மந்தாரைச் செடி ஓரத்தில் – 18

 

மந்தாரை 18

 

நெருங்கிய உறவினர் வீட்டுத் திருமணத்தில் கலந்து கொண்டு மாலை தான் முதிய தம்பதிகள் வீட்டிற்கு வந்தனர். வழக்கம் போல கார்மேகம் நள்ளிரவு கடந்தே வீடு திரும்பியிருந்தான். அங்கே ஹாலில் அவனது தந்தை தம்புசாமியும், தாயும் இன்னும் உறங்காமல் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். தனது தோளில் கிடந்த துண்டை எடுத்து நாற்காலியில் போட்டபடியே, மிகுந்த உற்சாகத்தோடு தன் பெற்றோரை நோக்கி நடந்தான் கார்மேகம்.

 

“அப்பா, கல்யாணம் எல்லாம் நல்லா முடிந்ததா?, அப்புறம் இன்னைக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்குப்பா. நம்ம குடும்ப அந்தஸ்துக்கு ஏத்த நல்ல சம்பந்தம்னு. அவங்களுக்கும் நம்ம குடும்பத்தைப் பத்தி நல்லாத் தெரியும் போல. வர்ற தையிலயே கல்யாணத்தை வச்சுக்கலாம்னு அவங்க ஆசைப்படுறாங்க,” என்று கார்மேகம் சொல்லி முடிக்கும்போதே அவன் முகத்தில் அத்தனை பெருமிதம்.

 

அதைக்கேட்டதும் தம்புசாமியின் முகத்தில் ஏகப்பட்ட சிறிது யோசனைக்கு பிறகு சந்தோஷமும், பூரிப்பும் மின்னியது. தம்புசாமியின் கண்கள் தன் மூத்த பேரன் கபிலனின் ஞாபகத்திற்குச் சென்றன. அவனுக்குத்தான் கார்மேகம் பெண் பார்த்துவிட்டு வந்திருக்கிறான் என்று தவறாக எண்ணிய தம்புசாமி, “அப்படியா மேகம்? என்று யோசனையானவர் பின்னர்,ரொம்ப நல்ல விஷயம் தானேப்பா! எத்தனையோ நல்ல வரன்கள் தட்டிப்போச்சு. இதை ஏன் இவ்வளவு நாள் தள்ளிப் போட்ட? உடனே நாளைக்கே அவங்க வீட்டுக்கு போன் பண்ணி பேசி முடிச்சுடலாம்,” என்று மிகுந்த ஆர்வத்தோடு கூறினார்.

 

அதே நேரத்தில், தம்புசாமியின் அறையின் கதவுக்குப் பின்னால் மறைந்து நின்று இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த கார்குழலிக்கு நெஞ்சில் தூக்கி வாரிப்போட்டது. அவளது இதயத் துடிப்பு ஒரு நொடி நின்று மீண்டது.

 

‘ஐயோ! தாத்தா தப்பா புரிஞ்சுக்கிட்டாங்களே! அது அண்ணன் கபிலனுக்குப் பார்த்த வரன் இல்லையே… எனக்குப் பார்த்த வரனாச்சே!’ என்று பயத்தில் பதறியவள், பதைபதைப்பில் தன் கையில் வைத்திருந்த புத்தகத்தை நழுவவிட்டாள். ‘டொப்’ என்று புத்தகம் கீழே விழுந்த சத்தம் அந்த நள்ளிரவு அமைதியில் தெளிவாகக் கேட்டது.

 

ஆனால், கார்மேகம் அதைக் கவனிக்கவில்லை. அவன் தன் தந்தை தம்புசாமியின் உற்சாகத்தைப் பார்த்துவிட்டு, “ஆமாம்பா… குழலிக்கு இப்ப படிப்பு முடிஞ்சதும் கல்யாணத்தை வச்சிக்கலாம்னு சொல்லியிருக்கேன். அதான் தையில…” என்று வாயை மூடுவதற்குள் அங்கிருந்த சூழல் தலைகீழாக மாறியது.

 

தன்னுடைய மகன், தன் ஆசைப் பேத்தி குழலிக்குத் தான் யாரிடமும் கேட்காமல், ஏதோ ஒரு வெளியூர் சம்பந்தத்தைப் பேசி வைத்திருக்கிறான் என்பதை உணர்ந்த அடுத்த நொடி, தம்புசாமியின் முகம் கோபத்தால் சிவந்தது. ஆத்திரம் தலைக்கேறியது.

