பூவே பூச்சூட வா 12 – 1

அத்தியாயம் 12

கலைவாணி அம்மா வரவேற்பறைச் சோபாவிலேயே சரிந்திருந்தார். உள்ளே கேட்ட பேச்சுச் சத்தத்திலிருந்து, வானதி பிள்ளைகளுக்கு உணவு கொடுத்துக்கொண்டிருக்கிறாள் என்று விளங்கியது. தாயின் அருகில் சென்று அமர்ந்தான் அதிரூபன். அதில் உறக்கம் கலைந்து, சற்றே தலையை உயர்த்திக் கேள்வியாகப் பார்த்தார் அவர். அழுததில் முகம் வீங்கியிருந்தது.

“உள்ளுக்குப் போய்ப் படுங்கோவன்!” என்று மென்மையாகச் சொன்னான் மகன்.

“ப்ச்! என்னத்த படுக்க? அப்பிடியே இருந்தாப்போல சரிஞ்சிட்டன்!” என்றபடி எழுந்து அமர்ந்து, சோர்வுடன் முதுகில் விழுந்திருந்த முடியை மீண்டும் கொண்டையிட்டுக்கொண்டார்.

வெள்ளையும் கறுப்புமாய்க் கலந்திருந்த முடி அவரின் முதுமையைப் பறைசாற்றினாலும், வாடிப்போயிருந்த முகம் இன்னுமே மூப்பை உணர்த்திக்கொண்டிருந்தது.

இளமையில் கணவரைப் பறிகொடுத்துவிட்டு ஒற்றைப் பெண்ணாய்ப் போராடியது போதாதென்று, வயதான காலத்திலும் அவரை அழவிட்டுவிட்டுப் பார்த்துக்கொண்டு இருக்கிறேனே, நான் என்ன மகன் என்றுதான் அந்தக்கணம் உணர்ந்தான்.

மூப்பிலாவது நிம்மதி வேண்டாமா? அப்பா இல்லாத குறை தெரியாமல் வளர்த்து, நன்றாகப் படிக்க வைத்து, நல்லதொரு வேலையில் அமர்த்தி, நல்ல பெண்ணாகப் பார்த்து மணமுடித்து வைத்து என்று அவனுக்கு எந்தக் குறையுமே வைத்ததில்லை. அப்படியானவரின் கவலையைக் கூடப் போக்கமுடியாமல் நிற்பது மனத்தைப் பிசைந்தது.

“தேத்தண்ணி ஏதும் வேணுமாம்மா?” ஆதரவாய் வினவினான்.

அதற்குப் பதில் சொல்லாமல் வானதி எங்கே என்பதுபோல் தேடினார்.

“கிட்சனுக்கதான் நிக்கிறாள்.” என்றவன் எழுந்து உள்ளே சென்றான்.

‘எங்க போறான்’ என்று பார்க்க அவன் சமையலறைக்குள் நுழைவது தெரிந்தது. அவர் முகத்தில் சின்னதாய் ஒரு ஆச்சரியம் கலந்த மலர்ச்சி. மனத்தை மாற்றிக் கொண்டானோ? ஆவலோடு காதைத் தீட்டிக்கொண்டிருந்தார்.

பிள்ளைகள் இருவரையும் சமையலறைக் கட்டிலேயே ஏற்றி இருத்திவிட்டு உணவு கொடுத்துக்கொண்டிருந்தாள் வானதி. காலடி ஓசையில் கலைவாணி அம்மாவாக்கும் என்று சின்னச் சங்கடத்துடன் திரும்ப, வாசலில் வந்து நின்றவனைக் கண்டு விழிகளை விரித்தாள். இப்படியெல்லாம் அவன் வந்ததேயில்லை. அப்படியே வரநேர்ந்தாலும் தன் வேலையை முடித்துக்கொண்டு நகர்ந்துவிடுவான். இப்படி நிலையில் சாய்ந்து நின்று அவளைப் பார்ப்பதெல்லாம்… என்ன நடக்கிறது? இதயத்தில் படபடப்புத் தொற்றிக்கொண்டது. அவனிடமிருந்து பார்வையை அகற்றவேண்டும் என்பதைக்கூட உணராமல் அப்படியே நின்றிருந்தாள் வானதி.

கிட்சனுக்குள் வந்தவன், கேற்றிலை எடுத்து நீர் கொதிக்க வைத்தான். எதற்கு என்று உணர்ந்து, “நான் கொண்டுவாறன். நீங்க போங்கோ!” என்றாள் வேகமாக.

