அடுத்தகட்டமாகக் கலைவாணி அம்மா கைவைத்தது ரூபிணியின் அழைப்பில். எப்படி இதையெல்லாம் பயிற்றுவிக்கிறாரோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். அவளை அம்மா என்று அழைக்கத் தொடங்கினாள் ரூபிணி. ஏனோ அதிரவில்லை மனம். கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது. “என்னடா செல்லம்!” என்று அள்ளிக் கொஞ்ச மட்டுமே முடிந்தது. தாயில்லாக் குழந்தை அம்மா என்கையில் வேறு என்னதான் செய்ய முடியும்?
எல்லாம் சரிதான். ஒவ்வொன்றுக்கும் நியாயமான காரணங்கள் இருந்ததுதான். ஆனால் இதற்கு? அவனுடைய ஆடைகளை அவளைத் தோய்க்க வைத்து எதை நடாத்திவிட நினைக்கிறார்?
நேசம் கொண்ட மனம், ‘தோய்த்துத்தான் போடேன்!’ என்று ஆசையூட்டியது!
ஆனால் அது முறையல்ல! அவன் மிருணாவின் கணவன்! கூடாது! வேண்டாம்! மனத்தினுள் உருப்போட்டாள். கண்களால் அவனைக் காண்பதிலேயே இரவு உறக்கங்களைப் பறிகொடுத்துவிட்டாள். இதில் இதுவும் சேர்ந்துகொண்டால்?
விறுவிறு என்று அவனுடைய ஆடைகளை மட்டும் விட்டுவிட்டு, மிகுதியை அள்ளிக்கொண்டுபோய்த் தோய்த்துக் கழுவிக் காயப்போட்டுவிட்டுத் தானும் குளித்துவிட்டு வந்தாள்.
அவர்கள் இன்னுமே நல்ல உறக்கத்தில் இருக்க, உணவை முடித்துக்கொண்டு தானும் சரிந்துகொண்டாள். ஏனோ அன்று அவன் மார்பில் சாய்ந்தபோது உணர்ந்த அந்தப் பாதுகாப்புக்காக மனம் ஏங்கிற்று! அணைத்து முதுகை வருடிக்கொடுத்தானே, அந்த இதத்துக்காக மனம் தவித்துப் போயிற்று.
காலையில் வேலைக்குத் தயாராகி, ஒரு பேராசிரியனாக அவன் நடந்து வருகையில் மனம் மயங்கும். எதிர்பாராமல் அவன் விழிகளோடு அவள் விழிகள் சந்தித்துக்கொண்டால் இதயம் படபடக்கத் துவங்கிவிடும். அவன் அருகண்மையைக் கடக்கும்போதே அடிவயிற்றில் என்னவோ செய்யும். உடனேயே மறைந்துவிடுவாள். ஆனாலும், அவன் கவனிக்காத பொழுதுகளில் அவனது சிரிப்பை, பார்வையை, குழந்தைகள் என்ன சொன்னாலும் உன்னிப்பாக அதைக் கேட்டுக்கொள்வதை எல்லாம் வெகுவாக ரசித்து மனப்பெட்டகத்தில் சேகரித்துக்கொள்வாள். இன்றும் கன்னங்களைக் கண்ணீர் நனைக்க, அவன் நினைவுகளிலேயே மூழ்கிப்போனவள் அப்படியே உறங்கியும் போனாள்.
எழுந்து பார்த்தபோது கலைவாணி அம்மா அவனது ஆடைகளைக் கழுவிக் காயப்போட்டுக்கொண்டிருந்தார். மனத்தில் குற்றவுணர்ச்சி ஆட்கொள்ள, ஒருமாதிரி ஆகிப்போயிற்று. அவளளவில் அவள் செய்தது சரிதான். ஆனால், வயதான ஒரு பெண்மணியை வேலை செய்ய விட்டுவிட்டோமோ? ஏதும் கேட்பாரோ என்று தயக்கத்துடன் காத்திருக்க ஏதும் கேட்டாரில்லை. முகம் மட்டும் பொலிவிழந்து வாடித் தெரிந்தது.
“உடம்புக்கு ஏத்துமா ஆன்ட்டி? தேத்தண்ணி ஊத்தித் தரவா?”
“கொண்டுவாம்மா! கொஞ்சம் குடிச்சா நல்லாத்தான் இருக்கும்!” அவளிடம் நன்றாகத்தான் பேசினார்.
முதல்நாள் அவரோடு சேர்ந்து செய்துவைத்த முறுக்கும் இருக்க, நால்வருக்குமாக ஊற்றிக்கொண்டு வந்தாள்.
அப்போதும், ஏதும் கேட்பாரோ என்று உள்ளுக்குள் அவள் தயங்க அவரோ வாயைத் திறக்கவேயில்லை.
