்டி வை.” என்றது அவன் குரல்.

“ம் சரி.” என்றுவிட்டு உள்ளே சென்று தன் தேநீரோடு சமையலறையின் தரையிலேயே அமர்ந்துகொண்டாள் பல்லவி.

உறங்கி எழுந்ததில் சற்றே அமைதியடைந்திருந்த மனது, அவனுடைய ஏவலில் மீண்டும் கலைந்து போயிற்று. ‘இதையெல்லாம் அவனுக்கும் அவன்ர மகனுக்கும் செய்யத்தானே அவள் இந்த வீட்டுக்கு வந்திருக்கிறாள். படித்துப் பார்த்த வேலையைக் கூட விட்டுவிட்டு.’ நெஞ்சுக்குள் மீண்டும் பெரும் இரைச்சல்.

குறைந்தபட்சமாக அந்த வேலைக்குப் போவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தாலாவது இன்னும் கொஞ்சம் திடமாக இருந்திருப்பாள் போலும். அதையும் சேர்த்துப் பறித்ததில் முடமாகிவிட்டது போன்ற ஒரு உணர்வு அவளைப் போட்டுப் பந்தாடியது.

படித்து முடித்துத் தனியார் கிளினிக் ஒன்றில் வேலை கிடைக்கிற வரைக்குமான பல்லவிக்கு நிறையப் பயங்கள், ஒரு வகையான பாதுகாப்பிமின்மை, யாரையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத தயக்கம், என்னவோ ஆபத்தான உலகத்தில் வாழ்ந்துகொண்டிருப்பது போன்ற பிரம்மை எல்லாமே இருந்தன.

அதுவே, வேலை கிடைத்து, அதற்குப் போய்வர ஆரம்பித்து, அவளை யார் என்று தெரியாத மனிதர்களோடு பழக ஆரம்பித்த பிறகு, அவள் சற்றே தைரியசாலியாகவும், தன்னம்பிக்கை நிறைந்தவளாகவும், இனி ஏதோ ஒரு விடியல் வந்துவிடும் என்கிற நம்பிக்கை கொண்டவளாகவும் மாறியிருந்தாள்.

அவளின் சம்பளப் பணத்திலிருந்து தவகணேசனோ பானுமதியோ ஒரு ரூபாய் கூட எதிர்பார்த்தது இல்லை. ஆனால், உழைக்க ஆரம்பித்ததிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வீட்டுக்குத் தேவையானவற்றை மாதாமாதம் வாங்கிப் போட்டுவிடுவாள். நல்ல நாட்கள், கோயில் திருவிழாக்கள் என்றால் எல்லோருக்கும் உடைகள் எடுப்பாள். அது தவிர்த்து எஞ்சிய பணம் வங்கியில் சேர்ந்தது வேறு தனியான தெம்பை மனத்துக்குத் தந்திருந்தது.

இப்படி, தன் அவமானங்களில் இருந்து, காயங்களில் இருந்து, வலியில் இருந்து, தனக்குள்ளேயே ஒடுங்கிப்போயிருந்த மனத்தின் அழுத்தத்தில் இருந்து, முட்டையின் ஓட்டைப் பிரித்துக்கொண்டு மெல்ல மெல்ல வெளியே வரும் கோழிக்குஞ்சினைப் போன்று வெளிவரத் தொடங்கியவளை, மீண்டும் பழைய நிலைக்கே கொண்டுவந்து நிறுத்தியிருந்தது இந்தத் திருமணம்.

ஒருவிதப் பயமும், தன்னம்பிக்கை அற்ற நிலையும், அனைத்தின் மீதும் வெறுப்பும் என்று அவள் தன் அமைதியைத் தொலைத்திருந்தாள்.

திடீரென்று அவனுடைய புல்லட்டின் சத்தம் கேட்டது. இருந்த இடத்தில் இருந்தே எட்டிப் பார்த்தாள். அதே உடை, வியர்த்து வழிந்த தோற்றத்துடன் பால் கேன்களை ஏற்றிக்கொண்டு கேட்டைத் திறந்து அவன் போவது தெரிந்தது.

அதுவரை நேரமும் இருந்த இறுக்கம் அவன் போன பிறகுதான் அகன்றது. விதுரனை எழுப்பிவிடாமல் எழுந்து அந்த வீட்டினை நன்றாகச் சுற்றிப் பார்த்தாள்.

