பூவே பூச்சூட வா 9 – 1

அத்தியாயம் 9

அதிர்ந்துபோய் நின்றுவிட்டாள் வானதி. செய்தது பெரும் பிழையாகவே இருந்தாலும் மன்னிப்பைக் கேட்டுவிட்டு, மகனோடு வெளியேறிவிடவேண்டும் என்று மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு காத்திருக்க, அவளின் அத்தனை திட்டங்களையும் தவிடுபொடியாக்குவது போலிருந்தது அவனது நடவடிக்கை!

அவற்றை இறக்க முதல் தடுக்கவேண்டும். ஓடிப்போய்ச் சொல்லு என்று மனம் உந்தியது. ஆனால், அவன் முகம் பார்த்து, சலனமற்றுக் கதைக்க முடியுமா என்கிற கேள்வி கால்களைப் பின்னியது. தயங்கி நிற்கும் நேரம் இதுவல்லவே. அவசரமாக ஓடினாள்.

பொருட்களைச் சுமந்துவந்த வாகனம், வீட்டின் வாசலருகே நிற்பதற்கு ஏற்றதாகக் காரை வீட்டின் கரையாகக் கொண்டுசென்று நிறுத்திவிட்டு இறங்கிய அதிரூபன், ஓடிவந்த அவளைக் கேள்வியாக ஏறிட்டான்.

அப்படியே ஓட்டம் நின்றுவிட, அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினாள் வானதி. மகனின் தகப்பன் என்பதையும் தாண்டிக்கொண்டு, இருக்கிற சிக்கல்கள் அத்தனையையும் மீறிக்கொண்டு அவன்தான் ‘அவளின் அவன்’ என்று உள்மனம் படபடத்துக் கொண்டிருக்கிறதே!

அதைவிட அவள் எழுதிய கடிதம்? அப்போதுதான் மின்னலாய் நினைவில் வந்து அடிவயிற்றில் என்னென்னவோ செய்தது.

அது அவன் கைக்குக் கிடைத்திருக்குமா? படித்திருப்பானா? படித்திருந்தால் என்ன நினைப்பான்? முகம் சிவந்து போயிற்று! அசட்டுத்தனத்தில் எழுதியதுமல்லாமல் கொடுத்தனுப்பியும் விட்டாளே! அவன் முகமே பார்க்க முடியவில்லை.

என்ன வேதனை இது? அல்லும் பகலும் காண்போமா என்று ஏங்கிய உருவம் வெகு அருகில். ஆனாலும் யாரோபோல் நெருங்க முடியாத தடைகள் மனம் முழுவதிலும்!

அவனோடான கற்பனைகள் அவளுக்குள் ஆயிரம். அவையில்லாமல் அவளின் பொழுதுகள் கரைந்ததில்லை. அவனைக் காதலனாய் வரித்திருக்கிறாள், கணவனாய்க் கொண்டாடியிருக்கிறாள், இரவுகளில் தலை சாய்த்திருக்கிறாள். அவனது நினைவுகள்தான் அவளைச் சுற்றி அரணாய் நின்றுகொண்டிருக்கின்றன. அவன் விழிகள் அவளைக் காதலோடு நோக்கியிருக்கின்றன. கரங்கள் கட்டி அணைத்திருக்கின்றன. இன்னும் என்னென்னவோ நினைவுகளே வெட்கும் கனவுகளை எல்லாம் கண்டிருக்கிறாள்.

நடக்கவே நடக்காது என்று தெரிந்திருந்தாலும், அந்தக் கனவுகள் மட்டும்தானே அவளுக்குச் சொந்தமானவை. அதிலே மட்டும்தானே அவள் வாழவும் முடியும். ஆதலால், நிறைவான ஒரு வாழ்க்கையைத்தான் கனவில் வாழ்ந்துகொண்டிருந்தாள். அவள் மனத்தில் அவளுக்கு அவன்தான் கணவன்!

இன்றோ, அந்தக் கற்பனைக் காட்சிகள் அத்தனையும் கண்முன்னே காட்சி தந்துகொண்டிருந்த அந்த உருவத்தோடு இரண்டரக் கலந்திடத் துடியாய்த் துடித்தது.

