பல்லவி 7 – 2

இப்போது அவளுக்குப் பாவமாகப் போயிற்று. “அப்பம்மா சுவிஸுக்குப் போய்க்கொண்டு இருப்பா தம்பி. அங்க போனதும் உங்களோட கதைப்பா. இப்ப வாங்கோ, நாங்க முகத்தைக் கழுவிக்கொண்டு வருவம்.” கரிசனத்துடன் சொன்னபடி அவனைக் கிணற்றடிக்கு அழைத்துச் சென்றாள்.

அங்கே, குளிப்பதற்கு ஏதுவாகக் கிணற்றடியை மறைப்பதுபோல் தகரத்தினால் அடைக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு தூணில், கேன் ஒன்றினைப் பாதியாக வெட்டி, அதைக் கம்பி ஒன்றில் கோர்த்துத் தொங்கவிட்டிருந்தனர். அதற்குள் பிரஷ், பேஸ்ட், சோப், ஷாம்போ எல்லாமே இருந்தது. அதில், அவனுடையது எது என்று கேட்டு எடுத்து, கழுவி, பசையைப் போட்டுப் பற்களைத் தீட்டிவிட முயன்றாள். அதற்கு மறுத்து அதனை வாங்கிக்கொண்டான் அவன்.

சரி, அவனே தீட்டிக்கொள்வானாக இருக்கும் என்று பார்த்தால் பசையை மென்று விழுங்கினானே தவிர, பற்களைத் தீட்டவே இல்லை. உடைகள் தோய்ப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த சீமெந்துக் கல்லில் அமர்ந்திருந்து, பிரஷை வாய்க்குள் வைத்துக்கொண்டு தூங்கி வழிந்தான்.

“நான் தீட்டி விடவா?”

“ம்கூம் “ மறுத்துத் தலையை அசைத்துவிட்டு அப்படியே அமர்ந்திருந்தான் அவன்.

“தீட்டுங்கோ விதுரன். நேரம் போகுது.”

இரண்டு முறை சோம்பலுடன் அவன் கை அசைந்தது. அவ்வளவுதான். மீண்டும் பழைய நிலை. திரும்பவும் சொன்னாள். மறுபடியும் அதையேதான் செய்தான்.

“நேசரிக்கு போற ஐடியா இருக்கா இல்லையா? தாங்கோ, நான் தீட்டி விடுறன்.” வலுக்கட்டாயமாகப் பறித்து, ஒரு கையால் தாடையைப் பற்றி, மறுகையால் பிரஷை பற்றித் தீட்டினாள். பிரஷ் முரசில் எங்கோ முட்டிக்கொண்டதில், “ஆ…” என்று பெரிதாக அழத் தொடங்கினான் அவன்.

“அச்சோ… சொறி சொறி சொறியப்பு. தெரியாம பட்டுட்டுது.” என்றவளை அதன்பிறகு அவன் விடவே இல்லை. ஒரு வழியாக வாயைக் கொப்பளிக்க வைத்து, அவனைக் குளிக்கவார்க்க முனைய, அதற்கும் மாட்டேன் என்று மீண்டும் அழுதான் அவன்.

“குளிக்காம எப்பிடி நேசரிக்கு போறது? என்ன பழக்கம் இது?” அதட்டியபடி தண்ணீரை அள்ளி எதிர்பாராத நேரத்தில் அவன் மீது ஊற்றினாள். வீறிட்டு அழுதான் அவன். அயலட்டையில் இருக்கிறவர்கள் அவனுக்கு அவள் ஏதும் செய்துவிட்டதாக நினைத்துவிடுவார்களோ என்று பயந்துபோனாள் பல்லவி.

“என்ன பழக்கம் இது விதுரன்? இப்பிடியா கத்தி ஊரக் கூட்டுறது?”

