மந்தாரை 10
வேந்தனின் நினைவுகள்:
எழில் வேந்தன் ராணுவத்தில் இருந்து பெற்ற அந்தத் தெளிவான பார்வையும், நேர்மையும் அவனுக்கு அரசியலில் இருந்த அழுக்குகளைத் தெளிவாகக் காட்டியது. கார்மேகம் தனது பேச்சைக் கேட்காமல், மாணிக்கத்தின் பேச்சில் மயங்கி நிற்பது அவனுக்குப் பெரும் கவலையைத் தந்தது.
ஒரு மாலை நேரத்தில், வயல் வரப்பில் வைத்து கார்மேகத்திடம் எழில் வேந்தன் மிகவும் கனிவாகவே பேசினான். “மேகா, நம்ம குடும்பம்னா ஊருக்கே ஒரு மரியாதை இருக்கு. இந்தத் தேர்தல், பதவி இதெல்லாம் நமக்குப் பிடிக்காத ஆளுங்க நம்மள பிரிக்கப் பாக்குற வலை. நீ ஏன் வீணாக அரசியலுக்குள்ள வர்ற? விவசாயமே உனக்கு ஒரு கௌரவமான வாழ்க்கை. தயவுசெஞ்சு இந்தத் தேர்தலில் நிக்காதே,” என்று வேண்டுகோள் வைத்தான்.
ஆனால், எழில் வேந்தனின் அந்த அக்கறையான வார்த்தைகளை, கார்மேகம் தவறாகப் புரிந்துகொண்டான். மாணிக்கம் அவனது காதுகளில் ஏற்றியிருந்த விஷம் வேலை செய்யத் தொடங்கிவிட்டது. “இவருக்குப் பதவி மேல ஆசை கிடையாதாம்! அதனாலதான் என்னையும் நிக்கக் கூடாதுன்னு தடுக்கிறார். இவருக்கு இருக்கிற அந்த அதிகாரம் எனக்கும் வந்துடுமோன்னு பயப்படுறார் போலிருக்கு,” என்று கார்மேகம் தனக்குள்ளேயே ஒரு சந்தேகத்தை வளர்த்துக்கொண்டான்.
மாணிக்கம் இதையே தனக்குச் சாதகமாக்கிக் கொண்டான். “பாத்தியா கார்மேகா, நீங்க முன்னேறணும்னு நினைச்சா, உங்க மச்சானே இப்படித் தடுக்கிறார். நீங்க ஜெயிச்சு பெரிய ஆளா வந்தா, இவருக்குச் செல்வாக்கு குறைஞ்சிடும்னு பயப்படுறார். இதெல்லாம் ஒரு குடும்பமா? நீங்க தனியா நின்னாதான் உங்களுக்கு மரியாதை,” என்று மாணிக்கம் மேலும் தீயைத் தூண்டிவிட்டான்.
எழில் வேந்தன் தன் மைத்துனரைத் திருத்தப் பார்த்தான், ஆனால் கார்மேகமோ, எழில் வேந்தன் தன்னை அடக்கி ஆள நினைப்பதாக எண்ணி, அவனைக் கண்டாலே ஒருவித வெறுப்போடும், தப்பான எண்ணத்தோடும் பார்க்க ஆரம்பித்தான்.
ஒரே வீட்டில், ஒரே மேசையிலிருந்து சாப்பிட்டு வளர்ந்த அந்த இரு குடும்பங்களுக்கும் இடையே, மாணிக்கம் விதைத்த அந்தச் சந்தேக விதை ஒரு பெரும் பிளவை ஏற்படுத்தத் தொடங்கியது. எழில் வேந்தன் ஒரு நல்ல நோக்கத்திற்காகச் சொன்ன வார்த்தைகள், கார்மேகத்தின் கண்களுக்கு அதிகார மோகமாகத் தெரிந்தன. அந்தத் தேர்தல் சதுர்வேத மங்கலத்தின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் சூறாவளியாக மாறத் தொடங்கியது.
