மந்தாரை 12
சதுர்வேதமங்கலம்:
நடவு வேலை முடிந்து ஆட்கள் சென்று விட கதவை திறந்து உள்ளே வந்த மருது ஏ எருமை எந்திரி டா என்கும் குரல் அந்தப் போர் கொட்டகையின் அமைதியைக் கிழித்துக்கொண்டு உள்ளே நுழைந்தது. அவன் கையில் இருந்த மண்வெட்டியை ஓரமாக வைத்துவிட்டு, கட்டிலில் சுருண்டு கிடந்த பாரிவேந்தனை உலுக்கினான்.
பாரிவேந்தன் மெல்லக் கண்களைத் திறந்தான். வெளிச்சம் கண்கள் கூச, அப்படியே மல்லாக்கப் படுத்துக் கையை நெற்றியில் வைத்துக்கொண்டான்.
“எருமை! மணி ஆறாகப்போகுது, இன்னும் என்னடா இந்த மூடு?” என்று மருது அலுத்துக்கொண்டவன் “புள்ளதாச்சி பொம்பள மசக்கையில் கடக்க போல சுருண்டு கிட்டு கிடக்குற… எழுந்திருச்சு அந்த வேலையை முடிச்சுட்டு வீட்டுக்குக் கிளம்புவோம்.”
பாரிவேந்தன் ஒன்றும் பேசவில்லை. அவன் முகத்தில் தெரிந்த சலிப்பு, மருதுவின் கேலியை விடவும் ஆழமானது. மெதுவாக எழுந்து அமர்ந்தவன், சட்டையைச் சரி செய்துகொண்டு தரைக்கு வந்தான்.
“ஏன்டா இப்படி ஒரு மாதிரி இருக்க?” என்று மருது அவனது தோளில் கை வைத்தான். “ஏதாவது நடந்ததா? இல்ல, எதையாவது நினைச்சு உள்ளுக்குள்ளேயே புழுங்கிட்டு இருக்கியா?”
பாரிவேந்தன் தன் நண்பனை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தான். கண்கள் இன்னும் தூக்க கலக்கத்திலும், ஏதோ ஒரு பாரத்திலும் சிவந்திருந்தன. “ஒன்னுமில்லடா மருது. மனசுதான் கொஞ்சம் கனமா இருக்கு. சரி கிளம்புவோம், இருட்டுறதுக்குள்ள வீடு சேரணும்,” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டான்.
இருவரும் கொட்டகையை விட்டு வெளியே வந்தனர். வயல்வெளியின் வரப்புகளில் கால் வைக்க, குளிர்ந்த மாலைக் காற்று வீசியது. தூரத்தில் கார்குழலி கல்லூரி முடிந்து வீடு திரும்பும் அதே பேருந்துப் பாதை தெரிந்தது. பாரிவேந்தனின் கண்கள் தன்னிச்சையாக அந்தப் பாதையை நோக்கின.
மருது அவனது பார்வையைப் பின்பற்றிவிட்டு, “மறுபடியும் அங்கயா?” என்று ஒருவிதப் புரியாத கேள்வியுடன் பார்த்தான்.
பாரிவேந்தன் பதில் சொல்லவில்லை. அவன் நடையில் ஒரு தயக்கம் இருந்தது. அந்தப் பாதையில் அவள் வருவாள் என்பதை அறிந்தவன் போலவும், ஆனால் அவளைச் சந்தித்துவிடக் கூடாது என்று பயப்படுபவன் போலவும் அவன் நடந்த விதம், மருதுவிற்கு அவனது காதலின் ஆழத்தையும், அந்த மௌனத்தின் காரணத்தையும் புரிய வைத்தது.
“மாமா…” என்ற குரல் எங்கோ காற்றில் கேட்பது போல அவனுக்கு ஒரு பிரமை. அவள் கல்லூரியிலிருந்து திரும்புவதற்காக ஏங்கும் கார்குழலியின் மனநிலை, அவளை விடவும் இவனுக்குத்தான் அதிகமாகத் தெரிகிறது. ஆனால், சொல்ல முடியாத தவிப்பிலும், செய்யத் துணியாத செயல்களிலும் சிக்கித் தவித்தான் பாரிவேந்தன்.
