மந்தாரை 20
கார்மேகம் தன் அத்தை வீட்டில் அழுதுகொண்டிருந்த அதே நேரத்தில், தன் மகன் அங்கேதான் இருக்கிறான் என்பது தெரியாமல், தம்புசாமி தன் மனைவி சாலாட்சியை அழைத்துக் கொண்டு பக்கத்துத் தெருவில் இருக்கும் மைத்துனர் சக்கரையின் வீட்டிற்கு வந்தார்.
வாசலில் நின்றபடியே, “மச்சான்…” என்று தம்புசாமி குரல் கொடுக்க, உள்ளே இருந்து சக்கரை வேகமாக வெளியே வந்தார்.
வாசலில் தம்புசாமியையும் சாலாட்சியையும் பார்த்த சக்கரைக்கு நெஞ்சடைப்பது போல இருந்தது. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக ஒரே ஊரில் இருந்தும் பேசிக்கொள்ளாமல் இருந்தவர்கள் அவர்கள். ஆனால், காலம் பிரித்து வைத்திருந்தாலும் அவர்களுக்குள் இருந்த அந்த இரத்த பாசமும் அன்பும் துளிகூடக் குறையவில்லை.
சக்கரை ஓடிப் போய் தம்புசாமியின் கைகளைப் பற்றிக் கொண்டார்.
“வா மச்சான்… வாடா சாலா!” என்று பாசத்தோடு வரவேற்றார். பின்னர் உள்ளே பார்த்து, “கனகு… இங்க பாரு, மச்சானும் தங்கச்சியும் வந்திருக்காங்க. ” என்று தன் மனைவிக்குக் குரல் கொடுத்தார்.
அண்ணனும் அண்ணியும் வந்திருப்பதைப் பார்த்த கனகு, தன் கண்களில் வழிந்த கண்ணீரை அவசர அவசரமாகத் துடைத்துக் கொண்டு, “வாங்க அண்ணா… வா சாலா” என்று இன்முகத்தோடு வரவேற்றாள்.
தம்புசாமி தன் தங்கை கனகுவின் முகத்தைப் பார்த்து, “கனகு, எப்படித்தா இருக்கிறாய்?” என்று வாஞ்சையோடு விசாரித்தார்.
அப்போதுதான் ஹாலில் ஒரு பக்கமாக அமர்ந்து அழுதுகொண்டிருந்த தன் மகன் கார்மேகத்தை தம்புசாமி கவனித்தார். தன் மகன் அத்தை வீட்டில் மண்டியிட்டு அழுது கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவருக்குத் தூக்கி வாரிப்போட்டது.
“சக்கு… எதுக்கு உன் மருமகன் இங்க வந்து இப்படி அழுதுட்டு இருக்கான்? என்னாச்சு இவனுக்கு?” என்று தம்புசாமி பதற்றத்தோடு கேட்டார்.
சக்கரை நிலைமையைச் சமாளிக்க எண்ணி, “அது அப்புறம் பேசிக்கொள்ளலாம் மச்சான், நீங்க முதல்ல உட்காருங்க” என்றார். ஆனால், தம்புசாமியின் மனதில் குழப்பமும் யோசனையும் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
அதற்கு மேல் பொறுக்க முடியாத கார்மேகம், தன் தந்தையின் முன்னால் வந்து நின்றான். தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, இன்று காலையில் வயல் வரப்பில் தான் கேட்ட அத்தனையையும் ஒன்றுவிடாமல் தன் தந்தை தம்புசாமியிடம் கொட்டித் தீர்த்தான்.
விஷயத்தைக் கேட்டதும் தம்புசாமியின் முகம் கோபத்தால் கறுத்து, கண்கள் சிவந்தன. ஆத்திரம் அவரது தலைக்கேறியது. தன் மகன் கார்மேகத்தின் பக்கம் திரும்பி இடி முழக்கமாகச் சத்தம் போட்டார்:
“நான் ஆரம்பத்துல இருந்தே உன்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கேன்டா! அந்த மாணிக்கம் ஒரு நயவஞ்சகன், விஷப்பாம்பு… அவன் கூடப் பழகாத, அவனை நம்பாதன்னு என் பேச்சை எங்கயாச்சும் நீ கேட்டியாடா? அன்னைக்கே என் பேச்சை நீ கேட்டிருந்தா இன்னைக்கு நம்ம குடும்பம் இப்படி வீதிக்கு வந்து நிற்குமா?”
