பல்லவி 8 – 1

அத்தியாயம் 8

விதுரனுக்குப் பாண் துண்டின் மீது பட்டர் பூசி, அதன் மேலே சீனியைத் தூவிக் கொடுத்தாள்.

“அப்பம்மா இன்னும் நிறையச் சீனி போட்டுத் தருவா.” என்றான் அவன்.

சரி என்று கொஞ்சம் தூவிவிட்டாள். அவன் அதுவும் போதாது என்றான். ‘இந்த மாமி என்ன பழக்கம் பழக்கி வச்சிருக்கிறா?’ என்று மெல்லிய கோபம் உண்டானாலும், “இப்பிடி நிறையச் சீனி சாப்பிட்டா வயித்துக்க பூச்சி வந்திடும் விதுரன்.” என்றவளுக்கு உண்மையாகவே அவனோடு அதற்குமேல் மல்லுக்கட்டத் தெம்பில்லை. அதில், அவன் விரும்பியது போலவே போட்டுக் கொடுத்தாள்.

அதனாலோ என்னவோ சத்தமில்லாமல் சாப்பிட்டான் அவன். என்ன, அதற்குள் போட்டிருந்த அடுத்த சட்டையும் சீனியால் நிறைந்து வழிந்தது. ஒன்றுமே கதைக்கவில்லை பல்லவி. வாங்கி வந்த பிஸ்கட்டுகளையும், இரண்டு வாழைப் பழங்களையும் அவனுடைய சாப்பாட்டுப் பெட்டியினுள் எடுத்து வைத்தாள். ஒரு வழியாக அவன் சாப்பிட்டு முடித்ததும் திரும்பவும் அழைத்துச் சென்று, முகம் கழுவி, மேல் சட்டையை மாற்றி, பவுடர் முகத்துக்குப் போட்டுவிட்டு, தலையை வாரி விட்டாள்.

அவனுக்கும் அவளை வேலை வாங்கியது போதும் போலிருந்தது போலும். அதற்குமேல் எந்தச் சேட்டையும் செய்யாமல் டீவியைப் போட்டுக்கொண்டு அமர்ந்துகொண்டான்.

இந்த மூன்று நாட்களாக அவளும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறாள். வீட்டில் இருக்கும் நேரம் முழுவதும் ஒன்றில் தகப்பனின் கைப்பேசியில் கேம் விளையாடுவான், இல்லையோ டீவி பார்ப்பான். இன்னும் கொஞ்ச நாட்களில் பள்ளிக்கூடம் போகப்போகிற பிள்ளைக்கு இது என்ன பழக்கம்? ஒருமுறை கூட எதையாவது அவன் எடுத்துப் படித்ததை அவள் காணவில்லை. டியூஷன் எதற்காவது செல்கிறானா என்றும் தெரியவில்லை. அவனுடைய தகப்பனும் இதையெல்லாம் கவனிப்பதாக இல்லை.

பாலமுரளியை இன்னும் காணோம். அவன் எப்போது சாப்பிடுவான் என்று தெரியாது. மெதுவாக விதுரனிடம் கேட்டுப் பார்த்தாள். தெரியாது என்று உதட்டைப் பிதுக்கிவிட்டு, “என்னை விட்டுட்டு அப்பா தோட்டத்துக்குப் போயிடுவார்.” என்றான் அவன்.

காலையில் சாப்பிட மாட்டானோ? எதற்கும் இருக்கட்டும் என்று இவள் வேகமாக ஒரு மூடி தேங்காயைத் துருவி, கை உரலில் சம்பலை இடித்து வைத்தபோது, விதுரன் எழுந்து வீட்டின் பின்பக்கம் ஓடினான்.

“எங்க போறீங்க?” என்றபடி பின்னால் விரைந்தாள் பல்லவி.

அவன் அங்குக் கழிவறைக்குச் சென்றான். சிறு சிரிப்புடன் திரும்பியவளுக்கு ஒரு நொடி திக் என்றது. ‘ஆர் இவனுக்குக் கழுவி விடுறது? நானா?’ அந்த எண்ணமே அவள் முகத்தைக் கோணலாக்கிற்று.

