“பிறகு அந்தப் பிள்ளைக்குக் கல்யாணம் எண்டு வரேக்க பிரச்சினை வராதா டொக்டர்? எதுக்கும் வேற ஆக்களைப் பாருங்கோவன். எங்கட தேவைக்கு அதுகளின்ர ஏழ்மையை நாங்க பயன்படுத்திற மாதிரி இல்லையா? பாவமெல்லோ.” ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கைக்கு ஏதும் நடந்துவிடுமோ என்று அஞ்சினான் அதிரூபன்.
மிருணாவின் கணவனாக நின்று, யாரோ ஒரு பெண்ணின் மீது கருணை காட்டியவனுக்கு அன்று தெரியவில்லை, பிற்காலத்தில் அவனே அந்தப் பெண்ணுக்குச் சகலதுமாய் மாறப்போகிறான் என்று. அவனது வாழ்க்கையின் சோதனைக்காலமே அன்றிலிருந்துதான் ஆரம்பிக்கிறது என்பதையும் அறிந்திருக்கவில்லை. விதியின் விளையாட்டில் அவனும் ஒரு பொம்மைதானே!
“அதையெல்லாம் நானும் யோசிக்காம இல்ல அதிரூபன். உண்மையைச் சொல்லப்போனா, உங்கட தேவை அவேன்ர வீட்டுக் கவலையைப் போக்கப் போகுது. தாய், ரெண்டாவது பொம்பிளைப் பிள்ளைக்கு ஆரையோ பேசியிருக்கிறா போல. கட்டிவைக்கக் காசில்லாம இடைல நிக்குது அந்தக் கல்யாணம்.” என்றவர், அந்தப் பெண்ணையே முடிவு செய்தார்.
அதன்படியே அனைத்தையும் ஏற்பாடு செய்தார். அதற்காக அவரின் வீட்டுக்கே அழைத்து வரப்பட்டாள் அந்தப் பெண். அவள்தான் வானதி.
மிருணா அதிரூபனுக்கு விளக்கியது போலவே, அவளது சினைமுட்டையையும் அவனது உயிரணுவையும் எடுத்துக் கருவினை உருவாக்கி, அவளின் கருப்பைக்குள் செலுத்தப்பட்டது.
அவளைத் தன் வீட்டிலேயே வைத்துக்கொண்டார் சங்கரி. திருமணமாகாத இளம் பெண். எதற்குத் தேவையில்லாமல் ஊருக்கே அம்பலப்படுத்துவான்? கேட்டால் உறவுக்காரர் வீட்டுக்குப் போய்விட்டாள் என்று சொல்லும்படி அவர்கள் வீட்டிலும் சொல்லிவிட்டார்.
அவள் யார், என்ன பெயர், எங்கிருக்கிறாள் என்று அவளைப் பற்றிய எந்த விபரமும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அதேபோல, அவர்கள் யார், யாருக்குக் குழந்தை பெற்றுக் கொடுக்கப்போகிறாள், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று எதுவுமே அவளுக்கும் சொல்லப்படவில்லை.
குழந்தையின் நிலை, நலம், வளர்ச்சிபற்றி மட்டும் இவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இரண்டு தரப்புக்கும் நடுவில் நின்று, அனைத்தையும் சரியாகப் பார்த்துக்கொண்டார் சங்கரி.
பேசிய பணம் மூன்றாகப் பிரித்துக் கொடுப்பதாக முடிவானது. அதன்படி, கரு அவள் கர்ப்பப்பைக்குள் வைக்கப்பட்டதும் மூன்றில் ஒரு பங்கு வழங்கப்பட்டது. சரியாக ஐந்தாம் மாதம் இரண்டாவது பங்கையும் கொடுத்துவிட்டான் அதிரூபன். அனைத்தும் நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒருநாள் அவனுக்கு அழைத்தார் சங்கரி.
அப்போதுதான் பல்கலைக்கழகத்துக்கு வந்திறங்கியிருந்தான் அதிரூபன். அவரது அழைப்பைக் கண்டதும் அவனது புருவங்கள் சுருங்கிற்று! ஏழாம் மாதமும் வந்துவிட்டதால் மிருணாவுக்கு இருப்பே கொள்வதில்லை. வாரம் இரண்டுமுறை குழந்தையைப் பற்றி விசாரித்துவிடுவாள்.
மனைவி சொன்னதன் பேரில் நேற்றுத்தான் சங்கரியைச் சந்தித்து, அனைத்தும் சுமூகமாக நடப்பதை விசாரித்துவிட்டு வந்திருந்தான்.
பிறகு ஏன் இன்று அழைக்கிறார்? அதுவும் இந்த நேரம்?
அவன் அழைப்பை ஏற்றபோது, “என்னை ஒருக்கா வந்து பாத்திட்டுப் போங்கோ அதிரூபன்.” என்றார் அவர் அவசரமாக. “மிருணா வேண்டாம். நீங்க மட்டும் வாங்கோ!” தவிப்புடன் சொல்லிவிட்டு வைத்துவிட்டார். அதற்குமேல் அவனால் நிம்மதியாக விரிவுரை எடுக்க முடியவில்லை.
தன் வகுப்பை நண்பனிடம் கொடுத்துவிட்டு விரைந்தான்.
படபடத்து, வியர்த்துப்போய்ப் பெரும் பதட்டத்துடன் கைகளைப் பிசைந்துகொண்டு காத்திருந்தார் சங்கரி.
“என்ன டொக்டர்?” அவரின் இருக்கையில் அமராமல் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தவரைக் கலவரத்தோடு நோக்கிக் கேட்டான்.
