அத்தியாயம் 15
கோவிலில் வைத்து எளிமையாகத் திருமணம் முடிந்திருந்தது. அவளின் குடும்பம், அக்காக்கள், சங்கரி எல்லோருமே வந்திருந்தனர்.
சங்கரிக்கு மிகப்பெரிய மனநிறைவு. சரி பிழை யார் மீதிருந்தாலும் ஒரு பெண்பிள்ளையைத் தனியாக நிற்கும் சூழ்நிலைக்கு ஆளாக்கிவிட்டோமோ என்று எண்ணிக் கலங்கியவர் இப்போதுதான் நிம்மதியானார். குழந்தைகளும் ஆளுக்கொரு திசையில் சிதறாமல், அவளும் நிர்கதியாக நிற்காமல் எல்லோரையும் ஒன்றாக இணைத்த பரவசம் அவருக்கு. மிருணாவின் இழப்பு வேதனைதான். ஈடுசெய்ய முடியாத ஒன்றுதான். ஆனால், நம்மையும் மீறிய ஒன்றினால் நடாத்தப்படும் எந்தச் செய்கைக்கும் யார் பொறுப்பாவது?
அன்று அதிரூபன் போட்ட போட்டில் அவனருகில் பெட்டிப்பாம்பாக அடங்கினாலும், மற்றும்படி தன் குணத்தையே காட்டிக்கொண்டிருந்தார் கதிரேசன்.
“அம்மா, காசு சும்மா சும்மா அனுப்பேலாது. மாதச் செலவுக்குக் கணக்குப் பாத்துத்தான் தருவன். அதைக் குடிச்சுக் கெடுப்பன் எண்டு நிண்டார் எண்டு வைங்க, நீங்க வெளிக்கிட்டுச் சின்னக்காவையும் கூட்டிக்கொண்டு இங்க வாங்க. அவரின்ர பிழைப்பை அவரே பாக்கட்டும். தானும் உழைக்கமாட்டாராம், குடுக்கிற காசையும் நாசமாக்குவார் எண்டால் சரி வராதம்மா! கொஞ்ச நாளைக்குத் தனியா விட்டா எல்லாரும் திருந்தி வழிக்கு வருவீனம்.”
கணவன் அருகில் நிற்கிற தெம்பில், தகப்பனையும் வைத்துக்கொண்டு வானதி தாயிடம் சொல்ல, உள்ளே திகில் பரவினாலும் பெட்டிப் பாம்பாக அடங்கி நின்றிருந்தார் கதிரேசன்.
அதிரூபன் வேறு அடிக்கடி அவரைப் பார்வையால் மேலும் கீழுமாய் அளந்துகொண்டிருந்தான்.
திருமணமாகி இரண்டு நாட்களாகியும் கலைவாணியோடுதான் உறங்கிக்கொண்டிருந்தாள் வானதி. தாய் வீட்டினரைத் தங்கிப்போகச் சொன்னதில், அவளின் கட்டிலை அவனது அறைக்கு மாற்றவில்லை.
திருமணம் நடந்த இரவு, “பிள்ளைகளை நாங்க பாப்போம், நீ அங்க போம்மா!” என்று நாசுக்காகச் சொல்லிப்பார்த்தார் கலைவாணி.
“இல்ல மாமி. நான் இங்கேயே படுக்கிறன்.” என்றுவிட்டாள் வானதி.
பக்குவப்பட்ட பெண் அவள். அவன் மீது நேசமிருந்தாலும் தாலி காட்டுவதற்காகவே காத்திருந்ததுபோல் அவனிடம் ஓடுவதில் விருப்பமில்லை. அதில் ஆர்வமும் இல்லை. அதெல்லாம் அதன் பாட்டுக்கு இயல்பாக நடப்பதைத்தான் மனம் விரும்பியது.
மகனிடமும் சொல்ல, “அம்மா, அதுதான் தாலி கட்டியாச்சு எல்லோ. இனியும் மனத்தைப்போட்டுக் குழப்பமா நிம்மதியா இருங்கோ. நாங்க எங்கயும் போகப்போறேல்ல!” என்றுவிட்டான் அவன்.
‘உண்மைதானே! இந்தளவுக்கு அவர் சொன்னதே போதும். அது அவர்களின் அந்தரங்கம். அவர்களே பார்த்துக்கொள்ளட்டும். பக்கத்திலதானே இருக்கப்போறன்.’ என்று அவரும் விட்டுவிட்டார்.
எல்லோரும் போன பிறகும் அவள் அவர் அறையிலேயே தங்க, அவனும் வேலைக்கு ஆயத்தமாக, “தம்பி, இந்தக் கட்டிலை உன்ர அறைக்கு மாத்து!” என்றார் அவர்.
எதுவாக இருந்தாலும் கணவன் மனைவி ஒன்றாக இருந்து ஒன்றாகப் பேசிச் செய்யட்டும் என்பது அவர் எண்ணமாயிருந்தது!
