நள்ளிரவுக் குளிர் உடம்பைச் சிலிர்க்க வைத்தாலும், தன் நெஞ்சுக்குள் இருந்த பயத்தை ஒருவாறாகத் தள்ளிவிட்டு, தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள் குழலி. சத்தமில்லாமல் தன் அறைக்கதவைத் திறந்து, பூனைப் போல அடியெடுத்து வைத்து படிக்கட்டுகள் வழியே மொட்டை மாடிக்கு ஏறிச் சென்றாள்.
மாடியில், அங்கிருந்த மரத்தின் கிளைகளில் இருந்து விழுந்த இலைகளின் நிழலிலும், உறைந்த நிலவொளியிலும், மாடியின் ஓரமாகக் கைகளைக் கட்டிக்கொண்டு கம்பீரமாக நின்று கொண்டிருந்தான் பாரிவேந்தன்.
அவனைக் கண்டதுமே அவளுக்குள் ஒரு இனம் புரியாத நடுக்கமும், குளிரும் ஒருசேரத் தொற்றிக்கொண்டது.
அவள் பயத்தோடு அடிமேல் அடி வைத்து வருவதைப் பார்த்த பாரி, “என்னடி… அவ்வளவு பெரிய ஆட்டமா ஆடிட்டு இப்ப சாமர்த்தியமா வரியா?” என்று கரகரத்த குரலில் கேட்டபடி, பாய்ந்து வந்து அவளது கரத்தைப் பற்றினான்.
சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவளை இழுத்துத் தன் மார்போடு இறுக்கி அணைத்துக் கொண்டவன் அவளது தாவணியின் இடைவெளியில் தெரிந்த இடுப்பைத் தன் பலமான கரங்களால் பிடித்து நன்கு திருகினான்.
“என்னடி… என்னை உனக்குக் கட்டிக்கக் கசக்குதா? ஏன்… நான் உனக்கு வேண்டாமாடி?” நான் இல்லாமல் உன்னால் வாழ்ந்திட முடியுமா டி? என்று அவளது முகத்திற்கு நேராகத் தன் மூச்சுக்காற்று படும்படி ஆக்ரோஷமாகவும் காதலாகவும் கேட்டான்.
தன் மாமனின் இந்தத் திடீர் நெருக்கமும், உடலின் சூடும் அவளது மனதில் இருந்த கோபத்தை நொடியில் விரட்டியடித்தன. இருந்தாலும், இத்தனை வருடங்களாக அவன் காட்டிய பாராமுகமும், தன்னைத் தேடி வராத ஏக்கமும் அவளை எவ்வளவு வேதனைப்படுத்தியிருக்கும்? அந்த ஆதங்கம் அவளுக்குள் மீண்டும் எட்டிப்பார்த்தது.
தைரியத்தை வரவழைத்துக் கொண்டவள் “ஆமாம்! எனக்கு நீங்க வேண்டாம்… போங்க!” என்று அவனது மார்பைத் தள்ளிவிட்டு விலக முயன்றாள்.
“அப்படியாடி? நான் உனக்கு வேண்டாமா?” என்று சவாலாகக் கேட்டவன், அவளது இடுப்பில் சொருகப்பட்டிருந்த தாவணியைச் சட்டென்று இழுக்க, அது அவனது கையோடு தனியாகக் கழன்று வந்தது.
“என்ன பண்றீங்க… விடுங்க!” என்று பல்லைக் கடித்துக்கொண்டு அவனிடமிருந்து விடுபட முயன்றாள் குழலி.
ஆனால், பாரி அவளை விடத் தயாராக இல்லை. மாடிச் சுவரின் பக்கமாக நிலைதடுமாறிச் சரிந்த குழலியோடு சேர்ந்து, அவனும் அவள் மீது சரிந்தான்.
ஒரு சர்ப்பத்தைப் போல அவளது மேனியோடு பிணைந்து கொண்டவன், அவளது இதழ்களுக்கு மேல் பேச்சுகளுக்கு இடம் கொடுக்காமல், தன் முரட்டு உதடுகளால் அவளைச் சிறைபிடித்தான்.
ஆரம்பத்தில் மென்மையாகத் தொடங்கிய அந்த முத்தம், இத்தனை வருடப் பிரிவின் ஏக்கமும், கோபமும், தவிப்பும் சேர்ந்துகொள்ள… போகப் போக வன்மையாக மாறத் தொடங்கியது. மாமனின் இந்த அதிரடியான காதலின் வேகத்தில், குழலி முற்றிலும் திக்குமுக்காடிப் போனாள். அவளது கைகள் அவனது தோள்களைப் பலமாகப் பற்றிக் கொண்டன.
