வீட்டை நெருங்க நெருங்க, அவன் மெல்ல மெல்ல அமைதியானான். அந்த வீதிக்குள் நுழைந்ததுமே அவன் கைகளில் ஒரு நடுக்கம். காரை வீட்டின் முன்னே நிறுத்திவிட்டு அப்படியே அமர்ந்துவிட்டான்.
அவன் தன்னைக் கட்டுப்படுத்தப் படுகிற பாட்டைப் பார்த்திருந்த வானதிக்கு அழுகை வந்தது.
“ரூபன்..” மென்மையாக அழைத்து, அவன் கரத்தை ஆதரவாகப் பற்றினாள். அடுத்தகணம் அவளை இழுத்து அணைத்திருந்தான் அவன். தேகமெங்கும் ஒரு நடுக்கம் ஓடியது அவனுக்கு!
அவன் முதுகை வருடிக்கொடுத்து, கேசத்தை கோதிக்கொடுத்து, ஆறுதல் வார்த்தைகளை அவள் சொல்ல சொல்ல, சற்றே தெளிந்தான். “வா!” என்று அவளையும் அழைத்துக்கொண்டு, இறங்கி உள்ளே நடந்தான்.
“வாங்கோ தம்பி!” என்று வரவேற்று அமரவைத்தது உபசரித்தவர்களின் முகத்தில் சங்கடம்.
“குறையா நினைக்காதிங்கோ தம்பி. தொடந்து இருப்போம் எண்டு சொல்லித்தான் வீடு எடுத்தது. ஆனா, மகளுக்கு இரட்டைப் பிள்ளைகள் பிறந்திருக்கு. மாமியாரும் மோசம் போய்ட்டா. இன்னொரு பொம்பிளைப் பிள்ளையும் நாலு வயசில இருக்கிறா. தனியாளா மூண்டுபேரையும் கவனிக்க சரியாச் சிரமப்படுறா. அதுதான் எங்களை அங்க பக்கத்தில வந்திருக்கச் சொல்லிக் கேட்டவா. இங்க சும்மா இருக்கிறதுக்கு அங்க உதவியா இருக்கலாமே எண்டுதான் நாங்களும் யோசிச்சம். வயசும் போயிட்டுது. பேரக்குழந்தைகளுக்குப் பக்கத்தில இருக்கத்தான் ஆசையாவும் இருக்கு. அதுதான், உங்களிட்ட கேட்டுப் பாக்கலாம் எண்டு..” என்று சங்கடத்தோடு பேசியவர்களிடம்,
“பரவாயில்ல. எனக்கு விளங்குது உங்கட நிலைமை. சின்னக் குழந்தைகளோட சிரமம்தானே!” என்று அவர்களின் நிலையை விளங்கிக்கொண்டான் அவன்.
“நீங்கள் வேணுமெண்டால் அட்வான்ஸ்ல மூண்டு மாதக் காசை எடுங்கோ.” என்றார்கள் அவர்கள்.
“இல்ல வேண்டாம். இருக்கிற வரைக்கும் வாடகை தாங்க. நான் அட்வான்ஸ் முழுசாத் திருப்பித் தாறன்!” என்றதும் அவர்களுக்கு முகம் மலர்ந்து போயிற்று!
எப்போது விடுகிறார்கள், திறப்பு எப்போது தருவார்கள் என்று கேட்டுக்கொண்டு, “வீட்டை ஒருக்காச் சுத்திப் பாத்துக்கொண்டு வாறோம்.” என்றபடி அவளோடு தோட்டத்துக்குள் நடந்தான்.
எங்கும் மிருணாவின் நினைவுகள். பார்க்க பார்க்க மனம் கனத்தது. அவள் சிரித்தது, விளையாடியது, அவனைச் சீண்டியது என்று அவளோடு வாழ்ந்த நினைவுகள் அவனைப் புரட்டிப்போட்டன. அங்கிருந்த கல்லில் அப்படியே அமர்ந்துவிட்டான்.
ஒன்றாக இருந்து, ஒன்றாக உறங்கி, சிரித்து, சாப்பிட்டு, உயிராய் நேசித்து வாழ்ந்த ஒருத்தி திடீரென்று இல்லை என்றால் எப்படி? இனி வாழும் காலத்துக்கும் அவளைப் பார்க்க முடியாது, அவளோடு கதைக்க முடியாது என்றால் எப்படி? நெஞ்சு வெடிக்கும் போலிருந்தது. காலத்துக்கும் வலியோடு வாழ்ந்து பாரடா என்று சாபமிட்டது போல என்ன வாழ்க்கை இது?