பாரிவேந்தனும் கார்குழலியும் இதையெல்லாம் பார்த்துப் பயந்து போயிருந்தனர். அவர்களுக்குப் பிடித்திருந்த அந்தச் சின்னஞ்சிறு உலகம், இப்போது பெரியவர்களின் அரசியல் பகடைக்காயாக மாறிப் போயிருந்தது.
பாரிவேந்தன் தனது கல்லூரி விடுமுறைக்காக ஊருக்குத் திரும்பியிருந்தான். வீட்டில் இருந்ததை விட, அத்தை வீட்டு வயல்வெளிகளின் பக்கம் செல்லவே அவனுக்கு அதிக ஆர்வம். தனது புல்லட் வண்டியைச் சத்தத்துடன் வயல் வரப்பில் நிறுத்திவிட்டு, கார்மேகம் மாமாவிடம் சில விஷயங்கள் பேசலாம் என்று வயல் பாதை வழியே நடந்தான்.
மந்தாரை செடிகள் அடர்த்தியாக வளர்ந்திருந்த அந்த வளைவில், ஒரு புள்ளிமானைப் போலத் துள்ளிக் கொண்டு கார்குழலி ஓடி வந்தாள். அவள் கையில் வைத்திருந்த ஒரு கூடையில் மதிய உணவு இருந்தது. அவசரமாக ஓடி வந்தவள், எதிரே பாரிவேந்தன் வருவதைக் கவனிக்கவில்லை.
திடீரென்று அவள் பாரிவேந்தனின் மார்பில் பலமாக மோதினாள். அவள் கால் தடுமாறி, அருகிலிருந்த வயலின் சேற்றுக்குள் விழுந்துவிடுவாள் என்று அவன் உணர்ந்த நொடியில், மின்னல் வேகத்தில் தனது கைகளை நீட்டி அவளது இடுப்போடு சேர்த்து வளைத்து அணைத்துத் தடுத்து நிறுத்தினான்.
அவள் பாரிவேந்தனின் நெஞ்சின் மீது அப்படியே மோதி நின்றாள். அந்தத் திடீர் தழுவலில், பாரிவேந்தனின் இதயம் ஒருமுறை விம்மி அடங்கியது. கார்குழலியின் மூச்சுக்காற்று அவன் சட்டையின் மேல் பட, இருவரும் அப்படியே ஒரு கணம் உறைந்து நின்றனர்.
கார்குழலி திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள். எதிரே பாரிவேந்தனின் கண்கள் அவளையே தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருக்க, அவள் கன்னங்கள் வெட்கத்தாலும், பயத்தாலும் ஒருசேரச் சிவந்தன. அந்த மந்தாரை செடிகளுக்கு இடையே, இருவரது இதயத் துடிப்பும் ஒருவரை ஒருவர் உரசிக்கொள்ள, அந்த வயல்வெளி காற்று கூட அந்தத் தருணத்தில் மெல்ல அசைந்து தந்தது.
“எங்கடி இப்படிப் பறந்து வந்துகிட்டு இருக்க?” என்று பாரிவேந்தன் அவளைப் பிடித்துக்கொண்டே மென்மையாகக் கேட்டான். அவன் கைகள் அவளது இடுப்பை இன்னும் இறுக்கமாகப் பற்றியிருந்தன. கார்குழலிக்கு அவனது பிடியில் இருந்து விலகவோ, அல்லது அப்படியே அவன் மார்போடு ஒட்டி இருக்கவோ என்ன செய்வது என்று தெரியாமல் நாணத்தில் தலை குனிந்து கொண்டாள்.
அந்த வயல்வெளி, அந்த மந்தாரை செடிகள், பாரிவேந்தனின் உறுதியான பிடி—இவை அனைத்தும் சேர்ந்து, அன்று அந்த இடத்தையே ஒரு காவியத் தருணமாக மாற்றிக் கொண்டிருந்தன.பாரிவேந்தனின் பிடியில், தன் இடுப்பைத் தாங்கி நின்ற அவன் கரங்களின் கதகதப்பில் கார்குழலி திகைத்துப்போனாள். அவள் மெல்லத் துடித்து, “விடுங்க மாமா… யாராவது பாத்துடப் போறாங்க!” என்று நாணத்துடன் கெஞ்சினாள்.