அவனோ, அங்கேயே சாய்ந்துகொண்டு பிள்ளைகளைப் பார்த்தான். கிட்சன் மேசையில் அமர்ந்திருந்தனர் இருவரும். தாரகன் கொஞ்சம் பரவாயில்லை. ரூபிணி முகம் முழுவதிலும் உணவைப் பெயிண்ட் போல பூசியிருந்தாள். அதிரூபனின் உதடுகளில் சின்னதாய் நகைப்பு அரும்பிற்று!

“என்ன நடக்குது இங்க?” சிரிப்புடனேயே மகளிடம் கேட்டான்.

“சோச்சா சாப்பிடுதன்…” என்றவள் கைகளை ஊன்றி எழும்பித் தகப்பனிடம் வர முனைய, விழுந்துவிடப் போகிறாள் என்று பயந்து, “ரூபி எழும்பாத!” என்று அவசரமாக வானதி அருகில் வர, அதைவிட வேகமாகக் கிட்டவந்து மகளைத் தூக்கிக்கொண்டான் அவன்.

“இறக்கி விட்டுடாதைங்கோ! பிறகு பிடிக்கவே ஏலாது!” தன்னை மறந்து அவசரமாகச் சொன்னாள் வானதி.

மலர்ந்த சிரிப்புடன், “ம்? இறக்கி விட்டா செல்லக்குட்டி ஓடிடுவாளா?” மகளின் முகம் பார்த்துக் கேட்டான் அவன்.

அவளும் கிழுக்கிச் சிரித்தபடி செல்லமாக, “ம்ம்..” என்று தலையசைத்தாள்.

ரூபியின் கைகள் அதிரூபனின் தாடிக்காட்டில் அளைந்து விளையாடத் துவங்க, வானதிக்கு அங்கே ஓடிய கண்களைப் பிரிப்பது பெரும் சிரமமாய்ப் போயிற்று!

எப்படியாவது அந்தத் தாடிக்காட்டை அழித்துவிட வேண்டுமென்பது வானதியின் பெரும் விருப்பம். முந்தைய வானதியாக இருந்தால் தயக்கமே இல்லாமல், “இந்தப் பத்தையை எப்ப செருக்கப் போறீங்க?” என்று கேட்டே இருப்பாள்.

இன்றோ நாக்கு நுனிவரை வந்த வார்த்தைகளை விழுங்கிக்கொண்டு நின்றாள்.

ரூபிணி வெளியே தகப்பனை இழுக்க, “கள்ளி! அம்மாட்ட வாங்கு!” என்று மகளை அவளருகில் கொண்டுவந்தான் அவன். இவளுக்குள் ஒரே படபடப்பு. அவன் அருகண்மையை ஏற்க முடியாமல் தடுமாறினாள்.

அவனது சிரிப்பு ஒன்றே போதுமாயிருந்தது அவளின் இயல்பைப் பிடுங்கிக்கொள்ள. இதில் அம்மா என்றானே! படபடப்பை மறைத்துக்கொண்டு மகளுக்கு உணவைக் கொடுத்தாள்.

கவனமாகத் தன்னைப் பார்ப்பதைத் தவிர்க்கிறவளின் முகத்தில் படிந்தன அவன் விழிகள். அவளுக்கோ இன்னும் பதற்றமாகிப் போயிற்று! வெகு அருகில் நின்றுகொண்டு இப்படிப் பார்க்கிறானே? நெஞ்சில் வைத்து நேசிக்கும் முகம் வெகு அருகாமையில் தெரிந்தபோது அவளால் இயல்பாக இருக்கமுடியவில்லை. ரூபிணி வாங்கியதும் வேகமாகத் தாரகனுக்கு ஊட்டுவதுபோலத் திரும்பி முகத்தை மறைத்துக்கொண்டாள்.

ஒருகாலத்தில், “விளையாட வாங்கோ!” என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாக இயல்பாக அழைத்தவள். இன்று தான் யார் என்று தெரிந்ததில் இருந்து தள்ளியே இருக்கிறாள். யோசனையோடு அடிக்கடி அவள் மீது படிந்து விலகியது அவன் விழிகள்.

உணவைக் கொடுத்து முடிக்கும்வரை அவன் அகலவேயில்லை. ரூபிணியை வைத்துக்கொண்டு அங்கேயே நின்றான். ரூபிணி வேறு உண்பதற்குள் அவளை ஒருவழியாக்கி முடித்தாள்.

அவளுக்கு முகம் கழுவி சுத்தமாக்கிவிட என்று வானதி வாங்கிக்கொண்டதும் போவானாக்கும் என்று நினைக்க, அவனோ தேநீர் ஊற்றக் கோப்பைகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தான்.

