பூவே பூச்சூட வா 14 – 2

“அது விதி வானதி. இப்பிடியெல்லாம் நடக்கோணும் எண்டு இருந்திருக்கு. அதுக்கு நீ காரணமில்லை!” அவன் சொன்ன எந்த ஆறுதலும் அவளிடம் எடுபடவில்லை.

“இல்ல. மிருணாவ நானே கொன்றுட்டன். உங்கட வாழ்க்கையை நானே நாசமாக்கிட்டன். நான் நினைக்கேல்ல ரூபன். இப்பிடியெல்லாம் நடக்கும் எண்டு சத்தியமா நினைக்கேல்ல. என்னாலதான் எல்லாம்!” எவ்வளவு ஆறுதல் சொல்லியும் கேட்காமல், தன்னையே வருத்திக்கொண்டு துடித்தவளைக் கண்டு கோபம்தான் வந்தது.

“போதும் வானதி!” அவன் போட்ட அதட்டலில் சரக்கென்று கண்ணீர் நிற்க, அழுத முகத்தோடு அதிர்ந்துபோய் அவனைப் பார்த்தாள்.

கண்ணீரில் நனைந்த விழிகள். அழுததில் சிவந்துவிட்ட முகம், அப்போதும் துடித்த உதடுகள்.. நெஞ்சம் உருக, “ப்ச்! என்னம்மா நீ!” அவள் முகத்தைத் தன் கைகளால் துடைத்துவிட்டான்.

“ரூபிணி உருவான நேரம் வேண்டாம் எண்டு சங்கரி டொக்டர் சொல்லியும் வேணும் எண்டு பிடிவாதமா நிண்டது மிருணா. இயற்கையிலேயே அவளின்ர உடம்பு பலகீனமா இருந்ததும் ஒரு காரணம். அதுக்கும் நீயா காரணம்?” என்றான் அவளையே நோக்கி.

தலை தானாக மறுப்பாக அசைய, “பிறகு? அதெல்லாம் நடக்கோணும் எண்டு இருந்திருக்கு! நடந்திட்டுது! முடிஞ்சதைக் கதைக்காத! இப்ப நீ, நான், எங்களுக்கு ரெண்டு பிள்ளைகள். அதை மட்டும் நினை!” என்றான் அதட்டலாகவே.

அவள் தலையும் வேகமாகச் சரி என்று ஆட, அவன் உதட்டினில் சின்னதாய்ப் புன்னகை அரும்பிற்று! “எதுக்கு இந்த ஆட்டு ஆட்டுறாய்?” குறும்புடன் கேட்டான்.

‘அதுதானே.. எதுக்கு ஆட்டினோம்?’ என்று அவளும் குழம்ப, அது அவள் விழிகளிலும் தெரிய சிரிப்பு வந்தது அவனுக்கு.

ஆசையோடு அவளையே பார்த்தான். அவன் கண்களை எதிர்கொள்ள இயலாமல் அழுத முகத்தில் சின்ன வெட்கப் புன்னகை பூத்தது. பார்வையைத் தழைத்துக்கொண்டவளின் முகத்தை மென்மையாகப் பற்றி நெற்றியில் இதழ்களைப் பதித்தான்.

நடப்பதை நம்ப முடியாமல் பார்த்தாள் வானதி! நெஞ்சில் நேசம் சுரக்க அணைத்துக்கொண்டான்.

அவளைத் தன் கைவளைவுக்குள் வைத்திருக்கையில் மிருணாவின் நினைவுகள் வராமலில்லை. இப்படித் தன் கையில் கரைந்தவள் கற்பூரமாகக் கரைந்து காற்றோடு காற்றாக மறைந்துபோனாளே என்கிற வேதனை உண்டாயிற்று.

ஒருத்தியை இழந்துவிட்டான். மற்றவளையாவது காலம் முழுக்கக் காதலோடு கொஞ்சி வாழவைக்கும் ஆவல் எழுந்தது. அந்த ஆவல் கொடுத்த உந்துதலோடு மீண்டும் அவள் நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்தபோது, ஏதோ ஒரு வித்தியாசத்தை வானதி உணர்ந்தாள்.

இதுவரை நேரமும் இல்லாத ஒரு உணர்வு. தேகமெங்கும் சிலிர்க்கவைத்துக்கொண்டு உயிரைச் சென்று தொட்டது. நிமிர்ந்து அவள் பார்க்க, கசிந்த விழிகளில் கனிவோடு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.

‘என்ன?’ அந்தப் பார்வை உயிரைத் தொடக் கேட்டாள்.

ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு, அவளை மீண்டும் அணைத்துக்கொண்டான் அவன்.

