மந்தாரைச் செடி ஓரத்தில் 21 – 1

மந்தாரை 21:

விஷயத்தைக் கேட்ட ஊர் பெரியவர்கள் கோபத்தில் கொதித்துப் போயினர்.

“வயசு பொண்ணு மேல கையை வைக்கத் துணிஞ்சுட்டானா இந்த மாணிக்கத்தோட பேரன்? இத்தனை வருஷமா இவங்க குடும்பம் நம்ம ஊருக்குள்ள பண்ணுன சதி வேலைகளுக்கு ஒரு முடிவே இல்லையா?” என்று பஞ்சாயத்துக்காரர்கள் ஆவேசமாகப் பேசினர்.

“இந்த ஊருக்குள்ள சதிகளையும் துரோகங்களையும் விதைச்ச மாணிக்கத்தின் குடும்பத்தை இன்னையிலிருந்து ஊரை விட்டே ஒதுக்கி வைக்கிறோம்! இவங்க குடும்பத்தோடு இந்த ஊர்ல இருக்கிற அண்ணன், தம்பினு யாரும் எந்தப் பழக்கமும் வச்சுக்கக் கூடாது. இவங்க வீட்டு விசேஷத்துக்கோ, துக்கத்துக்கோ யாரும் போகக் கூடாது. மீறிப் பழகுறவங்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படும்!”

பஞ்சாயத்து அத்தோடு நிறுத்தவில்லை. பாபு செய்த இந்தக் கொடூரமான குற்றத்திற்கு, இனி எந்தவொரு ஆணும் இந்த சதுர்வேதமங்கலம் மண்ணில் இப்படி ஒரு தவறை நினைத்துக் கூடப் பார்க்கக் கூடாது என்பதற்காக ஒரு முன்மாதிரியான தண்டனையை அறிவித்தனர்.

“பாபுவை அந்த அரசமரத்தோடு வச்சு இறுக்கிக் கட்டுங்க! அவனோட தப்புக்கு, பாதிக்கப்பட்ட குழலியோட கையாலேயே அவனுக்கு அறுபது சவுக்கடி கொடுக்கணும்!”

ஊர் சனம் திரண்டிருக்க, பாபு அரசமரத்தில் கட்டப்பட்டான். நேற்று வரை திமிரோடு பேசியவனின் முகம் இப்போது பயத்தில் வெளுத்துப் போயிருந்தது.

குழலியின் கையில் சவுக்குக் கயிறு கொடுக்கப்பட்டது. அவளது மனதில் நேற்று அவளுக்கு நேர்ந்த அவமானமும், தன் குடும்பத்தைப் பிரித்த வஞ்சகமும் தீயாக எரிந்து கொண்டிருந்தது. அந்த ஆத்திரத்தோடு, பாபுவின் முதுகில் ஓங்கிச் சொடுக்கினாள் குழலி.

‘சொளீர்… சொளீர்…’ என்று சவுக்குக் காற்று வாங்கிய சத்தம் அந்த மைதானத்தில் எதிரொலித்தது.

“ஐயோ… அம்மா… விட்டுடுங்க!” என்று பாபு அலறினான்.

ஒரு அடியையே தாங்க முடியாத அந்த உடம்பில், அறுபது சவுக்கடிகளும் விழுந்து முடிந்தபோது பாபுவின் முதுகு முழுக்கத் தோல் உரிந்து, ரத்த வெள்ளத்தில் மிதந்தது. அவனது அலறல் சத்தம் அடங்கி, அங்கேயே மயங்கிச் சரிந்தான்.

இந்த அடியில் இருந்து அவன் உடல் தேறி, குணமாகி மீண்டும் எழுந்து வருவதற்கு இன்னும் எத்தனை மாதங்கள் ஆகுமோ… யாருக்குத் தெரியும்! ஊரே பாபுவின் கோலத்தைப் பார்த்து நடுங்கிப் போய் நின்றது.

பஞ்சாயத்துத் தீர்ப்பும் தண்டனையும் முடிந்துவிட்டது. ஆனால், பாரிக்கும் குழலிக்குமான அந்த மெளனப் போராட்டம் இன்னும் தீர்ந்தபாடில்லை.அரசிழந்த மகாராஜன் போல, ஒட்டுமொத்த ஊர் ஜனங்களின் முன்னிலையில் கூனிக் குறுகி நின்றிருந்தான் மாணிக்கம். தன் பேரன் ரத்த வெள்ளத்தில் துடிப்பதைக் கண்ட அவனது நெஞ்சு பதறியது.

