பல்லவி – 9

அத்தியாயம் 9

இதோடு மூன்றாவது முறையாக அறைக்குள் வந்து எட்டிப் பார்த்தான் பாலமுரளி. நேற்று அவனுடைய நடமாட்டத்துக்கே எழுந்துவிட்டவள் இன்றைக்கு அடித்துப்போட்டது போல் உறங்கிக்கொண்டிருந்தாள்.

காரணத்தைத்தான் அவன் அறிவானே. அதனாலேயே அவனுக்கும் அவளை எழுப்ப மனம் வரவில்லை. இன்றைக்கு அவன் எழும்பியதும் பிந்தித்தான் என்பதில் எல்லா வேலைகளையும் வேக வேகமாகப் பார்க்கவேண்டியிருந்தது. அதற்கு நடுவில்தான் அவளையும் வந்து வந்து பார்த்துக்கொண்டு போனான்.

இப்போதும் அவளாக விழிக்கிறவரைக்கும் தொந்தரவு செய்ய மனமில்லை. ஆனால், அவன் பண்ணைக்குப் போகவேண்டும். அவள் விதுரனைக் கவனிக்கவேண்டும். பாலை அவனே காய்ச்சிவிட்டான். இருந்தாலும், காலைச் சாப்பாட்டை அவள்தான் பார்க்க வேண்டும்.

கிணற்றடியில் நான்கைந்து வெற்றிலைக்கொடிகள் வைத்திருந்தான். அவை, அருகில் நின்ற மரங்களில் படர்ந்து, காடுபோல் வளர்ந்து நின்றது. அவற்றிலிருந்து இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வெற்றிலை இலைகளை வெட்டிக் கொடுப்பான்.

இருநூறு இலைகளாகச் சேர்த்து வாழை நாரில் கட்டிவைத்தால் வந்து எடுத்துக்கொண்டு போவார்கள். இல்லையோ, அவனே கொண்டுபோய்க் கொடுப்பான். அந்த வேலையை அவளிடம் கொடுக்கவேண்டும் என்று எண்ணியிருந்தான். இப்போதோ அதையும் அவன்தான் செய்யவேண்டி வரும்போல் இருந்தது.

ஆக, இனியும் விடமுடியாது என்கிற அளவுக்கு நேரம் போயிருந்தது. அவளருகில் சென்று, “பல்லவி!” என்று மெதுவாகத் தட்டினான்.

“ம்…” யாரோ எங்கோ தொலைவில் இருந்து அழைப்பதுபோல் கேட்க, புரண்டு படுத்தாள் அவள்.

“எழும்ப இல்லையா? நல்லா நேரம் போயிட்டுது. நான் பண்ணைக்குப் போகோணும்.” அவன் அவளைப் பிடித்து மெலிதாக அசைக்கவும்தான் அடித்துப் பிடித்துக்கொண்டு எழுந்து அமர்ந்தாள்.

அவன் வெகு அருகில் அமர்ந்திருந்ததும், அவளைப் பற்றி உலுக்கி எழுப்பியதும் அதிர்ச்சியாய் உள்ளே இறங்கும்போதே, நேற்றைய இரவு நினைவில் வந்து நின்றது. மனத்தில் சுருக்கென்று ஒரு வலி. அதை மறைக்க வேகமாக எழுந்து, “முகம் கழுவிக்கொண்டு வாறன்.” என்றபடி கிணற்றடிக்கு ஓடினாள்.

‘அத முகத்தைப் பாத்துச் சொல்லிப்போட்டுப் போனா என்னவாம்?’ என்று அவன் மனம் சுணங்கிற்று. கூச்சப்படுகிறாள் போலும் என்று எண்ணிக்கொண்டு வெற்றிலைகளைப் பறிக்கச் சென்றான்.

வேகமாக முகம் கழுவி, அறைக்கு ஓடிவந்து, பாயைச் சுருட்டி எடுத்து வைத்தாள். தலையை வாரிப் பொட்டு வைத்துக்கொண்டு, சுவாமிப் படங்களின் முன்னே சென்று நின்றபோது, விழிகள் கரித்துக்கொண்டு வந்தன. நெஞ்சு வெடிக்கும் போல் இருந்தது. ஆழ்ந்த மூச்சுகளை இழுத்துவிட்டுத் தன்னைச் சமன் செய்துகொண்டு சமையல் கட்டுக்கு விரைந்தாள்.

