அத்தியாயம் 14
தன்னுடைய அறையிலிருந்த மிருணாவின் முன் நின்றிருந்தான் அதிரூபன். விழிகள் அவள் மீதிருந்தாலும் சிந்தனைகள் வானதியிடம் சிக்கியிருந்தன. சற்றுமுன் எதையும் வேண்டுமென்றும் சொல்லவில்லை, விருப்பமில்லாமலும் சொல்லவில்லை. அவளின் கண்ணீர் அவனை அசைத்தது உண்மை! கதிரேசனிடமும் அவளிடமும் அவன் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் அத்தனையும் நெஞ்சிலிருந்து வந்தவை. வானதியை அவன் உள்ளம் மனைவியாக ஏற்றுக்கொண்டுவிட்டது! அதற்காக மிருணா அவனுடையவள் இல்லை என்று ஆகிடாதே!
“செல்லம்மா! நீ எப்பிடி என்ர இதயத்தில இருந்து நீங்கமாட்டியோ, அதேமாதிரி அவளும் இனி நீங்கமாட்டாள். என்னைவிட என்னைப்பற்றி உனக்குத்தான் நல்லாத் தெரியும். உன்ர மனுசன் உன்னைத் தவிர வேற எந்தப் பொம்பிளையையும் ஏறெடுத்துப் பாக்கிறவன் இல்ல. ஆனா, அவளின்ர கடிதத்தைப் படிச்ச நாள்ல இருந்து அவளைப் பற்றியும் யோசிச்சிருக்கிறன், கவலைப்பட்டு இருக்கிறன், பிள்ளையோட என்ன பாடு படுறாளோ எண்டு தவிச்சு இருக்கிறன். அதெல்லாம் பிழையான எண்ணத்தோட இல்ல, என்ர பிள்ளையைக் கொண்டுபோனவள் என்னையும் சேர்த்து மனதில கொண்டு போயிருக்கிறாளே எண்டுற கவலைல யோசிச்சது. ஆனா, அவளைப் பற்றின எண்ணம் அண்டிலிருந்து எனக்குள்ள இருந்துகொண்டேதான் இருந்திருக்கு. அவளுக்கும் எல்லாமே நான்தான். இன்னொரு வாழ்க்கையைத் தேடப்போறது இல்ல. அப்பிடி இருந்தும் நான் வேண்டாமாம். என்ர குடும்பத்துக்காக எல்லாம் செய்தாலும் உறவு மட்டும் வேண்டவே வேண்டாம் எண்டு ஒதுங்கிப்போறவள்ல பாசம் தானா வந்திட்டுது எண்டுறதும் உண்மைதான். சண்டை சச்சரவு எண்டாலே ஒதுங்கிப்போற நானே அவளின்ர அப்பான்ர சட்டையைப் பிடிச்சிருக்கிறன் எண்டால், அவளுக்காகத்தான்.” என்றவன் மிருணாவைக் கையில் எடுத்துக்கொண்டான்.
“இனியும் அவளை யாரோவா இந்த வீட்டில வச்சிருந்து எல்லாரும் கேள்வி கேக்கிற இடத்தில நிப்பாட்ட மனமில்லை செல்லம். எனக்காக அவளின்ர அப்பாட்ட சண்டை பிடிச்சவள் தனக்காக ஒரு வார்த்தை கூடிக் கதைக்கேல்ல. அப்ப அவளை நானும் நல்லா வச்சிருக்க வேணும்தானே?” என்றவன் குறும்புடன் புன்னகைத்துக்கொண்டிருந்தவளை நெஞ்சோடு ஒருமுறை ஆத்மார்த்தமாக அணைத்தான். அவளைச் சுவாமி அறையில் கொண்டுபோய் வைத்துவிட்டு வந்தான்.
மனத்திலோர் தெளிவு! தன் உள்ளமும் என்ன என்று அறிந்த உணர்வு!
