பூவே பூச்சூட வா 7 – 2

ஒருவாரம் கடந்திருக்க, “வாங்கப்பா டொக்டரிட்ட போயிட்டு வருவம்!” என்று மீண்டும் வந்து நின்றாள் மிருணா.

திக் என்றது அவனுக்கு. மறுபடியுமா? நொந்துபோய் இருக்கிறவளிடம் மறுக்க மனமில்லாமல் அவளோடு இழுபட்டான்.

“எனக்குக் குழந்தை பிறக்க வழியே இல்லையா டொக்டர்? எதையும் மறைக்காம உண்மையைச் சொல்லுங்க.” சங்கரியிடம் நேரடியாகக் கேட்டாள் மிருணா.

அவர் முகத்தில் இவர்களைக் கண்டதும் சங்கடம். குற்றவுணர்ச்சி குத்தியது. “எவ்வளவு தேடியும் கிடைக்கிறாள் இல்ல. இப்பிடிச் செய்வாள் எண்டு நினைக்கவே இல்லை.” மிகவுமே வருந்திச் சொன்னார்.

நம்பிக்கையான குடும்பம்; நல்ல பெண் என்று வீட்டிலேயே வைத்திருந்தார். தப்பிப்பாள் என்று எதிர்பாராததில் அவரும் கண்காணிக்க நினைக்கவில்லை. அதற்கான முகாந்திரங்கள் எதுவுமில்லையே! திருமணமாகாத பெண்ணை வாடகைத்தாயாக்குவது சட்டப்படியும் பிழை என்பதில் அவரால் சட்டத்தை நாடவும் முடியவில்லை.

அவரின் தர்மசங்கடத்தை உணர்ந்தாளோ இல்லையோ, கலங்கிய கண்களைச் சட்டென்று துடைத்துக்கொண்டு நிமிர்ந்தாள் மிருணா. “அந்தக் கதையை விடுங்கோ டொக்டர். விட்டுட்டு என்னைப்பற்றி மட்டும் சொல்லுங்கோ.” என்றாள் பட்டென்று.

“முதலே சொன்னதுதான், உனக்கு எந்தக் குறையும் இல்லை மிருணா. கர்ப்பப்பை பலகீனமா இருக்கு. தொடர்ந்து மெடிசின்ஸ் எடு. நம்பிக்கையோட இரு. சரியா வரும்.” என்றார் சங்கரி.

அவரையும் குற்ற உணர்ச்சி தாக்கியதில் எப்படியாவது அவளுக்கு ஒரு குழந்தை உருவாக முழுமையாக முயற்சி செய்யவேண்டும் என்று முடிவு செய்துகொண்டார்.

தலையாட்டியவள் அன்றிலிருந்து மீண்டும் மருந்துகளின் வசமானாள்.

மருந்துகளின் பலனா, அல்லது கலைவாணி அம்மாவோடு சேர்ந்து அவன் இருந்த விரதமா, இல்லை இப்படித்தான் அமையவேண்டும் என்று இருந்த விதியா? ஆண்டவன் மட்டுமே அறிவான். சரியாக நான்காவது மாதம் அவள் வயிற்றிலும் குழந்தை தரித்தது. ஆனால், அவளின் கற்பப்பை முற்றிலுமாகப் பலம்பெற்றிருக்கவில்லை.

“கொஞ்சம் ரிஸ்க்தான் அதிரூபன். இந்தக் குழந்தை வேணுமா எண்டு யோசிங்கோ. மிருணாக்கு ஆபத்து வரவும் சந்தர்ப்பம் இருக்கு.” என்று அவளின் உடல் நிலையை எடுத்துரைத்தார் சங்கரி.

அவளுக்கு ஏதும் நடந்துவிடுமோ என்று அஞ்சி அவன் வேண்டாம் என்க, மிருணாவோ வேண்டுமே வேண்டும் என்று தலைகீழாக நின்றாள். கிடைக்கவே கிடைக்காது என்று இருந்த வரம் கிடைத்தபோது தவறவிட அவள் தயாராயில்லை.