அவனது தவிப்புகளைக் காணமுடியாமல் சென்று அவன் தோளில் கையை வைத்தாள் வானதி. திரும்பிப் பார்த்தவனின் விழிகளில் பெரும் வலி. “என்ன விட்டுட்டுப் போய்ட்டாள் வானதி! அவளில்லாம நான் எப்பிடி இருப்பன் எண்டு யோசிக்காமப் போய்ட்டாள்.” என்றான் துயரோடு.
இவன் வானதியின் கணவனல்லன்! அவள் உணர்ந்துகொண்டாள். இவன் மிருணாவின் கணவன். அவளது பிரிவால் துடிக்கும் கணவன்.
என்ன சொல்லித் தேற்றுவாள்? முன்னே வந்து அவனைத் தன்னோடு அணைத்துக்கொண்டாள். அவன் துடிப்பதைக் கண்டு அவளுக்கும் அழுகை வந்தது.
“இந்த வீட்டுலதான் அவளோட ஒரு வாழ்க்கை வாழ்ந்தனான் வானதி. அது ஒரு சொர்க்கம். அம்மாவும் நானும் மட்டும் எண்டு இருந்த உலகத்துக்க ஒரு தேவதை மாதிரி வந்தாள். வாழ்க்கை இவ்வளவு சந்தோசமா இருக்குமா எண்டு நான் உணர்ந்த நாட்கள் அது. என்ன மாதிரியான ஆள் அவள்… எனக்குச் சொல்லத் தெரியேல்ல. இவ்வளவு பாசமா அவள் இருக்காம இருந்திருக்கலாம்!” தாங்கமுடியாமல் கொட்டினான்.
அடக்க முடியாமல் இரு துளிக் கண்ணீர் கொட்டியே விட்டது அவளுக்கு.
“ரூபன், நீங்க கவலைப்படுறது அவவுக்குப் பிடிக்குமோ?” அவன் கன்னங்களை இரு கரங்களாலும் பற்றி அவன் முகம் பார்த்துக் கேட்டாள்.
அலைப்புற்ற விழிகளோடு இல்லை என்று தலையசைத்தான் அதிரூபன். “எனக்குச் சின்னதாத் தலைவலி வந்தாக் கூடத் தாங்கமாட்டாள்.”
“பிறகு? நீங்க இப்பிடிக் கவலைப்பட்டா அவவுக்கு எப்பிடி இருக்கும்?” என்றாள் இதமாக.
“தாங்கமாட்டாள்!” கலங்கிவிட்ட கண்களோடு கரகரத்த குரலில் சொன்னான்.
தாரகனைப் பார்ப்பது போலிருந்தது அவளுக்கு.
வயிற்றோடு அணைத்து, “இந்த உலகத்தை விட்டு அவா போயிருக்கலாம். ஆனா, காற்றா மாறி உங்களைச் சுத்தித்தான் இருப்பா. நீங்களும் பிள்ளைகளும்தான் அவவின்ர உலகம். உங்கட சந்தோசம், அழுகை, சிரிப்பு எல்லாத்தையும் அவா பாத்துக்கொண்டு இருப்பா. அப்பிடியிருக்க நீங்க இப்பிடித் துடிக்கலாமோ?” என்றாள் ஆதுரமாக அவன் கேசம் கோதி.
மறுத்துத் தலையசைத்தவன் அவள் இடையை இறுக்கி வளைத்து வயிற்றில் முகம் புதைத்துக்கொண்டான். அவனைத் தேற்றிவிட உள்ளம் துடித்தது அவளுக்கு. மெல்லப் பேசினாள்.
“அவவோட நினைவுகள் நிறைஞ்சிருக்கிற இந்த வீட்டுல வச்சுச் சொல்லுறன் ரூபன், மாமியோட சேர்த்து உங்க மூண்டு பேரையும் நான் நல்லாப் பாத்துக்கொள்ளுவன். நான் இல்லாம என்ர மனுசனும் பிள்ளைகளும் எப்பிடி இருப்பீனம் எண்டு, அவவுக்கு அதுதான் கவலையா இருக்கும். ஆனா, நான் இருக்கிறன், அவவின்ர இடத்தில இருந்து தாயா, தாரமா எல்லாமா இருந்து பாப்பன். நீங்க கவலைப்படக் கூடாது. நீங்க இப்பிடி இருக்கிறதை பாக்க என்னாலயும் தாங்க முடியேல்ல ரூபன்!” கண்கள் கலங்க அவனிடம் உரைத்தாலும் அவள் உள்ளம் காற்றில் கலந்திருந்த மிருணாவுக்கு வாக்குக் கொடுத்தது.
உள்ளம் உருகக் கணவனின் நெற்றியில் அழுத்தமாய்த் தன் இதழ்களைப் பதித்துமீட்டாள். அப்படியே அவனை இறுக்கி அணைத்துக்கொண்டாள்.