அவள் சொல்வதை அவன் காதில் விழுத்துவதாகவே இல்லை. அவளுக்கும் சினமேறிற்று. அவன் அழுவதைப் பொருட்படுத்தாது விறுவிறு என்று அள்ளி ஊற்றினாள். அதற்கு விடமாட்டேன் என்று அவளை உதறுவதில் குறியாக இருந்தான் அவன். சிணுங்கிச் சினந்து, சோப் போடக்கூட விடமாட்டேன் என்று அடம் பிடித்தவனைச் சமாளித்து, குளிக்கவார்த்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாயிற்று.

பழக்கமே இல்லாத வேலை, பாலமுரளி வரமுதல் இவனைத் தயார் செய்துவிட வேண்டும் என்கிற பதற்றம், இவன் செய்கிற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊருக்கு அவலாகிவிடுவோமோ என்கிற பயம் என்று எல்லாமாகச் சேர்ந்து, அந்தக் காலை வேளையிலேயே சோர்ந்துபோனாள் பல்லவி.

உடைமாற்றி, முகத்துக்குப் பவுடர் போட்டு, தலையை வாரிவிட்டாள். அடுத்த நிமிடமே அதைக் கலைத்துவிட்டான் அவன். மீண்டும் வாரிவிட்டபோதும் அதுவே நடந்தது. அவனுக்குப் பிடிக்காதவற்றைப் பிடிவாதமாக அவள் செய்துவிட்ட கோபத்தை இதில் காட்டுகிறான் என்று விளங்கிற்று. போகும்போது பார்ப்போம் என்று விட்டுவிட்டாள்.

சுவாமி கும்பிட்ட பிறகு அவனுக்கு என்ன உணவு கொடுப்பது என்று அவளுக்குத் தெரியவில்லை. பாலை அருந்தக் கொடுத்தாள். அதைப் பத்து நிமிடங்களாக வைத்து அழகு பார்த்தான் அவன்.

“குடிங்கோ விதுரன், நேரம் போகுது.” என்று சொல்லிச் சொல்லியே அவளுக்கு வாய் வலித்தது. இப்படி எல்லாவற்றுக்கும் இவனோடு போராட்டமா என்று எரிச்சலும் சினமும் பொங்கிக்கொண்டு வந்தது.

“இப்ப குடிக்கப் போறீரா இல்லையா?” அவளின் அரட்டலில் பயந்து, ஒரேயடியாக வாய்க்குள் ஊற்றப் பார்த்து, கடைசியில் போட்டிருந்த சட்டை முழுவதிலும் கொட்டித் தீர்த்தான் அவன். முதுகில் இரண்டு வைத்தால் என்ன என்று வந்தது அவளுக்கு. அடக்கிக்கொண்டு, அவனை எழுப்பி அந்தப் பக்கம் விட்டுவிட்டு, அந்த இடத்தைத் துடைத்தாள். அவனைக் கூட்டிக்கொண்டு போய் நெஞ்சைத் துடைத்து, வேறு உடை மாற்றிவிட்டாள்.

“காலமைல(காலையில்) என்ன சாப்பிடுவீங்க? உங்கட அப்பம்மா என்ன செய்து தாறவா?” என்று அவனிடமே வினவினாள்.

வாயைத் திறக்காமல் உம் என்று அமர்ந்திருந்தான் அவன்.

“அச்சாப் பிள்ளை எல்லா, சொல்லுங்கோ. என்ன சாப்பிடுவீங்க?” அவள் பலமுறை கெஞ்சியத்தில் அவன் சற்று இறங்கி வந்தான்.

“அப்பம்மா பாணுக்கு பட்டரும் சீனியும் போட்டுத் தருவா. இல்லாட்டி, ஜாம் பூசித் தருவா. ம்… முட்டையும் பாணும், இடியப்பமும் சீனியும் ம்… புட்டும் வாழைப்பழமும்.” என்று யோசித்து யோசித்துச் சொல்லிக்கொண்டே போனான் அவன்.