பாரிவேந்தனின் உலகம் மிகத் தெளிவான ஒரு கோட்டைக்குள் இருந்தது. அவனது ஒவ்வொரு அசைவிலும் ஒருவித நிதானமும், முகத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத ஒரு கல் போன்ற கடினத்தன்மையும் தங்கியிருந்தன.
கார்குழலி வீட்டின் முற்றத்தில் நின்றாலோ அல்லது அவன் அருகில் கடந்து சென்றாலோ, பாரிவேந்தன் தன் பார்வையை வேறு திசையில் திருப்பிக்கொள்வான். அந்தப் பாராமுகம் அவன் அவளை வெறுப்பதனால் அல்ல; அவளுக்குள் எரியும் காதலின் தணல் தன்னைச் சுட்டுவிடும் என்பதால்தான்.
ஆனால், இதையெல்லாம் அறியாத கார்குழலிக்கு ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாக நகர்ந்தது. கல்லூரி முடிந்து வீடு திரும்பும் அந்த மாலை நேரங்களில், அவள் கண்களின் தேடல் எப்போதும் பாரிவேந்தனை நோக்கியே இருக்கும்.
அன்று மாலை, அவன் கொட்டகையை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தான். கைகளில் கறை படிந்த வேலைக் கருவிகள். வழக்கம்போலவே அவன் அவளைப் பார்த்தும் பார்க்காதது போல, தன் நண்பன் மருதுவிடம் ஏதோ பேசிக்கொண்டு கடந்து சென்றான். அந்தச் சிறிய நொடி, கார்குழலியின் இதயத்தில் ஆயிரம் ஊசிகளைக் குத்தியது.
‘ஒரு நிமிஷம்… ஒரு நிமிஷம் என் கண்ணைப் பார்த்துட்டு, சின்னதா ஒரு புன்னகை வீசிட்டா என்னவாச்சு?’ என்று அவள் மனம் ஏங்கியது.
அவன் கடந்து போன அந்தப் பாதையையே பார்த்துக் கொண்டு நின்றாள் கார்குழலி. அவளது ஆருயிர் தோழி மஞ்சு, தூரத்தில் இருந்து இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தாள். அவளுக்குத் தெரியும், கார்குழலியின் இந்தக் காத்திருப்பு எங்கே போய் முடியப்போகிறது என்று.
நாட்கள் உருண்டோடின. வசந்தம் வரலாம், மழை பெய்யலாம், ஆனால் பாரிவேந்தனின் மௌனம் மட்டும் மாறவே இல்லை. அந்த மௌனத்திற்குப் பின்னால் அவளுக்கான காதல் இருக்கிறது என்பதை அறியும் வரை, கார்குழலியின் நாட்கள் இப்படியே ஏக்கத்தோடுதான் நகரும் போலிருந்தது.
பசுமை போர்த்திய சதுர்வேதமங்கலத்தின் காலைப் பொழுது வழக்கம்போலவே அமைதியாகத் தொடங்கியது. ஹாலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த பாரிவேந்தனின் காதுகளில், வாசலில் இருந்து ஒலித்த அந்தப் பரிச்சயமான குரல் விழுந்தது.
“சார்… போஸ்ட்!”
அங்கிருந்த டீபாயின் மேல் பேப்பரை வைத்துவிட்டு வெளியே வந்தான். அது ஒரு பதிவுத் தபால் என்பதால், பாரிவேந்தன் கையெழுத்துப் போட்டு வாங்க வேண்டியிருந்தது.
தபாலை வாங்கிய வேந்தன், அதன் பின்புறம் அச்சிடப்பட்டிருந்த முகவரியையும், அந்த அரசு இலச்சினையையும் பார்த்த கணத்தில் அவனது இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. ஆவலோடும் பரபரப்போடும் கவரைப் பிரித்து, உள்ளே இருந்த கடிதத்தை வாசித்தான். அவனது கண்கள் விரிந்தன; முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம் தொற்றிக்கொண்டது.
உடனே உள்ளே பார்த்து உரத்த குரலில் கத்தினான், “பாட்டி… சீக்கிரம் வா பாட்டி!”