ஆனால், இந்த எதிர்பார்ப்பை வளர விடக்கூடாது என்று வானதி முடிவு செய்துகொண்டாள்.
அன்றொருநாள் வேலை முடிந்து வீடு வந்தவன், “எங்கம்மா, வானதியும் பிள்ளைகளும்?” என்று விசாரித்தான்.
“பார்க்குக்கு கூட்டிக்கொண்டு போய்ட்டாள் தம்பி!”
‘ஓ…!’ என்பதுபோல் பார்த்துவிட்டு, அறைக்குச் சென்று முகம் கழுவி உடை மாற்றினான். இலகுவாக அமர்ந்திருந்து, கருப்பு வெள்ளைப் படமொன்றை மிகவும் ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த அன்னையைக் கண்டபோது மனத்துக்கு மிகவும் நிறைவாகவே உணர்ந்தான் அதிரூபன்.
அவரும் இந்த வயதில் வாழ்க்கையை ரசித்து, தனக்குப் பிடித்த மாதிரி வாழும் சூழ்நிலை அமைந்திருக்கிறது. குழந்தைகளைக் கேட்கவே வேண்டாம். வண்ணமயமான உலகில் வாழும் பட்டாம்பூச்சிகளாய் மாறிப்போயினர். அவனும் மனத்தில் பாரமில்லாமல் பல்கலைக்கழகத்துக்குப் போய்வரத் துவங்கி இருந்தான்.
இதற்கெல்லாம் யார் காரணம் என்று தெரியாதா என்ன?
ஆனால், அந்த அவள் இப்போதெல்லாம் அவன் வீட்டுக்கு வரும்போது இருக்கமாட்டாள். குழந்தைகளோடு பார்க்குக்குப் போய்விடுவாள். அவன் தன் பல்கலைக்கழக வேலைகளைப் பார்க்க அறைக்குள் நுழைந்த பிறகுதான் குழந்தைகளின் சத்தம் கேட்கும். அவன் வெளியே வருவதற்குள் அவர்களைக் குளிக்க வைத்து, உணவும் கொடுத்து அவனிடம் விட்டுவிட்டு, அவனது தாயை அழைத்துக்கொண்டு நடக்கப் போய்விடுவாள்.
எல்லாமே நல்ல விசயம்தான். ஆனால், சில நாட்களாக அவள் தன்னைக் கவனமெடுத்துத் தவிர்க்கிறாளோ என்று தோன்றிக்கொண்டிருந்தது. காலையில் உணவு வேளையில் காணவே முடிவதில்லை. உடைமாற்றி வெளியே வந்தவனுக்குச் சிற்றுண்டியும் தேநீரும் கொடுத்தார் கலைவாணி.
“இப்பிடியே இருந்தா எப்பிடி அப்பு? நீயும் அசையிறாய் இல்ல. அவளும், உன்ர உடுப்பைக்கூடத் தொடுறாள் இல்லை.” பொறுத்து பொறுத்துப் பார்த்தவர் மாற்றம் எதுவும் நிகழாததில் அவனிடமே முறையிட்டார்.
தேநீர் பருகிக்கொண்டிருந்தவன் கேள்வியாகப் பார்க்க, அவர் அப்பம்மாவாக மாறியது, அவன் அப்பாவாகப் பதவியேற்றது, அவள் அம்மாவாக உருவெடுத்தது என்று நடந்தவற்றைச் சொன்னார் கலைவாணி. அவரின் கவலை தோய்ந்த முகத்தையும் தாண்டிக்கொண்டு அவன் உதடுகளில் சின்னப் புன்னகை அரும்பியது. பின்னே, வீட்டுக்குள்ளேயே இருந்துகொண்டு எவ்வளவு பெரிய அரசியலைச் செய்கிறார் அவர்.
ஆனாலும் தாயின் கேள்விக்கு எதையும் உரைத்தானில்லை. “சங்கரி டொக்டர் இண்டைக்கு வாறன் எண்டு சொன்னவா அம்மா. நான் போய்ப் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு வாறன்.” என்றுவிட்டு வெளியேறினான் அவன்.
பூங்காவுக்குள் நுழைந்தபோது, அங்கே பழைய வானதியைக் கண்டான் அதிரூபன். இவன் வருவான் என்று அறியாததால் குழந்தைகளை நன்றாக விளையாடவைத்துத் தானும் விளையாடிக்கொண்டிருந்தாள். இந்தப் பெண் வீட்டில் மட்டும் எங்கே போய் ஒளிந்துகொள்கிறாள்? அவன் எதுவுமே சொல்வதும் இல்லை, அவளுக்கு இடைஞ்சல் கொடுப்பதுமில்லை.
