காலையில் என்ன நடந்தது என்று சுதா விசாரிக்கவும், அவள் எண்ணியதுபோல் ஊருக்கே கேட்டிருக்கிறது என்று பயந்துபோனாள் பல்லவி. பெறாத பிள்ளைக்கு அன்னையாகியிருக்கிறாள். இந்த ஊருலகம் நரம்பில்லா நாக்கினால் இலகுவாக அவளைக் கொடுமைக்காரியாக்கிவிடுமே. வேகவேகமாக நடந்ததைச் சொல்லவும் சுதா சிரித்தாள். அவன் அப்படித்தானாம்; தாயில்லாப் பிள்ளை என்பதால் அளவுக்கதிகமான செல்லமாம்; கலாவதி அம்மா அவனுக்கேற்ப நைச்சியமாக நடந்துகொள்வாராம் என்று சற்று நேரத்துக்கு இவளோடு கதைத்துக்கொண்டு இருந்துவிட்டுப் போனாள் அவள்.
கலாவதியின் விமானம் இரண்டு மணித்தியாலம் பிந்தித்தான் கொழும்பில் இருந்து புறப்படுகிறதாம் என்று இவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்துகொண்டு இருந்தபோது அழைத்துச் சொல்லியிருந்தார் அவர். கட்டாரில் ஆறு மணித்தியாலம் நின்றுதான் சுவிஸ் நாட்டுக்கான விமானம் ஏற வேண்டும். ஆக, எப்படியும் அவர் அங்குச் சென்று இறங்க இரவாகிவிடும். அதில் அவரோடு பேசமுடியாது.
தாரணிக்கு அழைத்து அங்கத்திய வீட்டு நிலவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டாள். இவளைக் குடும்பத்தோடு வந்து செல்லுமாறு அழைத்தாள் அவள். இன்னும் விருந்துக்கும் வரவில்லை என்றாள். அவளுக்கும் என்னவோ நிறைய நாட்களாக அங்குச் செல்லவே இல்லாதது போன்றும், உடனேயே போகவேண்டும் போன்றும் பெரும் ஆவல் எழுந்தது.
ஆனால், எதையும் அவள் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாதே. அவளுக்குக் கணவனாகிப்போனவனிடம் கேட்க வேண்டும். அப்படிக் கேட்கவும் விருப்பம் வரமாட்டேன் என்றது. விரைவில் வருவதாகச் சொல்லிச் சமாளித்துவிட்டு வைத்தாள்.
ஆறு மணி தாண்டியும் விதுரன் வீட்டுக்கு வரவில்லை. இதுதான் நடைமுறையா அல்லது அவள் என்றபடியால் விளையாட்டுக் காட்டுகிறானா என்று ஒன்றும் விளங்கவில்லை. வீதிக்குச் சென்று பார்த்தாள். முதல் போல் நிறையப் பிள்ளைகள் இல்லை. இவனோடு இன்னும் இருவர்தான் நின்றனர்.
“விளையாடினது காணும், வாங்கோ!” என்று அழைத்தாள். அவன் காதில் விழுத்தாமல் வேலியில் நின்ற ஏதோ ஒரு கொடியைப் பிடித்து இழுத்துக்கொண்டிருந்தான்.
“விதுரன், சொல்லுறது கேக்கேல்லையோ. இருட்டுது எல்லா, வாங்கோ போவம்.” என்று மீண்டும் அழைத்தாள். காலையில் நடந்ததைப் பற்றிச் சுதா விசாரித்ததில் இருந்து விதுரனிடம் கோபப்படவும் பயந்தாள். யாராவது அவளைப் பிழையாக நினைத்துவிட்டால்? கொடுமை செய்வதாக எண்ணிவிட்டால்? இவனாவது சொல்வதைக் கேட்கிறானா? அதுவும் இல்லை. மனம் கலங்கித் தவித்தது.
“கதைக்கிறது காதுல விழுதா இல்லையா விதுரன்?” என்றாள் மீண்டும்.