புகை மூட்டங்களுக்குள் மறைந்திருந்த உருவத்தைக் கண்டுகொண்டாளே! இதில் நேற்று அறிந்துகொண்ட அவனது அருகண்மை, மார்பில் முகம் புதைத்தபோது உணர்ந்த சுகம் எல்லாம் அவளை இன்னுமின்னும் பலகீனப் படுத்திக்கொண்டிருந்தன. தனக்குள்ளேயே போராடிக்கொண்டிருந்தாள். இது கூடாது என்று தடுத்தாள். பெரும் வலியொன்று எழுந்து உள்ளத்தைப் பந்தாடினாலும் தடுத்தாள். அவன் மிருணாவின் கணவன். தாரகனின் அப்பா மட்டுமே!

நெஞ்சமே அடங்கு! உனக்குக் கற்பனைகளில் மட்டுமே அவனுடன் வாழ்வதற்கு அனுமதியுண்டு! காலகாலத்துக்கும்! அடைத்த தொண்டையை விழுங்கிக்கொண்டு அவன் முகம் பாராமல் சொன்னாள்.

“ஒண்டையும் இறக்கவேண்டாம். நான் அங்க… என்ர வீட்டுக்கே போறன்.”

தலைகுனிந்து நின்றவளை ஒருமுறை நிதானமாக அளவிட்டுவிட்டு, கதவைச் சாற்றிக் காரைப் பூட்டிவிட்டுக் கேட்டான்.

“ஏன்?”

இதென்ன கேள்வி. அவன் வீட்டில் அவள் எப்படி இருப்பதாம்? யோசிக்க மாட்டானா? இதையெல்லாம் வாய்விட்டுக் கேட்கத் தைரியம் வேண்டுமே!

“என்ர வீட்டதானே நான் இருக்கவேணும்.” மெல்லச் சொன்னாள்.

“இனி இதுதான் உன்ர வீடு.”

“விளையாடாதீங்கோ!” பதறிப்போனாள் அவள்.

அவசரமாக நிமிர்ந்து அவனை நோக்கினாள். அவன் வீடு நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தான். சொல்லவருவதைக் கேட்காமல் போகிறானே என்று ஓடிவந்து அவன் முன்னே நின்றாள்.

“கொஞ்சம் நில்லுங்கோவன்! கதைக்கவேணும்.”

கெஞ்சலாய்க் கேட்டாள் வானதி. கலைவாணி அம்மாவின் முன்னே இவற்றையெல்லாம் கதைக்க முடியாதே.

“எனக்கு நேரமில்லை வானதி. எல்லாத்தையும் இறக்கிப்போட்டு வேலையாக்களை அனுப்பவேணும். பிறகு கதைக்கலாம்.” என்று அவன் போகமுயல,

“இறக்கவே வேண்டாம் எண்டு சொல்லுறன். நீங்க இறக்கிறதுக்குப் போகவேணும் எண்டு சொன்னா எப்பிடி?” என்று தடுத்தாள் அவள்.

அவன் கேள்வியாகப் பார்க்க, அந்தக் கண்களைச் சந்திக்க முடியவில்லை. அவள் தலை தானாகவே தாழ்ந்தது.

“நா..ன் நான் செய்தது பிழைதான். பெரிய பிழைதான். அதுக்கு மன்னிச்சுக் கொள்ளுங்கோ. உங்க…ட மகன்தான் தாரகன். ஆனா, அவன் எனக்கும் மகன்தான். அவனில்லாம என்னால இருக்கேலாது. இந்த உலகத்தில எனக்குச் சொந்தம் எண்டு நினைக்கிறது அவனை மட்டும்தான்..” என்றவளுக்குத் தொண்டை அடைத்துக்கொண்டது.

அவனை இழந்துவிடுவோமோ, பறித்துக்கொள்வானோ? நினைக்கக் கூட முடியவில்லை. அவன்தான் அவளுக்கு இல்லவே இல்லை. இதில் தாரகனும் இல்லை என்றால்?

இல்ல! அதுக்கு விடமாட்டன்! கண்களைத் துடைத்துக்கொண்டு வேகமாக நிமிர்ந்தாள்.

“ப்ளீஸ்.. உங்களுக்குத் தெரியாம இனி எங்கயும் போகமாட்டன். அது… முதல்… பயத்தில… பிள்ளையைப் பறிச்சுப் போடுவீங்களோ எண்டு. இனி அங்கேயே இருக்கிறன். வேணுமெண்டால் தாருவ ஒவ்வொரு நாளும் இங்க கொண்டுவந்து கொஞ்சநேரம் விடுறன். ப்ளீஸ்… அவனை என்னட்ட இருந்து பறிச்சுப்போடாதீங்கோ. எந்தக் குறையும் இல்லாம நல்லா வளப்பன். ப்ளீ….ஸ்.” கன்னங்களை நனைத்த கண்ணீரோடும் கண்களில் பரிதவிப்போடும் கெஞ்சியவளைக் கண்டு அவன் உள்ளம் கனத்துப் போயிற்று!

