மந்தாரை 15:
நீதிமன்றக் கூட்டத்தில் நிலவிய இறுக்கமான சூழலுக்கு இடையே, “இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் வழங்கப்படும்” என்று நீதிபதி அறிவித்துவிட்டு எழுந்து சென்றார். நீதிமன்றமே கலைந்து சென்றாலும், பாரிவேந்தனின் கண்கள் மட்டும் அந்த மூவர் மீதுதான் இருந்தன.
அவர்கள் எழில்முகையின் வாக்குமூலத்தைக் கேட்டு அழுத விதம், சாதாரணமானதல்ல.அந்த மூவரைத் தனியாகச் சந்தித்துப் பேசினால் மட்டுமே, எழில்முகை எதற்காக இந்த முடிவை எடுத்தாள் என்பதற்கான உண்மையான காரணம் புலப்படும் என்று அவனது உள்ளுணர்வு உறுதியாகச் சொன்னது.
சந்துரு, கயல் மற்றும் விக்ரம் ஆகிய மூவரையும் பற்றித் தன் ரகசியப் புலனாய்வு மூலம் தகவல்களைத் திரட்டினான். அன்று மாலை நேரம், சென்னையின் பரபரப்பான ஒரு பகுதியில் இருந்த அந்தப் பழைய அடுக்குமாடி குடியிருப்புக்குத் தன் காரில் சென்றடைந்தான் பாரிவேந்தன்.
அவர்கள் இருந்த வீட்டின் கதவைத் தட்டியபோது, விக்ரம் வந்து கதவைத் திறந்தான். பாரிவேந்தனைப் பார்த்ததும் அவன் முகம் சற்றே மாறியது.
“சார்… நீங்க?” என்று விக்ரம் தடுமாற, வேந்தன் தன் அடையாள அட்டையைக் காட்டினான்.
“எழில்முகை பற்றிய வழக்கு. அவளுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்புன்னு எனக்குத் தெரியும். ஆனா, அவ ஏன் இந்தத் தியாகத்தைச் செஞ்சான்னு எனக்குத் தெரியணும். மறைக்காமப் பேசுங்க, இல்லன்னா எழில்முகையை யாராலயும் காப்பாத்த முடியாது,” என்று நேரிடையாகப் பேசினான் பாரிவேந்தன்.
இதைக் கேட்டு உள்ளே இருந்து சந்துருவும், கயலும் தயக்கத்துடன் வெளியே வந்தனர். அறைக்குள் நிலவிய அந்த அமைதி, எதோ ஒரு பெரிய ரகசியத்தைச் சுமந்து கொண்டிருப்பது போல இருந்தது.
உள்ளே வாங்க சார் என்று சொல்லவும் தேங்க்யை என்றவாறு பாரிவேந்தன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து, அவர்கள் மூவரையும் உற்றுப் பார்த்தான்.
“நான் நேரடியாக விஷயத்திற்கு வரேன். எழில்முகை அவளைச் சிறையில் அடைக்கப்படணும்னு ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்கா? மூணு உயிரைப் பறிச்சவள், ஏன் தனக்குத் தானே தண்டனை வாங்கிக்க ஆசைப்படுறா?” என்று கேட்டான் வேந்தன்.
சந்துரு, விக்ரம், கயல் ஆகிய மூவரின் கண்களிலும் இருந்த ஏதோ ஒரு ஆழமான வலியின் காரணம் இப்போது அவனுக்குப் புரிந்தது.
நீங்கள் உண்மையை சொன்னால் என்னால் முடிந்ததை நான் காப்பாற்ற முயற்சி பண்ணுவேன் அதற்காகத்தான் என்று பாரி சொல்ல,
சந்துரு தழுதழுத்த குரலில் தொடர்ந்தான்:
“சார்… சிறுவயதிலே எங்கள் அப்பா அம்மா இறந்துட்டாங்க. எங்களை வளர்த்து ஆளாக்கியது எனது அத்தை மாமா. அதாவது எனது மனைவியான கயல் மற்றும் விக்ரமின் அம்மா அப்பா. எழில்முகை-நறுமுகை இருவரும் எனது கூடப் பிறந்தவர்கள்.இருவரும் சென்னையில் இருக்கும் மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தனர்.நறுமுகை நான்காம் ஆண்டு, எழில்முகை முதலாம் ஆண்டு.