“ஓ…” என்று கேட்டுக்கொண்டவளுக்கு இனி பிட்டு அல்லது இடியப்பம் அவிக்க நேரம் போதுமா என்கிற சந்தேகம் வந்தது. அவனும் வருவானே. அவனுக்கும் ஏதும் சாப்பிடக் கொடுக்க வேண்டுமே. நன்றாகச் சமைப்பாள். பானுமதி சொல்வதை எல்லாம் செய்துவைப்பாள். இருந்தும், காலைக்கு இது பகலுக்கு இது என்று பொறுப்பாக யோசித்துச் செய்த அனுபவம் இல்லாதவள் என்ன செய்வது என்று தெரியாது திணறினாள்.

சற்று யோசித்துவிட்டு, “பாணும் வாழைப்பழமும் எங்க வாங்கலாம்? இல்ல, உங்கட அப்பா வாங்கிக்கொண்டு வருவாரா?” என்று விதுரனிடமே வினவினாள்.

“பொன்னம்பலம் மாமான்ர கடைலதான் அப்பம்மா வாங்குறவா.”

“ஓ… உங்களுக்கு அந்தக் கடை தெரியுமா? நாங்க ரெண்டு பேரும் போய் வாங்கிக்கொண்டு வருவமா?”

கடைக்கு என்றதும் அவன் பலமாகத் தலையசைத்தான். அவளிடம் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு இருவருமாகப் புறப்பட்டனர். வீட்டை எப்படிப் பூட்டுவது, திறப்பு எங்கிருக்கிறது என்கிற அவளின் அனைத்துக் கேள்விகளுக்கும் விதுரனிடம் சரியான பதில்கள் இருந்தன. அந்த வீதியே அவளைப் பார்ப்பதுபோல் ஒரு உணர்வு அவளுக்கு. இயல்பாக நடக்க முடியாமல் கால்கள் பின்னின. எதையும் காட்டிக்கொள்ளாமல் அவன் கையைப் பற்றியபடி நடந்தாள்.

எதிரில் சைக்கிளில் வந்த ஒருவர் வேகத்தைக் குறைத்து, “ரெண்டு பேரும் விடிய வெள்ளன எங்க வெளிக்கிட்டாச்சு?” என்று வினவினார்.

“பாண் வாங்க.” யாரோ எவரோ என்று தெரியாததால் சிறு புன்னகையோடு சுருக்கமாகப் பதிலிறுத்துவிட்டு நடந்தாள் பல்லவி.

அவன் நடக்கவே மறுத்தான். அவளின் கையைப் பிரித்துக்கொண்டு ஓடுவதிலேயே குறியாக இருந்தான். “ஓடுறேல்ல. என்னோடயே வாங்கோ.” அவளின் அதட்டலுக்குச் செவிமடுக்காமல் ஓடப்பார்த்து, கடைசியில் புழுதி நிறைந்திருந்த அந்த வீதியில் விழுந்து எழுந்தவனைப் பார்த்தபோது, முதுகில் ரெண்டு வைத்தால் என்ன என்கிற அளவுக்கு மீண்டும் கோபம் வந்தது அவளுக்கு.

“இனியும் சொல்லுறது கேக்காம ஓடி விழுந்தா திருப்பியும் குளிக்கவாப்பன் சொல்லிப்போட்டன்.” அவனுக்குக் குளிக்கக் கள்ளம் என்று அறிந்து மிரட்டினாள்.

அது கொஞ்சமே கொஞ்சம் வேலை செய்தது. ஒரு வழியாகக் கடையைக் கண்டுபிடித்து, பாண், வாழைப்பழத்தோடு அவனுக்கு நேசரிக்குக் கொடுத்துவிடுவதற்கு ஏதுவாக நட்ஸ் போட்டு பேக் பண்ணிய பிஸ்கட்டுகளும் வாங்கிக்கொண்டு வந்தாள்.

error: Alert: Content selection is disabled!!