“நீங்க விடுங்கோ, நான் செய்றன்!” என்றாள் அவசரமாக.

‘என்ன இவன் இங்கேயே நிற்கிறான், ஆன்ட்டி என்ன நினைப்பா?’ என்று அதுவேறு அவளுக்குள் ஓடிக்கொண்டிருக்க, எப்படியாவது அவனை அனுப்பினால் போதும் போலிருந்தது.

“மூண்டு பேருக்கும் கொண்டுவா!” என்றுவிட்டுப் பிள்ளைகளோடு வெளியேற, ‘மூன்று பேருக்குமா?’ என்று அப்படியே நின்றுவிட்டாள் வானதி.

அவளுக்கும் வேண்டும்போல் இருந்ததுதான். ஆனால், மூன்று பேருக்கும் அங்கே கொண்டுபோவதா? அவளுடையதைச் சமையலறையிலேயே வைத்துவிட்டு அவர்களுக்கு மட்டும் கொண்டுபோனாள்.

கலைவாணியிடம் நீட்டிவிட்டு அவனிடம் கொடுக்க, கண்களில் அழுத்தத்தைச் சேர்த்து, “எங்க உனக்கு?” என்று கேட்டான் அவன்.

“இருக்கு..”

“இங்க கொண்டுவா!” என்றான் அவளையே பார்த்து.

இதையெல்லாம் கவனித்தும் கவனியாததுபோல பார்த்துக்கொண்டிருந்தார் கலைவாணி.

அவரைச் சங்கடமாகப் பார்த்துவிட்டுப் போய் எடுத்துக்கொண்டு வந்து, கலைவாணி அம்மாவின் அருகே அமர்ந்து அருந்தினாள் வானதி.

அன்று ரூபிணியின் இரண்டாவது பிறந்தநாள். அதைக் கொண்டாடும் நிலையில் யாருமே இல்லை. மிருணாவின் இழப்பைக் கலைவாணியாலுமே தாங்க முடியவில்லை. எவ்வளவு அருமையான பெண்? அவளுக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம் என்றுதான் மனத்தில் தோன்றிக்கொண்டே இருந்தது. அங்கே புகைப்படத்தில் மகனோடு நின்றவள் இல்லை என்பதை இன்னுமே நம்ப முடியவில்லை. ஐயோ ஐயோ என்று மனம் பரிதவித்தது.

அவருக்கே அப்படி என்றால், அதிரூபனின் நிலை? சொல்லவே வேண்டாம். மிகவும் மோசமாயிருந்தது. அறையை விட்டு வெளியே வரவேயில்லை. இதில் வானதியை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எடுத்த முடிவு, அதுவேறு நெஞ்சுக்குள் கிடந்து இன்னுமே வருத்தியது.

முதன்முதலாகக் கோயிலில் வைத்து முத்தமிட்டவள், மணமேடையில் தன் கரத்தை அழுத்தமாகப் பற்றிக்கொண்டு வலம் வந்தவள், குடத்திலிருந்து மோதிரத்தை எடுத்துவிட்டு அவனைப் பார்த்துத் தலையைச் சரித்துச் சிரித்தவள், அவனையே திக்குமுக்காட வைப்பவளை முதலிரவில் முகம் சிவக்க வைத்து, அவன் மார்புக்குள் முகத்தை மறைத்துக்கொண்டவளின் வெட்கம், வாழ்ந்த வாழ்க்கை, குழந்தைக்காக அவள் பட்ட பரிதவிப்பு, கடைசியாக ‘காலம் முழுக்க மலடியா நான் இருக்கோணும் எண்டு ஆசைப்படுறீங்க என்ன?’ என்று அவள் கேட்ட கேள்வி. ஆனால் ஒன்று, அவனுடைய மிருணா மலடியாகப் போகவில்லை. அந்தக் குறையை அவன் வைக்கவில்லை. ஆனால், போகும் வயதா அவளுக்கு?

கடைசியாக உயிரற்ற சடலமாக அவள் படுத்திருந்த கோலம்.. கண்களை இறுக்கி மூடிக்கொண்டான் அதிரூபன். அன்று போலவே இன்றும் தேற்றுவார் இல்லாமல் துடித்துக்கொண்டிருந்தான் அந்தக் கணவன்.

வானதிக்கும் கண்ணீர் கன்னங்களை நனைத்துக்கொண்டே இருந்தன. குழந்தைகள் இவளோடே இருந்ததில் அவர்களுக்காக அடக்கிக்கொண்டு இருந்தாளே தவிர, அதிரூபனுக்காகவாவது கடவுள் அவளை விட்டிருக்கலாம் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.

error: Alert: Content selection is disabled!!