நான் குன்னூரில் எங்க பிசினஸ் பார்த்துட்டு இருந்தேன். ஒரு நாள் தனது தோழி பிறந்தநாளென போனவளை வசந்தும் அவனது கூட்டாளிகளும் சேர்ந்து எனது தங்கையின் வாழ்க்கையை நாசமாக்கி கார் விபத்து போல செய்து விட்டனர்.
“ஒரு டாக்டராக, எங்கே கத்தியை வைத்தால் உயிர் போகும் என்று அவளுக்குத் தெரியும். அந்த அறிவை வைத்து, தனது அக்காவின் சாவுக்குக் காரணமானவர்களை ஒவ்வொன்றாகத் தேடித் தீர்த்துக் கட்டினாள்,” என்று கூறிவிட்டுச் சந்துரு கேவி கேவி அழுதான்.
பாரிவேந்தனின் இதயம் கனத்துப் போனது.அந்த அறையில் சில நிமிடங்கள் அசையாமல் அமர்ந்திருந்தான். ஒரு சிபிஐ அதிகாரியாக அவன் குற்றவாளியைப் பிடிக்க வந்தான், ஆனால் இப்போது அவனது முன்னால் இருப்பது ஒரு சகோதரியின் வேதனை. எழில்முகை ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருந்தாள் என்பது இப்போது அவனுக்குப் புரிந்தது. அவள் சட்டத்தை மீறியிருக்கலாம், ஆனால் அவள் அடைந்த அந்த நீதிக்கான விலை மிக அதிகம்.
“சந்துரு… விக்ரம்… கயல்…” பாரிவேந்தன் மெதுவாக நிமிர்ந்து பார்த்தான். “சட்டம் தனி மனிதப் பழிவாங்கலுக்கு இடம்தரக்கூடாது என்பதுதான் என் பணி. ஆனால், உங்கள் தங்கைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குச் சாட்சி சொல்ல யாருமில்லை என்பதால் தான் எழில்முகை இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறாள். இப்போது நீங்கள் நறுமுகையின் மரணத்திற்குத் தேவையான அனைத்து ஆதாரங்களையும், வசந்தின் குற்றங்களை நிரூபிக்கும் ஆவணங்களையும் என்னிடம் கொடுங்கள். எழில்முகையின் தண்டனையைக் குறைக்க, நான் அவளைக் கொலையாளியாக மட்டும் பார்க்காமல், அந்த அநீதியின் பாதிப்பிற்குள்ளான ஒருத்தியாக நீதிமன்றத்தில் முன்வைக்கிறேன்.”
“அப்போ… நறுமுகை?” என்று பாரிவேந்தன் தயக்கத்துடன் கேட்டான்.
சந்துரு மேலும் தேம்பித் தேம்பி அழுதான். “இல்லை சார். அவள் அன்றைக்கு அந்த கொடூரமான தாக்குதலில் இருந்து தப்பித்து, ஆனால் கோமா நிலைக்குச் சென்றுவிட்டாள். நறுமுகைக்கு இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் நினைவு திரும்பியது. சில மாதங்களுக்கு முன்பு அவள் கண் விழித்தபோது, நடந்த அத்தனை கொடூரங்களையும் எங்களிடம் சொல்லிய அடுத்த நொடி என் தங்கை இறந்துவிட்டாள். நறுமுகையின் மரணம்தான் எழில்முகையை ஒரு வேட்டைக்காரியாக மாற்றியது சார்!”
பாரிவேந்தன் நாற்காலியை இறுக்கிப் பிடித்துக்கொண்டான். எழில்முகை செய்தது வெறும் பழிவாங்கல் அல்ல, அது ஒரு சகோதரி இழந்த நீதி. அந்த மூன்று கொலைகளும் தற்செயலானவை அல்ல; ஒவ்வொன்றும் நறுமுகைக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கான பதில் அடிகள்.
“இதை நீங்கள் கோர்ட்டில் சொல்லவில்லை, ஏன்?” என்று பாரிவேந்தன் கேட்டான்.