என்றுமே அவளது பிடிவாதம்தானே வென்றிருக்கிறது!

அவர் சொன்ன மருந்துகள், மாத்திரைகள், உணவுகள், நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி என்று எல்லாவற்றையும் மிகக் கவனமாக, ஒன்றைக்கூடத் தவறவிடாமல் செய்தாலும் கொஞ்சமும் அவள் பயப்படவே இல்லை. தனக்கு ஏதும் நடந்துவிடுமோ என்கிற எண்ணமே அவளுக்கு இல்லை.

“இப்ப எல்லாம் கர்ப்பமா இருக்கிற பெண்கள் வீக்கா இருக்கினம் எண்டு சொல்றதை டொக்டர்ஸ் எல்லாரும் ஒரு பேஷனா வச்சிருக்கீனம். அதுக்கெல்லாம் பயப்பிடக் கூடாது. பாருங்கோ எனக்குச் சுகப்பிரசவம்தான் நடக்கும். ரெண்டு நாள்ல நானும் பிள்ளையும் வீட்ட வந்திடுவம்.” என்று கணவனை அவள் தேற்றினாள்.

“கொஞ்சம் பொறுமையா இருந்திருக்க, ஒரு பிரச்சனையும் வந்திருக்காது என்னப்பா?” என்றாள் ஒருநாள் கண்ணீரோடு. “எல்லாம் என்ர அவசரக் குணத்தால வந்தது…”

அவன் மனத்திலும் அதுதான். அந்தக் குழந்தை என்ன ஆனதோ, எப்படி இருக்கிறதோ என்கிற நினைவுதான். மனைவி தாயாகியிருக்கிறாள் என்று மகிழ முடியாமல் அந்தக் குழந்தையின் நினைவு வாட்டியது. என்றாலும் அதை மறைத்து, “விடுடா. சும்மா எதையாவது யோசிச்சு உன்னைக் கெடுக்காம நிம்மதியா, சந்தோசமா இரு!” என்றான் குரல் கரகரக்க.

“சரி பரவாயில்ல விடுங்க. அது அவளின்ர குழந்தை, அவள் வளக்கட்டும். எங்களுக்கு எங்கட ரத்தத்திலேயே வரப்போகுது பிள்ளை. நாங்க எங்கட பிள்ளையை வளப்பம்.” என்றவளை அதிர்வோடு பார்த்தான் அவன்.

இலகுவாகத் தீர்வு கண்டுவிட்டாள். ஆனால், அவன் உயிரில் உதித்த குழந்தையை அவனால் அவளைப்போல விட முடியவில்லை. என்ன இருந்தாலும் அவனின் மூத்த பிள்ளை.

அதிரூபன் தன் நிம்மதியை இழந்தான்; உறக்கத்தை இழந்தான்; சந்தோசத்தை இழந்தான்.

மனைவியின் முன்னே சாதாரணமாகவும் நடிக்கவேண்டி இருந்தது. எவ்வளவோ பாடுபட்டுக் குழந்தையைத் தாங்கி இருப்பவளை அவன் மனக்கவலை பாதித்துவிடக்கூடாதே.

எங்கே போயிருப்பாள். என்னமாதிரி இருக்கிறது அவள் வாழ்க்கை? குழந்தையின் நிலை என்ன? ஒரு சிறுபெண்ணின் மனத்தில் எத்தனை பெரிய மாற்றங்களை உருவாக்கிவிட்டான். அவளது கடிதவரிகள் வேறு நெஞ்சுக்குள்ளேயே நின்று வாட்டின. மனைவி கருவுற்ற சந்தோசத்தைக் கூட முற்றாக அனுபவிக்க முடியாமல் அவளின் நினைவுகள் அவனை அலைக்கழித்தன.