குறும்புடன் அவளிடம் பாய்ந்த அவன் விழிகளை எதிர்கொள்ள முடியாமல் சமையலறைக்குள் நழுவியிருந்தாள் வானதி.
சற்றுநேரத்தில் அவனுடைய வலிய கரங்கள் பின்னிருந்து அணைத்தன. “மாத்தவா?” என்றான் காதுக்குள்.
ஒருகணம் உதட்டைக் கடித்தவளுக்கு முகம் நிமிர்த்தவே முடியவில்லை. பின்னிருந்து அணைத்தபடி, காதோரமாய் விளையாடிக்கொண்டிருந்தவனுக்குத் தன் நிலை தெரியவராது என்பதில், “மாத்துங்கோ… அப்பதான் பிள்ளைகளும் அப்பாவோட படுக்கலாம்!” என்றாள் வேண்டுமென்றே.
“ஆகா! பிள்ளைகள் மட்டும்தான் அப்பாவுக்குப் பக்கத்தில படுக்கவேணுமோ? அம்மாக்காரிக்கு அந்த ஆசையெல்லாம் இல்லையோ?”
அவனுடைய கேள்வியில் அவன் கைகளுக்குள்ளேயே திரும்பிநின்று முறைத்தாள் வானதி.
“அதுசரி! உன்னை நான் தொடவே இல்ல. பிறகு எப்பிடி என்ர ரெண்டு பிள்ளைகளுக்கும் அம்மா ஆனாய்?” சந்தேகம் கேட்டான் அவன்.
“ரூபன்!” அதட்டியவளுக்கு முறைக்க முடியாமல் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது. வெட்கமே இல்லாமல் என்ன கேள்வி கேட்கிறான்?
“நீங்க ஒரு வாத்தி. வாத்தி மாதிரியா கதைக்கிறீங்க? முதல் இங்க இருந்து வெளில நடவுங்கோ!”
“அறிவுக்கொழுந்தடி நீ! நான் வாத்தி இல்ல புரஃபஸர்!” என்றான் அவன் அவள் நெற்றியில் முட்டி.
“எங்களுக்கு எல்லாம் வாத்திதான். இப்ப நடவுங்க, நான் வேலைய முடிக்கோணும். பிறகு நீங்கதான் நேரமாச்சு சாப்பாட்டைக் கொண்டுவா எண்டு நிப்பீங்க!” என்று அவனைத் தள்ளினாள்.
“இப்பயெல்லாம் உனக்கு வெக்கமே வாறேல்ல வானதி.” என்று பெரும் குறையாகச் சொன்னவனை மீண்டும் முறைத்தாள் வானதி.
வெளியேதான். உள்ளே மிக அழகாக வெட்கம் கொண்டாள். உண்மையிலேயே புதிதாக மணமான ஒரு எண்ணம் இல்லவே இல்லை. காலம் காலமாக அவனோடே வாழ்ந்த உணர்வு!
“இப்ப என்ன வேணும் உங்களுக்கு?” பொய் முறைப்புடன் கேட்டாள்.
“வெக்கம் வேணும்!” என்றான் அவன்.
என்னவோ சின்னப்பிள்ளை மிட்டாய் வேணும் என்பதுபோல நின்றவனை என்ன செய்ய என்றே தெரியவில்லை.
நன்றாக ஒருமுறை முறைத்துவிடுவோம் என்றால் எங்கே? சிரிப்பு மூட்டிக்கொண்டிருந்தான் அவன்.
“எங்க? முதல் நீங்க வெக்கப்பட்டுக் காட்டுங்கோ?” இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு அவள் கேட்க,
“நீ என்ன வெட்கப்பட வைக்கோணும்!” என்றான் அவனும் அசராமல்.
“உங்களை…” என்றவளுக்கு அவனை என்ன செய்வது என்றே தெரியவில்லை. தள்ளியிருக்கும் வரைக்கும் நல்ல கனவானாக இருந்தவன், கணவனானதும் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருந்தது.
அவனை ஒன்றும் செய்யமுடியாமல் திணறியவள் படும் பாட்டை ரசித்தவனின் பார்வையின் வீரியம் தாங்காமல் முகம் சிவப்பது போலிருக்க, வேகமாகத் திரும்பப் பார்த்தாள். தடுத்துப் பிடித்தான் அவன்.
“இப்ப நீ வெக்கப்படுறாய் தானே?”
“இல்ல!”
“பொய் சொல்லாத! எங்க என்ர கண்ணைப் பார். பாரடி!” அவன் விடாமல் வம்பு வளர்க்க, அகப்பைக் காம்பை எட்டிக் கையில் எடுத்தாள் வானதி.
“இப்ப வெளில போகப் போறீங்களா, இல்ல, ரெண்டு போடவா?”
வேகமாகத் தள்ளி நின்றான் அவன். அவளெல்லாம் சும்மா மிரட்டுகிற ஆள் இல்லை.
“அடிப்பாவி! இப்ப நீதான் பக்கா வாத்தியார் மாதிரி நிக்கிறாய்.”