வானதியின் கோபம், அதைத் தான் ரசித்தது, அவளின் கண்ணீர், அதைக் கண்டதும் கோபப்பட்டது என்று நினைவுகள் நடந்தவற்றை எண்ணிச் சுழற, போய்க் குளித்துவிட்டு வந்தான்.
அதுவரையிலும் அதிர்ச்சி தீராமல் நின்ற வானதி, புயலென அவனுடைய அறைக்குள் நுழைந்தாள். அதுநாள் வரை மிருணா ஆட்சி செய்த அவனுடைய உள்ளத்தில் எப்படி வானதியின் ஆட்சி வந்ததோ, அப்படியே மிருணா வெளியேறிய அந்த அறைக்குள் வானதி நுழைந்திருந்தாள்.
ஆச்சரியமாகப் புருவங்களை உயர்த்தினான் அதிரூபன்.
“இங்க பாருங்கோ! கண்டதையும் இனிக் கதைக்க வேண்டாம், சொல்லிபோட்டன்! நீங்க மிருணாளினியின்ர கணவர். அத மறந்தா நீங்க செய்றது துரோகம். உங்களை உயிரா நேசிச்ச அவவுக்குத் துரோகம் செய்யாம நல்ல மனுசனா இருங்கோ!” உத்தரவுபோல சொல்லிவிட்டு அதே வேகத்தில் திரும்பினாள்.
ஒரே எட்டில் அவள் கையைப் பற்றிப் பிடித்தான் அதிரூபன். அதிர்ச்சியில் விழிகள் விரிந்தன அவளுக்கு. “புயல் மாதிரி நீயா வந்த, என்னென்னவோ சொன்ன, நீயாப் போறாய்? என்ன விசயம்?” உதட்டில் முளைத்துவிட்ட சிரிப்புடன் கேட்டான்.
“முதல் கைய விடுங்கோ!” பதறிக்கொண்டு சொன்னாள் அவள். சற்றுமுன்னர் அவன் சொன்ன விசயத்தால் உண்டான அதிர்ச்சியே அவளில் இருந்து முற்றிலுமாக நீங்கவில்லை. அதற்குள் கையைப் பிடித்தால்?
“ஏன்?” நிதானமாகக் கேள்வி எழுப்பியவன், அதைவிட நிதானமாகப் பிடித்திருந்த கையைத் தன்னை நோக்கி இழுத்து, அவளைத் தன்னருகே கொணர்ந்தான்.
“சொல்லு ஏன்?”
என்ன கேள்வி இது? அவளுக்குப் படபடவென்று அடித்துக்கொண்டது. அடிவயிற்றில் ஏதோ கலவரம். இவ்வளவு அருகே அவன் கண்களைப் பார்த்து எப்படிக் கதைப்பது?
“சொல்லு, இப்ப கையப் பிடிச்சதுக்கே இந்தப் பாடு படுற நீ, அண்டைக்கு நான் இன்னொருத்தின்ர மனுசன் எண்டு தெரிஞ்சும் என்னை மனத்தில நினைச்சது சரியா?” என்றான் நிதானமாக.
திகைத்துப்போனாள் வானதி. அப்போ தவறாமல் அவனுடைய கைக்கு அந்தக் கடிதம் போய்ச் சேர்ந்துதான் இருக்கிறது!
“அது… சும்…” தன் ரகசியம் எல்லாம் அவனுக்குத் தெரிந்திருக்கிறது என்று அறிந்ததில் வார்த்தைகள் தந்தி அடித்தன.
இன்னும் அருகே அவளைக் கொணர்ந்திருந்தான் அவன். “அழுதழுது அந்தக் கடிதம் சும்மாவா எழுதின?”
கூர்மையான அந்த விழிகள் நெஞ்சுக்குள் புகுந்து ஆழ்மனத்தின் ரகசியங்களை எல்லாம் அலசுவது போலிருந்தது. அது வேண்டாமே! அவளது விழிகள் அவனிடம் இறைஞ்சின.
