பூவே பூச்சூட வா 8 – 1

அத்தியாயம் 8

“உங்கட நல்ல மனத்துக்கு இப்பிடியெல்லாம் நடக்கும் எண்டு கனவில கூட நினைக்கேல்ல அதிரூபன்.” மிருணாவின் இறுதிக்கிரியைகள் அனைத்தும் முடிந்த பிற்பாடு ஒருநாள் அவன் வீட்டுக்கே வந்து அவனைச் சந்தித்தபோது சொன்னார் சங்கரி.

சிறந்த துணையின் இழப்பு, ஒரு கணவனை வேரோடு சாய்க்க வல்லது என்பதற்குச் சான்றாக, சந்தோசத்தை இழந்து, தோற்றப் பொலிவிழந்து, தாடி வளர்ந்து, ஒளி குன்றிய விழிகளோடு இருந்தான் அவன்.

“நல்லவனா இருந்து என்ன பிரயோசனம் சொல்லுங்க. பெத்த பிள்ளைகளைக் குறையில்லாம வளக்க வழியில்லையே.” இலக்கின்றி வெறித்தவனின் விழிகளில் விரக்தி.

மகனது வார்த்தைகளைக் கேட்ட கலைவாணி அம்மாவால் அழுகையை அடக்க முடியவில்லை. அவர் கையை ஆறுதலாகத் தட்டிக்கொடுத்தார் சங்கரி. தன்னைச் சுற்றி நடப்பவற்றை உணரமுடியாத வெறுமைக்குள் கிடந்து தத்தளித்துக்கொண்டிருந்தான் அவன்.

“அவள் இருக்கிற இடம் தெரியாட்டியும் அம்மா வீடு தெரியும். அங்க போய்க் கதைப்பமா? அவளின்ர போட்டோ கிடைக்கும்தானே. அத வச்சு விளம்பரம் ஏதும் குடுத்தா கண்டுபிடிக்கலாம்.” என்றவர், அவள் வீட்டு விலாசம் அடங்கிய துண்டை அங்கிருந்த மேசையில் வைத்தார்.

“கண்டுபிடிச்சு?” விரக்தியாய்க் கேட்டான் அவன்.

இதென்ன கேள்வி? பெண்கள் இருவருக்கும் புரியவில்லை. அவனது குழந்தையோடு மறைந்தவளைக் கண்டுபிடித்து என்ன செய்யவேண்டும் என்று தெரியாதா?

அதையே அவர்கள் கேட்டபோது, “பிள்ளையைத் தர விருப்பமில்லாம காணாம போனவளிட்ட இருந்து குழந்தையைப் பிடுங்கச் சொல்லுறீங்களா? இங்க ஒரு பிள்ளை அம்மா இல்லாம படுற துன்பம் காணாதா டொக்டர்.” என்றான் அவன்.

அவனை விளங்காத பார்வை பார்த்தார் அவர். “பிள்ளையை ஏன் பிடுங்க? அவளை மனைவியாக்கிக் கூட்டிக்கொண்டு வாங்க!”

“நோ!” ஒற்றை வார்த்தையில் ஆக்ரோசம் காட்டினான் அவன். யாரிடத்தில் யார்? அவள் எழுதி வைத்த கடிதம் வேறு மின்னி மறைந்தது. “கண்டதையும் கதைக்காதீங்க டொக்டர்!” உத்தரவாய்ச் சொன்னான்.

சங்கரி அவனது கோபத்தில் நிதானமிழக்கவில்லை.

“வாடகைத்தாய் விசயம் நான் பொறுப்பாக் கவனிச்சுச் செய்து தந்திருக்க வேணும். அதில இருந்து தவறினது நான் செய்த மிகப்பெரிய பிழை. அதுக்குப் பரிகாரமாத்தான் இதைச் சொல்லுறன் அதிரூபன். ஆறுதலா யோசிச்சுப் பாருங்க. நான் சொல்லுறதுதான் சரி எண்டு விளங்கும். இப்பயெல்லாம் வாடகைத்தாய் முறையை நான் செய்றேல்ல. குற்ற உணர்ச்சி என்னைக் குத்துது. அவள் கிடைக்கிறவரைக்கும் தேடிக்கொண்டே இருப்பன்.” என்றவர், இனி உன் விருப்பம் என்பதுபோல் ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு, கலைவாணி அம்மாவிடம் தலையசைப்பால் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டார்.

அவனைக் கடக்கும் அந்தக்கணத்தில், “சாரி டொக்டர்.” என்றான் அவன்.

அவர் அவன் தோளில் தட்டிக்கொடுத்தார். “உங்கட மன உணர்வுகள் எனக்கு விளங்குது அதிரூபன். மிருணாளினி இருந்தா இந்த விசயத்தை நாங்க கையாளவேண்டிய முறையே வேற. ஆனா இப்ப… ஏதோ யோசிச்சுச் செய்ங்கோ. அதுவும் உங்கட பிள்ளைதான். அவளும் வடிவான நல்ல பிள்ளைதான்.” என்றுவிட்டுப் போனார் அவர்.

