சதுர்வேதமங்கலம்:
வேப்பமர நிழலில் ஒரு கால் நீட்டிப் போட்டுக்கொண்டு, தனது மனைவி எடுத்து வந்த பழைய சாதத்தில் கெட்டிப் பசும் தயிரையும் அதன் மேல் உப்பையும் போட்டு, கலந்த சக்கரை நிமிர, அங்கே, சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், சேற்று வயலில் கம்பீரமாகத் டிராக்டரைச் செலுத்தி, ஏர் ஓட்டிக் கொண்டிருந்தான் அவருடைய பேரன்.
எஞ்சினின் சத்தமும், மண்ணைக் கிழித்துக்கொண்டு போகும் ஏரின் வேகமும் அந்தப் பகுதியையே பரபரப்பாக்கிக் கொண்டிருந்தது. பேரனின் ஒவ்வொரு அசைவையும், சக்கரை ஒருவித இறுக்கமான முகத்துடனேயே பார்த்துக் கொண்டிருந்தார்.
கணவனின் பார்வையில் இருக்கும் தவிப்பையும், லேசான அதிருப்தியையும் கனகு சட்டென்று உணர்ந்து கொண்டாள். கையில் இருந்த அகப்பையைச் சட்டியில் வைத்தபடியே, தன் சேலைத் தலைப்பால் முகத்து வேர்வையைத் துடைத்துக் கொண்டாள்.
“ஏன்யா… அவனுக்குப் புடிச்சதை அவன் பண்ணிட்டு போகட்டுமே, இதுல உனக்கு என்னய்யா நோவுது?” என்று மெல்லிய, ஆனால் அழுத்தமான குரலில் கேட்டாள் கனகு.
அவள் கேட்ட கேள்விக்குச் சக்கரை உடனே பதில் பேசவில்லை. தயிர் சாதத்தை மெல்ல ஒரு பிடி அள்ளி வாயில் போட்டுக் கொண்டவர்,
“என்னடி பேசற? இப்படிச் சேத்துல இறங்கி அவனும் பாடுபடுறதுக்கா காலேஜ்ல எல்லாம் போய் படிக்க வைத்தது? வீட்டுக்கு ஒரு பிள்ளை நாட்டுக்கு வேணுங்கிறபோல என்னை எங்க அப்பா நாட்டுக்குக் கொடுத்தாரு. நான் என் பிள்ளையைக் கொடுத்தேன். அந்தப் பிள்ளையை நாட்டுக்கே உயிர் தியாகம் பண்ணிட்டோம். இன்னைக்கு அவன் பிள்ளை இதை எதையும் கண்டுகாமல் வரப்பு மண்வெட்டினு சேத்துல (சேற்றில்) நிற்கிறானே? இதெல்லாம் கேட்க மாட்டியா, டி?” என்று மனைவியை முறைத்தார்.
“இங்க பாருய்யா, நமக்குன்னு இருக்கிறது வேந்தன் மட்டும்தான். என் பிள்ளை கடைசி காலம் வரைக்கும் என் கண்ணுக்குள்ளே இருக்கணும்னுதான் நான் பார்க்கிறேன். நீதான் அவனை போலீஸ் ஆகணும், கீலீஸ் ஆகணும்னு ஒத்தக் காலில் நிற்கிற… உங்க ஆத்தாப்பன் ஆசைக்கு நீ பட்டாளத்துல இருந்த. நம்ம பெத்த ஒத்தப் பிள்ளையையும் பட்டாளத்துக்கு அனுப்பிப் பறிகொடுத்தேன். அதோட போதும்யா. என் பேரப் பிள்ளையாவது என் கூடவே இருக்கட்டும். அது உனக்குக் கண்ணுல உறுத்துதோ?” என்று கண்கலங்கினார்.
“அடியே! இப்படி ஒவ்வொருத்தங்களும் நெனச்சாக்க நம்ம நாட்டை யாருடி காப்பாத்துறது? உன் பேரன் என்ன வேலைக்குப் போயிருக்கான் தெரியுமா?” என்று சக்கரை கோவமாகக் கேட்க, “என்ன வேலையாம்?” என்று கனகுவும் தனது கணவரிடம் கேட்க, “திருட்டு போலீஸ் ஆகிருக்கான், டி!” என்று கடுப்பாகச் சொன்னார்.
“என்னாது! திருட்டு போலீஸா? என்னய்யா உளறிக்கிட்டு இருக்க?”
“ஆமா டி. நான் பேசுனா உனக்கும் உன் பேரனுக்கும் அப்படித் தான் டி இருக்கும்,” என்று முறைத்தவர், “நெசமாவே உன் பேரன் திருட்டுத்தனமா தாண்டி போலீஸ் வேலை பார்க்கப் போறான்.