“அவளைக் காணேல்ல அதிரூபன்.”
“ஆரை?” அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
“அவள்தான்… உங்கட குழந்தையைப் பெற்றுத் தாறன் எண்டு வந்தாளே…” பதட்டத்திலும் கோபத்திலும் குரல் நடுங்கிற்று அவருக்கு. சூரியன் உக்கிரம் கொள்ளாத அந்த நேரத்திலும் வியர்த்துக் கொட்டியது. மூக்குக் கண்ணாடியைக் கழற்றி ஒருமுறை முகத்தைத் துடைத்துக்கொண்டார்.
அதிர்ந்து நின்றான் அதிரூபன். என்ன பேச்சு இது? இதற்கு அவன் என்ன செய்யமுடியும்? யார், எப்படி இருப்பாள், எங்குப் போவாள் என்று எதுவுமே தெரியாத ஒருத்தியை எங்கு போய்த் தேடுவான்?
கோபம் வந்துவிட்டது அவனுக்கு!
“இதுக்கு நீங்கதான் முழுப் பொறுப்பு டொக்டர். உங்களை… உங்களை மட்டுமே நம்பி, நல்லபடியா முடிச்சுத் தருவன் எண்டு நீங்க சொன்ன வார்த்தையை நம்பித்தான் நாங்க இதுக்குச் சம்மதிச்சனாங்க. என்ன செய்வீங்க, ஏது செய்வீங்க எண்டு எனக்குத் தெரியாது. நீங்கதான் அவவைக் கண்டுபிடிச்சுக் குழந்தையை வாங்கித் தரவேணும். அது எங்கட குழந்தை. அவே கேட்ட காசை நான் நியாயமாக் குடுத்திருக்கிறன். கடைசிப் பங்கை இப்பவே குடுக்கிறதா இருந்தாலும் குடுக்கிறன். சிலநேரம் காசுக்காகாத்தான் இந்த விளையாட்டோ தெரியாது. என்ன செய்து எண்டாலும் எங்கட குழந்தை எங்களுக்கு வேணும். உங்களுக்கே தெரியும், மிருணா இந்தக் குழந்தைக்காக என்ன பாடெல்லாம் பட்டவள் எண்டு. விருப்பமே இல்லாம நான் சம்மதிச்சதே அவளின்ர சந்தோசத்துக்காகத்தான். இதுக்குப் பதில் சொல்லவேண்டிய ஆள் நீங்க மட்டும் தான்!” அழுத்தம் திருத்தமாய்ச் சொல்லிவிட்டு, விருட்டென்று எழுந்து வந்தவன் விறுவிறு என்று சென்று தன் காரில் அமர்ந்துகொண்டான்.
தேகமெல்லாம் கோபத்தில் நடுங்கியது. அவன் குழந்தை… அவனது வம்சம். கடவுளே! கண்ணால் கண்டு அதன் வளர்ச்சியை அணுவணுவாகக் காணாதபோதிலும், இன்னோர் பெண்ணின் வயிற்றில் என் குழந்தையா என்கிற எண்ணம் நெருஞ்சிமுள்ளாய் நெஞ்சில் இருந்தபோதிலும், இன்னும் கொஞ்ச நாட்களில் என் குழந்தை என் கையிலிருக்கும் என்று அவனுமே கனவுகள் காணத்தொடங்கியிருந்தானே!
இனி என்ன செய்வான்?
அப்போது, நடுங்கிக்கொண்டு வந்தாள் ஒரு நர்ஸ்.
சங்கரித்தான் அனுப்பியிருக்கிறார் போலும் என்று அவன் சினத்துடன் ஏறிட்டான்.
“அண்ணா, ப்ளீஸ் அண்ணா. என்னைக் காட்டிக் குடுத்துடாதீங்கோ. இப்பிடியெல்லாம் நடக்கும் எண்டு சத்தியமா எனக்குத் தெரியாது.” என்றாள் அழுவதற்குத் தயாராகிக்கொண்டு.
எரிச்சல் வந்தது அவனுக்கு. இருக்கிற நிலைமை விளங்காமல் தலையும் புரியாமல், வாலும் புரியாமல் என்ன சொல்லுகிறாள் இவள்?
“என்ன விசயம்? அத முதல் சொல்லும்!” என்றான் அதட்டலாக.
படக்கென்று தன் பொக்கெட்டுக்குள் வைத்திருந்த கடிதம் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
ஏன் என்று விளங்காதபோதும், அவனது கை தானாக நீண்டு அதனை வாங்கிக்கொண்டது.
“நேற்று என்னட்ட தந்தவள். நான் ஆருக்குக் குடுக்க எண்டு கேக்க, ‘நாளைக்கு உனக்கே தெரியவரும். அவரிட்டக் குடு.’ எண்டு சொன்னவள். இதுல என்ன இருக்கு எண்டு சத்தியமா எனக்குத் தெரியாது. ஆரிட்டக் குடுக்கவேணும் எண்டுகூடத் தெரியாது. இப்ப நடக்கிறதைப் பாக்கத்தான் விளங்குது, உங்களிட்டத்தான் தரவேணும் எண்டு. இத நான் தந்ததை மட்டும் டொக்டரிட்ட சொல்லிப்போடாதீங்கோ. என்ர வேலையே போய்டும்.” என்று கைகூப்பியவள், அவள் முகத்தை இவன் கூர்ந்து கவனிப்பதற்குள்ளேயே மறைந்திருந்தாள்.
இருக்கிற குழப்பம் போதாது என்று இது வேறா? சினத்துடன் கடிதத்தின் மீது கண்களை நடமாட விட்டான் அதிரூபன்.