அப்போதும் அவன் செவி சாய்ப்பதாக இல்லை. மற்றப் பிள்ளைகள் வேறு இவர்களைத்தான் கவனித்தனர். அது வேறு அவளுக்குச் சங்கடத்தைத் தந்தது. கொஞ்சம் கூட மதிக்கிறான் இல்லையே. அருகில் சென்று, “வீட்டுக்கு வரச் சொல்லி எல்லா சொன்னனான்!” என்று குரலைத் தணித்து அதட்டினாள்.
“இன்னும் கொஞ்சம் விளையாடப்போறன்.” அவள் முகம் பாராமல் அறிவித்தான் அவன்.
“சரியா அஞ்சு நிமிசம் டைம் தருவன். நீரா வரவேணும். இல்லையோ தெரியும்.” என்றுவிட்டு வந்தாள்.
அவள் கொடுத்த ஐந்து நிமிடங்கள் பத்தாகியும் அவன் வரவில்லை. மீண்டும் சென்று வீதியில் பார்த்தாள். அவன் மட்டுமே மண்ணில் விளையாடிக்கொண்டிருந்தான். ஒன்றும் சொல்லாமல் விறுவிறு என்று சென்று அவன் முன்னால் நின்றாள். அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டுத் தன் விளையாட்டைத் தொடர்ந்தான் அவன்.
“எழும்புங்கோ விதுரன்.”
“…”
“நல்லா இருட்டிப்போட்டுது. உங்கட அப்பா வரப்போறார். எழும்பி வாங்கோ.”
அப்போதும் அவன் பொருட்படுத்தினான் இல்லை.
“விதுரன், இப்ப நீர் வரோணும். இல்லையோ இண்டைக்கு இரவு முழுக்க வீட்டுக்க வரமாட்டீர்.” என்றாள் மிரட்டலாக.
அது கொஞ்சம் வேலை செய்தது. அப்போதும் உன் மிரட்டலுக்கு நான் அடங்கமாட்டேன் என்று சொல்வதுபோல ஆடி அசைந்துதான் எழுந்தான். வீதியில் கிடந்த கல்லைக் காலால் தட்டித் தட்டித்தான் வந்து சேர்ந்தான்.
அவனுக்கு உடம்பு கழுவி முடிப்பதற்குள் மீண்டும் ஒரு போராட்டம் போராடி முடித்தாள் பல்லவி. உணவைப் போட்டுக் கொடுத்தாள். அதைத் தரை முழுவதிலும் சிந்தினான். கவனம் முழுவதும் தொலைக்காட்சியில்தான். உணவுக்கு மரியாதையும் இல்லை; சாப்பாட்டில் கவனமும் இல்லை. தன்னுடைய பொறுமையின் உச்சத்தைப் பயன்படுத்தி அவனுடைய இரவுணவை முடித்தாள் பல்லவி.
நேரம் இரவு ஒன்பதை நெருங்கியிருந்தது. படுக்கச் சொன்னாள். பாயை விரித்துப் படுத்துக்கொண்டு அப்போதும் தொலைக்காட்சிதான் பார்த்தான். “டீவிய நிப்பாட்டிப்போட்டுப் படுங்கோ விதுரன். நேரத்துக்குப் படுத்தாத்தானே நாளைக்கு நேரத்துக்கே எழுப்பலாம்.” என்றவளின் பேச்சை அவன் மதிக்கவில்லை.
ஒரு வழியாகப் பாலமுரளியும் வந்து சேர்ந்தான். கையோடு வாங்கிவந்த தின்பண்டத்தை மகனுக்குக் கொடுத்தான். அவனும் படுக்கும் பாயில் இருந்தே அதைச் சாப்பிட்டான். பல்லவிக்கு அப்பா, மகன் இருவரிலும் பற்றிக்கொண்டு வந்தது.
ஆனாலும், வாயை மூடிக்கொண்டு இருந்தாள். நேராகக் கிணற்றடிக்குச் சென்று அவன் குளித்துவிட்டு வந்தபோது, உணவைப் போட்டுக் கொடுத்துத் தானும் உண்டு முடித்துப் பாத்திரங்களையும் ஒதுக்கி வைத்தாள்.
இன்றைக்கு அவன் சொல்லாமலேயே அறைக்குள் புகுந்துகொண்டாள். அவனும் விறாந்தையில் மகனுடன் எப்போதும்போல் சரிந்துகொள்ளவும் அப்பாடி என்று இருந்தது அவளுக்கு.
தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருந்த இரவு நேரத்துக்கு இனிமை சேர்க்கும் பாடல்கள் இவள் காதிலும் விழுந்தன. விழிகளை மூடி அதில் லயித்திருந்தவள் எப்போது என்று தெரியாமல் நன்றாக உறங்கிப்போனாள்.
திடீரென்று யாரோ தன்னை அணைப்பது போலிருக்கவும் பதறி விழிகளைத் திறந்தாள். கண்ணெதிரில் தெரிந்த பாலமுரளியின் முகத்தைக் கண்டு திகைத்து, “எ…என்ன?” என்றவளின் இதழ்கள் நோக்கிக் குனிந்தான் அவன். பயத்துடன் விழிகளை இறுக்கி மூடிக்கொண்டாள் பல்லவி.
அவன் ஒன்றும் மோசமாக அவளைக் கையாளவில்லை. இதமாய், பொறுமையாய், இயல்பாய்த்தான் முன்னேறினான். அவளின் கூச்சங்களையும் தடைகளையும் சின்ன சிரிப்புடன் முறியடித்து, அவளே உணராவகையில் நெருக்கத்தைக் கூட்டினான். அவனிடம் தெரியும் கடினத் தன்மைக்கும் அவன் காட்டும் இந்த மென்மைக்குமிடையில் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்.
ஆனாலும் கூட அவனோடு ஒன்ற முடியவில்லை அவளுக்கு. அவன் விலகியபோது அவள் விழிகளினோரம் கண்ணீர்த் துளிகள் வழிந்து ஓடிற்று. அதன் பிறகும் அவளருகிலேயே அவன் உறக்கத்தைத் தொடர்ந்தபோது, அசையக்கூடப் பயந்து கண்களை மூடிக்கொண்டு கிடந்தாள். மனம் மட்டும் விழித்துக்கிடந்து ஹோ என்று இரைச்சலிட்டுக் கத்தியது.
நல்ல உறக்கத்தில் இருந்தான் பாலமுரளி. அப்போது அவன் கைப்பேசி அழைத்தது. பெரும் சிரமப்பட்டு விழிகளைத் திறந்து அழைப்பை ஏற்றான்.
“தம்பி, நான் அம்மா அப்பு. நல்லபடியா ரூபாட்ட வந்து சேர்ந்திட்டன். அதச் சொல்லத்தான் எடுத்தனான். உங்க ஒரு பிரச்சினையும் இல்லையே? வீட்டுக்குச் சுகமா போயிட்டியளோ? விதுக்குட்டி என்ன செய்றான்? அழுதவனோ?” என்று மூச்சுவிடாமல் கேள்விகளைக் கேட்டார் அவர்.
“அதெல்லாம் நல்லபடியா வந்தாச்சம்மா. முதல், இஞ்ச என்ன பிரச்சினை வரக்கிடக்கு? தம்பிக்குக் கொஞ்சம் மனம் சரியில்ல. கார் வாங்கிக் குடுத்து சமாளிச்சிட்டன். உங்களுக்கு அங்க கட்டார்ல மாறி ஏறேக்க, சுவிஸ் ஏர்போர்ட்ல எல்லாம் ஓகேயா இருந்ததா? பயமில்லாம போயிட்டீங்களா?” அருகில் அவள் உறங்கிக்கொண்டிருந்ததில் குரலைச் சற்றுத் தணித்துப் பேசினான் பாலமுரளி.