அந்தக் காக்கி உடுப்பைப் போட்டுக்கிட்டு ராசா போல வந்து நிற்பான்னு ராவும் பவலும் நா இங்க கனவு கண்டால், இவன் வீட்டில் இருந்துகிட்டு திருட்டுத்தனமா கொள்ளை அடிக்கிறவனையும் கொலை பண்றவங்களையும் கண்டுபிடிக்கிற வேலைக்குப் போய் இருக்கிறானே! நான் எங்க போய் சொல்லுவேன்?
இதுக்காகவா இவனை தோள்ளையும் மார்லையும் தூக்கிப் போட்டு வளர்த்தேன்னு?” என்று சக்கரை சத்தம் போட…
“அய்யோஓஓஓஓ! நான் என்ன பண்ணுவேன்? இந்த கிழவன் வேற என்னென்னமோ சொல்லுறாரே!” என்று பதறி அடித்து எழுந்த கனகு, அங்கே தூரத்தில் டிராக்டர் ஓட்டிக் கொண்டிருக்கும் தனது பேரனைப் பார்த்தவர், “ஐயா வேந்தா! வேந்தா!” என்று கையை அசைத்துக் கத்திக்கொண்டிருந்தார்.
வண்டி ஓட்டிக் கொண்டிருந்தவனோ தனது பாட்டி கூப்பிடுவதைப் பார்த்துவிட்டு, டிராக்டரை நிறுத்தியவன், “என்ன கனகு?” என்க, “இங்கு வாயா!” என்றார்.
டிராக்டரிலிருந்து சேற்றில் இறங்கியவன் அங்கிருந்தே, “சொல்லு கனகு. உன் புருஷனைவிட எனக்கு நல்லா காது கேட்கும்,” என்க…
“இங்க வாயா,” என்று மீண்டும் கனகு சொல்ல…
“இந்த மீசை என்னத்தைப் போட்டுக் கொடுத்துருக்கார்னு தெரியலையே?” என்று முணவிக்கொண்டே அங்கு வந்தவன், “இன்னும் ரெண்டு சால் ஏர் ஓட்டணும். இப்ப போய் எதுக்குத் தலைபோற காரியம் போலக் கூப்பிடுற? என்ன விஷயம் கனகு?”
“கண்ணு, முதல்ல இந்த மோரைக் குடியா!” என்று பேரனுக்கு எடுத்துட்டு வந்த மோரை ஒரு அலப்பு அலப்பி நீட்ட, தனது பாட்டியை முறைத்தவாறு அதை வாங்கிக் குடித்தவன், “இதுக்குத்தான் வா வானு பறந்தியா? ஒரேடியா முடிச்சுட்டு வந்திருப்பேனே,” என்று திரும்பிப் போகவும், “ஏ வேந்தா, செத்த நில்லு யா. உன் தாத்தா என்னமோ நீ திருட்டு போலீஸ்னு சொல்றாரே. எதுக்கு நமக்கு இந்த பொழப்பு சொல்லு?” என்று பாவமாகக் கனகு கேட்க… “சக்கரை!” என்று பல்லைக் கடித்தவன், “ஏன் கனகு, திருட்டு போலீஸாக யாராச்சும் வேலை பார்ப்பாங்களா?”..
“அதைத்தான் உன்னைக் கேட்குறேன்? நம்ம குடும்பம் என்ன? பரம்பரை என்ன?” என்று கனகு புலம்ப, அதைக் கேட்டவன் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த தனது தாத்தாவைத்தான் முறைத்துப் பார்த்தான்.
அவரோ ஒரு வாய் பழைய சாதத்தை அள்ளி வாயில் வைத்துவிட்டு, ஊசி மிளகாயை கடித்து ருசித்துச் சாப்பிடவும், “உன் புருஷன் சொல்றாருன்னு நீ நம்புறியே கனகு? அய்யோ, அய்யோ…!
எந்த உலகத்துலயாவது திருட்டு போலீஸ் என்று ஒரு வேலை இருக்கா? நீ படிக்கவில்லை என்பதற்காக உன்னை இப்படித்தான் ஏமாத்திட்டு இருக்காரு.”
“அது வந்து கனகு… உனக்கு நான் புரியிறபோல சொல்றேன் இரு. அதாவது, நான் தினமும் போயிட்டு வேலை பார்க்கணும்னு அவசியம் இல்லை. உங்க கூடயே இருப்பேன். எப்போதாவது ஏதாச்சும் வேலை வந்தால் அப்போ போய்ட்டு அந்த வேலையைப் பார்ப்பேன். அதுவரைக்கும் யாருக்கும் தெரியாமல் சாதாரண வேந்தனா இங்கு சுத்திட்டு கிடப்பேன் கனகு…”
“ஓஓஓ… ஒட்டு கேட்பாங்களே, அதாயா?” என்று அப்பாவியாகக் கனகு கேட்க, “ஆஆஆஆ!” என்று கத்தியவன், “அய்யோ கனகுஊஊ… இது ஒட்டு கேட்கிறது இல்லை.”