சமையல்கட்டில் பாத்திரங்கள் உருளும் சத்தத்திற்கு நடுவே, பேரனின் துள்ளலான குரலைக் கேட்டு பதறி அடித்துக் கொண்டு கையில் இருந்த சேலைத் தலைப்பால் கைகளைத் துடைத்துக் கொண்டே ஹாலுக்கு வந்தவர், “என்ன சாமி? ஏன் இப்படி கத்துற? ஏதாச்சும் விபரீதமா?” என்று படபடப்புடன் கேட்டார் கனகு.
பாரிவேந்தன் அவளது தோள்களைப் பற்றிக்கொண்டு, “பாட்டி, நாம் ஆசைப்பட்ட மாதிரியே என் வேலைக்கான உத்தரவு வந்துடுச்சு பாட்டி!” என்றான்.
“ஆத்தா ஆனந்தாயி… நீயே துணை!” என்று கண்களை மூடி கும்பிட்ட பாட்டியின் முகத்தில் அத்தனை நெகிழ்ச்சி. உடனே கடகடவென பூஜை அறைக்குள் ஓடியவர், அங்கு சாமி பாதத்தில் வைக்கப்பட்டிருந்த விபூதி குங்குமத்தை எடுத்துக்கொண்டு ஓடிவந்தார். பேரனின் நெற்றியில் அதை ஆசிர்வதித்துத் திலகமாக இட்டு, “என்றைக்குக் கண்ணு நீ வேலைக்குக் கிளம்பணும்?” என்று பாசத்தோடு கேட்டார்.
“இன்னும் இரண்டு நாள்ல டெல்லியில ரிப்போர்ட் பண்ணணும் பாட்டி” என்றான் பாரி.
“சரி கண்ணு… உன் தாத்தாவுக்கு இந்தச் செய்தியைக் கேட்டா சந்தோஷம் தாங்காது. சீக்கிரம் போய் சொல்லு, அவரு தோட்டத்துலதான் இருக்காரு” என்று பாட்டி அவசரப்படுத்தினாள்.
தன் கையில் இருந்த அந்தப் பெருமதிப்புமிக்க கடிதத்தைப் பத்திரமாகப் பூஜை அறையில் சாமி படத்திற்கு முன்னால் வைத்தான் பாரிவேந்தன். பின்னர், விறுவிறுவென்று தங்களது தென்னந்தோப்பை நோக்கி நடந்தான்.
அங்கே அவனது தாத்தா, ஆட்கள் தேங்காய் பறித்துக் கொண்டிருப்பதை மேற்பார்வை பார்த்துக் கொண்டு நின்றிருந்தார். தாத்தாவின் அருகில் நெருங்கிய வேந்தன், சற்றே நிதானித்து, “தாத்தா… ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்” என்றான்.
தாத்தா திரும்பிப் பார்த்து, “சொல்லுடா என்ன அதிசயமாக இத்தனை அடக்கம், என்ன விஷயம்? முகம் ஏன் இவ்வளவு பிரகாசமா இருக்கு?” என்றார் புன்னகையுடன்.
“தாத்தா, இன்னும் இரண்டு நாள்ல நான் டெல்லிக்குக் கிளம்புறேன், ஒரு முக்கியமான வேலைக்கு வரச் சொல்லியிருக்காங்க” என்றான் வேந்தன், தன் புன்னகையை மறைக்க முயன்றபடி.
தாத்தா அவனைக் குழப்பத்துடன் முறைத்துப் பார்த்தார். “டெல்லிக்கு போறியா? அப்படி என்னடா தலைபோற காரியம் உனக்கு அங்கே? அதுவும் ரெண்டு நாள்ல?” என்று மீசையை முறுக்கிக்கொண்டே கேட்டார்.
வேந்தன் இனிமேலும் மறைக்க விரும்பாமல், “வேலைக்குச் சேரச் சொல்லி லெட்டர் வந்துடுச்சு தாத்தா, சிபிஐ ஆபீஸ்ல இருந்து கூப்பிட்டிருக்காங்க. பின்ன போகாம இருக்க முடியுமா?” என்றான்.
அந்த வார்த்தையைக் கேட்டதும் தாத்தாவின் முகம் அப்படியே மாறியது. தன் மீசையைத் தடவிவிட்டுக்கொண்டு, அந்தத் தோப்பே அதிரும் வண்ணம் சத்தமாகச் சிரித்தார். அவரால தன் சந்தோஷத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. பின்னர் பேரனின் தோள்களை இறுகப் பற்றிக் குலுக்கியவர், கண்கள் கலங்க உரக்கச் சொன்னார்:
“என் புள்ள போலீஸாயிட்டான்! என் புள்ள போலீஸாயிட்டான்டா!”