“ஓ! ஒரு பிரச்சினையும் இருக்கேல்ல. உங்க கொழும்பில ஏறேக்க பயமாத்தான் இருந்தது. ஆனா, என்னோட நிறையத் தமிழாக்கள் வந்தவே. கட்டார்ல இறங்கேக்க அவயலோட பழகிட்டன். அங்க நிண்ட ஆறு மணித்தியாலமும் கதிரைல(நாற்காலி) நல்ல நித்திரை. கட்டார்ல இருந்து சுவிஸ் வரேக்க எனக்குப் பக்கத்தில ஒரு தமிழ் தம்பிதான் இருந்தவர். சாப்பாடு, தண்ணி வெண்ணி எல்லாம் அவரே அந்தப் பெட்டையளிட்ட கேட்டு வாங்கித் தந்தவர். இங்க சுவிஸ் ஏர்போர்ட்லயும் அவர்தான் எல்லா உதவியும் செய்தவர். உங்க திரும்பி வரமுதல் அந்தத் தம்பி வீட்டுக்கு ஒருக்கா போகவேணும் எண்டு நினைச்சிருக்கிறன். ரூபா அவரின்ர நம்பர் வாங்கினவள்.” என்ற அன்னையின் குரலில், இங்கிருந்து புறப்படும்போது இருந்த கலக்கம் மாறி, ஒரு வெளிநாட்டுப் பயணத்தை நல்லபடியாக அனுபவித்துவிட்ட உற்சாகமும் மகளைப் பார்த்த சந்தோசமும் அப்படியே தெரிந்தது கண்டு நிறைவாக உணர்ந்தான் பாலமுரளி.
“அப்பிடியே ஒருக்கா பல்லவிட்டயும் குடப்பு. நல்லபடியா வந்திட்டன் எண்டு சொல்லிப்போட்டு வைக்கிறன். கலியாணம் கட்டி வந்த பிள்ளையை அடுத்த நாளே விட்டுட்டு வந்தது எனக்கு மனமே சரியில்ல.” என்றார் கலாவதி.
“ம்… பொறுங்க அவளை எழுப்புறன்.” என்றவன், இன்னுமே நல்ல உறக்கத்தில் இருந்தவளை, “பல்லவி பல்லவி.” என்று தட்டி எழுப்பினான்.
“ம்… என்ன?” உறக்கம் கலையாமால் கேட்டாள் அவள்.
“அம்மா கதைக்கவாம். சுவிஸுக்கு போய்ட்டாவாம்.” என்று அவளிடம் சொல்லிவிட்டு, “எழும்பிட்டாள், கதைங்கம்மா.” என்றபடி அவளிடம் கைப்பேசியைக் கொடுத்தான்.
“ஹலோ மாமி…”
“அது ஆச்சி ஒண்டுமில்ல. நீங்க படுங்கோ. நான் நல்லபடியா வந்து சேர்ந்துட்டன். அதுதான்… எனக்கு நல்ல சந்தோசம் அம்மா. வேற என்ன? நான் வைக்கிறன். நாளைக்கு எடுக்கிறன்.”
முற்றிலுமாக உறக்கம் தெளியாத பல்லவிக்கு அவரின் குரலில் தொனித்த அளவுக்கதிகமான உற்சாகம் ஏன் என்று விளங்கவே இல்லை. இதற்கா என்னை எழுப்பினார்கள் என்று குழம்பினாள். எதையும் காட்டிக்கொள்ளாமல், “சரி மாமி.” என்று உறக்கம் கலையாத குரலில் சொல்லிவிட்டு, கைப்பேசியை அவனிடம் கொடுத்தாள்.
“சொல்லுங்கம்மா.”
“வேற என்னய்யா? உங்கட நித்திரையைக் குழப்பிப்போட்டன். நீங்க படுங்கோ. நான் நாளைக்கு எடுக்கிறன்.” என்று அவன் பதிலைக் கூட எதிர்பாராமல் அழைப்பைத் துண்டித்தார்.
பாலமுரளிக்கு ஒன்றுமே விளங்கவில்லை. நல்லமாதிரி பேசிக்கொண்டிருந்த அம்மாவுக்கு ஏன் இவ்வளவு அவசரம்? அதைவிட, அவர் குரலில் ஏன் அவ்வளவு சந்தோசம்? ‘என்னவோ ஆருக்குத் தெரியும்?’ கைப்பேசியை மீண்டும் தலைமாட்டில் வைத்துவிட்டு உறங்க முற்பட்டவனுக்கு அப்போதுதான் மின்னல் வெட்டியது.
பார்வையைத் திருப்பி அருகில் படுத்திருந்தவளைப் பார்த்தான். அமைதியான முகம் கோட்டோவியமாய் அந்த இருளில் தெரிந்தது. சிறு சிரிப்புடன் திரும்பி மீண்டும் அவளை அணைத்தான்.