பால் காய்ச்சப்பட்டிருந்ததைக் கண்டு மெலிதாக வியந்தாள். அதை மீண்டும் சூடாக்கி, அதில் தேயிலைச் சாயத்தை விட்டு, சீனி குறைவாகப் போட்டு, பால் தேநீராக ஆற்றி எடுத்துக்கொண்டு வாசலுக்கு நடந்தாள்.

“தேத்தண்ணீ.” வரவே மாட்டேன் என்ற குரலை வரவழைத்துக் குரல் கொடுத்தாள்.

‘அதென்ன தேத்தண்ணி எண்டு மொட்டையா? பெயரைச் சொல்லிக் கூப்பிட மாட்டாளாமா?’ நேற்றைய இரவு அவனுக்குள்ளும் சில எதிர்பார்ப்புகளை அதுபாட்டுக்குத் தோற்றுவித்தது. ஆனாலும், அவள் இங்கே பொருந்திக்கொள்வதற்கு அவகாசம் கொடுக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டு, “இஞ்ச கொண்டுவா.” என்றான் அவன் கிணற்றடியில் நின்று.

பல்லவியும் கொண்டுபோய் நீட்டினாள். அதை வாங்கிப் பருகியபடி அவள் முகம் பார்த்தான். இப்போதும் அவன் விழிகளைச் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டு, அவன் வெட்டி வைத்திருந்த வெற்றிலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.

நல்ல அடர்ந்த பச்சை நிறத்தில், பெரிய பெரிய இலைகள் பளபள என்று கண்களைப் பறித்தன. வெற்றிலைகள் இத்தனை அழகானவை என்று இன்றுதான் கவனித்தாள்.

“இந்த வேலைய உனக்குத் தருவம் எண்டு நினைச்சன். நீ எழும்ப லேட். அதான் நான் செய்றன்.”

அவன் என்னவோ சாதாரணமாக, அவளோடு பேச்சை வளர்க்கும் நோக்கில்தான் சொன்னான். அவளுக்குப் பிந்தி எழும்பியதாலும், ஏன் பிந்தி எழும்பினாள் என்கிற காரணத்தினாலும் முகம் கன்றியது. அவன் வெட்டி வைத்திருந்த இலைகளை ஒன்றாக அடுக்கியபடி, “நீங்க கட்டிவச்சிருக்கிற மாதிரியே கட்டவா?” என்று வினவினாள்.

பத்து பத்து இலைகளாக மாற்றி மாற்றி அடுக்கி வைத்து, ஒவ்வொரு நூறு இலைகளையும் எப்படி வாழை நாரைக்கொண்டு கட்டவேண்டும் என்று காட்டிக் கொடுத்துவிட்டு, “இண்டைக்கு நான் செய்றன். நாளண்டைல(நாளை மறுநாள்) இருந்து ரெண்டு நாளைக்கு ஒருக்கா இந்த வேலைய நீ பார். இப்ப போய்த் தேத்தண்ணியக் குடி.” என்று சொல்லி அவளை அனுப்பிவைத்தான் அவன்.

விட்டால் போதும் என்று ஓடிவிட்டாள் பல்லவி. எப்படித்தான் அவனால் அவளின் முகம் பார்த்து இயல்பாகப் பேசமுடிகிறதோ தெரியவில்லை. முதலே திணறுவாள். நேற்றைய இரவுக்குப் பிறகு அவன் கண்களைச் சந்திப்பதை நினைத்தாலே அவளுக்கு வியர்த்தது.

ஒரு நெஸ்டர்மோல்ட் தேநீரை ஊற்றிச் சமையல் கட்டில் இருந்தே பருகினாள். அருந்திய தேநீர்க் கோப்பையைக் கொண்டுவந்து தந்துவிட்டு, வெற்றிலையையும் பால் கேன்களையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான் பாலமுரளி.