“எழில்முகை இதைச் சொல்ல விரும்பவில்லை சார். ‘நீதிமன்றத்தில் இந்த விஷயம் வெளிவந்தால், நறுமுகையின் பெயரும், அவளுக்கு நடந்த அந்த அவமானமும் வீதிகளில் பேசப்படும். அதை அவள் ஆன்மா சகிக்காது’ என்று முகை தடுத்தாள். அவள் தன் அக்காவின் கௌரவத்திற்காகத் தன் வாழ்வையே பணயம் வைத்துவிட்டாள்!” என்று விக்ரம் சொல்ல, அறை முழுவதும் சோகம் கவிழ்ந்தது.
பாரிவேந்தன் எழுந்தான். அவனது கண்கள் கலங்கியிருந்தன. ஆனால், அவனது மன உறுதியும் கூடியிருந்தது.
“சந்துரு, முகை தன் அக்காவின் மானத்தைக் காக்கத் தன் வாழ்க்கையைத் தியாகம் செய்துவிட்டாள். இப்போது நீங்கள் நறுமுகையின் மரணம் மற்றும் அந்தப் போராட்டம் குறித்து ஏதாவது ஆதாரங்கள் இருந்தால் எனக்குக் கொடுங்கள். முகை எதற்காக இந்தத் தியாகத்தைச் செய்தாள் என்பதை, நறுமுகையின் கண்ணியம் காக்கப்பட்டு, அதே சமயம் வசந்த் அவனது நண்பர்கள் செய்த அநீதி உலகம் அறியும்படி இந்த நீதிமன்றத்தில் நான் நிரூபிக்கிறேன். எழில்முகையை நான் வெறும் குற்றவாளியாகக் கொண்டு வரமாட்டேன்… நீதிக்காகப் போராடிய ஒரு தியாகியாகக் கொண்டு வருவேன்.”
அவன் வார்த்தையை நம்பி அவர்களும் தங்களிடம் இருக்கும் ஆதாரத்தை கொடுத்தார்கள்.
பாரிவேந்தன் அந்த வீட்டை விட்டு வெளியே வரும்போது, அவனுக்குள் ஒரு பெரிய தெளிவு பிறந்தது. சட்டம் சில நேரங்களில் மௌனமாக இருக்கலாம், ஆனால் அந்த மௌனத்தை உடைக்க வேண்டியது அதிகாரியின் கடமை.பாரிவேந்தன் தனது மேலதிகாரியிடம் அந்தத் துயரமான உண்மையை விரிவாகச் சொன்னபோது, மறுமுனையில் இருந்த அதிகாரி சில நொடிகள் உறைந்து போனார். ஒரு பெண், அதுவும் ஒரு மருத்துவர், இத்தனை திட்டமிட்டு சட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறாள் என்றால், அதன் பின்னால் எவ்வளவு பெரிய வலியும், அநீதியும் இருந்திருக்கும் என்பதை அவரால் உணர முடிந்தது.
“பாரிவேந்தன், இது சாதாரண வழக்காக இல்லை. நறுமுகையின் கௌரவம் காக்கப்பட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு எழில்முகையின் தியாகமும் முக்கியம். அவளுக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்புகள் அதிகம் என்று தெரிகிறது. எனவே, நாம் இதைச் சாதாரண நீதிமன்ற விசாரணைக்குள் மட்டும் வைத்திருக்கக் கூடாது,” என்று முடிவெடுத்தார்.
அவர்கள் இருவரும் இணைந்து, நறுமுகையின் வாக்குமூலம், மருத்துவ அறிக்கைகள், மற்றும் அந்த மூன்று கொடியவர்கள் செய்த குற்றங்களுக்கான வலுவான ஆதாரங்களான நறுமுகை இறப்பதற்கு முன்பு அவள் கேட்டு கொண்டதற்கு இணங்கி கயல் தனது ஃபோனில் பதிவு செய்த வீடியோ என அனைத்தையும் மிகத் துல்லியமாகத் திரட்டினர். எவ்விதத் தாமதமும் இன்றி, அந்த ஆவணங்களை நேரடியாக நாட்டின் பிரதமரின் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.