 

தன் வம்சத்துத் தங்கமான, செல்லப் பேத்தி குழலியை, தன் மகளின் மகனான பேரன் பாரிக்கு கட்டிக் கொடுக்காமல், வெளியூருக்குத் தூக்கிக் கொடுக்கத் துணிகிறானே இந்த கார்மேகம் என்று அவரது ரத்தம் கொதித்தது.

 

தன் இருக்கையிலிருந்து சட்டென்று ஆவேசமாக எழுந்து நின்ற தம்புசாமி, இடி முழக்கம் போல, “கார்மேகம்!” என்று கர்ஜித்தார்.

 

நீண்ட வருடங்களுக்குப் பிறகு, தன் தந்தையின் அந்த மிரட்டலான, அதிகாரப்பூர்வமான, மரணக் கோபக் குரலைக் கேட்ட கார்மேகம் அப்படியே அதிர்ந்து, உறைந்து போய் நின்றான். அந்த அறையிலிருந்த காற்றே சட்டென்று சூடேறியது போல் இருந்தது. கதவின் பின்னால் நின்றிருந்த குழலி பயத்தில் மூச்சைப் பிடித்துக்கொண்டு, கைகளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு நின்றாள்.

 

“யாரைக் கேட்டு என் பேத்திக்கு வெளியூர்ல சம்பந்தம் பார்த்த நீ?” என்று சிங்கமாய் உறுமினார் தம்புசாமி.

 

“அவ பிறந்த அன்னைக்கும் சரி… அப்புறம் நம்ம குலதெய்வக் கோவில்ல அவளுக்குக் காது குத்தும்போதும் சரி… ஊர் ஜனங்க அத்தனை பேருக்கும் முன்னாடி, அந்த அம்மன் சந்நிதியில வச்சு, ‘ என் பேத்தி குழலி என் மகள் வயிற்று பேரன் பாரிக்குத்தான்’னு நான் சத்தியம் பண்ணிக் கொடுத்தது உனக்கு ஞாபகம் இல்லையாடா?” என்று கார்மேகத்தின் நெஞ்சுக்கு நேராக விரலை நீட்டி கத்தினார்.

 

“இடையில ஆயிரம் நடந்திருக்கலாம். அதுக்காக நீங்களா ஏதாச்சும் ஒரு முடிவை எடுத்துடுவீங்களா? அப்ப இந்த வீட்டுல இருக்கிற என்னையெல்லாம் நீங்க ஒரு மனுஷனா மதிக்கலையா? என்னைக் கேட்காம என் பேத்தி வாழ்க்கையை நீங்க முடிவு பண்ண நினைச்சா, உங்களை உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன்! போனால் போகட்டும்னு குடும்ப அமைதிக்காக நானும் இத்தனை நாளா அமைதியா இருக்குறேன். ஆனா, நான் அடங்கிப் போறதுக்குக் காரணம் பயம் கிடையாது. நீயும் உன் மவனும் (கபிலன்) ரொம்பத்தான் துள்ளுறீங்கடா!” என்று தம்புசாமியின் குரல் அந்த வீட்டின் கூரையைப் பிளப்பது போல ஒலித்தது.இவரின் சத்தத்தில் கபிலனும், சகுந்தலாவும் ஹாலுக்கு ஓடி வந்தனர்.

 

கார்மேகம் பயத்தில் பேச வார்த்தையின்றி தலைகுனிந்து நின்றான்.

 

தம்புசாமி தன் கோபத்தை அத்தோடு நிறுத்தவில்லை. பேரனை ஒரு பார்வை பார்த்தவர் “முதல்ல… உன் மவன்காரன் அந்தச் சேகர் மவ மஞ்சுவை விரும்புறான். அவங்க வீட்டுக்குப் போய் அந்தச் சம்பந்தத்தைப் பேசி முடிக்கிற வழியைப் பாரு. அதை விட்டுட்டு வெளியூர்ல என் பேத்திக்கு வரன் தேடிகிட்டு அலையாதே!” என்று கத்திவிட்டு, விறுவிறுவெனத் தன் அறைக்குள்ளே சென்று கதவைச் சாத்தினார்.

 

தாத்தாவின் அந்த அதிரடியான பேச்சும், பாரிக்கும் தனக்குமான கல்யாணப் பேச்சும், கபிலன்-மஞ்சுவின் காதலுக்குக் கிடைத்த ஆதரவும் கார்குழலியின் காதுகளில் தேனாய் வந்து பாய்ந்தன.