அவன் விழிகள் ஒருவித ஆராய்ச்சியுடன் அவள் மீது படிந்து விலகியதை உணர்ந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை அவள்.

பிட்டு அவித்து, சம்பல் அரைத்து, மிளகாய் பொரித்து, விதுரனுக்குப் பருப்பில் ஒரு பால் கறியும் விறுவிறு என்று செய்துவைத்தாள்.

இனி அவனை எழுப்பவேண்டும். அதை நினைத்தாலே அவளுக்கு மூச்சு வாங்கியது.

ஒரு நெடிய மூச்சுடன் எழுந்து சென்று எழுப்பினாள். நேற்றையை விடவும் இன்றைக்கு இன்னுமே சிரமம் கொடுத்தான் அவன். போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு அசைய மறுத்தான். முதுகில் தட்டி எழுப்பினால் அவளுக்கு அடித்தான். மெல்லிய கை சுளீர் என்று அவள் கையில் விழுகையில் நன்றாகவே வலித்தது. அதைத் தாங்கிக்கொண்டு எழும்பச் சொல்ல, “என்னைப் படுக்க விடுங்கோ!” என்று அடிக்குரலில் கத்தினான்.

இவன் ஏன் அடுத்த பத்து வீட்டுக்குக் கேட்கும் அளவிற்குக் கத்துகிறான் என்று பயந்தாள் பல்லவி. அதேநேரம், அவனுடைய இந்தச் சேட்டைகளுக்கு அடங்கிப் போகக்கூடாது என்று அறிவு உணர்த்தியது. ஒரு முறை பயந்தோ, அடங்கியோ காட்டிவிட்டால் அதையே தன் ஆயுதமாகப் பயன்படுத்திக்கொள்வான்.

கடைசியில், “அகப்பைக் காம்பை எடுத்துக்கொண்டு வந்து முதுகில ரெண்டு போட்டு விட்டுடுவன். எழும்பும் கெதியா! இன்னும் ஆறு மாதத்தில பள்ளிக்கூடம் போகோணும். என்ன பழக்கம் இது?” என்று அவள் குரல் உயர்த்தவும்தான் எழுந்தான்.

நேற்றுப் போலவே பல்லுத் தீட்டுவதற்குப் போராட்டம், நாக்குத் தேய்ப்பதற்குப் போராட்டம், குளிக்க வைக்க அவளால் முடியவே இல்லை. கடைசியில் அவளையும் சேர்த்து நனைத்துத்தான் குளித்தான்.

நேற்றுக் கற்றுக்கொண்ட பாடத்தில் இன்றைக்கு அவள் உடையைப் போட்டு விடவில்லை. ஒரு காற்சட்டையோடே அமர்த்தி வைத்துப் பாலைக் கொடுத்தாள். பெரும் பாடுபட்டுக் குடித்து முடித்தான் அவன். பிட்டும் பருப்பும் என்றதும் பசிக்கவில்லை என்றான். பிட்டுக்கு சீனி போட்டுத் தரச் சொன்னான். பல்லவிக்கு ஆத்திரம்தான் வந்தது.

எல்லாவற்றுக்கும் பிடிவாதம். எதிலும் ஒரு முசுட்டுத்தனம். தாயில்லாப் பிள்ளை என்பதற்காக இப்படியா இடம் கொடுத்துக் கெடுத்து வைப்பது? இதற்கு அவனை விடக்கூடாது என்று மனம் சொல்ல, ஒரு தட்டில் பிட்டை போட்டுப் பருப்பை விட்டுக் குழைத்து, “ஆ காட்டுங்கோ.” என்றாள்.

அவன் வாயை இறுக்கி மூடிக்கொண்டு அமர்ந்திருந்தான். எவ்வளவு கெஞ்சியும் வாயைத் திறக்கவே இல்லை. “விது, இண்டைக்கு இதுதான் சாப்பாடு. நெடுக(எப்போதும்) இனிப்புச் சாப்பிடக் கூடாது. பல்லு சூத்தை ஆகிடும். வயித்துக்க புழு வைக்கும். வருத்தம் வரும். நேற்றுச் சீனியோட சாப்பிட்டனீங்கதானே? இண்டைக்குப் பருப்போட சாப்பிடுங்கோ. நல்ல டேஸ்ட்டா இருக்கு.” என்று அவள் எவ்வளவு சொல்லியும் அவன் வாயைத் திறக்கவே இல்லை.

