மந்தாரை 16:
நீதிபதி சொன்னது போல சில நாட்களுக்கு பின்னர் மீண்டும் எழில்முகை கேஸ் கோர்ட் டிற்கு வந்தது. என்ன தீர்ப்பு வரும் என்று காத்திருக்க, சிறிது நொடிகள் தீர்ப்பை வாசித்து முடித்தார்.அதில் எழில்முகைக்கு ஏழு வருடங்கள் ஜெயில் தண்டனை என்று இருந்தது.
இந்த கேஸ் சம்பந்தமான அதிகாரத்துவ நடைமுறைகள் அனைத்தையும் அந்த இடத்திலேயே மின்னல் வேகத்தில் பாரிவேந்தன் முடித்துக்கொண்டான். தனது முதல் கனவு நனவான தருணம் அது. சிபிஐ அதிகாரியாகத் தன் முதல் சவாலை வெற்றிகரமாக முடித்து, இப்போது சொந்த ஊருக்கே ஐபிஎஸ் அதிகாரியாகப் போகும் அந்தப் பெருமிதம் அவனது முகத்தில் தெரிந்தது.
அனைத்தையும் முடித்துவிட்டு, தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு சதுர்வேதமங்கலத்திற்குப் பயணமானான்.
ரயிலின் ஜன்னல் வழியே தெரிந்த பசுமையான வயல்வெளிகளைக் கடக்கும்போது, பாரிவேந்தனின் சிந்தனை ஊரை நோக்கி ஓடியது.
மாலை வேளையில் வந்த அந்தச் செய்தித்தாளைப் பார்த்தபடியே ரயிலில் வந்து கொண்டிருந்தான். எழில்முகையின் வழக்கின் வெற்றி, அவன் செய்த அந்தச் சட்டப் போராட்டம், அனைத்தையும் தாண்டி ஒரு பெண்ணின் கண்ணியத்தைக் காப்பாற்றிய அந்த உணர்வு அவன் மனதை நிறைத்திருந்தது. அவனது பெயர் மாநிலம் முழுவதும் பாராட்டப்பட்டது. ஆனால், அவனது மனதோ அவன் ஊரான சதுர்வேதமங்கலத்தின் எல்லையை எப்போது தொடுவோம் என்று துடித்துக் கொண்டிருந்தது.
மறுநாள் காலை ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. பாரிவேந்தன் ரயிலை விட்டு இறங்கியதும், தூரத்தில் மேள தாளங்களின் சத்தம் காற்றில் மிதந்து வந்தது. ரயில் நிலையமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
தன் பேரனைப் பார்த்ததும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தார் சர்க்கரை. கையில் மாலைகளுடனும், தாளம் போடும் கலைஞர்களுடனும் அவர் காத்திருந்த காட்சி பாரிவேந்தனை நெகிழ வைத்தது.
பாரிவேந்தன் அருகில் வந்ததும், சர்க்கரை ஓடி வந்து அவனை ஆரத்தழுவிக் கொண்டார். “எய்யா… சிபிஐ-ல பெரிய வேலை செஞ்சு, ஒரு உயிரைக் காப்பாத்திட்டு வந்திருக்க! செய்தித்தாள்ல உன் போட்டோவைப் பார்த்ததுமே ஊரே மிரண்டு போயிருச்சு! இது வெறும் வேலை இல்லைடா, உன் நேர்மைக்குக் கிடைச்ச வெற்றி!” என்று சர்க்கரை பெருமிதத்துடன் பேச, பின்னால் நின்ற மக்கள் அவனைப் பூ மழையில் நனைத்தனர்.
“வாடா பாரி… உன் வெற்றியை ஊரே கொண்டாடுது! இனி நீ இங்கேயே ஐபிஎஸ் அதிகாரி. எங்களை யாரும் ஒன்னும் பண்ண முடியாது,” என்று தாத்தா அவனைத் தோளில் தட்டிக்கொடுக்க, பாரிவேந்தன் புன்னகைத்தான்.