பாரியின் ஆக்ரோஷமான முத்தத்தாலும், அவனது வலிமையான தேகம் தன் உடலை அழுத்திக் கொண்டிருந்ததாலும் குழலிக்கு மூச்சுவிடவே சிரமமாக இருந்தது. காற்றுக்காக அவளது நெஞ்சு ஏங்கித் தவித்தது. தாங்க முடியாமல் அவளது மெல்லிய விரல்கள் பாரியின் அகன்ற முதுகில் நகங்கள் பதியும் அளவுக்கு அழுந்தப் பதிந்தன.
அவளது உடலின் தவிப்பை உணர்ந்த பாரி, மெல்ல அவளைத் தளர்த்தி, அப்படியே ஒரு புரளலாகப் புரண்டு, அவளைத் தன் நெஞ்சின் மீது கொண்டு வந்து அமர வைத்து, நெஞ்சோடு இறுக்கி அணைத்துக் கொண்டான்.
“சிறிது நொடிகள் கடந்திருக்க மன்னிச்சுடுடி…” என்று அவளது நெற்றியில் தன் உதடுகளைப் பதித்தான் பாரி.
“என் அம்மாவுக்கு நடந்த அநீதியை நினைச்சு எனக்கும் கோபம்தான். ஆனா, அதுக்காக உன்மேல எனக்குக் காதல் இல்லாம இல்லடி. குடும்பப் பகை நடுவுல இருந்ததாலதான், இத்தனை வருஷமா எனக்குள்ள இருந்த காதலை நான் வெளிகாட்டிக்காம உன்னைத் தவிக்க வச்சேன்” என்று தன் மனதைத் திறந்து பேசினான்.
அவன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டதும் குழலியின் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாகக் கொட்டியது.
“இத்தனை வருஷமா உங்களுக்காகவும், உங்களுடைய ஒரே ஒரு பார்வைக்காகவும் நான் ஏங்கித் தவிச்சது எனக்குத்தானே தெரியும் மாமா…” என்று விம்மியபடியே, அவனது பரந்த நெஞ்சில் முகம் புதைத்துக் கதறி அழுதாள்.
தன்னவளை இத்தனை காலம் தன் மௌனத்தால் காயப்படுத்தியதை நினைத்துப் பாரியின் நெஞ்சும் உருகியது. அவளது கண்ணீரைத் தன் விரல்களால் மென்மையாகத் துடைத்து, அவளது உச்சந்தலையில் முத்தமிட்டான்.
நிலவொளியில் ஒரு வழியாக இருவருக்குள் இருந்த ஊடலும் கோபமும் தீர்ந்து சமாதானமாகினர். அந்த நள்ளிரவு நிலவொளியில், குளிர்ந்த காற்று வீச, மொட்டை மாடியில் ஒருவரையொருவர் அணைத்தபடி அப்படியே படுத்திருந்தனர். நேரம் கடந்து செல்வதே இருவருக்கும் தெரியவில்லை.
திடீரெனக் குழலியின் காதோரம் குனிந்த பாரி, “ஆமாடி… நாம முறைப்படி கல்யாணம் பண்ணிக்கலாமா? இல்ல… இப்படியே இங்கேயே குடும்பம் நடத்த ஆரம்பிச்சிடலாமா?” என்று குறும்போடு கேட்டான்.
அவன் கேட்ட கேள்வியில் அதிர்ச்சியடைந்த குழலி, “ஐயோ மாமா!” என்று பதறியபடி சட்டென்று அவனது மடியில் இருந்து எழுந்தாள்.
சற்றுத் தூரத்தில் கிடந்த தன் தாவணியை ஓடிப் போய் எடுத்து உடம்பில் போர்த்திக் கொண்டவள், “நேரமாச்சு மாமா, சீக்கிரம் கிளம்புங்க. யாராச்சும் இந்த நேரத்துல நம்மளை ஒன்னா பார்த்தா தப்பா நினைப்பாங்க!” என்று பதற்றத்தோடு விரட்டினாள்.
“இனிமே யாரு பார்த்தா எனக்கு என்னடி? நீ என் பொண்டாட்டி ஆயிட்டியே!” என்று கெத்தாகச் சொல்லிச் சிரித்தான் பாரி.