வீட்டின் பின்பக்கம் பெரிய பத்தி இறக்கி இருந்தார்கள். அதில் மழை நாட்களில் உடைகள் காயப்போடுவதற்குக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. அந்தப் பத்தியின் கீழே, ஒரு பக்கமாக விறகுக் கட்டைகளை அடுக்கியிருந்தான். இன்னொரு பக்கம் அவனுடைய புல்லட்டை நிறுத்தி வைப்பான் என்று தெரியும். ஒரு பழைய சைக்கிள் கவனிப்பாரற்றுச் சுவரோடு சாற்றி வைக்கப்பட்டிருந்தது. அருகிலேயே மண்வெட்டி, கோடரி, அலவாங்கு, வாளிகள் என்று பொருட்கள் இருந்தன.

பெரிய அறையினுள் ஒரு பக்கம் சுவாமிப் படங்கள் இருக்க, மற்றப் பக்கம் முழுவதிலும் நெல் மூட்டை, அரிசி மூட்டை, கௌப்பி, உளுந்து, பயறு என்று மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தன. அவளின் பெரியப்பா வீட்டிலும் இப்படித்தான். அடுத்த போகத்துக்கான விதைகளைக் கூட அங்குதான் கவனமாக வைத்து எடுப்பார்கள்.

அந்த அறை எப்போதுமே பூட்டி இருக்கும். நகைகள், பணம் எல்லாமே அங்கிருக்கும் ஒற்றைக் குட்டி கப்போர்ட்டினுள்தான் வைத்து எடுப்பார்களாம் என்று கலாவதி சொல்லியிருந்தார். அவளும் வெளியே வந்து, சத்தமில்லாமல் கதவைப் பூட்டி, திறப்பை எடுத்து வழமையாக அது இருக்கும் இடத்திலேயே வைத்தாள்.

மற்றையது இந்த இரண்டு நாட்களாக அவள் உறங்கி எழும் அறை. அங்குப் பெட்டியிலேயே இருந்த அவளின் உடைகளை எடுத்து அங்கிருந்த ஒற்றைக் கப்போர்டில் அடுக்கினாள். அது ஏற்கனவே கலாவதியின் சேலைகள், அவனுடைய உடைகள், விதுரனுடையவை என்று நிறைந்து வழிந்தது. அதில், நாளாந்தம் அணிந்துகொள்ளும் உடைகளை அறைக்குள் இருந்த கொடியின் மீது போட்டுவிட்டாள்.

‘இனி விதுரன எழுப்பினாத்தான் சரியா இருக்கும்.’ நேரத்தைப் பார்த்துவிட்டு எண்ணியவள் விறாந்தைக்கு வந்தாள். அங்கே அவன் இன்னுமே நல்ல உறக்கத்தில் இருந்தான். அருகில் சென்று, “விதுரன்!” என்று மெல்ல அழைத்தாள். அவன் எழும்பவில்லை. மீண்டும் மீண்டும் அழைத்துப் பார்த்தாள். அசையவே இல்லை என்றதும் தட்டி எழுப்பினாள். அப்போதும் சிணுங்கிவிட்டுப் புரண்டு படுத்தானே தவிர விழிக்கவில்லை.

‘இதென்ன இவன் இப்பிடிப் படுக்கிறான். நேரம் வேற போகுது.’ அவளுக்கு அவனை எப்படி எழுப்புவது தெரியவில்லை. கடைசியில், “விதுரன்! எழும்புங்கோ! நேசரிக்கு போறேல்லையா?” என்று அழுத்திச் சொல்லியபடி அவனை உலுக்கினாள்.

“என்ன படுக்க விடுங்கோ!” சிணுங்கியபடி அவளின் கையைப் பிடித்து வேகமாகத் தட்டிவிட்டான் அவன். சுள் என்று வலித்தது அவளுக்கு. “அவுச்!” என்றபடி கையை இழுத்துக்கொண்டாள்.

ஆயாசத்துடன் அவன் அருகிலேயே அமர்ந்துவிட்டாள். அவள் காத்திருக்கலாம். நேரம் காத்திருக்குமா? “விதுரன், இனிப் படுக்கேலாது. எழும்புங்கோ. ப்ச்! எழும்பச் சொல்லுறன் எல்லா. ம்ம்… கெதியா கெதியா எழும்பும்.” என்று அவனைப் பிடித்து இழுக்காத குறையாக எழுப்பி அமரவைத்தபோது அவளுக்கு மூச்சு வாங்கியது.

அப்போதும், “அப்பம்மா! என்னைப் படுக்க விடுங்கோ!” என்று கண்ணைக் கசக்கினான் அவன்.

error: Alert: Content selection is disabled!!