அத்தியாயம் 7
என் குழந்தையின் தந்தைக்கு,
என்னை மன்னிக்கவேண்டும். ஒரு இளம் பெண்ணின் மனத்தையும் உடலையும் வாழ்க்கையையும் முற்றாக மாற்றிப்போடும் வல்லமை கொண்டதுதான் குழந்தைச் செல்வம் என்பதை அறியேன். தன் உயிர்க்கொடியில் தரிக்கும் இன்னோர் உயிரின் மீது, பெண்மைக்குள் சுரக்கும் பாசத்தின் ஆழம் எத்தகையது என்றும் அன்று எனக்குத் தெரியாது.
என்னாலான உதவி. உண்மையைச் சொல்லப்போனால், இதன் ஆழம் கூட அறியாமல் விபரீத விளையாட்டினை விளையாடிப் பார்த்தால் என்ன என்கிற ஆர்வக் கோளாறும், என் குடும்பத்துக்காகச் செய்வோமே என்கிற வயதுக்கு மீறிய நினைப்புமே என்னை இதற்குத் தூண்டியது. வீட்டு நிலைமை பெற்றவர்களின் வாயைக் கட்டிப்போட்டதும் எனக்குச் சாதகமாகப் போயிற்று. முரண்களை நிகழ்த்திவிட்டு, நெஞ்சை நிமிர்த்திக்கொள்ளும் முட்டாள் பெருமை எனக்குள்ளும்! விளையாட்டாக எடுத்த முடிவுதான்.
குடும்பத்துக்குப் பணம், எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் என்று ஆழம் தெரியாமல் காலை விட்ட கதைதான் என் கதையும்.
கருவைக் கர்ப்பப்பைக்குள் வைத்தாயிற்று என்று டொக்டர் சொன்ன அந்தக் கணத்தில் எனக்குள் ஓடிய சிலிர்ப்பிலிருந்து மாற்றங்கள் உருவாகத் துவங்கியது. என் வயிற்றுக்குள் குழந்தை… குழந்தையாக மனம் குதூகலிக்கச் சில நாட்கள் புன்னகையோடு கழிந்தன. என் வயிற்றைத் தடவிப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் எனக்குள் சிலிர்ப்பு ஓடிக்கொண்டிருந்தது. மாதவிடாய் நின்றபோது என்னவோ நான் மிகவுமே பெரியவள் ஆகிவிட்டதைப்போல் உணர்ந்தேன். பெரிதாக எதையோ சாதித்த உணர்வு. மெல்லியதாக என் மணிவயிறு ஊதத் துவங்கிய போதினிலே, சின்னதாய் ஒரு பரபரப்பு. என் வயிற்றுக்குள் ஒரு குழந்தை, என்னால் நம்பவே முடியவில்லை. சிலிர்ப்பும் சிரிப்புமாக அடிக்கடி தடவிக்கொண்டேன்.
முதன் முதலில் என் குழந்தை அசையத் துவங்கிய அன்று ஆனந்தக் கண்ணீர் என் கண்களில் அளவில்லாமல் படியத் துவங்கிற்று. மார்பில் பால் சுரப்பதைப்போலப் பாசம் சுரக்கத் துவங்கியது. கண்ணால் காணாத குழந்தையின் மீது, ஓராயிரம் கற்பனைக் கோட்டைகளைக் கட்டி முடித்தது மனம். பல இரவுகள் உறங்கவேயில்லை. எப்போது அசைவான் என்று முழித்திருந்து பார்த்திருக்கிறேன். வயிற்றில் அசைகையிலேயே இத்தனை ஆனந்தமாய் இருக்கிறதே என் கைகளில் அசைந்தால்? என் மடியில் உறங்கினால்? மார்பினில் சாய்ந்தால்? பொக்கை வாய் திறந்து சிரித்தால்? கருவண்டு விழிகளால் என்னைப் பார்த்தால்? அம்மா என்று அழைத்தால்? கற்பனைகள் சிறகின்றிப் பறக்க பறக்கப் பாசம் படர்ந்துகொண்டே போயிற்று.
நானே எதிர்பாராத மாற்றம்! என்னையே தூக்கிச் சாப்பிடும் பாசம்! என் பிள்ளை… என் குழந்தை… என் மகன்… நாமம் போல இவற்றைத்தான் என் உதடுகள் உச்சரிக்கின்றன!
என் குழந்தை மீதான கற்பனைகளை அவனே வளர்த்துவிட்டான். பார்த்தீர்களா, உங்களிடமே அவனே என்கிறேன். ஆம், எனக்கு ஆண்பிள்ளைதான் வேண்டும். அவன் எப்படியிருப்பான்? யாரைப்போல இருப்பான்? என்னைப் போலவா, உங்களைப் போலவா? இப்படித்தான் உங்கள் மகன் உங்களைப் பற்றிய நினைவுகளையும் எனக்குள் ஊட்டிவிட்டான்.