காதலும் வரவில்லை காமமும் வரவில்லை. பாசம் நெஞ்சில் சுரந்தது. அவன் வேதனைகளைப் போக்கி, அவனுக்கு எல்லாமாக நான் இருக்கவேண்டும் என்கிற அன்பு துளிர்த்தது. அவனுக்கும் தாயின் சிறகுகளுக்குள் புகுந்துகொண்ட உணர்வு, மனைவியின் இடையை இறுக்கி வளைத்துக்கொண்டான். காடுமேடெல்லாம் அலைந்து திரிந்து வீடு வந்த உணர்வு அவனுக்குள்!
ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டான்.
நேரம் நகர்ந்ததே தவிர, அவன் விலகக் காணோம்.
“ரூபன்..”
“ம்ம்..”
“நேரமாச்சு. போகவேணும். அங்க பிள்ளைகளத் தனியா மாமி சமாளிக்க மாட்டா.”
“ம்ம்ம்..” சொன்னானே தவிர அவளை விடவில்லை.
அவளும் அப்படியே நிற்க நிமிர்ந்தான்.
“நாங்க இங்கேயே திரும்ப வந்திடுவோமா?” கண்களில் எதிர்பார்ப்போடு கேட்டான்.
“பிறகு உங்களுக்கு.. வேதனையா இருக்காதா?” மிருணாவின் நினைவுகளில் இருந்து விடுபடத்தான் அவன் அங்கே வந்தான் என்று தெரிந்ததால் கேட்டாள்.
“இல்ல வானதி. இப்ப.. இந்த வீட்டுல இருக்கிற இந்த நிமிசம்தான் என்னாலையும் உன்ன எந்த முணுமுணுப்பும் இல்லாம ஏற்றுக்கொள்ள முடியுது. மனம் நிர்ச்சலனமாய் இருக்கு. மிருணா என்ர வாழ்க்கைல இருந்து பிரிக்க முடியாத ஒரு ஜீவன். அதே மாதிரி மிச்ச வாழ்க்கைல நான் பிரியவே விரும்பாத ஒரு சொந்தம் நீ. ரெண்டு பேரும் இல்லாம நான் இல்ல. உனக்கு விளங்குதா?” தவிப்போடு கேட்டான்.
அப்படியே அவனை மீண்டும் அணைத்துக்கொண்டாள் அவள். “நான் உங்களுக்காகத்தான் கேட்டனான் ரூபன். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல. நாங்க இங்கேயே வருவோம்.. எனக்கும் உங்களோட சண்டை பிடிச்சா அடிக்கடி அம்மா வீட்டை ஓடலாம் எல்லா…” சின்னச் சிரிப்போடு அவனை இலகுவாக்க முயன்றாள்.
அவனோ, “உனக்குக் கவலையா இல்லையா? இப்பிடி அவளையும் நினைச்சுக்கொண்டு உன்னோடையும் வாழ நினைக்கிறன் எண்டு…” என்றவனின் வாயில் விரலை வைத்துத் தடுத்தாள் வானதி.
“நான் வந்ததும் அவவை மறந்தாத்தான் கவலைப்படுவன். உயிரா வாழ்ந்த ஒருத்திய அவ்வளவு இலகுவா மறக்க முடியுமா என்ன? பத்து மாதம் முகமே தெரியாமச் சுமந்த பிள்ளைக்காகத்தான் நான் எவ்வளவோ செய்தனான். நீங்க உங்களோட உயிரும் உணர்வுமா வாழ்ந்த மனுசிக்காக இந்தப்பாடு படுறீங்க. அதே இடத்துக்கு வாற என்னிலையும் அவ்வளவு பாசம் வைப்பீங்கதானே. என்னையும் சந்தோசமாப் பாப்பீங்க தானே? எனக்கு உண்மையா எந்தக் கவலையும் இல்ல!” நெஞ்சிலிருந்து சொன்னவள் மீது, ஆழமான நேசம் பிறந்தது அவனுக்கு.
“இருக்கிறவரைக்கும் என்னை அவ்வளவு சந்தோசமா வச்சிருந்தவளை எப்பிடி மறக்கிறது சொல்லு?” அதைச் சொல்லும்போது சற்றே தெளிந்திருந்தான் அவன்.
“மிச்சக் காலத்துக்கு நான் சந்தோசமா வச்சிருப்பன்.” என்றாள் அவள் சிரிப்போடு!
“நானும் வச்சிருப்பன்!” அவள் முகம் பார்த்துக் கண்களில் சிரிப்போடு சொன்னவன், முற்றிலுமாக வானதியின் கணவனாக மாறியிருந்தான்.
“சொப்பன சுந்தரியவா?” தலையைச் சரித்து அவள் கேட்க,
“சேச்சே! இந்தச் சொக்க வைக்கிற சுந்தரியை!” என்றவனுக்கும் மனம் இலகுவாகிவிட, அவளோடு சென்று அவர்களிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