இருந்தாலும் அவளை மேலும் தவிக்கவிட விரும்பாமல், போவதற்கு முன் அவளை மீண்டும் இழுத்து, கன்னங்களிலும் இதழ்களிலும் பல முத்தங்களையும், இன்னும் சில காதல் குறும்புச் சேட்டைகளையும் செய்துவிட்டு, வந்த வழியே சுவரேறி யாருக்கும் தெரியாமல் தன் வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றான்.
மாமனின் முத்தங்களின் ஈரத்தோடும், காதலின் சூட்டோடும் தன் அறைக்குத் திரும்பினாள் குழலி. இத்தனை வருடங்களாக அவளது நெஞ்சில் பாராங்கல்லாக அழுத்திக் கொண்டிருந்த காயங்கள் அனைத்தும் அன்றைய நள்ளிரவில் ஆறிப் போயிருந்தன.
மனதில் பேரமைதியும், எல்லையற்ற சந்தோஷமும் நிறைய, மெத்தையில் வந்து படுத்துக் கண்களை மூடினாள்.
அப்போது, விடியலை வரவேற்கும் விதமாக சதுர்வேதமங்கலம் கிராமத்தில் சேவல் கூவும் சத்தம் தூரத்தில் கேட்டது. புது விடியல் அவர்கள் காதலுக்குப் பாதை வகுக்கக் காத்திருந்தது.
இருவரின் திருட்டு பார்வைகளும் யாருக்கும் தெரியாமல் மொட்டை மாடி சந்திப்புகளோடு உலாவர, அதே வேளையில், கார்மேகம் தன் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு, முறைப்படி தன் மூத்த மகன் கபிலனுக்குப் பெண் கேட்க மஞ்சுவின் வீட்டிற்குச் சென்றார்.
பக்கத்துத் தெருவில்தான் மஞ்சுவின் குடும்பமும் இருந்தது. கார்மேகம், சகுந்தலா, மற்றும் தம்புசாமி ஆகியோர் முறைப்படி தட்டுகளில் பழங்கள், பூ, வெற்றிலை பாக்குடன் மஞ்சுவின் வாசலில் போய் நின்றனர்.
இத்தனை வருடப் பகையெல்லாம் விலகி, குடும்பங்கள் இணையும் சுபவேளையில், கபிலனுக்குத் தங்கள் வீட்டுப் பெண்ணான மஞ்சுவைக் கேட்பதில் அவளது பெற்றோருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இருவீட்டுப் பெரியவர்களும் சுமுகமாகப் பேசி, “மஞ்சுவை உங்க வீட்டுக்கு மருமகளா அனுப்ப எங்களுக்கு முழு சம்மதம்!” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.
வந்தவர்கள் சும்மா பேசிவிட்டு மட்டும் திரும்பவில்லை.
“கல்யாண காரியம் தள்ளிப் போக வேண்டாம். பாரிக்கும் குழலிக்கும் கல்யாணம் முடிஞ்ச கையோடு, நம்ம கபிலனுக்கும் மஞ்சுவுக்கும் கல்யாணத்தை முடிச்சிடலாம்” என்று பெரியவர்கள் கூடி முடிவெடுத்தனர்.
திருமணம் முடிவு செய்த கையோடு, அங்கேயே தட்டுகளை மாற்றி, மங்களகரமாகக் கபிலன் – மஞ்சுவின் நிச்சயதார்த்தத்தையும் மனநிறைவோடு நடத்தி முடித்தனர்.
பெண் கேட்டு வருவதாக இரண்டு நாட்களுக்கு முன்பே கார்மேகம் செய்தி அனுப்பி இருந்ததால் மஞ்சுவின் வீட்டில் மதிய விருந்துக்கு தயார் செய்திருந்தார்கள்.
பின்னர் அனைவரும் பந்தியில் அமர்ந்ததும், மஞ்சுவும் கையில் கரண்டியோடு உணவு பரிமாறத் தொடங்கினாள். அதுவரை பெரியவர்களோடு பேசிக் கொண்டிருந்த கபிலனின் கண்கள், இப்போது அவளையே வட்டமிட ஆரம்பித்தன.
மஞ்சு பட்டுப் புடவையின் தலைப்பை இடுப்பில் சொருகிக் கொண்டு, வெட்கப் புன்னகையோடு ஒவ்வொருவருக்கும் பரிமாறிக் கொண்டே வந்தாள். கபிலன் தன் இலையையே பார்ப்பது போல நடித்துக் கொண்டே, அவளது ஒவ்வொரு அசைவையும் ஓரக்கண்ணால் தீவிரமாக சைட் அடித்துக் கொண்டிருந்தான்.