இப்போதெல்லாம் அவனை நினைக்கும் நேரமெல்லாம் உங்களையும் நினைத்துக்கொள்கிறேன். நானும் நீங்களுமாய் அவன் கரத்தை ஆளுக்கொன்றாய்ப் பிடித்துக்கொண்டு நகர்வலம் கூட வரத்துவங்கிவிட்டோம். அம்மாதான் குழந்தைக்கு இவர்தான் உன் அப்பா என்று காட்டுவாளாம். நான் காத்திருக்கிறேன், என் மகனின் அப்பா எப்படி இருப்பார் என்று அவன் சாயலை வைத்து அறிந்துகொள்ள! அதனாலேயே அவன் உங்களைப்போலவே பிறக்கவேண்டும் என்று ஆசையாயிருக்கிறது.
உங்களை என்றும் சந்திக்கமாட்டேன் என்கிற தைரியத்தில், அல்லது சந்தித்தாலும் நீங்கள் தான் என்று அறிய வாய்ப்பில்லாத காரணத்தால் சொல்கிறேன். அவன் வளர வளர, அவன் தன் மீது மட்டுமில்லை உங்கள் மீதும் என் நேசத்தைப் படரவிட்டுவிட்டான்.
இப்போதெல்லாம் என் உள்ளம் உங்களையும் தேடுகிறது. தனியறைக்குள் இருளின் மறைவில் உங்களை எண்ணி என் நெற்றியில் குங்குமம் வைத்துக்கொள்ளவும் பழகிக்கொண்டேன். நீங்கள் எப்படி இருப்பீர்கள், எப்படிச் சிரிப்பீர்கள், எப்படி நடப்பீர்கள் என்றெல்லாம் சதா என் உள்ளம் சிந்திக்கிறது. இரவின் போர்வைக்குள் தலைசாய்க்க உங்கள் தோளைத் தேடுகிறது. உங்கள் அன்பினில் குழைந்து, கனிந்து, இந்தக் குழந்தை உருவாகியிருந்தால் எப்படியிருக்கும் என்கிற கற்பனைகளெல்லாம் வருகிறது.
தவறு! இது கூடாது. இன்னொரு பெண்ணின் கணவனை இப்படியெல்லாம் நினைக்கக்கூடாது என்றுதான் நினைக்கிறேன். முடியாமல் நினைவுகள் மீண்டும் உங்களிடமே ஓடி வருகின்றன. இனிமேல் நினைப்பதில்லை என்று கடுமையாக ஒவ்வொரு முறையும் முடிவெடுக்கிறேன். பயங்கரமாகத் தோற்றும் போகிறேன்.
என் வாழ்க்கையில் இனி இன்னொருவருக்கு இடமில்லை என்கிறபோது உங்கள் நினைவுகளின் துணையும் இல்லாமல் எப்படி வாழ்வேன் சொல்லுங்கள்?
அந்த இடத்தில் அழுத்திருக்கிறாள் என்பதற்குச் சான்றாகக் கண்ணீர் பட்டுச் சிதறிய அடையாளம் தெரிந்தது. மனம் பாரமாகிப் போயிற்று அதிரூபனுக்கு.
வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல சொல்லக் கேட்டாளா, அவன் மனைவி? இப்போதானால் இன்னோர் பெண்ணின் மனத்தை அல்லவா கலைத்துவிட்டான். சம்மந்தமே இல்லாத இருவரைச் சம்மந்தப்படுத்தி விட்டதே இந்த நிகழ்வு!
‘வாடகைத்தாய்’- குழந்தையற்றவர்களுக்காய் வளர்ந்த விஞ்ஞானம் இலகுவாக விடை கண்டுபிடித்துவிட்டது. ஆனால், வாடகைத்தாயாக மாறும் பெண்ணின் மனத்துக்கு, அதிலே சுரக்கும் பாசத்துக்கு என்ன பதில் சொல்லுமாம்? பாசம் என்பது கையெழுத்திடும் பத்திரங்களில் இருக்கும் சட்டதிட்டங்களுக்குள் அடங்கிவிடுமா என்ன?
என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்? உள்ளம் சொல்லிக்கொண்டா ஒருவரை நினைத்துவிடுகிறது? தலை சுற்றலிலும் வாந்தியிலும் சோர்ந்து கிடக்கும் ஒவ்வொரு நொடியிலும் உங்கள் தோளைத்தான் தேடுகிறது உள்ளம். தனியறையில் ஒற்றைத் தலையணையில் தலை சாய்க்கையில் அருகில் நீங்கள் வேண்டும் போலிருக்கிறது. என்ன செய்வேன்? இந்த விபரீதப் பரிசோதனையில் நானே எலியாக மாட்டிக்கொள்வேன் என்று நினைக்கவேயில்லை.