பஞ்சாயத்தாரின் கால்களில் விழாத குறையாக ஓடிவந்த மாணிக்கம், “பெரியவங்களே… தப்பு நடந்து போச்சு. என்னால் என் பேரன் செஞ்ச தப்புக்கு இவ்வளவு பெரிய தண்டனை வேணாம் சாமி. இந்த ஊரை விட்டு எங்களை ஒதுக்கி வச்சிடாதீங்க. ஊர்ல யாருடைய பேச்சும் மூச்சும் இல்லாம, தனித்து வாழ்றது நரகத்தை விடக் கொடுமை சாமி… எங்களை மன்னிச்சிடுங்க!” என்று கைகளைக் கூப்பி அழுது கெஞ்சினான்.

ஆனால், தம்புசாமியோ, சக்கரையோ அல்லது அங்கிருந்த பஞ்சாயத்தார்களோ அவனது போலி அழுகையைக் கண்டு இரங்கத் தயாராக இல்லை.

“இப்ப மட்டும் கண்ணுல தண்ணி வருதா மாணிக்கம்? இத்தனை வருஷமா இந்த ஊருக்குள்ள நீ விதைச்ச நயவஞ்சகம், துரோகம்… இப்போ உன் பேரன் என் பேத்தி மேல கை வைக்கத் துணிஞ்ச காரியம்… இதுக்கெல்லாம் நீங்க அனுபவிச்சுதான் ஆகணும். இனி இந்த ஊர்ல உங்களுக்குப் பேச்சும் கிடையாது, மூச்சும் கிடையாது!” என்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டுப் பஞ்சாயத்தார் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தான் வஞ்சகமாகப் போட்ட சதித்திட்டம் அனைத்தும் தன் சொந்தத் தலையிலேயே வினையாக வந்து முடிந்ததை எண்ணிப் புலம்பியவாறே, ரத்த வெள்ளத்தில் கிடந்த தன் பேரன் பாபுவை வாரி அணைத்துத் தாங்கியபடி, மாணிக்கமும் அவனது குடும்பத்தாரும் அங்கிருந்து அவமானத்தோடு வீட்டிற்குப் புறப்பட்டனர்.

அடுத்த இரண்டு நாட்களில் ஊர் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பியது. குழலியும் ஓரளவிற்குத் தேறித் தன் பழைய நிலைக்கு வந்திருந்தாள்.

முறைப்படி சடங்குகளைத் தொடங்க எண்ணிய சக்கரை, தன் மைத்துனர் தம்புசாமிக்கு ஆள் மூலம் செய்தி அனுப்பினார்:

“வர்ற திங்கட்கிழமை காலையில முறைப்படி பொண்ணு கேட்டு, தாம்பூலம் மாத்திக்கிட்டு நிச்சயதார்த்தத்தை முடிச்சிடலாம் மச்சான்.”

சொன்னபடியே, திங்கட்கிழமை அதிகாலையிலேயே கார்மேகத்தின் வீடு பரபரப்பாகக் காட்சியளித்தது. சக்கரை, கனகு, பாரிவேந்தன் மற்றும் அவர்களது நெருங்கிய சொந்தங்கள் அனைவரும் தட்டுகளில் சீர்வரிசைப் பொருட்களோடு கார்மேகத்தின் வீட்டிற்கு வந்து இறங்கினர்.

ஹாலில் அனைவரும் அமர்ந்து, தாம்பூலத் தட்டுகளை மாற்றி, இருவருக்கும் கல்யாணப் பேச்சை அதிகாரப்பூர்வமாகத் தொடங்க முற்பட்டனர்.

அப்போது, உள்ளிருந்து மெதுவாக முற்றத்திற்கு வந்தாள் கார்குழலி. அவளது முகத்தில் எந்தப் பொலிவும் இல்லை; ஒருவித இறுக்கம் மட்டுமே குடி கொண்டிருந்தது.