அவள் அவனது தட்டருகே நெருங்கி வந்து, “இன்னும் கொஞ்சம் பாயசம் ஊத்தட்டுமா?” என்று மெல்லிய குரலில் கேட்டபோது, கபிலன் நிமிர்ந்து அவளது கண்களை நேராகப் பார்த்தான். அந்தப் பார்வையின் வீச்சைத் தாங்க முடியாமல் மஞ்சுவின் கன்னங்கள் சட்டென்று சிவந்தன.
சுற்றியிருந்த பெரியவர்கள் கவனித்து விடக் கூடாதே என்ற பதற்றத்தில், அவள் தன் உதட்டைக் கடித்துக் கொண்டு அவசரமாக அவனுக்குப் பாயசத்தை ஊற்றிவிட்டு அடுத்த இலைக்கு நகர்ந்தாள். கபிலனோ உதட்டில் ஒரு குறும்புச் சிரிப்போடு, அவளது அவசரத்தையும் வெட்கத்தையும் ரசித்தபடி அந்தப் பாயசத்தை ருசிக்கத் தொடங்கினான். மூன்று வருடக் காத்திருப்புக்குப் பிறகு, தன் காதலி தன் வருங்கால மனைவி என்ற உரிமையுடன்பரிமாறுவதைப் பார்க்கும் அந்த நொடி அவனுக்கு அத்தனை இனிமையாக இருந்தது.
இரண்டு பிள்ளைகளுக்கும் நல்லபடியாக வரன் அமைந்து, அடுத்தடுத்துத் திருமணங்கள் அமையப் போவதை நினைத்து கார்மேகமும் சகுந்தலாவும் பெரும் நிம்மதியோடு தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
இரு வீட்டாரும் ஒன்று கூடி, ஜோசியரிடம் சென்று பாரிவேந்தன் – கார்குழலி திருமணத்திற்கு நல்லதொரு சுபமுகூர்த்த நாளைக் குறித்து வந்தனர்.
இரண்டு வீடுகளும் ஒரே கிராமத்தில், பக்கத்து பக்கத்துத் தெருக்களில்தான் இருந்தன என்றாலும், கிராமத்து வழக்கப்படி திருமண ஏற்பாடுகள் அனைத்தும் மிக விமரிசையாகத் தொடங்கின.
திருமணத்திற்குப் பட்டுப் புடவைகள் எடுப்பதற்காக இரு குடும்பத்தினரும், பட்டுக்குத் புகழ்பெற்ற திருப்போரூருக்குக் கிளம்பினர். ஜவுளிக்கடையில் பளபளக்கும் பட்டுச் சேலைகள் குவியல் குவியலாக அடுக்கப்பட்டிருக்க, பெண்கள் அனைவரும் ஆர்வத்தோடு புடவைகளைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கினர்.
அங்கே அமைதியாக நின்ற தன் மகள் குழலியைப் பார்த்து, அவளது தாய் சகுந்தலா மௌனமாகச் சிரித்துக் கொண்டே இருந்தாள்.
“ஏண்டி… அன்னைக்கு நிச்சயம் நடக்கும்போது ‘எனக்கு இந்தத் திருமணத்துல விருப்பமில்லை, கல்யாணமே வேண்டாம்’னு யாரோ ஒருத்தவங்க சத்தம் போட்ட மாதிரி இருந்துச்சே! அதுக்காக இப்படியே கல்யாணப் புடவை எடுக்காம சும்மாவா விட்ருவீங்க?” என்று குழலியைக் கிண்டல் செய்து முறைத்தாள் அவளது வருங்கால அண்ணியும் ஆருயிர் தோழியுமான மஞ்சு.
அதைக் கேட்டு குழலி வெட்கத்தில் தன் முகத்தைச் சிவக்க வைத்துக் கொண்டு, தன் மாமன் பாரிவேந்தன் நின்ற திசையைத் திருட்டுத்தனமாகப் பார்த்தாள்.
அங்கே நின்றிருந்த பாரியோ, தன் பார்வையின் மூலமாகவே அவளுக்குச் சிக்னல் கொடுத்துக் கொண்டிருந்தான். குழலி ஒரு புடவையை எடுத்துத் தன் மேல் போட்டுப் பார்க்கும்போது, பாரி தன் தலையை அசைத்து ‘இது சரியில்லை’ என்பது போலப் பார்ப்பான். உடனே குழலி அதைத் தள்ளி வைத்துவிடுவாள்.