மேளங்கள் முழங்க, ஊர் மக்கள் புடைசூழ, பாரிவேந்தன் ஒரு ஹீரோ போலத் தன் சொந்த ஊருக்குள் நுழைந்தான்.
மேலதாள சத்தத்தைக் கேட்டு வேகமாக மொட்டை மாடிக்கு வந்து நின்றிருந்த கார்குழலியின் கண்கள் வீதிமுனையைத் துழாவின. மெல்லிய இரைச்சலோடு வந்து நின்ற காரிலிருந்து, கழுத்தில் வெற்றி மாலை மின்ன, பாரிவேந்தன் அந்தத் தெருவுக்குள் நுழைவதைப் பார்த்ததும் குழலியின் இதயம் ஒரு கணம் துடித்தது.
“மாமா… வந்துட்டீங்களா!”
அவள் குரலில் விவரிக்க முடியாத நெகிழ்ச்சி. அந்தச் செய்தித்தாளில் அவன் பெற்ற வெற்றியைப் படித்துப் பூரித்தவள், இன்று அவன் நேரில் வந்து நிற்பதைக் கண்டதும் கண்கள் பனித்தன. அவனது வெற்றி அவளுடையது என்பதைப் போலவே, அவனது வருகை அவள் வாழ்வின் பெரும் கொண்டாட்டமாக மாறியிருந்தது.
வீட்டின் வாசலில் பாரிவேந்தனைக் கண்டதும் பாட்டியின் கண்கள் தாரை தாரையாகக் கண்ணீரைச் சிந்தின. இத்தனை மாதங்கள் கழித்து வந்த பேரனைப் பார்த்த கையோடு, மனக்குழப்பத்திலும் மகிழ்ச்சியிலும் துடித்தவர், அவனுக்கு ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டிட்டார். அவனை அணைத்துக் கொண்டபோது, அந்த அணைப்பில் சில மாதப் பிரிவின் ஏக்கமும் அன்பும் கலந்திருந்தது.
“என்ன கனகு, இத்தனை மாசம் கழிச்சு வந்து நிக்கிறேன். வாசல்லயே வச்சு அழற…. அழுகுற நேரமா இது? உள்ள வா,” என்று பாரிவேந்தன் அவளைத் தேற்றி, மென்மையாகப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான்.
அவனைக் கண்டதும் பாட்டியின் தவிப்பு மெல்லக் குறைந்தது. தன் பேரனுக்கு விருப்பமான தின்பண்டங்களைச் செய்து வைத்திருந்தவர், உடனே அவற்றை எடுத்து வந்து அன்போடு அவனுக்கு ஊட்டி மகிழ்ந்தார். அவனது வெற்றிச் செய்தியை அறிந்திருந்தாலும், நேரில் கண்ட அந்த நிமிடம் அந்த வீட்டின் பழைய மகிழ்ச்சியை மீண்டும் மீட்டுக் கொடுத்தது.
வீட்டிற்குள் பாட்டியும் பாரிவேந்தனும் அந்த அன்பான தருணத்தைப் பகிர்ந்துகொண்டிருக்க, குழலி வீட்டில் நிலைமை முற்றிலும் வேறாக இருந்தது.
பாரிவேந்தன் ஒருபோதும் போலீஸ் வேலைக்குச் செல்லமாட்டான் என்று கார்மேகம் பகற்கனவு கண்டுகொண்டிருந்தனர். ஆனால், இன்று நிலைமை தலைகீழ். அவன் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக, அதுவும் அவர்கள் இருக்கும் மாவட்டத்திலேயே பதவியேற்று வந்திருப்பது, கார்மேகத்தின் நெஞ்சில் இடியென இறங்கியது.
அவனது தாயின் மர்மமான இறப்பு வழக்கு இப்போதும் கார்மேகத்தின் நிழலாகத் தொடர்ந்துகொண்டிருந்தது. இப்போது அதே வழக்கை விசாரிக்கும் அதிகாரம் தன் தங்கை மகனின் கைகளில் இருப்பதை உணர்ந்தபோது, அவன் உடல் நடுங்கியது. ‘நம்மைக் கைது செய்துவிடுவானோ?’ என்ற பயம் முதன்முறையாக கார்மேகத்திற்குள் ஆழமாக வேரூன்றியது. சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க நினைத்த அவனுக்கு, இன்று சட்டம் தன் சொந்த ரத்த உறவாகவே வீட்டு வாசலில் வந்து நின்றிருந்தது.