அன்னையின் செயல்தான் என்று இப்போது தோன்றியது. ஆனால், அவள் மனம் என்னவென்று அவனுக்குத் தெரியுமே. இருந்தும் ஒதுங்கித்தான் போகிறாள். அவள் கொண்ட நேசம் நிறைவேறுவதற்குச் சந்தர்ப்பம் இருந்தும் அவனைத் தவிர்ப்பவளை மனத்துக்கு ஏனோ பிடித்தது.
அன்றும், தன் வீட்டுக்கே போகத்தானே துடித்தாள். அதனால்தானே அவனால் தன் கோபத்தை அவள் மீது காட்டக்கூட முடியாமல் போயிற்று!
அதைவிட, எந்த உறவுமில்லாமல், எந்த உறவையும் வேண்டாமல் அவன் வீட்டிலிருந்து அத்தனை பேருக்கும் சேவகம் செய்கிறவளை எண்ணி, இப்போதெல்லாம் மனத்தில் ஒரு குற்றவுணர்ச்சி. என்ன உரிமையில் வீட்டில் வைத்து வேலை வாங்குகிறான்?
சங்கரி சொன்னதுபோல, அவனது மிருணா இனி இல்லை. வானதியும் இன்னொரு வாழ்க்கையைத் தேடப்போவதும் இல்லை. இடையே தாரகனும் மாட்டிக்கொண்டிருக்கிறான். இதற்கான முடிவு அவன் கையில் மட்டுமேயிருக்கிறது.
அவர்கள் பார்வையில் படும் விதமாக ஒரு ஓரமாக அமர்ந்துகொண்டான். அன்று போலவேதான், பந்து உருள அதைத் தாரகன் எடுத்துவிட்டான். ஆனாலும் தமையனின் மீது விழுந்து, உண்டு புரண்டு அதனைக் கைப்பற்ற முனைந்துகொண்டிருந்தாள் ரூபிணி.
“அண்ணாவை விடு ரூபி! அவனுக்குத்தான் பந்து.” என்று சொன்னவள் பேச்சைக் காதில் விழுத்துவதாகவே இல்லை. பந்தைப் பறிப்பதிலேயே குறியாக இருக்க பார்த்துக்கொண்டிருந்தவனின் முகத்தில் பெரிதான புன்னகை.
அவர்களின் உலகத்துக்குள் தானும் அடங்கிவிட மாட்டோமா என்று கையும் காலம் பரபரத்தன. ஆனாலும், இவளைப்போல குழந்தையாகவே மாறி, இவர்களை இவ்வளவு சந்தோசமாக வைத்திருக்க தன்னால் முடியும் என்று தோன்றவில்லை அவனுக்கு.
பார்த்திருக்க அன்று போலவே இன்றும் பந்து உருண்டு இவன் புறமாக வந்தது. வானதிதான் ஓடிவந்தாள். தன்னைக் காண்கிறாளா பார்ப்போம் என்று அவன் அவளையே பார்த்துக்கொண்டிருக்க, பந்திலேயே கவனமாக இருந்தவள் அதை எடுத்துக்கொண்டு திரும்பி ஓட ஒரு அடி எடுத்துவைத்துவிட்டுச் சட்டென்று திரும்பினாள்.
முதன் முதலில் அவனது மோனத்தைக் கலைத்தவள் அவள்தான். இன்று, அவள் மோனம் கலைந்து, அதிர்ந்து, திரும்பி இவனைப் பார்த்தாள்.
‘இவன் எங்க இங்க?’
அதிர்ச்சியில் விரிந்த அவள் கண்களைக் கண்டவனின் முகத்தில் குறுஞ்சிரிப்பு முளைத்தது. என்ன என்றான் புருவங்களை மட்டுமே அசைத்து.
‘ஆ!’ என்று வாயைப் பிளக்காத குறையாகக் கண்களை விரித்தாள் வானதி.
ஏதாவது சொல்வாள் என்று எதிர்பார்க்க, அவளோ அவன் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீளாமலேயே இருந்தாள்.
கையைப் பிடித்து இழுத்து அருகே அமர்த்தினான் அவன்.
“உனக்கு எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி?” இளம் புன்னகையோடு கேட்டவனைப் பார்த்து அவள் விழிகள் இன்னும் விரிந்தன.
பின்ன.. இவ்வளவு நாளும் சந்நியாசம் வாங்கியவன்போல் இருந்துவிட்டு, இன்று குறும்புடன் புருவங்களை உயர்த்தி அவளை வம்பிழுத்தால் அவளுக்கு மயக்கம் வருமா வராதா? இதில் தாடிக் காட்டுக்குள் இருந்து ஒளிக்கீற்று ஒன்று வேறு மின்னிக்கொண்டிருந்தது.
“என்ன வானதி, கதைக்கமாட்டியா?” அவனைக் கண்டுவிட்டு ஓடிவந்து தாவிய குழந்தைகளை ஒருவனாக சமாளித்தபடி கேட்டான்.