 

மனதிற்குள் அளவிட முடியாத சந்தோஷம் பொங்கி வழிய, குழலியின் விழிகளிலிருந்து ஆனந்தக் கண்ணீர் கன்னங்களில் வழிந்தோடியது. தாத்தாவின் கோபம் இன்று அவளது காதலுக்கு மிகப்பெரிய அரணாக மாறிவிட்டதை நினைத்து, தன் நெஞ்சைத் தொட்டுக்கொண்டு அந்த இருட்டிலும் புன்னகைத்தாள் குழலி.

 

கார்மேகத்திற்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. அவரது அப்பா தம்புசாமி வீசிய அந்த ஒற்றை வார்த்தை, ஒட்டுமொத்தக் குடும்பத்தின் நிசப்தத்தையும் சுக்குநூறாக உடைத்தெறிந்திருந்தது.

தன் காதல் விவகாரம் இப்படி நள்ளிரவில், நடுவீட்டில், அதுவும் தாத்தாவின் வாயால் அம்பலமாகும் என்று கபிலன் துளிகூட எதிர்பார்க்கவில்லை. அவன் அப்படியே அதிர்ந்து போய், உள்ளங்கைகள் வியர்க்க நடுவீட்டில் சிலை போல நின்றான்.

 

தன் மகனின் முகத்திலிருந்த அதிர்ச்சியையும் குற்ற உணர்ச்சியையும் பார்த்த கார்மேகம், ஆத்திரமும் அவமானமும் தலைக்கேற வேகமாக கபிலனின் பக்கம் திரும்பினார்.

 

“டேய் கபி! எங்க அப்பா இப்போ சொல்லிட்டுப் போறாரே… அது உண்மையாடா? அந்தச் சேகர் மாமாவோட பொண்ணு மஞ்சுவை நீ காதலிக்கிறியா? என்கிட்டயே மறைச்சுட்டீயா?” என்று கார்மேகத்தின் குரல் ஆத்திரத்தில் நடுங்கியது.

 

சுற்றிலும் நிசப்தம் நிலவ, அங்கே மறைந்து நின்ற கார்குழலியும் தன் அண்ணன் என்ன சொல்லப் போகிறான் என்று மூச்சைப் பிடித்துக் கொண்டு காத்திருந்தாள். கபிலன் மெல்லத் தன் தலையை நிமிர்த்தினான். இதற்கு மேலும் ஒளித்து விளையாட முடியாது, எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேச வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதை அவன் உணர்ந்தான்.

 

“ஆமாம்பா… தாத்தா சொன்னது உண்மைதான். எனக்கு மஞ்சுவைத் தான் பிடிச்சிருக்கு. நான் கடந்த மூணு வருஷமா அவளைத்தான் உயிருக்குயிரா காதலிக்கிறேன். உங்ககிட்ட எப்படிச் சொல்றதுன்னு தெரியாமத்தான் இவ்வளவு நாளா தயங்கிட்டு இருந்தேன்,” என்று கபிலன் தன் மனதில் இருந்த உண்மையை எந்தப் பயமுமின்றி பட்டவர்த்தனமாக உடைத்தான்.

 

மகன் தைரியமாக உண்மையை ஒப்புக்கொண்டதும், கார்மேகத்தின் கோபம் சட்டென்று வேறு திசைக்கு மாறியது. தன் மகனின் அறியாமையைக் கண்டு நெற்றியில் அடித்துக் கொண்டவர், “அறிவு கெட்டவனே! இதை முன்னாடியே என்கிட்ட சொல்லித் தொலைய வேண்டியதுதானேடா? உனக்கு வயசு ஏறிக்கிட்டே போகுது, வரன் பார்க்கணும்னு நான் வெளியூர்ல அலைஞ்சுகிட்டு இருக்கேன். ஆனா நீ இவ்வளவு பெரிய விஷயத்தை மனசுக்குள்ளேயே பூட்டி வச்சிருக்க!” என்று கத்தினார்.

 

சற்றே மூச்சு வாங்கிக் கொண்டவர், தன் கோபத்தை நிதானப்படுத்தி, “சரி… குழலியோட கதை அப்புறம் இருக்கட்டும். அவளுக்குப் பாரி இருக்கான், அது எங்க அப்பாவோட பிடிவாதம். முதல்ல உன் சங்கதியை என்னன்னு பேசி முடிக்கிறேன்,” என்று முணுமுணுத்தபடி, விறுவிறுவெனத் தன் அறைக்குள் சென்றார்.

 

கார்மேகம் அறைக்குள் சென்று படுக்கையில் சாய்ந்தாரே தவிர, அவராலோ, அவரது மனைவி சகுந்தலாவாலோ உறங்க முடியவில்லை. இருட்டில் கூரையைப் பார்த்துக் கிடந்த கார்மேகத்தின் நெஞ்சுக்குள் பழைய நினைவுகளும், இத்தனை வருடங்களாகத் தீராத ஒரு பெரும் குற்ற உணர்ச்சியும் சுழன்றடிக்கத் தொடங்கின.