கடைசியாக, அவனது கண்களில் தெரிந்த தீர்க்கமான ஒளியைக் கண்டு, அவன் ரசித்த ஒரு புடவையைத் தேர்ந்தெடுத்தாள். அது ஒரு கண்கவர் ஒயின் கலர் பட்டுப்புடவை, அதில் தங்க ஜரிகை வேலைப்பாடுகளுடன் கூடிய கோல்டன் கலர் சிறப்புக் கொடிகள் நெய்யப்பட்டிருந்தன. அதற்கு இணையாக, அவளுக்கு மிகவும் பிடித்த மயில் வண்ணத்தில் , நாவல் பழக் கலர் பார்டர் வைத்த பிரம்மாண்டமான பட்டுச் சேலையையும் சேர்த்துத் தேர்ந்தெடுத்தாள்.
மருமகளின் தேர்வைப் பார்த்து சக்கரையும் தம்புசாமியும் மனதாரப் பாராட்டிப் பட்டுச் சேலைகளுக்குப் பணம் கொடுத்தனர்.
தங்கை குழலியின் திருமணத்திற்குத் தன் காதலி கட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே, கபிலன் மிகவும் ஆசையாக ஒரு அழகான பட்டுப் புடவையைத் தேர்ந்தெடுத்து வாங்கி வைத்திருந்தான். திருமண வேலைகளின் பரபரப்புக்கு நடுவே, அவளுக்கு அதை ரகசியமாகத் தர வேண்டும் என்று அவனது மனம் தவித்தது.
இரவு நேரம் வந்ததும், யாருக்கும் தெரியாமல் மஞ்சுவுக்குப் போன் செய்தான். “இப்பவே வீட்டின் பின்பக்கம் இருக்குற தோட்டத்துத் தோப்புக்கு வா, நான் அங்கே காத்திருக்கேன்” என்று ரகசியக் குரலில் சொல்லிவிட்டுப் போனை வைத்தான்.
சொன்னபடியே, நிலவொளி படர்ந்திருந்த அந்த அமைதியான இரவில், கபிலன் தோட்டத்து மாமரத்தின் நிழலில் ஆவலோடு காத்திருந்தான். சலசலக்கும் இலைகளின் சத்தத்திற்கு நடுவே, சுற்றிலும் பார்த்தபடி மெல்லிய காலடிச் சத்தத்துடன் மஞ்சு அங்கே வந்து சேர்ந்தாள். யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற பயத்தில் அவளது இதயம் வேகமாக அடித்துக் கொண்டிருந்தது.
அவள் அருகில் வந்ததும், கபிலன் சற்றும் தாமதிக்கவில்லை. அவளது கையைப் பற்றித் தன் பக்கமாக இழுத்து, நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். எதிர்பாராத இந்த இழுப்பு மஞ்சுவைத் திணறடிக்க, அவளை அப்படியே அங்கிருந்த பெரிய மாமரத்தின் தடிமனான தண்டில் சாய்த்தான்.
“யாராவது பாக்கப் போறாங்க கபிலன்… விடுங்க…” என்று மஞ்சு படபடப்போடு முணுமுணுத்தாள்.
“யாரும் பார்க்க மாட்டாங்கடி…” என்று குறும்புடன் சொன்னவன், தான் மறைத்து வைத்திருந்த அந்தப் புடவைப் பார்சலை அவளிடம் கொடுத்தான். “என் தங்கை கல்யாணத்துக்கு என் தட்டரசி இந்தச் சேலையைக் கட்டிக்கிட்டுத்தான் வரணும், சரியா?” என்றான் காதலுடன்.
அவள் அந்தப் புடவையைப் பார்த்துவிட்டு நெகிழ்ச்சியோடு நிமிர, அவளது இதழ்களில் தேங்கியிருந்த புன்னகையைக் கண்ட கபிலன், தன் காதலை அடக்க முடியாமல் அவளது நெற்றியிலும், கன்னங்களிலும், இதழ்களிலும் சில பல முத்தங்களை ஆழமாகப் பதித்தான். மஞ்சு வெட்கத்தில் அப்படியே உறைந்து போனாள்.
பெரியவர்கள் தேடுவதற்குள் கிளம்ப வேண்டும் என்பதால், அவளை ஒரு நிமிடம் இறுக்கமாக அணைத்துவிட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து நழுவித் தன் வீட்டிற்குள் சென்றுவிட்டான். மஞ்சு அங்கேயே நின்று, நெஞ்சில் படபடப்போடும் முகத்தில் வழியும் வெட்கத்தோடும் அந்தப் புடவையை அணைத்தபடி நின்றிருந்தாள்.
செடி வளரும்…