அவள் மீது நிறையக் கோபமிருந்தது. ஆத்திரமிருந்தது. அனைத்தும் நினைத்தபடி நடந்திருக்க மிரூணா கூட அவனைவிட்டுப் போயிருக்க மாட்டாள். செல்லடி பட்டுச் சிதைந்துபோன வீட்டினைப்போல் அவன் வாழ்க்கை சிதறிப்போக அவளே ஆரம்பப்புள்ளி என்றும் தெரியாமலில்லை. ஆனால், இந்த விசித்திரமான உறவில் கோபிப்பதால் மட்டும் என்ன நடந்துவிடப் போகிறது? அதிரூபன் ஆழ மூச்சை இழுத்துவிட்டான்.

“நீயே சொல்லிட்டாய் வானதி, நான் அவனுக்கு அப்பா, நீ அம்மா எண்டு. பிறகு என்னெண்டு அவன்ர அம்மா ஒரு வீட்டிலையும் அப்பா இன்னொரு வீட்டிலையும் இருக்கிறது?” என்று சொல்லிவிட்டு அவன் நகரத் துவங்க, அவளுக்குக் கைகால்கள் எல்லாம் பதறத் துவங்கியது.

அது எப்படி அவளால் அவனுடைய வீட்டில் தங்க முடியும்? அவன்தான் அவளின் அவன் என்று உணர்ந்த நிமிடத்திலிருந்து அவள் படும் பாடுகள் போதாதா? தன்னோடு தானே அல்லவா போராடிக்கொண்டிருக்கிறாள். “கடைசிவந்தாலும் நான் இங்க இருக்கமாட்டன். அது முறையும் இல்ல.” என்று படபடத்தாள் அவள்.

“முறை பார்த்துச் செய்ய இங்க எதுவுமே முறையா நடக்கேல்ல. உன்னால எப்பிடி உன்ர மகனைப் பிரிஞ்சு இருக்கேலாதோ, அப்பிடித்தான் எனக்கும் என்ர மகனைப் பிரிஞ்சு இருக்கேலாது. இப்ப தள்ளு! எனக்கு வேலை இருக்கு!” என்று அதட்டிவிட்டுப் போனான் அவன்.

அவள் திகைத்து நின்றுவிட்டாள். இனி என்ன செய்வது?

எதைச் செய்வதாயிருந்தாலும், செய்யாமலிருந்தாலும், ‘அப்படியா? என் மகனைத் தந்துவிட்டு நீ உன் வீட்டுக்கே போ!’ என்று அவன் மிரட்டவில்லை. மனம் நோகும்படி எதையும் சொல்லவில்லை. அவள் செய்தவற்றை அவளிடமே சொல்லிக்காட்டிக் குறுக வைக்கவில்லை. உன் மகன் என்றானே அது போதும்! கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

கடகடவென்று காரியங்கள் நடந்தன. அவளின் பொருட்கள் இறக்கப்பட, வந்த வாகனமும் மறைந்திருந்தது. இரண்டு அறைகள் கொண்ட அந்த வீட்டில் கலைவாணி அம்மாவின் அறையில் அவரின் கட்டிலருகே இவளது கட்டிலும் குடிபுகுந்தது. அப்படியே அவளின் பொருட்களும். அவனுடைய அறைக்குள் எதுவுமே நுழையவில்லை. கவனித்துக்கொண்டுதான் இருந்தார் கலைவாணி.

அதிரூபனின் மனநிலையை அது உணர்த்தாமலிலை. வானதியைப் பார்த்தார். அவளும் அதைத்தான் விரும்பினாள் என்று தெரிந்தது.