அதுவும் ஒவ்வொரு மாதமும், “இங்க பாருங்க, என்ர வயிறு பலூன் மாதிரி வந்திட்டுது.” என்று சந்தோசப் பூரிப்புடன் சொல்கையில் அவளின் நினைவு ஓடி வந்தது. இப்படித்தான் அவளும் உணர்ந்தாளா என்று சியோசித்தான்.

குழந்தை முதல் முதல் அசைந்தபோது, மனைவி ஆசையாசையாக அவன் கையை எடுத்து வயிற்றில் வைத்தபோது, குழந்தையும் அப்பாவை உணர்ந்து அசைந்தபோது உணர்ச்சி மேலீட்டால் அவளை அணைத்துக்கொண்டவனின் எண்ணங்கள் அவளிடம் ஓடின.

மிகக் கொடுமையாகக் கழிந்தன அவன் நாட்கள். ஒருநாள் பிள்ளைப்பேற்று வலியும் வந்துவிட வைத்தியசாலைக்குக் கொண்டு ஓடினான்.

மொத்தக் குடும்பமும் அருகிருந்தும், அவனது கையைப் பிடித்துக்கொண்டு கதறிய மனைவியைக் கண்டு கண்களில் கண்ணீர் வழிந்தது அவனுக்கு. கூடவே, அவளை எண்ணி நெஞ்சில் இரத்தம் வடிந்தது. தனியாக எப்படிச் சமாளித்திருப்பாள்? கடவுளே, நன்றாக இருப்பாளா? இறந்து… ஐயோ… இல்லை இல்ல… சின்னப்பெண் பிள்ளைப்பேற்றுக்குப் பயந்து எழுதி இருந்தாளே… நான் இறந்துவிட்டால் டொக்டரிடம் குழந்தையை ஒப்படைப்பதாக. பதற்றத்தோடு டொக்டரிடம் ஓடினான்.

“டொக்டர், அந்தப் பெண்ணைப் பற்றி ஏதாவது விபரம்?”

“இந்த நேரத்தில இதென்ன கேள்வி?” சற்றே சினம் துளிர்க்கக் கேட்டார். அவரே மிருணாவை எண்ணிப் பெரும் பதட்டத்தில் இருக்கையில் அவன் இப்படிக் கேட்டால்?

“இல்ல டொக்டர். இவளே இந்தத் துடி துடிக்கிறாள். அது சின்னப்பிள்ளை? எந்த அனுபவமும் இல்லாம, யாரோட துணையும் இல்லாம.. என்ன நரக வாழ்க்கை டொக்டர் இது? அவளுக்கு ஏதாவது எண்டா, குழந்தை உங்கட கைல கிடைக்கிற மாதிரிச் செய்றன் எண்டு சொன்னாள். அதுதான் கேக்கிறன்.” என்றான்.

அவனது மனநிலை அவருக்கும் புரிந்தது.

“இல்ல. எந்தத் தகவலும் வரேல்ல. அவள் திடகாத்திரமான, தைரியமான பெண். சமாளிச்சிருப்பாள்.” என்றார் அவர்.

நிச்சயமாகத் தைரியசாலிதான். இல்லாவிட்டால் கன்னிப்பெண் ஒருத்தி தாயாகத் துணிந்ததுமல்லாமல், அந்தக் குழந்தையைத் தனியாக வளர்க்கிறேன் என்று கிளம்பி இருப்பாளா?

‘எங்க இருந்தாலும் நல்லா இருக்கோணும்.’ மனத்தின் ஆழத்திலிருந்து வேண்டிக்கொண்டான்.

“டொக்டர் ப்ளீஸ், நான் காசு தாறன் குடுத்து விடுறீங்களா?”

“என்ன? என்னை ஆழம் பாக்கிறீங்களா?” சட்டென்று கோபம் வந்துவிட்டது சங்கரிக்கு.