அவன் வாயருகில் கையை நீட்டிப் பிடித்துக்கொண்டிருந்தவளுக்கு ஒரு கட்டத்தில் கை நோகத் தொடங்கியது. “இப்ப ஆ காட்டப் போறீரா இல்லையா? அகப்பைக் காம்பு எடுக்கவோ?” முகத்தைக் கோபமாக வைத்துக்கொண்டு அவள் விழிகளை உருட்டிப் பிரட்டவும்தான் வாயைத் திறந்தான்.

அப்போதும் ஒவ்வொரு வாயையும் அவன் மென்று விழுங்குவதற்குள் இவளுக்குப் பொறுமை கரைந்து போனது. கை பருப்புக் கறியோடு சேர்ந்து காய்ந்து போன பிறகுதான் உண்டு முடித்தான்.

அதன் பிறகு அவனுக்கு வாய் கழுவி, உடை மாற்றி, கழிவறைக்கு விட்டு எடுத்து, பாலமுரளியோடு அனுப்பிவிட்டு வந்தவள், எந்த வேலையும் பார்க்காமல், ஒரு அரைமணி நேரம் அப்பாடா என்று விறாந்தையின் தரையில் அமர்ந்துவிட்டாள்.

பிடிக்காதவற்றை உடலாலும் மனத்தாலும் எவ்வளவுக்கு என்றுதான் ஏற்பது? ஏன் இந்த நிலைக்கு ஆளாகிப்போனோம் என்கிற கழிவிரக்கம் அவளைப் போட்டுக் கொன்றது. கண்ணீர் வரப் பார்த்தது. இப்படி, சுயவிரக்கத்தில் மூழ்கிக் கிடப்பதும் பிடிக்கவில்லை. எண்ணங்களை எல்லாம் உதறி எழுந்து வீடு வாசலைக் கூட்டிவிட்டு, தோய்க்கக் கிடந்த உடைகளை எல்லாம் அள்ளிக்கொண்டு போய் ரின்சோவினுல் நனைத்து வைத்துவிட்டு வந்தாள்.

சற்று நேரத்தில் பாலமுரளி வந்தான். விதுரனும் இல்லாத அவர்களுக்கான அந்தத் தனிமையை எண்ணிப் பயந்தாள் பல்லவி. பகல் சமையலுக்கு என்று அவன் கொண்டுவந்த இறைச்சியை வாங்கி வைத்துவிட்டு, உணவைப் போட்டுக் கொடுத்தாள்.

சாப்பிட்டுக்கொண்டே, “அம்மா எடுத்தவா. உன்னோட கதைக்கோணும் எண்டு சொன்னவா. எடுத்துக் கதை. அப்பிடியே உன்ர நம்பரையும் குடுத்துவிடு. என்ர ஃபோன்லயும் பதிஞ்சுவிடு.” என்றுவிட்டுத் தன் கைப்பேசியை எடுத்து அவளிடம் கொடுத்தான் அவன்.

அதைப் பார்த்தவளுக்கு மெல்லிய திகைப்பு. வெடிப்பதற்கு இனி இடமில்லை என்கிற அளவில் வெடித்துக் கிடந்தது. அவன் சொன்னவற்றைச் செய்துவிட்டு அவருக்கு அழைத்துக் கதைத்தாள். எல்லோரினதும் நலனை விசாரித்துக்கொண்டார் கலாவதி.

“விதுக்குட்டி என்னவாம் பிள்ளை? அழுதவனோ? என்னைத் தேடி இருப்பானே. எல்லாத்துக்கும் அப்பம்மா அப்பம்மா எண்டு என்னையே சுத்திவந்த பிள்ளையை விட்டுட்டு வந்திட்டனம்மா. நீங்கதானாச்சி கவனமா பாத்துக்கொள்ள வேணும். அப்பிடியே கொஞ்சம் படிப்பும் சொல்லிக் குடுங்கோம்மா.” எனும்போதே அவர் குரல் கலங்கிக் கரகரத்தது.