அவள் எண்ணியது சரிதான் என்பதுபோல் சற்று நேரத்தில், “நான் முடிஞ்சுது. கழுவி விடுங்கோ!” என்று குரல் கொடுத்தான் அவன்.

பல்லவிக்கு அழுகையே வரும்போல் இருந்தது. யாராவது அவளுக்கு முதல் அங்குப் போனாலே அடுத்த அரை மணி நேரத்துக்கு என்ன அவசரம் என்றாலும் போகமாட்டாள். அந்த நாற்றம் குமட்டும். ஆனால் இங்கு?

மனம் அருவருக்க வேறு வழியற்று அதற்கென்று இருந்த வாளியில் தண்ணீரை அள்ளிக்கொண்டு போனாள். மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு கழுவிவிட்டாள். இருந்தும் அந்த நாற்றம் உள்ளுக்குள் சென்று, அடிவயிற்றில் இருந்து பிரட்டிக்கொண்டு வந்தது. கையை ஒன்றுக்கு இரண்டு முறை நன்றாக சோப் போட்டுக் கழுவிக்கொண்டு வீட்டுக்குள் வந்தபோது பாலமுரளியும் வந்து சேர்ந்தான்.

“சாப்பிட்டாச்சா, வெளிக்கிடுவமா?” என்று மகனிடம் கேட்டுக்கொண்டே அவளிடம் ஒரு பையினை நீட்டினான். அதற்குள் இரண்டு நெஸ்டர்மோல்ட் மா டின்கள் இருந்தன.

அதை மறக்காமல் அவன் வாங்கி வந்தது, இவ்வளவு நேரமாக அவனுடைய மகனோடு பட்ட பாட்டுக்கு மெல்லிய இதம் சேர்த்தது. ஒன்றும் சொல்லாமல் வாங்கிக்கொண்டாள்.

விதுரனை புல்லட்டின் முன்பக்கம் ஏற்றிக்கொண்டு அவன் மீண்டும் புறப்பட, “நீங்க சாப்பிடேல்லையா?” என்றாள் பல்லவி.

“இண்டைக்கு வாழைக்குத் தண்ணி விடோணும். வெயிலுக்கு முதல் விட்டுட்டா சுகம். அந்த வேலைய முடிச்சுக்கொண்டு வாறன்.” என்றுவிட்டுப் புறப்பட்டான் அவன்.

பகலுக்கு என்ன சமைப்பது? அடுத்த கேள்வியாக அதுதான் வந்து நின்றது. அவன் சாப்பிட வரும்போது கேட்போம் என்று எண்ணிக்கொண்டு வீட்டினை ஒதுக்கிக் கூட்டினாள். அப்படியே விளக்குமாற்றினால் முற்றத்தைக் கூட்டி, வீட்டைச் சுற்றியும் கூட்டிவிட்டாள்.

இதையெல்லாம் முடித்தபோது முற்றிலுமாகக் களைத்துப் போயிருந்தாள் பல்லவி. அந்தளவில் அவளை ஒருவழியாக்கியிருந்தான் விதுரன். அப்பாடி என்று விறாந்தையின் தரையில் கால்களை நீட்டி அமர்ந்துகொண்டாள். தன்னைச் சுற்றி யாருமே இல்லாத அந்தத் தனிமை அவளுக்கு மிகவுமே பிடித்திருந்தது. இப்படியே இருந்துவிட முடிந்தால்?

அவளின் ஆசைகள் எல்லாம் நிறைவேறாதவை. பிறகு எப்படி இது மட்டும் நடக்குமாம்?

இந்த அம்மாவாவது அவளுக்காக உயிரோடு இருந்திருக்கக் கூடாதா? அப்படி அவர் இருந்திருக்க, இப்படி யாரோ ஒருத்தியின் கணவனுக்கும் மகனுக்கும் பணிவிடை செய்யும் நிலை வந்திராதே. அவருக்கு மகளாகவேனும் காலம் முழுக்க நிம்மதியாக வாழ்ந்திருப்பாள்.