உங்கள் குழந்தையை அபகரிக்கப் போகிறேன். இது பெரும் பிழை. கூடவே கூடாது. சட்டப்படியும் குற்றம், தர்மப்படியும் குற்றம். ஆனால், நீங்களும் இல்லாமல் உங்கள் குழந்தையும் இல்லாமல் சத்தியமாக நான் உயிர்வாழ மாட்டேன். நீங்கள்தான் எனக்கில்லை. உங்கள் நினைவாக அவனாவது என்னோடு இருக்கட்டுமே. தாய்மை இத்தனை அற்புதம் நிறைந்தது என்று எண்ணியே பார்த்ததில்லை. எனக்குள் இவ்வளவு பாசம் சுரக்கும் என்றும் யோசிக்கவில்லை. தெரிந்திருந்தால் சத்தியமாகச் சம்மதித்திருக்க மாட்டேன்.
குழந்தை பிறக்கும்போது தப்பித்தவறி நான் இறந்துவிட்டால், எங்கள் டொக்டரின் விலாசம் கொடுத்து வைக்கிறேன், அவரிடம் குழந்தையை ஒப்படைக்கவும் சொல்லிவிடுவேன். அதனால், பிள்ளைப் பிறப்பின்போது நான் இறந்துவிட வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள்.
அதோடு, என் மனத்தில் படறத் துவங்கியிருக்கும் உங்கள் மீதான நேசம், உங்கள் குடும்பத்துக்குள்ளும் சிக்கலை உருவாக்கிவிடுமோ என்று அஞ்சுகிறேன். எல்லாவற்றுக்கும் நிரந்தரத் தீர்வு நான் மாயமாவதே! மீண்டும் மீண்டும் கேட்கிறேன், என்னை மன்னித்துவிடுங்கள்.
தப்பித்தவறி நான் உயிருடன் இருந்தால், எப்பாடு பட்டேனும் உங்கள் குழந்தையை மிகச் சிறப்பாக வளர்ப்பேன்.
ப்ரியங்களுடன் உங்கள் குழந்தையின் தாய்.
அதைப் படித்து முடித்தபோது சிந்திக்கும் திறனை இழந்து உறைந்து போயிருந்தான் அதிரூபன். மூளை விறைத்துப் போயிற்று! அதை மடித்தபோதுதான் பார்த்தான், ஏதோ பாடல் வரிகள்.
ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்
காதலா… இதுதான் காதலா..?
காதலா.. இதுதான் காதலா…?
நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம்
நீ தந்த காற்று!
நீயின்றி வாழ்ந்திட இங்கு
எனக்கேது மூச்சு!
ஆகாயம் நீர் நிலம் யாவும்
அழகே உன் காட்சி!
அலைபாய்ந்து நான் இங்கு வாழ
அவைதானே சாட்சி!
நீயில்லாத நானே
குளிர் நீரில்லாத மீனே..!
நீர் ஓடை போல…. அதோடு நிறுத்தியிருந்தாள்.
அவனுக்குத் தெரியும்; அந்த வரிகள் ‘நீர் ஓடைபோலக் கூடவேண்டுமே’ என்று முடியும். கூடவே முடியாது என்று தெரிந்து அதற்குமேல் எழுதவில்லை அவள்.
என்ன செய்திருக்கிறாள் இந்தப் பெண்? தன் வாழ்க்கையையும் சிக்கலாக்கி, அவனது வாழ்க்கையையும் சிக்கலாக்கி தலையே வெடிக்கும் போலிருந்தது.
கையில் கிடைத்தாள் என்றால் என்ன செய்து வைத்திருக்கிறாய் என்று கேட்டு இரண்டு சாத்துச் சாத்திவிடுவான்! அவ்வளவு கோபம் வந்தது; அவள் மீது, இதற்காக அடம் பிடித்த மனைவி மீது, சம்மதித்த தன்மீது. ஆனால் என்ன, பிரயோசனம் இல்லாத கோபம்!
இனிப் பிள்ளை பிள்ளை என்று நொடிக்கு நொடி வார்த்தைக்கு வார்த்தை உச்சரிக்கும் மனைவியிடம் என்ன சொல்லுவான்? அவளின் ஒவ்வொரு வார்த்தைகளும் மனத்துக்குள் புகுந்து நெஞ்சைப் பிசைகிறதே அதற்கு என்ன செய்வான்?
உடனே டொக்டரிடம் விரைந்தான். கேட்டவர் அதிர்ந்துபோனார். யார் என்றே தெரியாதவனிடம் எப்படிக் கடிதத்தைச் சேர்ப்பித்தாள்?