அந்தக் காகிதம் அவன் மனத்தைப்போலவே காற்றில் படபடத்தது. கலைவாணி அம்மாவும் அவனையே கண்ணீரோடு பார்த்திருந்தார். நெஞ்செல்லாம் புண்ணாகிப் போயிருக்கும் மகனிடம் எதையும் வற்புறுத்தும் வலிமை அவரிடமும் இல்லை.

அவனோ அந்தத் துண்டையே பார்த்திருந்தான்.

அதை எடுப்பதா வேண்டாமா? அவனுக்குள் போராட்டம். கடைசிவரை துணையாகக் கூட வருவேன் என்று கரம் பிடித்தவள் நடுவில் விட்டுவிட்டுப் போய்விட்டாள்.

வாரிசு வேண்டும் என்று ஆசைப்பட்டுப் பெற நினைத்த குழந்தை எங்கோ நின்றுகொண்டு “என்னைக் காண வரமாட்டாயா அப்பா?” என்று கேட்கிறான். அவனைத் தேடிப்போனால் அவனை மட்டும் காணமுடியாது. அவனோடு அவனது அம்மாவையும் காணவேண்டும்.

அது முடியாது! ஆனாலும், அதனை எடுத்து வைத்துக்கொண்டான். அவ்வளவுதான், அதற்கு அவனாற்றிய எதிர்விசை!

நாட்கள் நகர்ந்தன. அவனால் அந்த இழப்பிலிருந்து மீளவே முடியவில்லை.

மனமெங்கும் பாரம். ஒரு மாற்றம் வேண்டுமாயிருந்தது. “அம்மா, நாங்க ஊர் மாறிப் போவமா?”

“வாழ்ந்த இடத்தைவிட்டு எங்கயப்பு?” கண்கள் கலங்கக் கேட்டார் கலைவாணி.

“எங்கேயெண்டாலும். எனக்கு இங்க தலை வெடிச்சிடும் போல இருக்கு. கொஞ்ச நாளைக்கு மட்டும்.” கெஞ்சிய மகனிடம் மறுக்கும் மனவலிமை அன்னைக்குமில்லை.

“சரி தம்பி. உனக்கு நிம்மதியத் தரும் எண்டால் மாறுவம்.” என்றவர், தயங்கி மெல்லக் கேட்டார்.

“ஏன் அப்பு, அந்தப் பிள்ளையைப் பற்றி விசாரிக்கவே இல்லையா நீ?”

தாயின் கேள்வியில் பெரிய நெடிய மூச்சு ஒன்றை வெளியேற்றினான் அவன். “அவளின்ர இடத்தில இன்னொருத்தியை வைக்கேலாமா. அந்தக் கதையை விடுங்க.” என்றவன், அடுத்த மாதமே மாற்றல் வாங்கிக்கொண்டு வவுனியாவுக்கு நகர்ந்தான்.

வவுனியா அவனைச் சற்றே தெளிய வைத்ததுதான். ரூபிணியும் தன் அழகான சின்ன சின்னச் செய்கைகளால் அவனைக் கவரத் தொடங்கியிருந்தாள். பற்றே இல்லாமலிருந்தவனின் இதயத்தில் பிள்ளைப்பாசம் படரத் தொடங்கியது. அவனது நெஞ்சத்துப் பாசம் முழுவதையும் தனதாக்கிய ரூபிணி, அவளின் தமயனை நினைவூட்டிக்கொண்டே இருந்ததில் மனத்தில் பாரத்தோடு தன் தேடுதலை மெல்ல ஆரம்பித்திருந்தான் அதிரூபன்.

யாருக்கும் தெரியாமல் மகனை மட்டுமாவது பார்த்துக்கொள்ளலாமே! வறுமையில் வாடினால் யார் மூலமாவது உதவி செய்யலாமே. எல்லாவற்றுக்கும் முதல் மகனைப் பார்க்கவேண்டும் என்று பெற்றமனம் அரிக்கத் துவங்கியிருந்தது.

சங்கரி தந்த வீட்டு விலாசத்துக்குக் கீழே இருந்த தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து விசாரித்தவன் அவளின் பணம் பறிக்கும் தகப்பனிடமும் மாட்டிக்கொண்டான். பிள்ளைக்காக அதையும் பொறுத்துக்கொண்டு தேடினான்.

பிள்ளைப்பாசம் அவளை ஓடவைத்தது என்றால் அவனைத் தேடவைத்தது. அவன் தொலைத்த இடத்தில் தேடிக்கொண்டிருக்க, மகனோ கண்முன்னே இருந்திருக்கிறான்.

இனி என்ன செய்யப்போகிறான்? மீண்டும் மீண்டும் அதே கேள்வி.