அவனோ விடுவதாயில்லை. “சொல்லுறதை என்ர முகத்தைப் பாத்துச் சொல்லு!” என்றான்.
விழிகள் விரிய அவனையே பார்த்தாள். அவன் முகம் இன்னுமின்னும் அவளருகே வருவது போலிருக்க, “முதல் விடுங்கோ நீங்க!” என்றாள் அவசரமாக.
அவனிடமிருந்து தள்ளி நின்றால் மட்டுமே அவளால் சிந்திக்க முடியும். அவனது அருகண்மை பனிக்கட்டியாக மாறி அவளை உறைய வைத்து, அந்தக் கண்களுக்குள் இழுத்துக்கொள்வது போலிருந்தது.
“நீ சொல்லு நான் விடுறன்.” இதமானவனாகத் தெரிந்தாலும் அவனுக்குள்ளும் இருக்கும் பிடிவாதத்தை இரண்டாவது முறையாக உணர்கிறாள் வானதி!
“ரூபன்!”
அந்த அழைப்பில் அவன் விழிகள் மின்னின. அவன் பிடி இறுகியது. அவர்களுக்கிடையிலான இடைவெளியைக் குறைத்தான்.
“என்ன உரிமைல என்ர பெயரைச் சொல்லிக் கூப்பிடுறாய்? அதுவும் ரூபன் எண்டு. அவளே அப்பிடிக் கூப்பிட்டது இல்ல.” மனத்துக்கு நெருக்கமான குரலில் அவன் கேட்டபோது அவள் இதயத்தில் நடுக்கம் ஆரம்பித்திருந்தது.
“இனிக் கூப்பிடேல்ல, விடுங்கோ.” அவனிடமிருந்து தப்பித்துப் போக முயன்றாள். அவன் விடவில்லை.
“விடுங்கோ விடுங்கோ எண்டு சொல்லுறியே என்னை விட்டுட்டு எங்க போகப்போறாய் வானதி? நான் இல்லாம இருப்பியா?” அந்தக் கேள்வியில் அவளின் அசைவுகள் எல்லாம் நின்றன.
அவனிடம் விடுபட முயன்றுகொண்டிருந்தவள் இயலாமையோடு அவனைப் பார்த்தாள்.
நீரில்லாமல் மீன் வாழுமா? காற்றில்லாமல் ஜீவன் சுவாசிக்குமா? அவனில்லாமல் அவள் எப்படி?அவன்தான் அவளுக்கு எல்லாம். ஆனால், அவனோடு ஒன்ற முடியாமல் முணுமுணுக்கும் இதயத்தை என்ன செய்வாள்? விழிகளில் நீர் கோர்த்தது.
“தெரியாது! ஆனா உங்களோடையும் இருக்கேலாது!”
“ஏன்? ஏன் இருக்க முடியாது? என்ர மனுசியா, என்ர பிள்ளைகளுக்கு அம்மாவா ஏன் இருக்க ஏலாது உன்னால?”
பதிலற்று அவள் உதட்டைக் கடித்துத் தலை குனிய
நாடியைப் பற்றித் தன் முகம் நோக்கி உயர்த்தினான்.
“அந்தக் கடிதத்தில நீ எழுதி இருந்தது எல்லாமே சும்மாவோ? ‘உள்ளம் சொல்லிக்கொண்டா ஒருவரை மனத்தில நினைத்துவிடுகிறது?’ எண்டு கேட்டிருந்தியே, அது? அந்தப் பாட்டு?” அவனின் ஒவ்வொரு கேள்வியிலும் அவளின் கட்டுப்பாடுகள் ஆட்டம் காணத் துவங்கியிருந்தன.
“நீ வச்சிருக்கிற இந்தப் பொட்டு? யாரை நினச்சு வச்சிருக்கிறாய்?”
“ரூபன் ப்ளீஸ்!” கண்ணீருடன் கெஞ்சின அவள் உதடுகள்.