அந்தக் காட்சி வெகு நிறைவாய் இருக்க, பேசத் தோன்றாமல் பார்த்துக்கொண்டு மட்டுமிருந்தாள் அவள்.
“இப்பயெல்லாம் நான் வீட்டில இருந்தா நீ ஓடி ஒளியிற மாதிரி இருக்கு. என்ன விசயம்?” இப்போதும் புருவங்களை உயர்த்தி அவன் கேட்க, சட்டென்று காது மடல்கள் சூடாவதை உணர்ந்து வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள் வானதி.
“நான் என்னத்துக்கு ஒளியவேணும்?” வார்த்தைகள் வேகமாக வந்து விழுந்தனதான். ஆனால், இதயம் உள்ளே பலமாக படபடக்கத் துவங்கி இருந்தது.
‘இவனுக்கு இண்டைக்கு என்ன நடந்தது? வித்தியாசமாக் கதைக்கிறான், வித்தியாசமாப் பாக்கிறான்?’ அவளின் இயல்பு தொலைந்து போயிற்று!
“அத என்னைப் பாத்துச் சொல்லு!” என்றவன், அவள் தாடையைப் பற்றித் தன்னை நோக்கித் திருப்பியும் இருந்தான்.
‘இவனுக்கு என்னவோ நடந்தேதான் போச்சுது!’ அதிர்ந்து விழித்தவளிடம், “இப்ப சொல்லு! நீ ஓடி ஒளிஞ்சியா இல்லையா?” என்று கேட்டான்.
அவள் எங்கே பதில் சொல்லும் நிலையில் இருந்தாள்? குழந்தைகள் இருக்கிறார்கள் என்று சொல்லக்கூட முடியாமல் இருந்தாள்.
தன்னுடைய திடீர் செய்கையில் அதிர்ந்துபோயிருக்கிறாள் என்று விளங்கியதுதான். ஆனாலும், மாற்றத்தை உருவாக்க ஆரம்பித்தாயிற்று! அவளோடு சேர்ந்து அவனும் மாறியே ஆகவேண்டும்! எனவே, விடாமல் கேட்டான்.
அவளுக்கோ, அவனது தொடுகையோடு சேர்த்து பார்வையும் இரத்த நாளங்களைத் தூண்டிவிட, படக்கென்று முகம் சிவந்து போயிற்று! முகத்தை தளைத்துக்கொண்டவள், “வி..டுங்கோ ப்ளீஸ்…!” என்றாள் தடுமாற்றமாக.
“பதிலைச் சொல்லு, விடுறன்.” அவன் விடாப்பிடியாக நின்றான்.
மெல்லத் தன் கையால் அவன் கையைப் பற்றித் தன் தாடையிலிருந்து எடுத்தாள் வானதி. “பிள்ளைகளையும் வச்சுக்கொண்டு என்ன இது?” மெல்லப் பேச்சு வந்தது.
“சரி விடு! பிள்ளைகள் இல்லாத நேரமாப்பாத்து இதைப்பற்றிக் கதைப்பம்!” இலகுவாகச் சொன்னவனை அதிர்ந்து பார்த்தாள் வானதி.
‘இவ்வளவு நாளும் நல்லாத்தானே இருந்தான்.’ கண்கள் கேட்ட கேள்வியை அவன் படித்துவிட்டான்.
“மாறவேணும் வானதி. நிறைய மாறவேணும்!” இருவருக்கும் பொதுவாகச் சொன்னான் அதிரூபன்.
“பிடிக்குதோ பிடிக்கேல்லையோ சிலதை மாற்றித்தான் ஆகவேணும்.”
அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. கேள்வியாகப் பார்க்க, அதற்குமேல் அவனும் அதைப்பற்றி ஒன்றும் கதைக்கவில்லை.
“சங்கரி டொக்டர் இண்டைக்கு வாறா.” என்றான், அவள் முகத்தையே பார்த்தபடி.
அதிர்ந்துபோனாள் வானதி. நம்பி வீட்டில் பெண்ணைப்போல பார்த்தவருக்கு அல்லவா பெரும்பிழை செய்துவிட்டாள். என்ன சொல்வாரோ? அவர் முகத்தை எப்படிப் பார்ப்பாள்? தைரியமாக அனைத்தையும் செய்துவிட்டாள். அதற்கான பலனை எதிர்கொள்ள வேண்டிய நேரத்தில் கண்களில் கலக்கமும் கண்ணீரும் சூழ முகத்தைக் குனிந்தவளைப் பார்க்கப் பாவமாயிருந்தது அவனுக்கு.
அவள் கையைப் பற்றி அழுத்திக்கொடுத்தான். “பயப்பிடாம வா நான் இருக்கிறன்தானே!” என்றவன், அவளையும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீடு நோக்கி நடந்தான்.