ஆனால், கார்மேகத்திற்குத் தெரியாத ஒரு ரகசியம் சர்க்கரை வீட்டின் உள்ளே புதைந்திருந்தது. பாரிவேந்தன் போலீஸ் பணிக்குத் தேர்வு எழுத முடிவெடுத்த அந்த நாளிலேயே, தாத்தா அவனிடம் ஒரு சத்தியத்தைப் பெற்றிருந்தார்.
“வேந்தா, நீ ஐபிஎஸ் ஆகி உயரிய பதவிக்கு வருவாய் என்பது எனக்குத் தெரியும். ஆனால், உன் அம்மாவின் இறப்பிற்கு உன் மாமா கார்மேகம்தான் காரணம் என்று தெரிந்தாலும், இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அவனை நீ கைது செய்யக்கூடாது,” என்று கண்ணீருடன் கெஞ்சியிருந்தார்.
“ஒரு பக்கம் என் தங்கை மகன், இன்னொரு பக்கம் என் மருமகன்… இருவருமே எனக்கு உயிர். எந்தத் தியாகத்தையும் நான் தாங்கிக்கொள்வேன், ஆனால் இந்த ரத்த உறவுகளுக்குள் சட்டம் புகுந்து ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வதை என்னால் பார்க்க முடியாது,” என்று அவர் அழுதபோது, பாரிவேந்தன் வேறு வழியின்றி அந்தச் சத்தியத்திற்குச் சம்மதித்திருந்தான்.
அன்று இரவு சாப்பிடும் போது எப்போ வேலையில் சேரணும் என்று சர்க்கரை தனது பேரனிடம் கேட்க வர ஒன்னாம் தேதி என்றான்.
ஓ என்றவரின் மனதிற்குள் அன்று கார்குழலியின் பிறந்த நாள் என்பது வேந்தனைப் போல அவருக்கும் நினைவில் வராமல் இல்லை.
ஒருவாரம் கடந்திருந்தது.
அன்று கல்லூரிக்கு விடுமுறை. மஞ்சு தனது அப்பாவிற்கு மதிய உணவு எடுத்துக்கொண்டு வயல்வெளிக்குச் சென்றிருந்தாள். வெயில் சுளீரென்று அடித்தாலும், வயல்வெளியின் பசுமை அவளுக்கு மன அமைதியைத் தந்தது. சாப்பாட்டுப் பையை இறுகப் பிடித்துக்கொண்டு, வயல் வரப்பில் நிதானமாக நடந்து வந்தாள்.
அப்போதுதான் எதிர்பாராத விதமாக, அக்கம் பக்கத்து வயலில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு காளை மாடு, யாரையோ கண்டு மிரண்டு மஞ்சுவை நோக்கிச் சீறிக்கொண்டு ஓடி வந்தது. எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்த மஞ்சு, வேறு வழி தெரியாமல் தலைதெறிக்க ஓடினாள்.
“ஐயோ! காப்பாத்துங்க!” என்று அவள் அலறிய சத்தம் வயல்வெளி முழுவதும் எதிரொலித்தது.
மஞ்சு ஓடி வருவதைப் பார்த்த கபிலன், தனது வயலில் வேலையை விட்டுவிட்டு மின்னல் வேகத்தில் ஓடி வந்தான். மாடு அவளை நெருங்கிவிட்டதை உணர்ந்த அவன், கையை உயர்த்தி அதை மிரட்டினான். கபிலனைக் கண்டதும், ஓடி வந்த மஞ்சு தடுமாறி அவனது பின்னால் சென்று ஒளிந்து கொண்டாள். அவளது கைகள் அவனது சட்டையைப் பற்றிக்கொள்ள, உடல் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தது. கபிலன் அதை விரட்டியடித்த பிறகும், அவளது நடுக்கம் குறையவில்லை.