ஆத்திரத்தில் தம்புசாமியின் உடம்பு நடுங்கியது. வீட்டின் நடுவே நின்று கத்தினார்:
“நம்ம சொந்தக் குடும்பம் இத்தனை வருஷமா பிரிஞ்சு கிடக்குறதுக்குக் காரணமே அந்தப் பாவிதான்! அந்த நயவஞ்சகப் பயலை வெட்டிப் பலி போட்டாலும் என் ஆத்திரம் தீராதுடா! விட மாட்டேன் அவனை!” என்று தம்புசாமி ஆவேசமாகக் கத்தினார்.
அவரது கோபத்தைக் கண்டு அங்கிருந்தவர்கள் மிரள, சக்கரை உடனே ஓடிவந்து தம்புசாமியைத் தடுத்துச் சமாதானப்படுத்தினார்.
“மச்சான், பதறாதீங்க… இப்போ கோபப்பட்டு கத்துறதால எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று சக்கரை தம்புசாமியின் கைகளைப் பிடித்து அமைதிப்படுத்தினார்.
பத்து வருடப் பகை முடிவுக்கு வந்துவிட்ட மகிழ்ச்சியில், இரண்டு குடும்பங்களும் இப்போது ஒன்றாகக் கூடிவிட்டன. கனகுவும் சாலாட்சியும் ஹாலில் அமர்ந்து பழைய கதைகளைப் பேசி மகிழ்ந்திருக்க, அவர்களுக்குப் பிடித்ததைச் சமைத்துக் கொடுப்பதற்காகக் கார்மேகத்தின் மனைவி சகுந்தலாவும் சக்கரையின் வீட்டிற்கே வந்துவிட்டாள்.
வீடே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. ஆனால், குடும்பத்தின் வாரிசுகள் யாரும் அப்போது வீட்டில் இல்லை. கபிலன் காலையிலேயே ஏதோ ஒரு பஞ்சாயத்து விஷயமாகக் கடலூருக்குச் சென்றுவிட்டான். குழலியும் வழக்கம் போல் காலேஜுக்குப் போயிருந்தாள்.
மதிய உணவை அனைவரும் சக்கரையின் வீட்டிலேயே மகிழ்ச்சியோடு சாப்பிட்டு முடித்தனர்.
அதன் பின், குடும்பப் பெரியவர்கள் அமர்ந்து அடுத்தகட்ட விசேஷங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினர்.
“கபிலனுக்கு மஞ்சுவை பொண்ணு கேட்குற விஷயத்தையும், பாரிக்கு நம்ம குழலியை முடிக்கிறதையும் பத்திப் பேசணும். ஆமா… நம்ம பாரியைக் காலையில இருந்து ஆளையே காணோம்? அவன் எங்க மச்சான்?” என்று தம்புசாமி கேட்டார்.
அதற்குச் சக்கரை, “பாரி ஒரு முக்கியமான கேஸ் விஷயமா சென்னைக்கு போயிருக்கான் மச்சான். வந்துடுவான்,” என்றார்.
“சரி, வர்ற அடுத்த முகூர்த்தத்திலேயே ரெண்டு பேருக்கும் கல்யாணத்தை ஒன்னா வச்சிடலாமா?” என்று கார்மேகம் கேட்க…
“இல்லப்பா… முதல்ல பாரிக்கும் குழலிக்கும் கல்யாணத்தை முடிப்போம். அதுக்கு அப்புறமா மஞ்சு-கபிலன் கல்யாணத்தை வச்சுக்கலாம்,” என்று தம்புசாமி உறுதியாகச் சொன்னார். பின்னர் மாலை நேரத்தில் அனைவரும் தங்களது வீட்டிற்குத் திரும்பினர்.