தன் முன்னே கெஞ்சிய நர்ஸின் நினைவில் அதற்குப் பதில் சொல்லவில்லை அதிரூபன்.
“அந்தக் கடிதம் எங்க?” கோபத்தை அடக்கியபடி கேட்டார் சங்கரி.
பின்னே, நம்பி வீட்டில் வைத்திருந்தவள் அவருக்கே தெரியாமல் எவ்வளவு பெரிய வேலைகளையெல்லாம் பார்த்திருக்கிறாள்? பாவப்பட்ட குடும்பம் என்று பார்த்ததற்கு அவர் தலையிலேயே மிளகாய் அரைத்துவிட்டாளே.
“இல்ல டொக்டர். அது என்னட்டையே இருக்கட்டும்.” என்றான் அதிரூபன்.
அவள் எழுதியவை அனைத்தும் அவனுக்கும் அவளுக்குமானவை! பிடிக்கிறதோ இல்லையோ அதை இன்னொருவரிடம் பகிர்வதில் அவனுக்கு உடன்பாடு இல்லை.
அவனைக் கூர்மையாக அளவிட்டது அவர் விழிகள்.
“டொக்டர் ப்ளீஸ். வித்தியாசமா எதுவுமில்லை. அந்தப் பெட்டை தன் மனத்தைச் சொல்லி இருக்கிறா. அத நீங்க படிக்க வேண்டாம். விசயம் மட்டும் நான் சொன்னதுதான். பிள்ளைப்பாசம் சொல்லாமல் கொள்ளாமல் ஓட வச்சிருக்கு. அதைத்தாண்டி அவா தன்ர பெயரைக் கூட என்னட்ட சொல்லேல்ல.”
தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டார் சங்கரி. மேசை இழுப்பறையைத் திறந்து அவருக்கும் அவள் எழுதியிருந்த துண்டை எடுத்து அவனிடம் நீட்டினார்.
அதே கையெழுத்து. “என்னை மன்னித்துவிடுங்கள் டொக்டர். நான் செய்வது மகா தவறுதான். ஆனால் முடியவில்லை. என் குழந்தையைப் பிரிந்தால் இறந்துவிடுவேன். நான் போகிறேன்.” என்று எழுதி இருந்தாள்.
அவனை அனுப்பிவிட்டு உடனே பெற்றவர்கள் வீட்டுக்கு விரைந்தார். அவர்களுக்கோ விசயமே தெரியாது. இவர் சொன்னதைக் கேட்டதும் குடிவெறியில் இருந்த அவளது தந்தை, “பாத்தியாடி, வீட்டுக்கு வந்த லச்சுமியைக் கெடுத்துட்டாள் உன்ர மகள்.” என்று மனைவியிடம் சண்டைக்குப் போனார். வந்த கோபத்துக்குக் கத்திவிட்டு வந்துவிட்டார் சங்கரி.
என்ன நடக்கப்போகிறதோ என்கிற திகிலோடு அவள் எழுதிய கடிதத்தைப் பற்றி எதுவும் சொல்லாமல், மிருணாவுக்கு மென்மையாக எடுத்துச் சொன்னான் அதிரூபன். கலவரம் மூளப்போகிறது என்கிற அச்சத்துடன் அவன் காத்திருக்க அவளோ மூச்சும் விடவில்லை. கோர்த்திருந்த கைகளையே பார்த்திருந்தாள். தாய்க்கும் மகனுக்கும் அந்த நிமிடங்கள் திக் திக் நிமிடங்களாய்த்தான் கழிந்தன. அவளோ அடுத்த இரண்டு நாட்களும் அதைப்பற்றி ஒன்றுமே கதைக்கவில்லை.
என்ன குண்டு வெடிக்குமோ என்கிற பதைப்போடு அவன் காத்திருக்க, எந்நேரமும் அவன் மார்பிலேயே சாய்ந்திருந்தாள். அவனால் அவளின் அமைதியைச் சகிக்கவே முடியவில்லை. எப்படி இருந்தவள். அந்தக் குழந்தைக்காக எவ்வளவு ஆவலாக இருந்தாள்? மனம் தாளாமல், ஆறுதல் வார்த்தைகள் சொல்லியபடி ஒருநாள் அவன் வருடிக்கொண்டு இருக்க முற்றிலுமாக உடைந்தாள் மிருணா.
“ஏனப்பா ஏன்? ஒரு குழந்தை வரம் எனக்குக் கிடைக்கவே கிடைக்காதா? அந்தளவுக்கு ஆருக்கு என்ன பாவம் செய்தனான்?” அவன் மார்பிலேயே கதறித் தீர்த்தவளை ஆறுதல் படுத்த பெரும் பாடுபட்டுப் போனான் அதிரூபன்.