எல்லோரும் அவளையே பார்க்க, குழலி தன் தலையை நிமிர்த்தி அனைவர் முன்னிலையிலும் குண்டைத் தூக்கிப் போட்டாள்:

“எனக்கு இந்தத் திருமணத்துல விருப்பமில்லை!”

அவள் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை, அந்தப் பெரிய ஹாலில் இருந்த ஒட்டுமொத்தப் பேரமைதியையும் சுக்குநூறாக உடைத்தது. அங்கே கூடியிருந்த கார்மேகம், சகுந்தலா, தம்புசாமி, சக்கரை என அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் அப்படியே நின்றனர்.

எல்லாவற்றையும் விடப் பேரிடியாக அது பாரிவேந்தனின் நெஞ்சில்தான் இறங்கியது. அவனது இதயம் ஒரு நொடி துடிப்பதை நிறுத்திக் கொண்டது போல இருந்தது.

சிறுவயதிலிருந்தே குழலி தன் மேல் எவ்வளவு உயிரான அன்பும் காதலும் வைத்திருக்கிறாள் என்பதை நன்கு உணர்ந்தவன் அவன். தன் மீது இருக்கும் கோபத்தால், அவளது மனசாட்சியைக் கொன்று இப்படி ஒரு வார்த்தையை அவள் சொல்கிறாள் என்பதை அவனால் தாங்கவே முடியவில்லை.

“குழலி… என்னமா சொல்ற நீ? என்ன விளையாட்டா இது?” என்று சகுந்தலா பதறிக்கொண்டு அவளருகே ஓடினாள்.

“விளையாட்டு இல்லைம்மா. எனக்கு இந்தத் திருமணத்துல சம்மதம் இல்லை. என்னை யாரும் வற்புறுத்தாதீங்க!” என்று மிக உறுதியாக, கறாராகச் சொல்லிவிட்டு, பாரியின் முகத்தைக் கூட ஏறிட்டுப் பார்க்காமல் விறுவிறுவெனத் தன் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டாள் குழலி.

கார்மேகத்தின் முகம் வெளுத்துப் போனது. சக்கரைக்கும் தம்புசாமிக்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை.

“என்ன மச்சான் பண்றது? பொண்ணு இப்படிப் பேசுறாளே…” என்று சக்கரை இழுக்க…

அப்போதுதான், அங்கிருந்த இருக்கையிலிருந்து கம்பீரமாக எழுந்து நின்றான் பாரிவேந்தன். அவனது முகத்தில் கோபம் இல்லை, மாறாக ஒரு தீர்க்கமான உறுதி மட்டுமே பிரகாசித்தது.

“இங்க பாருங்க தாத்தா இத்தனை வருஷமா நம்ம குடும்பங்கள் பேசிக்காம இருந்த ஆத்திரத்துலதான் குழலி இப்படித் தன் கோபத்தைக் காட்டுறா. அவ மனசுல என் மேல இருக்கிற காதல் எனக்கு நல்லாத் தெரியும். என்னைக்கா இருந்தாலும்… இந்த விநாடியா இருந்தாலும் சரி, இன்னும் நூறு வருஷம் ஆனாலும் சரி, என் பொண்டாட்டி இந்த கார்குழலி மட்டும்தான்! அதுல எந்த மாற்றமும் இல்லை!” என்று இடி முழக்கமாகச் சொன்னான் பாரிவேந்தன்.

மேலும் தொடர்ந்தவன், “தாத்தா, நீங்க தட்டை மாத்துங்க… நிச்சயதார்த்தத்தை இப்பவே முடிங்க. அவளோட இந்த ஊடலையும் கோபத்தையும் எப்படித் தீர்க்கணும்கிறது எனக்குத் தெரியும்,” என்றான் தன் காதலின் மீதிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையோடு.

பாரியின் அந்தப் பேச்சைக் கேட்டுத் தம்புசாமியும் சக்கரையும் நிம்மதியடைந்தனர். குழலியின் தற்காலிக மறுப்பைப் பொருட்படுத்தாமல், இருவீட்டுப் பெரியவர்களும் முறைப்படி தாம்பூலத் தட்டுகளை மாற்றி, பாரிக்கும் குழலிக்குமான நிச்சயதார்த்தத்தை அங்கேயே பேசி முடித்தனர்.