சுற்றி யாராவது பார்க்கிறார்களா என்று கபிலன் ஒரு கணம் சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் இல்லை என்பதை உறுதி செய்தவன், பயத்தில் இன்னும் உறைந்து போயிருந்த மஞ்சுவின் கைகளைப் பிடித்து இழுத்து, சட்டென்று தனது நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். அந்தப் பிணைப்பில் மஞ்சு திகைத்து நின்றாள். அவளை அங்கிருந்து அழைத்துச் சென்று, சற்றுத் தள்ளியிருந்த அடர்த்தியான மந்தாரைச் செடியின் மறைவிற்குப் பின்னால் நிறுத்தினான்.
அவளது வேகமான இதயத்துடிப்பை அவனது மார்பில் உணர முடிந்தது. கபிலன் அவளது கண்களை ஆழமாகப் பார்த்தான். “மஞ்சு… இத்தனை நாளா சொல்லணும்னு நினைச்சேன். நீ இப்படி பயந்து ஓடி வந்து என் பின்னாடி ஒளிஞ்சப்போ, உன்னையெல்லாம் யாருமே நெருங்க விடக்கூடாதுன்னு என் மனசு துடிக்குது. நீ என் கண்ணு முன்னாடி இருந்தா தான் எனக்கு நிம்மதி. உன் மேல நான் வெச்சிருக்கிற இந்த காதலை சொல்ல, இந்த நிமிஷத்தை விட வேற எந்த நேரமும் எனக்கு கிடைக்காது,” என்று தழுதழுத்த குரலில் தன் காதலைச் சொன்னான்.
மஞ்சு அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தாலும், அவனது அணைப்பின் கதகதப்பில் அவளது பயம் மெல்லக் கரைந்து, காதலின் வெட்கம் அவளது முகத்தில் படர்ந்தது.
மஞ்சுவுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. கபிலன் தன் காதலை வெளிப்படுத்திய அந்த நிமிடம், அவளுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இத்தனை நாட்களாக கபிலனைப் பற்றி அவள் வைத்திருந்த பிம்பம் கண்முன்னே வந்து போனது. இவன் ஒரு முரடன், எப்போதும் தன்னை வம்பிழுத்துக்கொண்டே இருக்கும் ஒரு காளிப்பயல் என்றுதான் அவள் அவனை நினைத்திருந்தாள். ஊரே அவனது வீம்புக்கும், முரட்டுத்தனத்திற்கும் பயந்து ஒதுங்கும் நிலையில், இவன் தன்னிடம் இப்படி அன்பாக, தன் காதலைச் சொல்வான் என்று அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.
அவளது கண்கள் விரிய, வியப்பும் திகைப்பும் மேலோங்க அவனைப் பார்த்தாள். அந்தப் பார்வையில், அவனது முரட்டுத்தனத்தின் பின்னால் மறைந்திருந்த மென்மையான ஒரு மனம் இன்றுதான் அவளுக்குப் புரிந்தது. அவளது மௌனம் கபிலனின் இதயத்தை வேகவேகமாகத் துடிக்க வைத்தது.
கபிலனின் அந்தப் பார்வை அவளை ஊடுருவியது. அவனது காதலைக் கேட்டவுடன், இத்தனை நாள் அவனிடம் காட்டிய கோபமும், வெறுப்பும் சட்டென மறைந்து போயின. அதற்கு பதிலாக, இதுவரை அறியாத ஒரு புதிய உணர்வு – வெட்கம் – அவளது கன்னங்களில் ரத்தச் சிவப்பை ஏற்றியது. அவனது கண்களை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல், தலைகுனிந்து நின்றாள் மஞ்சு. ஏதோ ஒரு மந்திரம் போட்டது போல, அவனது அணைப்பிலிருந்து விலகி, ஒரு நிமிடம் கூட அங்கே நிற்கத் துணியாமல், அங்கிருந்து தலைதெறிக்க ஓடி வந்தாள். மஞ்சு ஓடுவதையே மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தான் கபிலன்.
செடி வளரும்….