அவரின் கண்களில் இருந்து வழிந்த ஆனந்தக் கண்ணீரைப் பார்த்தபோது வேந்தனின் மனதும் நெகிழ்ந்து போனது. தனக்குப் பெற்றவர்களை விடவும் மேலாக, தன் ஒவ்வொரு கனவையும் செதுக்கி, தன்னை இந்த அளவிற்கு வளர்த்தெடுத்த தாத்தா-பாட்டியின் பாசத்தை அவன் அறிவான் அல்லவா?
தாத்தா தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, “சரி கண்ணு, வீட்டுக்குக் கிளம்புவோம். அந்தக் கிழவிகிட்ட (பாட்டி) சொல்லி உடனே ஏதாச்சும் இனிப்பு செஞ்சு சாமிக்கு வைக்கச் சொல்லு. வா போவோம்!” என்று பேரனை அணைத்தவாறே கூட்டிச் சென்றார்.
அடுத்த இரண்டு நாட்களும் மின்னல் வேகத்தில் கடந்தன. தாத்தா, பாட்டியின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு, தன் கனவுகளைச் சுமந்தபடி டெல்லி வந்து சேர்ந்தான் பாரிவேந்தன். கிராமத்தின் அமைதிக்கு முற்றிலும் மாறான, பரபரப்பான டெல்லி மாநகரம் அவனை வரவேற்றது.
கடிதத்தில் குறிப்பிட்டிருந்தபடி, காலை 10 மணிக்கு எல்லாம் சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும். அதற்கேற்ப கச்சிதமாகத் தயாரான வேந்தன், ஒரு வாடகைக் காரைப் பிடித்து, சரியாக அரை மணி நேரத்தில் அந்தப் பிரம்மாண்டமான சிபிஐ அலுவலகத்தின் முன்னால் வந்து இறங்கினான்.
உள்ளே கடுமையான பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி, சில நிமிடக் காத்திருப்பிற்குப் பின் அவனுக்கு உள்ளே செல்ல அனுமதி கிடைத்தது.
மேலதிகாரியின் அறைக்குள் கம்பீரமாக நுழைந்த பாரிவேந்தன், அவருக்கு ஒரு கச்சிதமான சல்யூட் அடித்தான். அவனது மேலதிகாரி தன் தலையை அசைத்து சல்யூட்டை ஏற்றுக்கொண்டு, “டேக் யுவர் சீட், மிஸ்டர் பாரிவேந்தன்” என்றார்.
வேந்தன் தனக்கான இருக்கையில் அமர்ந்ததும், அதிகாரி ஒரு தடிமனான கோப்பை அவனுக்கு முன்னால் நகர்த்தினார்.
“மிஸ்டர் பாரிவேந்தன், உங்களுக்குக் கொடுக்கப்படப் போற முதல் கேஸோட முழு விவரங்களும் இதுலதான் இருக்கு. இதை நீங்க முழுசாப் படித்துப் பார்த்தீங்கன்னா, உங்களுக்கு ஓரளவுக்கு எல்லாமே புரியும்னு நினைக்கிறேன். துரதிர்ஷ்டவசமா, இதுவரைக்கும் இந்த கேஸை யாருமே சால்வ் பண்ண முடியல.”
அதிகாரியின் குரல் சற்றே தீவிரமானது, “ஏன்னா, இந்த வழக்கில் குற்றவாளிகளைப் பற்றின எந்த ஒரு சின்ன துப்பும் இதுவரை கிடைக்கவில்லை என்று லோக்கல் போலீஸ் தரப்பில் இருந்து கைவிரிச்சுட்டாங்க. சோ, உங்களுடைய முதல் அசைன்மென்ட் இதோட குற்றவாளிகளைக் கண்டுபிடிச்சு, சட்டத்திற்கு முன்னாடி நிறுத்துவதுதான்” என்றார்.
வேந்தனின் கண்கள் அந்த ஃபைலின் மேல் நிலைத்தன. உறுதியான குரலில், “கண்டிப்பாகச் செய்கிறேன் சார்” என்றான்.
செடி வளரும்…