அதன் பின், பாரியும் அவனது குடும்பத்தாரும் நம்பிக்கையோடு தங்களது வீட்டிற்குப் கிளம்பினர்.
குழலி அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டதும், சகுந்தலாவுக்கு ஆத்திரம் தாங்கவில்லை. வேகவேகமாக மகளின் அறைக்குள் நுழைந்தவள், “ஏண்டி குழலி! உனக்கு என்ன பைத்தியம் ஏதாச்சும் புடிச்சிருக்கா?” என்று கத்தினாள்.

“கட்டுனா என் மாமன் பாரியைத்தான் கட்டுவேன்னு இத்தனை வருஷமா ஒத்தக் கால்ல நின்னுட்டு, இன்னைக்கு அவங்களே முறைப்படி சம்மதம் பேச வரும்போது எதுக்குடி இப்படி வேணாம்னு சொல்லி எல்லாரையும் அதிர வைக்கிற?” என்று சகுந்தலா கோபத்தோடு கேட்டாள்.

“ஆமாம்மா… எனக்கு இப்போ இந்தத் கல்யாணத்துல விருப்பம் இல்லை, பிடிக்கல!” என்று கறாராகச் சொன்னாள் குழலி. அவளது முகம் கோபத்தில் சிவந்திருந்தது. ஆனால், அந்தத் தற்காலிகக் கோபத்திற்குப் பின்னால் பாரியின் மேல் இருக்கும் அசைக்க முடியாத காதல் அப்படியேதான் ஒளிந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார்.

மகளின் முகத்தில் இருக்கும் காதலைப் புரிந்து கொண்ட சகுந்தலா, தன் கோபத்தை அப்படியே விட்டுவிட்டுச் சிரித்துக் கொண்டே சொன்னாள், “சரிடி… இப்போ நீ எவ்வளவு வேணாலும் துள்ளு. என் மருமகன் பாரி மட்டும் உன் புருஷனா வரட்டும்,உன்னை எப்படி அடக்குறான்னு நானும் பார்க்கிறேன். அப்பதான்டி நீ அடங்குவ!” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.

நேரம் கடந்து இரவு 11 மணி இருக்கும். வீடே நிசப்தத்தில் மூழ்கியிருக்க, கட்டிலில் படுத்திருந்த குழலியின் அறைக்கதவு மெதுவாகத் தட்டப்படும் சத்தம் கேட்டது.

‘இந்த நள்ளிரவு நேரத்துல யாரு கதவைத் தட்டுறது?’ என்ற யோசனையோடு குழலி மெதுவாகக் கட்டிலில் இருந்து எழுந்தாள். கதவைத் திறக்காமல், ஜன்னல் கதவை மெல்லத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள்.
அங்கே அவளது ஜன்னலுக்கு வெளியே, நிலவொளியில் கைகளைக் கட்டிக்கொண்டு கம்பீரமாக நின்றிருந்தான் பாரிவேந்தன்!
அவனைக் கண்டதும் குழலிக்கு நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. இருந்தாலும் தன் கோபத்தைக் காட்ட நினைத்து, அவசர அவசரமாக ஜன்னலை இழுத்து மூடப் போனாள்.

அவளது கையைப் பிடித்துத் தடுத்த பாரி, தன் பற்களைக் கடித்துக் கோபத்தை அடக்கியவாறே சொன்னான்:

“ஒழுங்கு மரியாதையா இப்பவே மொட்டை மாடிக்கு வாடி! இல்லைன்னா… இந்த ஜன்னலை அப்படியே உடைச்சிட்டு உள்ள வந்து நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது, ஜாக்கிரதை!”

அவனது குரலில் இருந்த அதிகாரமும், கண்களில் தெரிந்த காதலின் வெறியும் குழலியை அப்படியே மிரளச் செய்தது. மாமனின் பிடிவாதம் அவளுக்கு நன்றாகவே தெரியும்; சொன்னதைச் செய்யாமல் விடமாட்டான்.
வேறு வழியின்றி, தன் நெஞ்சைத் தேற்றிக்கொண்டு, சத்தமில்லாமல் மொட்டை மாடிக்குச் செல்லத் தயாரானாள் குழலி.

error: Alert: Content selection is disabled!!