ரூபாவும் வாங்கி இனிமையாகக் கதைத்தாள். பல்லவிக்குத்தான் அவள் என்றதும் ஒருவித ஒதுக்கம் தானாக வந்து அமர்ந்துகொண்டது. திரும்பவும் கைப்பேசியை வாங்கிப் பேசினார் கலாவதி.

“முரளியையும் நீங்கதானம்மா பாக்கோணும். தங்கச்சியாக்களுக்குக் கலியாணம் செய்து வச்சதில இன்னும் கொஞ்சம் கடன் இருக்கு. அதால நேரகாலம் பாக்காம தோட்டத்துக்கையே விழுந்து கிடப்பான். ஒரு ரூபா காசு தேவையில்லாம செலவழிக்க மாட்டான். நான் எவ்வளவு சொன்னாலும் கேக்கிறேல்ல. இளம் வயசிலதானே வாழவும் வேணும். இனி பொறுப்பும் இல்லதானே. ஏதும் விசேசம் எண்டாலும் மறக்காமச் சொல்லோணும் என்னம்மா? எனக்கு உங்க ரெண்டு பேரையும் நினைச்சு நல்ல சந்தோசம்.” என்றவரின் பேச்சு விளங்காமல் விழித்தவளுக்கு, நேற்றைய இரவின் அவரின் பரபரப்பு அப்போதுதான் நினைவுக்கு வர, படக்கென்று பொறி தட்டியது.

‘கடவுளே…’ முகம் கன்றிப் போயிற்று. சத்தமே இல்லாமல் ஊருக்கே தம்பட்டம் அடித்ததை நினைக்க நினைக்கச் சுறுசுறு என்று ஒரு கோபம் முளைத்தது. இதில், விசேசம் என்றால் சொல்லவேண்டுமாம். அத்தனை பாதுகாப்புடனும் அனைத்தையும் அரங்கேற்றிய அவரின் மகனிடம்தான் இதைச் சொல்ல வேண்டும்.

அவளின் முக மாற்றத்தை அவனும் கவனித்துவிட்டான் போலும். விழிகளில் கூர்மை ஏற அவளையே பார்த்தான். அது நெஞ்சை என்னவோ செய்தாலும் காட்டிக்கொள்ளாமல் பேசி முடித்துவிட்டு கைப்பேசியை நீட்டினாள். வாங்கி ஷேர்ட் பொக்கெட்டில் போட்டவாறே, “என்னவாம் அம்மா?” என்று பேச்சுக் கொடுத்தான் அவன்.

“பெரியப்பா வீட்டுக்கும் உங்கட தங்கச்சி வீட்டுக்கும் குடும்பமா போயிட்டு வரட்டுமாம்.” அவன் முகம் பாராமல் பதில் சொன்னாள் அவள்.

இப்போதும் அவன் பார்வை அவளைக் கூர்ந்தது. புரிந்தாலும் அதைக் குறித்துப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை அவள்.

அவளும் உணவை முடித்து, பாத்திரங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டுச் சமையல் கட்டை விட்டு வெளியே வந்தபோது, வீட்டின் கதவைச் சாற்றிவிட்டு அவளை நோக்கி வந்துகொண்டிருந்தான் அவன். அதிர்ந்து நின்றாள் பல்லவி.

முதல் நாள் இரவு வெளியே மகன் உறங்குகிறான் என்பதில் அவனிடம் ஒரு கவனம் இருந்தது. இப்போது தாமிருவரும் மட்டுமே என்கிற எண்ணம் தந்த கொண்டாட்டத்துடன் அவள் உணர்வுகளை நிறுத்தி நிதானமாகத் தூண்டிவிட்டு, அவள் வெட்கத்திலும் கூச்சத்திலும் படுகிற பாடுகளை ரசித்து, அவளும் மோகத்தீயைப் பற்றவைத்து, அதில் தான் சுகமாய்க் குளிர் காய்ந்துகொண்டான் பாலமுரளி.

error: Alert: Content selection is disabled!!