நேரம் மெல்லக் கடந்து மாலையும் தாண்டியது. ஆனால், வழக்கமாக ஐந்து மணிக்கெல்லாம் காலேஜில் இருந்து வீடு திரும்பும் குழலி, இன்னும் வரவில்லை.
சகுந்தலாவுக்குள் லேசாகப் பயம் முளைத்தது. வாசல் வரை சென்று எட்டி எட்டிப் பார்த்தாள். தெருவில் போகும் வண்டிகளின் சத்தம் கேட்கும்போதெல்லாம், ‘மகள் வந்துவிட்டாளோ’ என்று ஓடிப் போய் பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தம்புசாமியும், சாலாவும் கூட வாசலிலேயே வந்து அமர்ந்து, “பேத்தி இன்னும் வரலையே…” என்று தெருவையே பார்த்துக் கொண்டிருந்தனர். இருட்டத் தொடங்கியதே தவிர, குழலியின் நடமாட்டத்தைக் காணவில்லை.
நெஞ்சில் பதற்றம் அதிகரிக்க, சகுந்தலா தன் போனை எடுத்து மீண்டும் குழலிக்குக் கால் பண்ணினாள்.
“திரும்பவும் மொபைல் சுவிட்ச் ஆஃப்னு வருதுங்க!” என்று சகுந்தலா பதறினாள்.
“ஏதாச்சும் தோழிகள் வீட்டுக்குப் போயிருப்பாளோ? பக்கத்துத் தெரு மஞ்சுவாவது கூட வந்திருக்காளான்னு பார்த்துட்டு வாங்கடா,” என்று தம்புசாமி பதறிக் கத்த, கார்மேகம் ஓடிப்போய் மஞ்சுவின் வீட்டில் விசாரித்தார்.
ஆனால், அங்கே மஞ்சுவுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவள் இன்றைக்குக் காலேஜுக்கே போகவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. குழலி காலேஜுக்குத் தனியாகத்தான் போயிருக்கிறாள்!
விஷயத்தைக் கேள்விப்பட்டதும் சக்கரையின் நெஞ்சு பதைபதைத்தது. தாமதிக்காமல் தன் பேரன் பாரிக்குத் தொலைபேசியில் அழைத்தார்.
அப்போது பாரி தன் காரில் சென்னை டிரிப்பை முடித்துக் கொண்டு, கடலூர் மாவட்ட எல்லையைக் கடந்து சிதம்பரம் அருகே வந்து கொண்டிருந்தான்.
“தாத்தா, நான் இப்பதான் சிதம்பரம் கிட்ட வந்துட்டு இருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்துடுவேன். என்ன விஷயம் தாத்தா?” என்று பாரி வழக்கமான கம்பீரக் குரலில் கேட்டான்.
“பாரி… நம்ம குழலியை இன்னும் காணோம்டா! காலேஜ் போன புள்ள இன்னும் வீட்டுக்கு வரல!” என்று சக்கரை பதற்றத்தில் நாத்தழுதழுக்கக் கூறினார்.
“என்னது… குழலியைக் காணோமா?!” காரின் பிரேக்கை சட்டென்று மிதித்த பாரிக்குத் தலை சுற்றியது. “என்ன தாத்தா சொல்ற? வீட்ல ஏதாச்சும் சண்டையா என்று கேள்விகளை எழுப்பினான்.
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லடா…” என்று சுருக்கமாக அன்று வீட்டில் நடந்தசந்திப்பையும், பாரி-குழலி திருமணப் பேச்சுவார்த்தை முடிவானதையும் சொன்ன சக்கரை, “அந்த மாணிக்கம் பய மேலதான் எங்களுக்குச் சந்தேகமா இருக்கு” என்றார்.
“சரி தாத்தா, நீங்க பதறாதீங்க நான் பார்த்துக்கிறேன்!” என்று சொல்லிவிட்டுப் போனை வைத்தவனுக்கு ஏதோவொரு விபரீதம் நடந்துவிட்டது என்பது மட்டும் மிக ஆழமாகப் புரிந்தது.