இறந்தகாலம் அழியாத காயத்தைத் தந்தது என்றால் எதிர்காலம் மிரட்டியது.

‘மிருணா.. என்னடி செய்ய? எங்கட குழந்தையோட வந்து இருக்கிறவளை என்ன செய்யச் சொல்லுறாய்?’ தனக்குச் சகலதுமாய் இருந்தவளிடமன்றி வேறு யாரிடம் கேட்பான்?

குழந்தையைப் பறித்துக்கொண்டு அனுப்புவானா? இல்லை குழந்தையோடு அவளையும் ஏற்பானா?

‘ரெண்டுமே என்னால ஏலாது மிருணா. எதுக்கடி இந்த வேலை பார்த்தாய்?’ தனக்குள்ளேயே துடித்தபடி கிடந்தான்.

தன் குழந்தைதான் என்று தெரிந்தமாத்திரத்தில் இழுத்துக்கொண்டு வந்துவிட்டான். இனி?

ஒரு குழந்தை தகப்பனில்லாமலும் இன்னொரு குழந்தை அம்மா இல்லாமலும் என்று அவன் பிள்ளைகள் வாங்கிவந்த வரம்தான் என்ன?

அவனைப்போலவே சங்கரியும் அல்லவா அவளைத் தேடிக்கொண்டிருக்கிறார். அவள் கிடைத்துவிட்டதை அவருக்கு அழைத்துச் சொன்னான்.

“என்ன முடிவு எடுத்திருக்கிறீங்க அதிரூபன்?”

எதுவுமே எடுக்காதவன் என்ன முடிவை என்று சொல்லுவான்? பதிலற்றுப்போக அவனது மனம் புரிந்துபோயிற்று அவருக்கு.

நிதானமாகவும் மென்மையாகவும் தெளிவாகவும் பேசினார்.

“எனக்கு உங்கட மனம் விளங்குது அதிரூபன். குடும்பத்துக்கு நல்லது நடக்கும் எண்டால் நமக்குப் பிடிக்காட்டியும் சில முடிவுகளை நாங்க எடுக்கிறதுதான் நல்லது. மிருணாளினி இனி இல்ல. அதைத் தெளிவா உங்கட மனத்தில பதிய வைங்கோ. ஆனா, உங்களுக்கு ரெண்டு குழந்தைகள் இருக்கினம். உங்கட அம்மாவுக்கும் வயது போயிற்று. உங்கட அம்மாவைப் பாக்கிறதுக்கும், பிள்ளைகளைப் பாக்கிறதுக்கும் ஒரு பொம்பிளை வீட்டுக்கு வேணும். சரியோ பிழையோ அவள் உங்கட மகனைத் தன்ர பிள்ளையாத்தான் வளத்திருக்கிறாள். அவளிட்ட இருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு வெளில விட்டா அவளும் பாவம், குழந்தையும் பாவம். உங்கட மகளைப் பற்றியும் யோசிங்கோ. இதுவே, உங்கட மனத்தைக் கொஞ்சம் சமாதானம் செய்துகொண்டு அவளை நீங்க கட்டினா, எல்லாருக்குமே நல்லதுதான் நடக்கும். இன்னொரு வாழ்க்கையை அவளும் கடைசிவரைக்கும் தேடப்போறது இல்ல. அதுக்கு உங்களோட வாழ்ந்திட்டுப் போவாள்தானே? எல்லாத்துக்கும் நல்ல முடிவு உங்கட மனமாற்றம் மட்டும்தான். அது உங்களுக்கும் நல்ல முடிவுதான். இனி நீங்கதான் யோசிக்கவேணும். நான் ஒருநாளைக்கு வந்து அவளோடையும் கதைக்கிறன்.”

அமைதியாகக் கேட்டுக்கொண்டாலும் பதிலேதும் சொல்லாமல் வைக்கப்போக, “இன்னும் அந்தக் குடும்பத்துக்குக் காசு குடுக்கிறீங்களா அதிரூபன்?” என்று அவசரமாகக் கேட்டார் சங்கரி.

“அது நானா விரும்பிச் செய்றது.” என்றான் சுருக்கமாக.

அதுபற்றி எந்தக் கருத்தும் கூறுவதை அவன் விரும்பவில்லை என்று புரிந்துகொண்டார் சங்கரி. என்றாலும், “அவள் சொன்னதைச் செய்யாட்டியும் சொன்ன காசை நீங்க குடுத்திட்டிங்க. உங்களுக்கும் அவளுக்கும் சம்மந்தமே இல்லையெண்டால் அவளின்ர குடும்பத்துக்குத் தேவை இல்லாம காசு கொடுக்கவேண்டிய அவசியமில்லை அதிரூபன். குழந்தைக்காக எண்டாலும் காசோட முடியிற கடமையும் இல்ல அந்தக் கடமை. நல்லா யோசியுங்கோ!” என்றுவிட்டு வைத்துவிட்டார் அவர்.

error: Alert: Content selection is disabled!!