ஒருவழியாக அவளின் பொருட்களும் அந்த வீட்டுக்குள் பொருந்திப்போக, அவளும் பொருந்திக்கொண்டாள். அவள், குழந்தைகள், கலைவாணி அம்மா எல்லோரும் அவரது அறையில் என்றால் எப்போதும்போல அவன் அவனது அறையில். நாட்கள் அதன்பாட்டுக்கு நகர்ந்தன. கலைவாணி அம்மா எதிர்பார்த்த மாற்றம் எதுவும் வரும்போலில்லை. ஆனால், வீடு மாறியே போயிற்று! வீட்டுப் பொறுப்பையும் குழந்தைகளின் பொறுப்பையும் முற்றிலுமாக வானதியே ஏற்றிருந்தாள். எனக்குப் பிறகு யார் என் மகனையும் அவன் மகளையும் பார்த்துக்கொள்வார்கள் என்கிற கவலை அகல, நிம்மதியானார் கலைவாணி. குழந்தைகளின் கொண்டாட்டங்களை ரசிப்பது மட்டுமே அவர் வேலையாகிப் போனது.

அன்றும் அப்படித்தான், அழுக்கு ஆடைகளைத் துவைக்க என்று அள்ளிக்கொண்டவளின் கை, அதிரூபனின் ஆடைகளைத் தொட்டதும் பதறி விலகிக்கொண்டது. இதெப்படி இங்கே வந்தது? நெஞ்சில் படபடப்புத் தொற்றிக்கொள்ளத் திரும்பிக் கலைவாணி அம்மாவைப் பார்த்தாள். மதிய உணவை முடித்துவிட்டு உண்ட மயக்கத்தில் குழந்தைகளோடு சரிந்திருந்தவர் உறங்கிப் போயிருந்தார்.

முதல்நாள் உறங்கியது தவிர்த்து அவனது அறைக்கு அவள் போனதே இல்லை. அங்கிருக்கும் வாளிக்குள் இருக்கும் அழுக்கு உடைகளை எடுத்ததும் இல்லை. அவர்கள் நால்வரின் உடைகளையும் அவள் கழுவிவிடுவாள். அவனுடையதை மட்டும் கலைவாணி அம்மாதான் துவைத்துப் போடுவார். அவரிடமிருந்து வாங்கிச் செய்யக் கையும் காலும் பரபரக்கும். ஆனாலும் அவனது என்கிற தயக்கத்தில் அதைச் செய்ததேயில்லை.

இது கலைவாணி அம்மாவின் வேலையாக மட்டுமே இருக்கமுடியும்! என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினாள். அவனுடைய ஜீன்ஸைத் தொட்ட விரல்கள் இன்னும் குறுகுறுத்துக்கொண்டிருந்தன.

என்ன எதிர்பார்க்கிறார் இந்த ஆன்ட்டி? அதுநாள் வரை வயதானவர்களைப் பொதுவாக அழைப்பதுபோல் ‘அம்மம்மா’ என்று அழைத்த தாரகனை ஒருவழியாக அப்பம்மா என்று அழைக்க வைத்தபோதும் ஒன்றும் சொல்லவில்லை அவள். அதுதானே முறை என்று விட்டுவிட்டாள்.

அதேபோல, ‘ரூபன் அங்கிள்’ என்று அழைத்த தாரகனிடம், என்ன சொல்லி விளங்கப்படுத்தினாரோ தெரியாது, “அவன் உனக்கு அப்பா கண்ணா!” என்று சொல்லிக்கொடுத்து, அவன் இப்போதெல்லாம் அப்பா என்றுதான் அழைக்கிறான்.

முதல்முறை காதில் அது விழுந்தபோது, கைகால்கள் எல்லாம் பதறிப்போயிற்று! அவள் அம்மா அவன் அப்பா என்றால்… என்று தடுமாறிய மனத்தை அடக்கப் படாத பாடுபட்டுப்போனாள். இவன் என்ன சொல்லப்போகிறான் என்று அதிரூபனைப் பார்த்தாள். அவனோ, அது வழமை என்பதுபோலக் கழுத்தைக் கட்டிக்கொண்டு கதை சொன்ன மகனின் மழலையை வெகு தீவிரமாகத் தலையை ஆட்டி ஆட்டிக் கேட்டுக்கொண்டிருந்தான்.

வீட்டின் பின்பக்கம் ஓடிவிட்டாள். தன்னைச் சமாளித்துக்கொள்ள அவளுக்குச் சற்று நேரம் தேவைப்பட்டது. அவன்தானே அப்பா. அவள் அம்மாவாகிப் போனதுதான் விசித்திரம் என்று அப்போதும் மனத்தைச் சமாதானம் செய்துகொண்டாள்.

error: Alert: Content selection is disabled!!