அவனது போலீஸ் மூளை உடனடியாக வேலை செய்யத் தொடங்கியது.
பாரி வண்டியை நேராகக் கல்லூரி நோக்கித் திருப்பினான். போகும்போதே மஞ்சுவைத் தொடர்புகொண்டு குழலியின் மொபைல் நம்பரை வாங்கினான். உடனடியாக சைபர் க்ரைம் பிரிவில் இருக்கும் தன் நண்பனுக்குப் போன் செய்து, அந்த எண்ணை அவசரமாக ‘டிரேஸ்’ செய்யுமாறு உத்தரவிட்டான்.
சற்று நேரத்தில் அவனுக்கு வந்த லொகேஷன் தகவல், அவனது குழப்பத்தை அதிகமாக்கியது. போனின் கடைசி லொகேஷன் இன்னும் அவளது கல்லூரி வளாகத்தைத்தான் காட்டியது.
நேரம் இரவை நெருங்கிக் கொண்டிருந்ததால், கல்லூரி கேட் பூட்டப்பட்டிருந்தது. பாரி காரை விட்டு இறங்கி, தன் போலீஸ் யூனிஃபார்மோடு கம்பீரமாக உள்ளே நுழைந்தான். வாசலில் இருந்த வாட்ச்மேன், யூனிஃபார்மில் இருக்கும் அதிகாரியைப் பார்த்ததும் சட்டென்று எழுந்து நின்று சல்யூட் அடித்தார்.
“சார்… இந்த நேரத்துல?” என்று அவர் இழுக்க,
“விசாரணை விஷயமாக உள்ளே போகணும்,” என்று சுருக்கமாகக் கூறிவிட்டு, வாட்ச்மேனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு நேராகக் கல்லூரி அலுவலகம் மற்றும் வெயிட்டிங் ஹால் இருக்கும் பகுதிக்குச் சென்றான்.
அங்கே கும்மிருட்டாக இருக்கவே, வாட்ச்மேன் டார்ச் அடிக்க, பாரி தன் மொபைல் டார்ச்சை ஆன் செய்து தேடினான். வெயிட்டிங் ஹாலில் இருக்கும் ஒரு சோபாவின் ஓரமாக ஏதோ ஒன்று மின்னியது.
நெருங்கிச் சென்று பார்த்த பாரியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.
அங்கே குழலியின் மொபைல் போன் அநாதையாகக் கிடந்தது! அவளது ஹேண்ட்பேக், ஐடி கார்டு எதுவும் அங்கே இல்லை, வெறும் போன் மட்டும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்ட நிலையில் வீசப்பட்டிருந்தது.
போனைப் பார்த்த அடுத்த நொடி, பாரியின் போலீஸ் மூளை மின்னல் வேகத்தில் வேலை செய்தது. கல்லூரி வளாகத்தில் அவளது போன் மட்டும் அநாதையாகக் கிடக்கிறது என்றால், யாரோ திட்டமிட்டு அவளது மொபைலை மட்டும் இங்கே வீசியிருக்கிறார்கள்.
உடனடியாகத் தன் தாத்தா சக்கரை சொன்ன தகவல்கள் அவனது நினைவுக்கு வந்தன.
“அந்த மாணிக்கம் மேல சந்தேகம்…”
பாரி சற்றும் தாமதிக்காமல், சைபர் க்ரைம் நண்பனுக்கு மீண்டும் போன் செய்தான். “டேய், உடனே பாபுவோட மொபைல் நம்பரை ட்ரேஸ் பண்ணு!” என்று அவனது எண்ணைக் கொடுத்தான்.
சில நிமிடங்களிலேயே லொகேஷன் வந்து சேர்ந்தது. அது, சிதம்பரத்திற்கு அந்தப் பக்கம் இருக்கும் கடலோரப் பகுதியான பரங்கிப்பேட்டையைக் காட்டியது!
பாரிக்கு ஏதோ விஷயம் புரிந்துவிட்டது. அவன் தன் காரை நோக்கி ஓடினான். காரை முடுக்கி, மின்னல் வேகத்தில் பரங்கிப்பேட்டையை நோக்கிப் பறந்தான்.