“டொக்டர் ப்ளீஸ். என்ர நிலமையையும் கொஞ்சம் விளங்கிக்கொள்ளுங்கோ. அது என்ர குழந்தை. மிருணா மாதிரி அவளின்ர குழந்தை எண்டு என்னால பாக்க ஏலாம இருக்கு. அது என்ர ரத்தம். தூக்கி வளக்கிற பாக்கியம் தான் கிடைக்கேல்ல எண்டாலும் எங்கயாவது கஷ்டமில்லாம நல்லா இருக்கோணும் எண்டு நினைக்கிறதும் பிழையா? அவளும் குழந்தையும் வந்தா எங்கட குடும்பத்துக்குச் சிக்கல் எண்டு நீங்களும் நினைக்கலாம். அதாலேயே மறைக்கலாம் தானே.” கண்ணோரங்கள் நீரில் நனைந்துவிட அவன் சொன்னபோது, அவனது கரத்தைத் தட்டிக்கொடுத்தார் அவர்.

“சத்தியமா எனக்குத் தெரியாது அதிரூபன். தெரிஞ்சாலும் நீங்க சொன்னமாதிரி அவள் எங்க இருக்கிறாள் எண்டு சொல்லமாட்டன். ஆனா, குழந்தையக் கட்டாயம் வாங்கித் தருவன். கவலைப்படாதீங்கோ. வாங்கோ, இப்ப மிருணாவைப் பாப்பம்.” என்று தேற்றி அழைத்துப் போனார்.

மிருணாவுக்கு மறுஜென்மப் போராட்டம் ஆரம்பித்திருந்தது. அவளை உள்ளே அனுப்பிவிட்டு வெளியே அவளுக்காக அதிரூபனும் போராட ஆரம்பித்திருந்தான்.

ஆனால், அவ்வளவு வலியிலும் உள்ளே போகமுதல் அவன் கரத்தைப் பற்றி, “என்ன இது, பொம்பிளை மாதிரி அழுதுகொண்டு? என்ர மகள் உங்கட அழுத முகத்தையா முதன் முதலாப் பாக்கிறது? தைரியமாச் சிரிச்சுக்கொண்டு நில்லுங்கோ, கொஞ்சத்தில மகள் வந்திடுவாள்.” என்று அவனைத் தேற்றிவிட்டுப் போனாள்.

போனவள் வெளியே வரவேயில்லை. பிள்ளையின் அழுகுரல் கேட்டபோது குழந்தை பிறந்துவிட்டது என்று ஆனந்தம் கொண்டதை விட, அவளின் வலிகள் முடிந்துவிட்டது என்றுதானே ஆறுதல் கொண்டான்.

அதன் பிறகு நடந்தவைகள்? அவனால் நினைக்கக் கூட மாட்டாதவைகள். பிள்ளைப்பேற்றைத் தாங்க முடியாமல் அவன் மனைவியின் உயிர் பிரிந்து போயிற்றாம். பிள்ளையைக் காப்பாற்றியதே பெரும் பேறாம் என்று என்னென்னவோ சொன்னார்கள். என்னென்னவோ செய்தார்கள். மொத்தத்தில் அவன் மனைவி அவனுக்கு இல்லை என்றார்கள்.

மீண்டும் அவன் கண்டது அவளின் உயிரற்ற உடலைத்தான்.

“ஆம்பிளைப் பிள்ளையா இருந்தா மிருணன், பொம்பிளைப் பிள்ளையா இருந்தா ரூபிணி.” என்று பெயரைக்கூடத் தெரிவு செய்துவிட்டுப் போனாளே!