 

என் அப்பா என்னவோ தன் பேத்தி குழலியைப் பாரிக்குத்தான் கட்டி வைப்பேன் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார். ஆனால், பாரி எப்படித் தன் மகளைத் திருமணம் செய்து கொள்வான்?

 

பாரியின் அம்மா… அவளுக்குத் தான் செய்த கொடுமை சாமானியப்பட்டதா? பொல்லாதவனாகவும், கல்நெஞ்சக்காரனாகவும் நடந்து கொண்டது இந்த கார்மேகம்தானே! தன் அம்மாவின் வாழ்க்கையைச் சீரழித்த மாமனின் மகள் மீது பாரிக்குக் கோபமும் வெறுப்பும் இருக்காதா? அந்தப் பழைய பகையும் குரோதமும் இன்னும் பாரியின் மனதில் அப்படியேதானே கனன்று கொண்டிருக்கும்?

“என் மேல இருக்கிற கோபத்துல பாரி என் மகளோட வாழ்க்கையை நரகமாக்கிட மாட்டானா? அந்தப் பழைய கோபமும் பகையும் அவன் மனசுல இல்லாமல் இருக்குமா?”

 

இத்தனை வருடங்களாகத் தன் மனதிற்குள் புதைத்து வைத்திருந்த இதே கேள்வி, இன்று மீண்டும் கார்மேகத்தின் நெஞ்சைக் கூர்மையான முள் போலக் குத்திக் கிழித்துக் கொண்டிருந்தது. மகனின் காதல் ஒருபுறம் கைகூடினாலும், தன் ஆசை மகளின் எதிர்காலம் என்னவாகப் போகிறது என்ற பயம் அவரைத் தூங்கவிடாமல் வதைத்தது.

 

கார்மேகம் படுக்கையில் புரண்டு படுத்துக்கொண்டே இருக்க, அருகில் படுத்திருந்த அவரது மனைவி சகுந்தலாவுக்கும் தூக்கம் வரவில்லை. இருட்டில் தன் கணவரின் தவிப்பையும், அவரது நெஞ்சுக்கூடு ஏறி இறங்குவதையும் அவள் கவனித்துக் கொண்டேதான் இருந்தாள். இத்தனை வருடங்களாகத் தனக்குள்ளேயே பூட்டி வைத்திருந்த அந்த மௌனத்தை உடைக்க இதுதான் சரியான தருணம் என்று அவள் முடிவு செய்தாள்.

 

மெல்ல எழுந்து அமர்ந்த சகுந்தலா, கணவனின் தோளைத் தொட்டுத் திருப்பினாள்.

 

“இங்க பாருங்க…” என்றவளின் குரலில் இத்தனை வருடங்கள் இல்லாத ஒரு கம்பீரமும் அழுத்தமும் கலந்திருந்தது.

 

கார்மேகம் கலங்கிய கண்களோடு தன் மனைவியைத் திரும்பிப் பார்த்தார்.

 

“கல்யாணம் ஆகி இந்த வீட்டுக்கு வந்த இத்தனை வருஷத்துல… நான் உங்ககிட்ட மறுத்து ஒரு வார்த்தை கூடப் பேசினது இல்லை. ஏன்னா, நீங்கதான் என் புருஷன், உங்களை எதிர்த்துப் பேச எனக்கு அன்னைக்கு தைரியமும் இல்லை, தகுதியும் இல்லை. ஆனா இன்னைக்கு கேக்குறேன்… உங்க மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க. அன்று உங்க சொந்தத் தங்கச்சிக்கு நீங்க செய்தது பாவம் இல்லையா?” என்று சகுந்தலா நேருக்கு நேராகக் கேட்டாள்.

 

அந்தக் கேள்வி, கார்மேகத்தின் நெஞ்சில் இத்தனை வருடங்களாக மூடி வைக்கப்பட்டிருந்த அணைய உடைத்தது. சகுந்தலாவின் வார்த்தைகள் அவரது குற்ற உணர்ச்சியைச் சுட்டெரித்தன. இதற்கு மேல் தாங்க முடியாது என்ற நிலைக்கு வந்த கார்மேகம், கட்டிலில் இருந்து எழுந்து அப்படியே தரையில் மண்டியிட்டு அமர்ந்து, சகுந்தலாவின் கைகளைப் பற்றிக் கொண்டு கதறி அழத் தொடங்கினார்.

 

செடி வளரும்….

error: Alert: Content selection is disabled!!