அன்று அமாவாசை இரவு என்பதால், அந்த மீனவக் கிராமமே கும்மிருட்டில் மூழ்கியிருந்தது. கடல் அலைகளின் சத்தம் ஆக்ரோஷமாக வந்து மோதிக்கொண்டிருக்க, கரையிலிருந்து சில அடி தூரத்தில் இருந்த சவுக்குத் தோப்புக்குள் மரண அமைதி நிலவியது.
அந்தத் தோப்பின் நடுவே இருந்த ஒரு பாழடைந்த மீன் வலைகள் வைக்கும் மறைவிடத்திற்குள், கை கால்கள் கயிறுகளால் இறுக்கிக் கட்டப்பட்ட நிலையில், லேசான மயக்கத்தோடு படுத்திருந்தாள் கார்குழலி.
கடத்தப்படும்போது வாயில் துணியை வைத்து அமுக்கியதில், அவளது மூச்சுக்காற்று பலவீனமாக ஏறி இறங்கியது.
வெளியே, சவுக்கு மரங்களின் நிழலில் ஒரு தார்ப்பாயைப் போட்டு உட்கார்ந்து, பாபுவும் அவனது இரண்டு நண்பர்களும் மது பாட்டில்களோடு குடித்துக் கொண்டிருந்தனர்.
போதை தலைக்கேறக் கேற, பாபுவின் பேச்சில் விஷம் கக்கியது.
“இவளை எப்படியாவது மடக்கணும்னு நானும் எவ்வளவோ முயற்சி பண்ணிட்டேன்டா!” என்று சிகரெட் புகையை ஊதியபடி பாபு சொன்னான். “கொஞ்சம் கூட அடங்காத சண்டிக் குதிரையா இருக்குறா. ஆனா பாத்தியா… சும்மா தளதளன்னு இருக்கா! அந்தப் போலீஸ்காரன் பாரிக்குத்தான் பொண்டாட்டி ஆகணும்னு அவளுக்கு ஆசையாம். நம்மளப் போல விவசாயிங்க எல்லாம் கட்டிக்கிட்டா அவ உடம்பு தேஞ்சு போயிடுமா?” என்று நையாண்டியாகச் சிரித்தான்.
அவனது நண்பர்கள் மேலும் மதுவை ஊற்றிக் கொடுத்து, அவனது போதையை உசுப்பேற்றி விட்டார்கள்.
“ஆமாடா பாபு! நீ நல்லா வைரம் பாய்ந்த தேக்கு மரம் போல இருக்குற. அந்தப் போலீஸ்காரன் என்ன உன்னைவிடப் பெரிய ஆளா? இன்னைக்கு இவ நம்ம கைலதான் மாட்டிருக்கா. நல்லா அவளை அனுபவிடா! ரெண்டு நாள் இங்கேயே வச்சிருக்கலாம். அதுக்கப்புறம் அவ உன்னைத் தவிர வேற யாரையும் கட்டிக்க முடியாது,” என்று போதை மிருகங்கள் அவனுக்கு வழி காட்டினாள்.
நண்பர்களின் பேச்சில் பாபுவின் கண்கள் வெறி ஏறிச் சிவந்தன. கையில் இருந்த மதுக் கோப்பையைக் குடித்து முடித்துவிட்டு, மெதுவாகத் தள்ளாடியபடி, குழலி அடைக்கப்பட்டிருக்கும் அந்த மறைவிடத்தை நோக்கி அவன் நடக்கத் தொடங்கினான்.
உள்ளே, மயக்கம் தெளிந்து மெல்லக் கண் விழித்த குழலிக்கு வெளியே பேசும் பேச்சுகள் கேட்டு உடல் நடுங்கியது. கதறத் துடித்தவளுக்குக் கட்டப்பட்டிருந்த வாயும் கைகளும் பெரும் சித்திரவதையாக இருந்தன.
“பாரி மாமா… என்னை வந்து காப்பாத்துங்க…” என்று அவளது மனது கதறியது.