குழந்தைக்கான பொருட்களை, உடைகளைப் பிள்ளை பிறந்த பிறகுதான் வாங்கவேண்டும் என்று சொன்னபோது, “எங்கட சனத்துக்கு விசர். என்ர பிள்ளைக்கு நான்தான் வாங்கிப்போடவேணும். பிறகு, எனக்கு ஏலாம இருக்கும். நீங்க ரசனையே இல்லாம வாங்கி வருவீங்க.” என்று எல்லாவற்றையும் குழந்தைக்காகச் செய்துவிட்டுப் போனவள், அந்தக் குழந்தைக்காகக் கூடத் திரும்பி வராமல் போய்விட்டாளே.

‘கொஞ்சத்தில மகள் வந்திடுவாள்.’ என்றவள் ஏன் நானும் வருவேன் என்று சொல்லவில்லை.

அவளின் மனத் தைரியம் ஏன் உடலுக்கு இல்லாமல் போனது?

அவள் தந்த தைரியத்தில்தான் அவன் திடமாக இருந்தான். அதுதான் உண்மை. அவன் ஆண், கணவன் என்று எப்படிச் சொன்னாலும் உண்மையிலேயே அவனுடைய தைரியமாக, நம்பிக்கையாக அவள்தான் இருந்தாள். அவன் கலங்கித் தவித்தபோது, அவ்வளவு வலியிலும், “இதெல்லாம் நோர்மல் அப்பா. சும்மா இருங்கோ. என்ர மகள் சாதாரணமா வருவாளா?” என்றுவிட்டு அல்லவா உள்ளே சென்றாள்.

துறுதுறுப்பாக, துடிதுடிப்புடன் துள்ளித் திரிந்த மனைவியின் அசைவுகள் அத்தனையும் அடங்கிப் போயிருக்க, அமைதியாக உறங்கி கொண்டிருந்தவளை நம்பவே முடியாமல் பார்த்தான். அவனது மிருணாளினியின் உடலில் உயிர் இல்லை என்பதைக் கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தபோதும் அவனால் நம்ப முடியவில்லை.

ஹொஸ்ப்பிட்டல் வரமுதல் அவளுக்கு அவன் இட்டுவிட்ட திருநீறு கூடக் கொஞ்சமே கொஞ்சம் அந்த நெற்றியில் இருந்தது. அவள் எப்போதும் வைத்துக்கொள்ளும் வகிட்டுக் குங்குமம் கூட அழியவேயில்லை. நடுங்கும் கரத்தால் மெல்லத் தொட்டுப் பார்த்தான். தேகம் மட்டும் ஐஸ் கட்டியாகக் குளிர்ந்தது.

சற்றுமுன் வரையிலும் அவன் கையைப் பிடித்துக்கொண்டிருந்த ஒருத்தி இனி அவனுக்கு இல்லையா? இரவு கூட அவனருகில்தானே உறங்கினாள். காலையில் அவனுக்கு ஒரு வாய் ஊட்டிவிட்டாளே, அவள் இனி இல்லையா?

அவள் இல்லாத உலகில் பிள்ளைப் பாசம் கூட அற்றுப் போனதுபோலாயிற்று. அவன் உலகத்தையே அழித்துவிட்டுப் பிறந்த குழந்தையைக் கையில் கொண்டுவந்து தந்தபோது கொஞ்சக்கூட முடியாமல் வெறித்திருந்தான். ரோஜா முகம், சின்னச் சிவந்த செப்பு இதழ்கள், கறுத்த கம்பி முடி என்று அப்படியே தன் சாயல்கள் அத்தனையையும் மகளுக்குக் கொடுத்துவிட்டுப் போயிருந்தாள்.

நெஞ்சு கனக்க, கண்கள் கசிய மகளை ஒருமுறை அணைத்த கணம் அவன் உடைந்தான். மொத்தமாக உடைந்து கதறியவனிடம் இருந்து, பயந்துபோய் நர்ஸ் வேகமாகக் குழந்தையை வாங்கிக்கொண்டாள்.

அழுதாலும் புரண்டாலும் மாண்டவர் வரப்போவதில்லையே! அவனுடைய மிருணாவும் வரவேயில்லை!

error: Alert: Content selection is disabled!!