“விடு விடு எண்டுறவள் திரும்பத் திரும்ப ஏனடி ரூபன் ரூபன் எண்டு சொல்லுறாய்? அதச் சொல்லேக்க எவ்வளவு உரிமையாச் சொல்லுறாய் எண்டு உனக்கு விளங்குதோ இலையோ எனக்கு விளங்குது. பிறகு என்னத்துக்கு விடச்சொல்லுறாய்?”
அவன் விடுவதாக இல்லை. இன்றோடு அவள் மனத்திலிருப்பதை வெளியே கொண்டுவந்தே ஆகவேண்டும்!
“நானும் இல்லாம குழந்தையும் இல்லாம உயிர்வாழ மாட்டன் எண்டு சொன்னியே? அது பொய்யா?”
“ரூபன் ப்ளீஸ்! இந்தக் கதையே வேண்டாம்.” அவன் முகம் பார்க்க மறுத்தபடி சொன்னாள்.
அவள் கழுத்தில் கிடந்த தாலியை அவன் விரல்கள் பற்றின. பதறிப்போய்ப் பார்த்தாள். பார்வையால் கூட அத்து மீறாதவன். இன்று என்ன செய்கிறான்?
“இதை யாரை நினச்சுப் போட்டிருக்கிறாய்?”
‘ஐயோ விடுகிறான் இல்லையே..’ உள்ளம் பரிதவித்தது.
“ஒருத்தரையும் நினைச்சுப் போடேல்ல!” அழுகைவெடிக்கச் சொன்னாள்.
“அப்ப கழட்டவா?”
“ஐயோ!” பதறிப்போய் அவன் கையோடு சேர்த்துப் பற்றினாள். அவளே போட்டுக்கொண்டாலும், அது அவனை எண்ணி அணிந்தது. அதைக் கழட்டுவதென்றால்? கண்ணீர் பொலபொலவென்று கொட்டியது அவளுக்கு.
“நான் இல்லாம நீ இருப்ப எண்டால் போ! எனக்கு என்னவோ இனி நீ இல்லாம நான் இருப்பன் மாதிரித் தெரியேல்ல!” அதுவரை நேரமும் அவளைப் பற்றியிருந்தவன் விட்டபோது, ‘விடுங்கோ விடுங்கோ’ என்று விடுபடப் போராடியவள்
முற்றிலுமாக உடைந்து, அவன் மார்பிலேயே விழுந்து கதறித்தீர்த்தாள்.
“உங்களைச் சந்திப்பன் எண்டு சத்தியமா நினைக்கவே இல்லை ரூபன். அந்தத் தைரியத்திலதான் அதையெல்லாம் எழுதினான். நானும் வேற ஆருட்டத்தான் சொல்லுவன் சொல்லுங்கோ? உங்களிட்ட சொன்னாலாவது கொஞ்சம் நிம்மதியா இருக்கும் எண்டு நினைச்சன். நாங்க சந்திக்கவே மாட்டம் என்ற தைரியம் வேற. கடைசில…”
“சரி! இப்ப என்ன? என்னட்டத்தானே சொன்னாய். விடு!” ஆறுதலாய் அவள் முதுகை வருடியபடி சொன்னான்.
“தாரகனை நான் உங்களிட்ட தந்திருந்தா அவவுக்கு இன்னொரு பிள்ளை பெறவேணும் எண்டுற ஆசை வந்திருக்காது. அவவும் உயிரோட இருந்திருப்பா. உங்களுக்கும் இவ்வளவு துன்பம் வந்திருக்காது. நீங்க அவ இல்லாமல் துடிச்சு துடிப்பை நான் பாத்திருக்கிறன். அது எல்லாம் என்னாலதான்.. அவவின்ர சாவுக்கு நானே காரணமா இருந்திட்டு என்னெண்டு அவவின்ர இடத்துக்கு வந்து என்னால வாழமுடியும் சொல்லுங்கோ?” கண்ணீருடன் தன் முகம் பார்த்து நியாயம் கேட்டவள் முகம், மனத்தை வதைத்தது அவனுக்கு.