“பின்ன! வாத்தி வாத்தி வேல பாக்காட்டி நாங்க பாப்பம்! ஒடுங்க!” என்று துரத்திவிட்டாள்.
“உன்ன வெட்கப்பட வைக்கிறனா இல்லையா எண்டு பார்!” சூளுரைத்தபடி நகர்ந்தான் அவன்.
கட்டிலும் அவன் அறைக்கு மாறியது! அவளும் பிள்ளைகளோடு இடம்பெயர்ந்தாள். மனத்துக்குள் ஒரு பயம், ஒரு தடுமாற்றம். எதுவும் விளங்காத சின்னப்பிள்ளையன்றுதான். என்றாலும் ஒரு படபடப்பு! வெட்கப்பட வைக்கிறேன் என்றவனும், சிரிக்கும் கண்களால் அவளைச் சீண்டிக்கொண்டே இருக்க, பொறுத்து பொறுத்துப் பார்த்தவள் முடியாமல், “ரூபன்!” என்றாள் சிரிப்பும் முறைப்புமாக.
வாய் விட்டுச் சத்தமாகச் சிரித்தான் அவன்.
“ஐயோ! பிள்ளைகள் நித்திரை! சத்தம் போடாதிங்கோ!” என்று அவன் வாயைப் பொத்த, சொன்னதுபோலவே ரூபிணி பிரண்டு படுத்துச் சிணுங்கத் துவங்கினாள்.
“சொறி சொறி!” சிரிப்புடன் உதட்டசைவில் சொன்னவனை முறைத்துவிட்டு, “சரி சரி.. செல்லம் நீங்க படுங்க!” என்று மகளருகில் படுத்துத் தட்டிக்கொடுத்தாள்.
பிள்ளை உறங்கியதும் அவளருகில் அவன் வர, மிரட்சியோடு பார்த்தாள் வானதி. கனிவோடு புன்னகைத்தான் அவன். அவள் நெற்றியில் முத்தமிட்டு, “படு! கொஞ்ச நாள் போகட்டும்!” என்றான்.
உண்மையாகவே அந்த நிமிடம் அவள் உள்ளம் வெகுவாக அமைதியானது. கரைவதே தெரியாமல் அவனுக்குள் கரைந்து, தொலைவதே தெரியாமல் அவனுக்குள் தொலையத்தான் அவளுள்ளம் விரும்பியது. உணர்ந்து நடந்தவன் மீது நேசம் பிறக்க, தானும் அவன் கழுத்தை வளைத்துத் தன்னருகே இழுத்து, அவன் கன்னத்தில் தன் உதடுகளை அழுத்தமாகப் பதித்தெடுத்தாள்.
அன்று, அங்கே யாழ்ப்பாணத்தில் இருக்கிறவர்கள் அழைத்து வீடு விடப்போவதாகக் கலைவாணியிடம் சொல்லியிருந்தனர். மாலை வேலை முடிந்து வந்தவனிடம், “என்ன எண்டு போய்ப் பாத்துக் கதைச்சுக்கொண்டு வா தம்பி. வீட்டையும் பாத்து நிறைய நாளாச்சு!” என்றார் கலைவாணி.
போவோமா என்பதுபோல் அவன் அவள் முகம் பார்க்க, சம்மதமாகத் தலையை அசைத்தாள் வானதி. அடுத்தநாள் புறப்பட்டனர் இருவரும். பிள்ளைகளையும் வெளிக்கிடுத்த, “இப்ப போயிட்டு பின்னேரம் வாறதுதானே. நானே பாக்கிறன்.” என்றார் கலைவாணி அம்மா.
“ரூபிணிய மட்டுமாவது கூட்டிக்கொண்டு போறன் மாமி. அவள் உங்களை இருத்தி எழுப்புவாள்.”
“பரவாயில்லம்மா. ஒரு நாளைக்குத்தானே, நான் பாப்பன். நீ போய்ட்டுவா!” என்று அனுப்பிவைத்தார்.
தொலைபேசியிலேயே முடிக்கக் கூடிய விசயம்தான். இருவருக்கும் தனிமை கொடுக்க எண்ணித்தான் நேரில் போகச் சொன்னார். மிருணாவை எந்தளவுக்குப் பிடிக்குமோ அவ்வளவுக்கு அவளையும் பிடித்துப்போனது அவருக்கு. உண்மையிலேயே தான் பெறாத குழந்தைகள் மீது மிருணா கூடி இவ்வளவு பாசம் வைப்பாளா தெரியாது! அதோடு, என்ன இருந்தாலும் மகன் வாழ்ந்தவன். அவள் மணமான புதுப்பெண்! கணவனோடான தனிமையை மனம் எதிர்பார்க்கும் என்று உணர்ந்து நடந்தார்.
வானதிக்கும் கணவனோடான பயணம் மிகவுமே பிடித்திருந்தது. அவனது குறும்பும் கேலியும் கிண்டலும் பார்வையாலேயே அவளைச் சிவக்க வைக்கிறவனின் ஆளுமையும் என்று சந்தோசமாகவே யாழ்பாணத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