பிரதமரிடம் அவர்கள் அந்த ஆதாரங்களைச் சமர்ப்பித்தபோது, அவர் அதைப் படித்துப் பார்த்து விட்டு அதிர்ந்து போனார்.
“சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும், ஆனால் அந்தச் சட்டத்தின் பின்னால் இருக்கும் மனிதநேயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்,” என்று கூறிய பிரதமர், உடனடியாகத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி எழில்முகையின் வழக்கைத் தகுந்த முறையில் கையாள உத்தரவிட்டார். அந்தத் தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில், எழில்முகைக்குக் கிடைக்கவிருந்த மரண தண்டனைக்கு பதிலாக, சட்டத்தின் குறைந்தபட்சத் தண்டனையாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மட்டும் இருக்குமாறு பரிந்துரைத்தார்.
இந்தச் செய்தி நீதிமன்றத்திற்கு வந்தபோது, வழக்கு ஒரு புதிய பரிமாணத்தை எட்டியது. அடுத்த மாதம் தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில், அரசுத் தரப்பு வழக்கறிஞரே எழில்முகையின் பின்னணியில் இருந்த வலியை முன்வைத்து வாதிடத் தொடங்கினார்.
பாரிவேந்தன் நீதிமன்றத்திற்கு வெளியே வந்தபோது, அவனுக்குள் ஒரு நிம்மதி நிலவியது. ஒரு அதிகாரியாக அவன் குற்றவாளியைப் பிடித்திருந்தாலும், ஒரு மனிதனாக அவன் நீதியை நிலைநாட்டியிருந்தான்.
சிறையிலிருந்து எழில்முகை வெளியே வரும் அந்த நாளை எண்ணி, சந்துரு, விக்ரம், கயல் மூவரும் கண்ணீருடன் பாரிவேந்தனுக்கு நன்றி கூறினர். இந்த வழக்கு பாரிவேந்தனின் வாழ்வில் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்பித்திருந்தது – சில நேரங்களில் நீதி என்பது சட்டப் புத்தகங்களுக்கு அப்பால், மனித உணர்வுகளிலும் அடங்கியிருக்கிறது.
இப்போது, தன் முதல் வழக்கை வெற்றிகரமாக முடித்த பாரிவேந்தன்
அவனது மேலதிகாரிக்கு கால் பண்ணினான்.
மேலதிகாரியின் குரலில் ஒருவிதமான பெருமிதம் தெரிந்தது. பாரிவேந்தன் அனைத்தையும் விளக்கிச் சொன்னதும், மறுமுனையில் இருந்த அதிகாரி ஒரு நிமிடம் அமைதி காத்துவிட்டு, பின் உணர்ச்சிவசப்பட்ட குரலில் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
“பாரிவேந்தன், நீங்கள் செய்த இந்த காரியம் ஒரு சிபிஐ அதிகாரியாக மட்டுமன்றி, ஒரு மனிதாபிமானியாகவும் உங்களைப் பெரிய உயரத்தில் வைத்துள்ளது. உங்களைப் போன்ற அறிவும், இளமையும், துடிப்பும் கொண்ட இளைஞர்கள் நம் நாட்டிற்கு மிகவும் அவசியம். உங்களின் இந்த நேர்மைக்கும் துணிச்சலுக்கும் நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?” என்று கேட்டவர், ஒரு நற்செய்தியைச் சொன்னார்.
“அப்புறம் நீங்கள் விருப்பம் தெரிவித்தபடியே, உங்களின் முதல் ஐபிஎஸ் போஸ்டிங்கை, உங்கள் சொந்த மாவட்டத்திலேயே வழங்க உத்தரவிட்டுள்ளேன். அதோடு சிபிஐ பதவியில் இருந்து தற்காலிகமாக உங்களை விடுவிக்கிறேன்.இனி உங்கள் சதுர்வேதமங்கலத்தின் காவலனாக நீங்கள்செயல்படலாம்.”
“மிகவும் நன்றி சார்! இது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்,” என்று நெகிழ்ச்சியுடன் கூறினான் பாரிவேந்தன்.
செடி வளரும்…