“உனக்கு எப்படிச் சொல்வதென்று யோசித்தவன், “நம்ம வயல்ல எலி இருக்கே, அதை எப்படிப் பிடிப்பாங்க, சொல்லு?”
“அதுவாயா… இராவுக்குக் கிட்டி வச்சா அதுல போய் மாட்டிக்கும்…”
“கரெக்ட்! ஏன் பகல்ல வைக்கலாமே கனகு? அதற்கு ஏன் ராவுல வைக்கணுமென்று?” வேந்தன் கேட்க, “அப்போதான அது அகப்படும் கண்ணு. வெளிச்சம் இருக்கும்போது எலிக்கு நம்பக் கிட்டி வச்சிருக்கிற விஷயம் தெரிஞ்சிடுமே வேந்தா…”
“இப்போது சொன்னியே, அதேதான் கனகு. நாம யாருனு தெரிஞ்சா குற்றவாளியைப் பிடிக்க முடியுமா? சொல்லு கனகு…”
“ம்ம், முடியாது தான்யா. அப்போ நம்ப எம்.ஜி.ஆர் அந்தப் படத்தில் வேஷம் போட்டு திருடனைக் கண்டுபிடிக்க உளவாளியா வருவாரே, அதா கண்ணு?” என்று ஆர்வமாகக் கனகு கேட்கவும், “அதேதான்! அதேதான்! அந்த வேலையைத்தான் பார்க்கப் போறேன். அப்போதான் உங்க கூட இருக்க முடியும்,” என்க…
“ம்க்கும்! உனக்கு வேலை பார்க்கத் துப்பு இல்லைன்னு சொல்லுடா. இன்னும் பத்து கல்யாணம் பண்ற அளவுக்கு என் உடம்புல தெம்பு இருக்கு. இந்த லட்சணத்தில் இவன் எனக்குப் பாதுகாப்பு கொடுக்கிறானோ!” என்று தனது மீசையைத் தடவிக்கொண்டு சக்கரை சொல்ல…
“இங்க பாரு கனகு, ஒழுங்கா உன் புருஷன் வாயை மூடச் சொல்லு. அப்புறம் எனக்குக் கெட்ட கோவம் வந்திடும்,” என்று வேந்தன் முறைக்க, “ஏன்யா, செத்த சும்மாதான் இருய்யா.
பிள்ளையைப் பத்தித் தப்புத் தப்பா சொல்றியே. நம்மள விட்டுத் தனியாகப் போக சங்கடப்பட்டுகிட்டு தானே இந்த வேலை பார்க்கப் போகுது,” என்கவும், “வாயை மூடுடி, கூறுகெட்ட குப்பாயி! காக்கி உடுப்பைப் போட்டுக்கிட்டு கம்பீரமா நடந்து வர்றது பெருமையா? இல்லை, திருட்டுப் பயல்போல யாருக்கும் தெரியாமல் வேலை பார்க்கிறது பெருமையா? நீயே சொல்லு டி,” என்கவும், “காக்கி உடுப்பு போட்டுட்டு வாரதுதான் பெருமை.”
“பின்ன… அதுக்குத்தாண்டி இப்படிக் கரடியாக் கத்திக்கிட்டு இருக்கேன்,” என்றவாறு, “ஏவ்!” என்று பெரிய ஏப்பத்தை விட்டு எழுந்தவர், “கனகு, மதியம் சோறாக்கி எடுத்துட்டு வரும்போது ரெண்டு கருவாட்டைச் சுட்டு எடுத்துட்டு வா,” வாய் நமநமனு இருக்கு என்று சொல்லிவிட்டு, இன்னொரு நடவு வயலில் வேலை ஆட்கள் களை எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கப் போனார்.
“ஐயா…! இந்த வேலை வேண்டாம்யா. உன் தாத்தா தான் சொல்றாரே, நீ காக்கி உடுப்பைப் போட்டுட்டு வாயேன். அதைப் பார்க்க என் ராசா, தொரை போல இருப்பியே,” என்று பேரனிடம் கனகு சொல்ல, கண்ணை மூடித் திறந்தவன், “சரி, போஸ்டிங் வரும்போது பார்த்துக் கொள்ளலாம். நான் போய் இப்ப ஏர் ஓட்டுறேன்,” என்று சொல்லிக்கொண்டு, யோசனையோடு போய்த் டிராக்டரில் உட்கார்ந்து ‘ஆன்’ பண்ணியவன், விட்ட வேலையைத் தொடர்ந்தான்.
செடி வளரும்
…