இதையெல்லாம் யோசிக்க வேண்டாம் என்று நினைத்தால் இனி என்கிற கேள்வி வந்து நின்றது. விதுரனோடு மல்லுக்கட்டி, வீட்டை கூட்டி, முற்றத்தை கூட்டி, காலைக்குச் சமைத்து, பகலுக்குச் சமைத்து, இரவுக்கும் சமைத்து என்று நினைக்கையிலேயே மனதில் ஒருவிதச் சலிப்பும் வெறுமையும்.

பேசாமல் எழுந்து சென்று தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் தனக்குப் பிடித்த பதத்தில் நெஸ்டர்மோல்ட் மா போட்டுத் தேநீரை ஊற்றிக்கொண்டு வந்து மீண்டும் அமர்ந்தாள். தொலைக்காட்சியைப் போட்டுப் பார்த்தாள். மனம் அதில் ஒன்ற மறுத்தது. கைப்பேசியை எடுத்து யூ டியூப், பேஸ்புக், இன்ஸ்டா என்று எல்லா இடமும் அலைந்து திரிந்தாள். எதிலும் மனம் லயிக்க மறுத்தது. பேசாமல் சென்று அறையில் பாயை விரித்துப் படுத்துக்கொண்டாள்.

இப்படிப் பகலில் ஓய்ந்திருந்து பழக்கம் இல்லாததால் உறக்கம் வர மறுத்தது. ஆனாலும், விழிகளை மூடியபடி கிடந்தாள். சற்று நேரத்தில் புல்லட் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. கூடவே, அவன் கேட்டினைத் திறப்பதும். விழுந்தடித்துக்கொண்டு எழுந்து, பாயைச் சுருட்டி வைத்துவிட்டு, அறையை விட்டு அவள் வெளியே வந்தபோது, அவனும் வந்தான்.

கையில் இருந்த பையினுள் விளமீன் இருந்தது.

அதை அவளிடம் கொடுத்துவிட்டு, “சாப்பாட்டைப் போடு, குளிச்சிட்டு வாறன்.” என்றபடி நேரே கிணற்றடிக்கு நடந்தான்.

அதற்குள், நான்கைந்து சின்ன வெங்காயங்களை வெட்டிப்போட்டு, நல்லெண்ணெயில் முட்டையும் பொறித்து, முட்டை, சம்பல், பாண் என்று அவனுக்கு எடுத்து வைக்க அவனும் வந்து குசினியின் தரையில் அமர்ந்துகொண்டான்.

“பாண் ஆர் வாங்கினது?” தட்டில் இருந்ததைக் கவனித்துவிட்டு விசாரித்தான்.

“நானும் விதுரனும் போய் வாங்கிக்கொண்டு வந்தனாங்க.”

“காசு?”

“என்னட்ட இருந்தது.”

“வெளில போகேக்க கவனம். பெரிய அறை பூட்டியிருக்கா எண்டு பாத்துக்கொள். பின் கதவப் பூட்ட மறக்காத. இங்க கள்ளர், காடையர் எண்டு பயமில்லத்தான். எண்டாலும் கவனமா இரு.” என்றபடி உண்டான் அவன்.

“ம்ம்.” என்று கேட்டுக்கொண்டாள் அவள்.

“நீ சாப்பிட்டியா?” அவளை நிமிர்ந்து பார்த்து வினவினான்.

அதுவரை நேரமும் அவன் கேட்ட கேள்விகளுக்குச் சுருக்கமாகப் பதில் சொல்லிக்கொண்டிருந்தவள், இப்படித் திடீரென்று நிமிர்ந்து பார்ப்பான் என்று எதிர்பார்க்கவில்லை. அவன் விழிகளைச் சந்தித்ததும் தடுமாறினாள். நெஸ்டர்மோல்ட் அருந்தியதால் பசிக்கவில்லை என்று சொல்ல ஒரு மாதிரி இருக்க, “சாப்பிடப்போறன்.” என்று முணுமுணுத்தபடி, தனக்கும் ஒரு தட்டில் எடுத்துக்கொண்டாள்.

“தேத்தண்ணி ஏதும் வேணுமா?” அவனைப் பற்றி எதுவும் தெரியாததால் உணவு முடியும் தருவாயில் வினவினாள்.