அன்றைக்குப் பிறகெல்லாம் அவன் முன்னாலேயே அவள் வருவதில்லை. அவன் கண்களைச் சந்திக்கவே மறுத்தாள். அவனுக்குச் சிரிப்பாயிருந்தது. பிள்ளைகளை அரணாக வைத்து அவனையும் நெருங்கவிடாமல் ஓடிக்கொண்டிருந்தாள். ஆனால், அவனுடைய பொருட்கள் எல்லாம் இது வேண்டும் என்று நினைக்கமுதல் அவனுக்காகக் காத்திருந்தன.

‘இவள இப்பிடியே விட்டா சரிவராது. காலம் முழுக்க ஒளிச்சுப் பிடிச்சு விளையாடுவாள்.’

அன்று காலையில் குளித்துவிட்டு வந்து பல்கலைக்கழகத்துக்குத் தயாரான வேளையில், “வானதி!” என்று சத்தமாக அழைத்தான்.

அவளுக்குப் பக் என்றது. வேகமாகத் திரும்பிக் கலைவாணி அம்மாவைப் பார்த்தாள்.

அவருக்கும் பெரும் சந்தோசம். என்றாலும், ஒன்றையுமே உணராதவர் போலத் தாரகனுக்குப் பால் கொடுத்துக்கொண்டிருந்தார்.

‘கடவுளே.. ஆன்ட்டியும் இருக்கேக்க இப்பிடிக் கூப்பிட்டா என்ன நினைப்பா?’ தனக்கும் கேட்கவில்லை என்பதுபோல, படபடக்கும் நெஞ்சோடு வேலைகளைப் பார்ப்பதுபோல் பாசாங்கு செய்தாள்.

சற்றுநேரம் பொறுத்துப் பார்த்துவிட்டு, “வானதி! கூப்பிட்டது கேக்கல்லையா? வந்திட்டுப் போ!” என்று மீண்டும் சத்தமாகக் குரல் கொடுத்தான் அவன்.

‘இனியும் எப்பிடிக் கேக்காத மாதிரி இருக்கிறது?’ பாவமாக அவள் கலைவாணி அம்மாவைப் பார்க்க, உதட்டில் எழுந்த சிரிப்பை மறைக்க முடியாமல், “போய் என்ன எண்டு கேட்டுக்கொண்டு வாம்மா!” என்றார் அவர்.

‘கடவுளே! மானத்த வாங்குறாரே. இவரை என்ன செய்யிறது?’

சென்று வாசலிலேயே நின்று, “என்ன?” என்று எட்டிப் பார்த்தாள். அறைக்குள் நுழையவில்லை.

“ஏன், கிட்சனுக்க நிண்டே கேளன், சொல்லுறன்!” என்றவன், ஒரே இழுப்பில் அவளை உள்ளுக்குக் கொண்டு வந்திருந்தான்.

“கண்ணிலேயே படாம எங்க ஓடி ஒளியிற? நானா வந்தாலும் பிள்ளைகளைப் பாதுகாப்புக்கு வச்சிருப்பியா நீ?”

அன்றைக்கும் இதையேதான் கேட்டான். “நான் ஓடவும் இல்ல ஒளியவும் இல்ல!” வெடுக்கென்று பதில் சொன்னாலும் அவன் முகம் பார்ப்பதைத் தவிர்த்தாள்.

“அத என்னைப் பாத்துச் சொல்லுறது?” மெதுவாக அவளைத் தன் கைவளைவுக்குள் கொண்டுவந்தபடி சொன்னான்.

“ஐயோ ஆன்ட்டி நிக்கிறா.”

தப்பித்தவறிக் கண்டுவிட்டால் எவ்வளவு வெட்கம்? அவனுக்கு அந்த எண்ணமெல்லாம் இல்லை போலும்!

“அதென்ன ஆன்ட்டி? மாமி எண்டு சொல்லு.”

மாமி என்றால் கணவனாக அவனை வரித்துக்கொண்டதாக அர்த்தமாகாதா?

“ம்ஹூம்!” வெட்கத்தோடு அவன் முகம் பாராமல் மறுத்தாள்.

“என்ர பிள்ளைகளுக்கு நீ அம்மா எண்டால் நான் ஆரு உனக்கு?” அவன் முதலில் இருந்து ஆரம்பித்தான்.

அவனது சேட்டையில் அவளுக்குச் சிரிப்பு வந்தது.

“விடுங்கோ ரூபன். பிள்ளைகள் வந்தாலும். ரூபிணி எழும்பப் போறா!”

“அப்ப வேகமாச் சொல்லு! போகலாம்!”

அவளின் இடையை அவன் கரங்கள் வளைக்க ஆரம்பிக்க, “அச்சோ என்ன செய்றீங்க? விடுங்கோ!” என்று பதறித் தடுத்தாள் அவள்.

அந்த வலிய கரங்கள் வளைக்கரங்களில் அடங்குமா என்ன?

“நீ முதல் சொல்லு!” அவன் அதிலேயே நின்றான்.

“உங்களுக்குத் தெரியாதா?”

“எனக்குத் தெரியுமா தெரியாதா எண்டு நான் கேக்கேல்ல. உன்னைச் சொல்லு எண்டு சொல்லுறன்.”