பாரிவேந்தன் அவளை விடுவதாக இல்லை. இன்னும் நெருக்கமாக அணைத்து, அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்து, “விடுறதா? இத்தனை நாள் தவிப்புக்கு அப்புறம் இப்பதானே என் தேவதையை முழுசா என் முன்னாடி பார்க்கிறேன். உன்னை விடுவேனா?” என்று அதிகாரத்துடனும் அதே சமயம் காதலுடனும் கேட்டான்.
அவன் பேச்சில் இருந்த அந்த உரிமையைக் கேட்டதும், கார்குழலி அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவனது கண்களில் தெரிந்த தீவிரம் அவளைக் கட்டிப்போட்டது. வெட்கம் தாங்க முடியாமல், அவள் தன் முகத்தைக் குனிந்து அவன் நெஞ்சிலேயே மறைத்துக்கொண்டாள்.
அவள் முகத்தின் சிவப்பை பார்த்தவன் மந்தாரச்செடி ஓரத்திலே
மாமன் நடத்துற பாடத்துலே
மானே மருதாணி பூசவா
ஹோ ஓ தேனே அடையாளம் போடவா
என்று பாட குழலியோ அந்த குரலில் சுத்தமாக மயங்கி தான் போனாள்.
அந்த மந்தாரைச் செடிகளின் அடர்த்தியில், அவர்கள் இருவரையும் தவிர உலகமே இல்லாதது போல ஒரு மாய வலை அவர்களைச் சூழ்ந்திருந்தது. கார்குழலிக்கு இதுதான் காதல், இதுதான் சொர்க்கம் என்று தோன்றியது. அந்த நொடியை என்றென்றும் உறைய வைக்க வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள்.
ஆனால், விதி குறுக்கிட்டது. “குழலி! எங்க இருக்க?” என்று அவளைத் தேடி வந்த மஞ்சுவின் குரல், அந்த மாய வலையைக் கிழித்துக்கொண்டு கேட்டது.
பாரிவேந்தன் திடுக்கிட்டான். வேறு வழியில்லாமல், மிகுந்த மனமில்லாமல் அவளிடம் இருந்து விலகினான். கார்குழலி அந்தச் சூழலின் அவசரத்தில் நிலைகுலைந்து நின்றாள்.
பாரிவேந்தன் அவளைப் பார்த்து, ஒரு சிறிய புன்னகையைச் சிந்தி, “கவனமாப் போ டி,” என்று சொல்லிவிட்டு, இடது பக்கமாகத் திரும்பி வேகமாக நடந்து சென்றான்.
அவன் சென்ற திசையையே கார்குழலி ஒரு தவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் இதயம் இன்னும் அவனது அணைப்பின் கதகதப்பில் துடித்துக் கொண்டிருந்தது. வயல்வெளி மௌனமாக இருந்தது, ஆனால் அவர்களின் காதல் மந்தாரைச் செடிகளுக்கிடையே ஒரு புதிய ராகத்தை இசைத்துவிட்டுச் சென்றிருந்தது.
நாட்கள் மின்னல் போல ஓடியது. அந்நேரத்தில் எதிர்பாராத விதமாக எழில்வேந்தனின் வீர மரணம் சதுர்வேத மங்கலத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. நாட்டின் எல்லையில் நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்த அந்த வீரனின் உடல், முழு ராணுவ மரியாதையுடன் சொந்த மண்ணில் அடக்கம் செய்யப்பட்டது. சக்கரை தன் மகனை இழந்த துயரத்தில் உறைந்து போயிருந்தார். ஆனால், தன் மனைவி, மருமகள் காஞ்சனாவையும், பேரனையும், பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது.