“ஊத்து, குடிப்பம்.” என்றான் அவன். “கொஞ்சத்தால கோழிக்கூட்டைத் திறந்துவிடு. பின்னேரத்தில முட்டை இருக்கும். ஒவ்வொரு நாளும் பாத்து எடுத்துவை. ஒவ்வொரு திங்கக்கிழமையும் பொன்னம்பலம் ஐயா வந்து முதல் கிழமை காசத் தந்திட்டு, இருக்கிற முட்டையை எடுத்துக்கொண்டு போவார். குடுத்த முட்டை எத்தின, காசு எவ்வளவு எண்டுற கணக்கை, சுவாமிப் படத்துக்குப் பக்கத்தில ஒரு கொப்பி(நோட்டு) இருக்கும், அதில குறிச்சு வை. அந்தக் காச நீ உன்ர செலவுக்கு வச்சுக்கொள்.” என்றான் அவன்.

தலையை அசைத்துக் கேட்டுக்கொண்டாள் அவள்.

மீண்டும் கத்தரித் தோட்டத்துக்குப் போவதாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன். ஒரு நாளைக்கு அதற்கு நான்கு அல்லது ஐந்து முறைகள் போகவேண்டுமாம். இல்லையோ, அத்தனை கத்தரிகளையும் குரங்கு கடித்துவிடுமாம். ஒன்றுவிட்ட நாளைக்குக் கத்தரிக்காயை ஆய்ந்து சந்தைக்குக் கொடுப்பானாம். எல்லாம் அவன் சொன்னதுதான்.

பகல் சமையலையும் முடித்துவைத்தாள். அவன் விதுரனோடு வந்தபோது இருவருக்கும் போட்டுக்கொடுத்தாள். விதுரனின் சாப்பாட்டை அவன் கவனித்துக்கொண்டதில் இந்த முறை அவள் தப்பித்துக்கொண்டாள்.

ஆனால், தரை முழுவதும் கொட்டி, ஒவ்வொரு வாய்க்கும் தண்ணீர் குடித்து, தகப்பனின் தட்டிலும் கையை வைத்து என்று, அவன் சாப்பிடும் அழகையும், அதற்கு ஒன்றுமே சொல்லாமல் அவனுக்கேற்ப அசைந்துகொடுத்த பாலமுரளியையும் பார்த்தபோது, என்ன பிள்ளை வளர்ப்பு என்றுதான் தோன்றிற்று.

உண்ட களைக்கு மகனோடு கொஞ்ச நேரம் உறங்கினான் பாலமுரளி. தினமும் இரவில் குறைந்தது இரண்டு முறையாவது தோட்டத்துக்குச் சென்று குரங்கு கலைக்க வேண்டும் என்பதில், இப்படிப் பகல் பொழுதில் சற்றுக்குச் சரிந்து எழும்புவான். பல்லவிக்கு அது பழக்கமில்லை.

ஆனால், அவனும் இருக்கையில் விழித்திருந்து செய்வது என்ன என்றும் தெரியவில்லை. அதில், அவளும் அறைக்குள் சென்று முடங்கிக்கொண்டாள். மீண்டும் ஒரு தேநீரோடு எழுந்து, மாடுகளை அழைத்துக்கொண்டு குளத்துக்கு நடந்தான். அவற்றைக் கழுவிவிடப் போகிறான் என்று விளங்கிற்று.

விதுரன் அயலட்டையில் இருக்கும் அவனுடைய நண்பர்களோடு வீதியில் பந்து விளையாட ஆரம்பித்தான்.

பக்கத்துவீட்டில் இருக்கும் சுதா இது தினமும் நடப்பதுதானாம் என்றாள். ஊரின் உள்ளே அவர்கள் இருப்பதால் வாகனங்கள் வேகமாக வரும் என்கிற பயம் இல்லையாம். இந்த உள் வீதிகளைப் பயன்படுத்துகிறவர்களுக்கும் இப்படிப் பிள்ளைகள் விளையாடுவது தெரியும் என்பதால் அவர்களும் கவனமாகத்தான் வருவார்களாம். அவளுக்கு விதுரனின் வயதில் ஒரு மகனும் இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்களாம் என்றாள்.

error: Alert: Content selection is disabled!!