விடமாட்டான்! நெஞ்சில் அச்சாக்கப் பதிந்துபோன உறவுதான். வாய்விட்டுச் சொல்ல முடியாமல் வெட்கத்தில் முகம் சிவக்க உதட்டைக் கடித்தாள்.

சிவந்த அந்தக் கன்னம் தடவி, “சொல்லனடி!” என்றான் ஆசையாக.

“என்ர மனுசன்!” என்றவள் வெட்கத்தில் அவன் மார்பில் முகத்தை மறைக்கப்போக, தடுத்து, ஆசையாக நோக்கி, அவள் இதழ்களில் தன் இதழ்களைப் பதித்து எடுத்தான் அதிரூபன்.

ஆனந்தமாய் அதிர்ந்து, அவள் வெட்கமும் குழப்பமுமாக அவனைப் பார்க்க, ‘என்ன?’ என்றான் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி. ஒன்றுமில்லை என்றவள் அவனிடமிருந்து விடுபட்டு ஓடமுயல, அப்போதும் விடவில்லை அவன்.

“இந்தத் தாலியத் திரும்பக் கட்டுவமா?”

“ம்ம்!”

“இனி என்ர அம்மாவை என்னெண்டு கூப்பிடுவாய்?”

“மாமி எண்டுதான்!” வெட்கம் வந்தாலும் சந்தோசமாகச் சொல்லிவிட்டு ஓடிவிட்டாள் அவள்.

அவன் உதடுகளில் புன்னகை பூத்தது.

தயாராகி வெளியே வந்தவன், “ஒரு நல்ல நாளாப் பாருங்கம்மா.” என்றுவிட்டுச் சாப்பிட அமர்ந்தான்.

அவனை முறைத்தாள் வானதி. இதை அவள் இல்லாத நேரமாகப் பார்த்துச் சொல்லக் கூடாதா? அவளுக்கு கலைவாணி அம்மாவின் முகமே பார்க்க முடியவில்லை. சிவந்துவிட்ட முகத்தை எங்கே கொண்டுபோய்ப் புதைக்க என்று தெரியாமல் தடுமாறினாள்.

அவருக்கோ அவ்வளவு சந்தோசம். வானதியைப் பாசத்தோடு அணைத்துக்கொண்டார்.

“நீண்ட காலத்துக்கு நாலுபேரும் சந்தோசமா இருக்கவேணும்!” வாழ்த்தியவர், அவர்களுக்கு இடம்விட்டு அகன்றுகொண்டார்.

“சாப்பாட்டைப் போடு!” அவள் ஆசையோடு பரிமாற, அவன் வயிறும் மனமும் நிறைய உண்டான்.

அதற்குள் எழுந்துவிட்டிருந்த ரூபிணி அப்பம்மாவின் கையினால் முகம் கழுவிக்கொண்டு வந்து, அருகிலிருந்த கதிரையில் பெரும் பாடுபட்டு ஏறி, அங்கிருந்து மேசைக்குத் தாவி, தகப்பனின் தட்டின் முன்னே அமர்ந்து, தட்டில் கை வைத்து விளையாட ஆரம்பித்தாள்.

“அப்பாவைச் சாப்பிட விடவேணும்!” என்று அவளைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டாள் வானதி.

அவன் சாப்பிட்டு முடிய தேநீர் கொண்டுவந்து கொடுத்தாள். வாங்கிப் பருகினான்.

சின்னவளும் கையில் பிடித்துப் பால் அருந்திக்கொண்டிருந்தாள்.

“பின்னேரம் ரெடியா இரு. கடைக்குப் போயிட்டு வருவம்!”

தலையை ஆட்டிச் சரி என்றாள்.

அருந்திய தேநீர்க் கோப்பையை மேசையில் வைத்துவிட்டு, “வரட்டா..?” என்றவன், முகத்தை அவளருகே கொண்டுவரவும், “ஐயோ மாமி நிக்கிறா!” என்று பதறினாள் அவள்.

அவளை நிதானமாகப் பார்த்துக்கொண்டே மகளின் குண்டுக் கன்னத்தில் முத்தமிட்டான் அவன்.

‘அடப்பாவி!’ அவள் அசந்துபோய்ப் பார்க்க, உதட்டில் வழிந்த விசமச் சிரிப்புடன், “ரூபிக்கு முத்தம் குடுக்கேக்கையுமா அம்மா நிக்கக் கூடாது?” என்று கண்ணடித்துவிட்டுப் புறப்பட்டான் அவன்.

அவளால் வெட்கச் சிரிப்பை அடக்கவே முடியாமல் போயிற்று!

தாயிடம் சொல்லிவிட்டு, கண்ணால் விடைபெற்றுத் தலையசைத்தவனின் நேசப் பார்வையில், இனிமையான கனவுகளில் சஞ்சரிக்கத் துவங்கியது அவளிதயம்.

error: Alert: Content selection is disabled!!