இந்த நேரத்தில் தான் தேர்தல் முடிந்து ரிசல்ட் அறிவிப்பும் வந்தது.
ஆனால், கார்மேகத்தின் மனநிலை வேறு விதமாக மாறியிருந்தது. பஞ்சாயத்துத் தேர்தலில் எழில் வேந்தனின் இன்னொரு நண்பனான தவசி வெற்றி பெற்றார்.எழில் கூட கல்லூரி வரையில் படித்தவர் அதற்கு ஏற்ப வேலைக்கு போகாமல், விவசாயத்தில் இறங்கிவிட்டார்.
கார்மேகமத்திற்கு தான் சந்தித்த தோல்வி அவனைப் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது.
“உன் மச்சான் உயிரோடு இருந்தவரை உன்னை வளர விடல, இப்ப அவன் போன பிறகும் அவனோட செல்வாக்குதான் உன்னைத் தோக்கடிச்சிருக்கு. தவிசிக்கு இந்த பதவி கிடைக்க எழில்தான் நம் ஊர்மக்கள் கிட்ட பேசியிருப்பான்.உன் மச்சானுக்கும், அவனோட குடும்பத்துக்கும் உன் மேல அக்கறையே இல்ல கார்மேகா!” என்று மாணிக்கத்தின் நயவஞ்சக வார்த்தைகள் அவனது காதுகளில் விஷமாக ஓடிக்கொண்டிருந்தன:
கார்மேகம் தன் வீட்டுக் கட்டிலில் அமர்ந்து இதையே நினைத்து ஆத்திரமடைந்து கொண்டிருந்தான். அப்போது, கவலையோடு காஞ்சனா உள்ளே வந்தாள்.
“அண்ணா…” என்று அவள் மெல்லிய குரலில் அழைத்தாள்.
அந்தக் குரல் கார்மேகத்திற்குத் தன் மச்சான் எழில்வேந்தனின் நினைவுகளைக் கிளறியது. மாணிக்கத்தின் பேச்சால் மூளை சலவை செய்யப்பட்டிருந்த அவன், காஞ்சனாவைக் கண்டதும் தன் கோபத்தை அடக்க முடியாமல் பொங்கினான்.
“எதுக்குடி இங்கே வந்த? என் தோல்விக்குக் காரணமே உன் புருஷன்தான்! என் வாழ்க்கையை நாசமாக்கிட்டீங்க!” என்று கத்திக் கொண்டே தன் தங்கையை ஓங்கி அறைய, அந்த அடியின் வேகத்தில் நிலைகுலைந்த காஞ்சனா சுவரில் மோதி கீழே விழுந்தாள். அவள் தலை அங்கிருந்த அறிகாள் மேலே பலமாக அடிபட்டது.
அடுத்த சில நொடிகளில் அவளது உடல் அசைவற்றுப் போனது. துடித்தபடி அவள் உயிர் பிரிந்தது. தான் செய்தது தவறு என்று உணர்வதற்குள், கார்மேகம் தன் தங்கையையே கொன்றுவிட்ட பாவியாகி நின்றான்.
கீழே விழுந்த காஞ்சனாவின் அலறல் சத்தம் கேட்டு திண்ணையில் இருந்து அவளது அப்பா அம்மா ஓடி வருவதற்குள் எல்லாம் முடிந்து விட்டது.
சதுர்வேத மங்கலத்தின் அமைதி அந்தப் பாதகச் செயலில் சிதைந்து, பெரும் சோகத்தில் மூழ்கியது. கனகு-சக்கரை தம்பதிகள் தங்கள் மகனை இழந்த துயரத்திலிருந்து மீளும் முன்பே, தன் மருமகளை இழந்த அந்த அதிர்ச்சி அவர்களை நிலைகுலையச் செய்தது.
அங்கே சக்கரையின் குடும்பமும், பாரிவேந்தனின் எதிர்காலமும் ஒரே நொடியில் சிதைந்து போயின.
செடி வளரும்…

